காதல் கசக்குதய்யா @ விமர்சனம்

எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் ரம்யா தயாரிக்க  துருவா, வெண்பா , சார்லி, கல்பனா நடிப்பில்,

 துவாரக் ராஜா என்பவர் இயக்கி இருக்கும் படம் காதல் கசக்குதய்யா . படம் ருசிக்குமா பார்க்கலாம் .

பனிரெண்டாவது படிக்கிற — அந்த வயசு அளவுக்குக்  கூட உயரம் இல்லாத — யூனி பார்ம்  போட்ட பள்ளி மாணவி ஒருத்தி  (வெண்பா ) ,
 
இருபத்தைந்து வயதான — வயசுக்கு மீறிய உயரம் கொண்ட —- வேலைக்குப் போகும் இளைஞன் ஒருவன் (துருவா) மீது கண்டதும் காதல் கொள்கிறாள் .
 
காதலை அவனிடம் சொல்ல, அவனோ கிண்டல் செய்து அனுப்புகிறான் . அவளது தொடர் முயற்சியாலும்,
 
 இயல்பான மாடர்ன் உடையில் அவள் கொஞ்சம் வயது வந்த மங்கையாகவும் தெரிய ஒரு நிலையில் அவன் அவள் காதலை ஏற்கிறான். 
 
ஆனால் அவனது நெருங்கிய நண்பர்கள் அவனை கிண்டல் செய்தே ஒரு வழி பண்ணுகிறார்கள் . 
 
அவன் வாழ்வில் ஒரு சீரியசான பிரச்னையும் உண்டு .  விபத்து ஒன்றில் அவனது  அப்பா இறந்து போக ,
 
அதே விபத்தில் பலத்த அடிபட்ட அம்மா (கல்பனா) நான்கு வருடமாக கோமா நிலையில் இருக்கிறார். . 
 

படுக்கைப் புண் உள்ளிட்ட பல பிரச்னைகள் அதிகரித்த நிலையில் அவளை கருணைக் கொலை செய்து விடலாம் என்று அவனது தாய்மாமனும் ,ஏன் டாக்டருமே சொல்கிறார்கள்.

 
ஆனால் அவனுக்கு மட்டும் அம்மா பிழைத்து வருவார் என்ற நம்பிக்கை .
 
தாய் மாமனுக்கும் அவனுக்குமான கருத்து மோதல் ஒரு நிலையில் நிஜ மோதலாகவும் மாறுகிறது. 
 
இந்த நிலையில் அவன் வாங்கிக் கொடுத்த மாடர்ன் டிரஸ் ஒன்றை மாணவிக் காதலி அவன் வீட்டில் போட்டுப் பார்த்துக் கொண்டு இருக்க, அங்கு வரும் அவளது அப்பா (சார்லி)  ,
 
தன் மகள் பாலியல் தவறு செய்து விட்டதாக நம்பி கடுமையாக நடந்து கொள்ள , பலரும் பார்க்க காதல் ஜோடியின் மானம் போகிறது . 
 
அவள் படிப்பில் சிக்கல் வருகிறது . எனினும் அவள் காதல் மாறவில்லை . 
 
ஆனால்….. ” அவள் பள்ளிக் கூட மாணவியாக இருப்பதால் நீ அழகா தெரியற . கல்லூரி போனா ரசனை மாறும் .
உன்ன தூக்கி எறிஞ்சிடுவா ” என்ற வார்த்தையை நம்பி அவளை புறக்கணிக்கிறான் அவன்  . இந்த நிலையில் அவன் அம்மா குணமாகி வீடு வருகிறார் . 
 
இந்த சூழலில் காதலன்  மீது கொண்ட காதலால் காதலி செய்யும் ஒரு செயல் , அவளுக்கு விலைமாது பட்டம் தந்து போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைக்கிறது . 
 
எல்லோரும் அதிர அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த காதல் கசக்குதய்யா . 
 
வித்தியாசமான கதை . வித்தியாசமான சூழல் கொண்ட கதை . அந்த முயற்சிக்காக பாராட்டலாம் . 
 
ஹீரோ மற்றும் நண்பர்கள் முடிந்தவரை இயல்பாக வசனம் பேசி இருப்பது பாராட்டுக்குரிய விசயம்தான் .
 
ஆனால் ஒரு நிலையில் ஓவராகி என்ன பேசுகிறார்கள் என்பதே புரியாத அளவுக்கா பேசுவது ?
 
இது போதாதென்று ஒலிக்கலவை செய்தவர் மிச்ச சொச்ச டயலாக்கும் புரியாதபடி பார்த்துக் கொல்கிறார் (எழுத்துப் பிழை அல்ல )
 
திடீரென கோமாவில் இருந்து எழும் அம்மா , தன் கணவன் இறந்து போன விசயமே அப்போதுதான் தெரிந்து கதறுவதும் , மகனை பார்த்து உருக , அவன் உடைய…
 
அந்தக் காட்சி , ( படத்தின் மற்ற காட்சிகளின் தன்மைக்கு முரணாக நாடகத்தனமாக இருந்தாலும் கூட ) நெகிழ்வு .
அந்தக் காட்சியில் துருவா , கல்பனா நடிப்பு சிறப்பு. (அதுக்காக கல்பனா அழுதுகொண்டே மம்மி ரிட்டர்ன்ஸ் சொல்வது எல்லாம் அமெச்சூர்த்தனமான சொரியல் !)
கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி அருமை .  மனசுக்குள் குட்டி சுட்டியாக நடிப்பால் பதிகிறார் வெண்பா . 
 
உயரம் குள்ளம் விசயத்தை முக்கியப் பிரச்னையாக சொல்கிறார்கள் . உண்மையில் அது பிரச்னையே இல்லை . 
 
பள்ளிக் கூடம் படிக்கிற பெண் காதலிப்பதாக கதை சொல்லலாமா என்பதே கேள்வி . அதற்கு சமாளிப்பான பதிலாக  
 
‘ எல்லா பெண்களும் பள்ளிக் காலத்தில் இன்னசன்ட் இல்லை . எங்கள் கதை நாயகி பொறுப்பானவளாக்கும். அவள் லவ் பண்ணலாம் ‘ என்கிறார்கள் திரைக்கதையில்  ! 
 
” பதினேழு வயசுல உங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன் . அவர்தான் கடைசிவரை என் உலகமாவே இருந்தார் ” என்று தன் அம்மா கல்பனா சொல்வதை வைத்து,
 
 
 கல்லூரி போனாலும் நாயகி  மாறமாட்டாள் என்பதை நாயகன் உணர்கிறானாம் . ஒண்ணும் சொல்றதுகில்ல. 
 
ஆனா அப்படிப்பட்ட நாயகி,  நாயகன் மீது வயசு உயரம் மீறி காதல் கொள்வதற்கு குணம் , மனம் , பண்பு ரீதியாக ஒரு காரணம் கூட இல்லையே . 
 
தன் தோழி பசங்களுடன் டேட்டிங் போனால் என்பதற்காக ரோட்டுக்கு வந்து கண்ணில் பட்டவனை உடனே காதலிக்கும் நிலையில் அல்லவா அவன் மீது காதல் கொள்கிறாள் .
 
அதுவும் கைக்கு ஒரு சிகரட் என்று வைத்துக் கொண்டு  இரண்டு சிகரட்டை அவன் மாறி  மாறி இழுக்கும் நிலையில் ! அட போங்கப்பா !
 
ஆனால் இவற்றை எல்லாம் மீறி அவ்வப்போது குபீர் குபீர் என சிரிக்க வைக்கும் வகையில் கவர்கிறார்கள். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *