பிரவீன் மற்றும் பிரதீப் ஜோஸ் தயாரிப்பில் கிஷோர், கருணாகரன் , பிரதீப் , ஷெரின் , லதாராவ் நடிப்பில்,
கதை திரைக்கதை வசனம் எழுதி வைகறை பாலன் இயக்கி இருக்கும் படம் கடிகார மனிதர்கள் . ஓட்டம் எப்படி ? பேசலாம்
ஊரில் இருந்து மனைவி (லதாராவ்) மூன்று பிள்ளைகள், ஆகியோருடன் வீட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து,
வீடு தேடும் பேக்கரி கம்பெனி தொழிலாளி ஒருவருக்கு ( கிஷோர்) வீடு கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது .
கொடுக்க முடியாத அளவு அதீத வாடகை, தண்ணீர் சிக்கனம், இரவு பத்து மணி கட்டுப்பாடு, மொத்தம் அஞ்சு பேர் என்று, வீடு தர மறுக்க அநியாயமான பல காரணங்கள் .
எனவே கடைசியில் வீட்டில் மொத்தம் நாலே பேர் என்று பொய் சொல்லி , ஒரு கல் மன வீட்டு உரிமையாளர் (பாலா சிங்) வீட்டில் வாடகைக்கு போகிறார்கள்.
தான் வேலைக்கு பயன்படுத்தும் பேக்கரி பெட்டியில் கடைசி மகனான சிறுவனை ( மாஸ்டர் ரிஷி) மறைத்து வைத்து பள்ளிக்கு அழைத்துப் போவது ,
கொண்டு வருவது , நடு இரவில் அவனை எல்லோருக்கும் பொதுவான கழிப்பறையைப் பயன்படுத்த வைப்பது என்று பல சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
அதே போல ஒரு பேச்சலர் (கருணாகரன்) ஒரு பிச்சை எடுக்கும் பெண்மணியை பாட்டி என்று சொல்லி சேர்ந்து வீடு எடுத்து தங்குகிறான் .
அந்த இளைஞனுக்கும் ஓனர் மகளுக்கும் (ஷெரின்) காதல் .
ஒரு நிலையில் ஒரு மகனை மறைத்து பேக்கரி ஊழியர் கொண்டு போவதும் வருவதும் ஓனருக்கு தெரிய வர, வீட்டை விட்டு விரட்டுகிறார் .
மீண்டும் வண்டியில் சாமான்களை ஏற்றிக்கொண்டு வீடு தேடி அலைய , சைக்கிள் பந்தயப் போட்டியில் வென்றால்,
கால் கிரவுண்டு வீடு பரிசு என்ற தகவல் பார்த்து , போட்டியில் கலந்து கொள்ளும் பேக்கரி ஊழியர் போட்டியில் வெல்கிறார் .
ஆனால்….. குடும்ப சந்தோசம் என்ன ஆனது என்பதே கடிகார மனிதர்கள் .
பிழைப்புக்காக சென்னை வந்து குடும்பத்தோடு வாடகை வீட்டில் சிக்கிக் கொண்டு , கல் மனம் கொண்ட வீட்டு ஓனர்களின் கோரப் பற்களில்,
சிக்கிச் சிதைந்து கதறும் எளிய மனிதர்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் பதறப் பதற படம் பிடிக்கிறது இந்தப் படம்
யதார்த்தமான பிரச்னையை எடுத்துக்கொண்டு மிக இயல்பான மேக்கிங் கொடுத்து படத்தை அழுத்தமாக கனமாக நகர்த்திக் கொண்டு போகிறார் இயக்குனர் வைகறை பாலன் .
கிஷோர், லதா ராவ் , இருவரும் மிக சிறப்பாக பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள் .
கருணாகரன் , ஷெரின் இருவரும் ஒகே
நடிகராவதற்காகப் போராடி நடுத்தர வயதை எட்டி நிற்கும் மனிதரின் பாத்திரத்தில் பிரதீப் கவனிக்க வைக்கிறார் .
கொடுமையான வீட்டு ஓனராக அசத்தலாக நடித்துள்ளார் பாலா சிங். அவருக்கு துணை விஜயா பாட்டி .
இடைவேளை திருப்பமும் பின்னால் அதை இயக்குனர் கையாண்டதும் நைஸ் .
நல்லவர்களும் கெட்டவர்களுமாக படம் முழுக்க வளைய வரும் இயல்பான மனிதர்கள் படத்தின் பலமாக இருக்கிறார்கள்.
அந்தக் சைக்கிள் பந்தய டுவிஸ்ட் சிறப்பு .
ஆனால் அடுத்து வரும் திருப்பம் வேண்டாத வீம்பு .
படமாக்கலில் ஒரு பழைய பாணி இருப்பதும் பின்னடைவே
பிழைக்க வந்த மனிதனுக்கு என்ன ஆனது என்று சொல்வது நாவல்டிக்கு ஒகே .
ஆனால் இது போன்ற வீட்டு ஓனர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்வதல்லவா இந்தப் படத்தின் சமுதாய நோக்கமாக இருக்க முடியும் ?
அதுதானே பார்க்கும் ரசிகனோடு படத்தைப் பிணைக்கும் ?
இப்படி எல்லாம் பணம் பணம் என்று அலைந்த வீட்டு ஓனர் என்ன ஆனார் என்பதை — இந்த திரைக்கதையில் வாய்ப்பிருந்தும் ,
சொல்லாமல் தவிர்த்தது– கடிகாரத்தை ரிப்பேர் ஆக்கி விடுகிறதே .
எனினும் …
கடிகார மனிதர்கள் ….. மனம் முழுக்க ஒலிக்கிறார்கள் .