ஒயிட் ஹார்ஸ் சினிமா சார்பில் நடிகர் ஜெய்வந்த், யுரேகா சினிமா ஸ்கூல் சார்பில் இயக்குனர் யுரேகா இருவரும் தயாரிக்க,
ஜெய்வந்த், ஐரா , ஆடுகளம் நரேன் , மூணாறு ரமேஷ் நடிப்பில் யுரேகா இயக்கி இருக்கும் படம் இந்த காட்டுப்பய சார் இந்த காளி.
காட்டுப் பய மூலிகைப் பயலா? விசச்செடி பயலா ? பேசலாம் .
ஒரு மார்வாடியின் (சிவி குமார்) பைனான்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் பைக்குகள் கார்கள் இரவில் கொளுத்தப்படுகின்றன .
கொளுத்துபவன் ஒரு சைக்கோ என்று யூகிக்கப் படுகிறான் .
அவனை கண்டு பிடிக்க , கமிஷனரால் (ஆடுகளம் நரேன்) மறைமுகமாக நியமிக்கப் படுகிறார் , கோப நடத்தை காரணமாக சஸ்பென்ஷனில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி (ஜெய்வந்த்)!
துணையாக சஸ்பென்ஷனில் இருக்கும் இன்னொரு போலீஸ்காரர் (மூணாறு ரமேஷ்)
நடிப்பு ஆசையில் மதுரையில் இருந்து வந்திருப்பதாக சொல்லி நாயகனுக்கு அறிமுகம் ஆகிறார் ஓர் இளம்பெண் (ஐரா) .
ஒரு நிலையில் நாயகன் வீட்டிலேயே தங்குகிறார் .
மார்வாடியின் மைத்துனன், தாங்கள் போடும் அநியாய வட்டியை கட்ட முடியாமல் தவிக்கும் நபர்களின் வீட்டுப் பெண்களின் கற்பையே சூறையாடுபவன்.
பைக்குகளை எரிப்பது யார் ? ஏன் ? என்பதே இந்த காட்டுப்பய சார் இந்த காளி.
வடக்கத்தியர்கள் தமிழர்களை அடகுக் கடை , வட்டி வியாபாரம் இவற்றின் பெயரால் எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை சொல்ல வந்திருக்கும் படம் .
படத்தில் விவசாய அழிவு, தமிழின விரோதப் போக்கு , இவற்றுக்கு குரல் தரும் வசனங்கள் பாராட்டுக்குரியவை .
விஜய சங்கர் இசையில் பாடல்கள் சிறப்பாகவும் தெளிவாகவும் இருகின்றன . அருமை பாடல் வரிகளும் சிறப்பு
ஜெயவந்த் சிறப்பாக நடித்துள்ளார் . ஐராவும் குறையில்லை .
பாரதியின் பாடல்கள், சுதேசிக் கருத்துகளை அழுத்தமான குரலில் தெறிக்க தெறிக்க சொல்கிறார் யோகி தேவராஜ் . சிறப்பு .
தனது வாழ்நாள் லட்சியமான ” சென்னைக்கு சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் ” என்ற தனது கருத்தை வலியுறுத்தி ஒரு பாட்டும் வைத்துள்ளார் இயக்குனர் யுரேகா .
கடைசி நேர திருப்பங்கள் வெகுஜன ரசிகன் பார்வையில் சிறப்பு
கமிஷனரின் அந்த காட்டுப் பகுதி பின்புலமும் கறி சோறு அழைப்பும் நைஸ் .
படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும், ஏதோ நற்செய்திக் கூட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு நடிக்க வந்தவர்கள் போல,
காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டே இருக்கிறார்கள் . காது கிழியுதுடா சாமி . ஜெய்வந்த் தவிர மற்ற பலரின் நடிப்பிலும் அதீத செயற்கை
அதே போல எல்லாக் காட்சிகளிலும் நுனிப் புல் மேய்ச்சல்.
அழுத்தமான சரியான டைரக்ஷன் படத்தில் இல்லை
காட்சிகளாக வர வேண்டிய பல விஷயங்கள் சும்மா வசனமாக வந்து போகின்றன.
இன்று உண்மையில் வட்டி தொழிலை விட பிற பல தொழில்களில்தான் வடவர்களின் அராஜகமும் அயோக்கியத் தனமும் இருக்கிறது . அதை எல்லாம் சொல்லி இருக்கலாம்
பைக்குகள் எரிக்கப் படுவதற்கான காரணம் ஆரம்பத்திலேயே புரிந்து விடுவதால், எரிப்பது யார் என்ற ஒற்றை சஸ்பென்ஸ்க்காக காத்திருப்பதும் சுமையாக இருக்கிறது .
எல்லாவகையிலும் இன்னும் விஷயமும் அடர்த்தியும் நேர்த்தியும் தேவைப்படும் படம் !