கமலி from நடுக்காவேரி @ விமர்சனம்

அப்புண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் துரைசாமி தயாரிக்க,

மாஸ்டர் பீஸ் நிறுவனம் வெளியிட, 

கயல் ஆனந்தி, பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், ஸ்ரீஜா நடிப்பில், 

ராஜசேகர் துரைசாமி கதை எழுதி இயக்கி இருக்கும் படம்,

கமலி from நடுக்காவேரி !

திருவையாறு பக்கத்தில் உள்ள நடுக்காவேரி கிராமம் வாழ்,  நடுத்தரப் பொருளாதாரம் கொண்ட சண்முகத்தின்  ( அழகம்பெருமாள்) மகள் கமலிக்கு ( கயல் ஆனந்தி), 

புத்திசாலித்தனம்  இருந்தாலும் அலட்சியம் காரணமாக படிப்பில் ஆர்வம் கம்மி.

இந்த நிலையில் சென்னை ஐ ஐ டி யில் படிக்கும் அஷ்வின் என்ற மாணவன் படிப்பில் சிறந்து விளங்குவது பற்றிய செய்தியோடு வரும் அவன் புகைப்படத்தைப் பார்த்து அவன் மேல் காதல் கொண்டு அவனை சந்தித்து காதலைச் சொல்லி, உடன் இருந்து பழகுவதற்காக ஐ ஐ டி யில் சேர முயல்கிறாள் கமலி.

அவளுக்கு ஊரிலேயே சிறப்பான இலவசப் பயிற்சி கொடுத்து உதவுகிறார் ஒய்வு பெற்ற பேராசிரியர் அறிவுடை நம்பி (பிரதாப் போத்தன்).

ஐ ஐ டியில் சேரும் கமலி  அஷ்வினைச்  சந்தித்தும் காதலைச் சொல்லத் தயங்கிப் படிப்பிலும் கோட்டை விட்டு, அவமானங்களைச் சந்தித்து, தான் நேசிக்கும் அஷ்வினின் கிண்டலுக்கும் ஆளாகிறாள். 

மனம் உடைந்து சொந்த ஊருக்குக் கிளம்பி வரும் கமலிக்கு அடுத்து நடந்தது என்ன என்பதே,  இந்த கமலி from நடுக்காவேரி !

கதை எழுதி இயக்கிய இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் படக் குழுவினருக்கு மனப் பூர்வமான முழுமையான பாராட்டுகள்!

உயர் கல்வியை முன்னிறுத்தி இப்படி ஒரு அவசியமான அற்புதமான படத்தை எடுத்ததற்கு வாழ்த்துப் பூங்கொத்து. இயக்குனர் ராஜசேகர் துரைசாமிக்கு  சிவப்புக் கம்பள வரவேற்பு. 

பெரிதாகச் சமரசங்கள் இல்லாத-  கம்பீரமான – ஆண்மையுள்ள திரைக்கதை. 

‘ஐ ஐ டி க்கு ஒரு பெண் காதலனைத் தேடித் போகிறாள்; கனவில் டூயட் பாடுகிறாள்’ போன்ற விஷயங்கள் ஆரம்பத்தில் சற்றே ஒவ்வாமை தந்தாலும்,  இரண்டாவது பகுதியில் அதை மிகச் சிறப்பாக சமன் செய்து முற்பகுதிக் காட்சிகளையும் நியாயப் படுத்துகிறார் இயக்குனர் ராஜ சேகர் துரைசாமி. உன்னதம் !

அனேகமாக வினாவிடைப் போட்டிக்கு இறுதிக் காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து தமிழில் வந்திருக்கும் முதல் படம் இது என்றே நினைக்கிறேன் . இடம் பெறும் கேள்விகளும் நிஜமாகவே ஐ ஐ டி தரம். அற்புதம் . 

பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதன் அவசியம், ஒரு மாணவியின் முன்னேற்றத்தில் உள்ளூர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் சேவை மனம்                        ( சுப்பிரமணி கதாபாத்திரம்) , உயர் படிப்பில் வழிகாட்டியாக அமையும் பேராசிரியர்களுக்கு இருக்கும் தந்தைமை (அறிவுடை நம்பி கதாபாத்திரம்) ,  ஒரு நல்ல தோழமையின் பலம் ( வள்ளி கதாபாத்திரம்) , 

இவற்றோடு பொறுப்பான அப்பா, அன்பான அம்மா, பாசமுள்ள பாட்டி, அக்கறையான அண்ணன் , விசுவாசம் மிக்க வேலைக்காரர்களின்  நல்ல குணம் என்ற பல உயர்ந்த பண்புக்கான காட்சிகளை போகிற போக்கில் வைத்து உள்ளம் கொள்ளை கொள்கிறார் இயக்குனர் . 

பேராசிரியருக்கும்  கமலிக்குமான அந்த ஆரம்பகட்ட பொன்மொழிச் சண்டையே குறும்பான அழகு . 

கமலிக்குப் பிறகு பேராசிரியரின் பணி , அவரது மாணவ நேசம் மிக நெகிழ்வு .

இன்றைய ஐ ஐ டியில் பணத்தை வைத்தும் ( அறைத் தோழி) சாதிய அடிப்படையிலும் இயங்கும் சிலரின் மனநிலையைக் கூட, ”புரிஞ்சிக்க முடிஞ்சவன் புரிஞ்சுக்கோ …” என்ற ரீதியில் சொல்கிறது படம். 

ஐ ஐ டி யில் வரும் பிராமண ஆசிரியர் வறுத்த மீன் சாப்பிட்டுக் கொண்டே போனில் மனைவியிடம் கோவிலில் இருப்பதாகச் சொல்வது கல கல . அவர் சார்லி சாப்ளினின் சர்க்கஸ் படக் காட்சிகளைப் பார்ப்பது கூட ஒரு குறியீடுதான். சிறப்பு .

அப்பாவுக்கு கொத்தனார் வேலை உட்பட  பல வேலைகளில் உதவும் வள்ளி பாத்திரப் படைப்பு அருமை. வினாவிடைப் போட்டியை வீட்டில் இருந்து பார்க்கும் போது அவளை , கமலியின் அண்ணன் அருகில் உட்கார வைத்த , இயக்குனரின் திரை மொழிக்கு ஒரு கை குலுக்கல். 

பல இடங்களில் மனம் நெகிழ்த்திக் கண் கலங்க வைக்கிறது படம். அற்புதம் .

வெயில் நேரத் தஞ்சைப் பகுதி கிராமங்களை அப்படியே கண் கூசக் காட்சிப்படுத்துகிறது ஜெகதீசன் லோகாயனின் ஒளிப்பதிவு.. தீனதயாளனின் இசை எளிமையான இயல்பு. 

அழகான கடல் கண்களை விரித்து சுருக்கி,  மிக சிறப்பான முக பாவனைகளோடு அற்புதமாக கமலியைக் கொண்டு வந்திருக்கிறார்  ஆனந்தி . பிரம்மாதம். 

தோழி வள்ளியாக வரும் ஸ்ரீஜா அசத்தலாக நடித்துள்ளார் . மிக சிறப்பு . அழகம் பெருமாள், பிரதாப் போத்தன், இமான் போன்றோரும் சிறப்பு. 

சில படங்களின் நோக்கம் கலைப் பூர்வமானதாக இருக்கலாம் . ஆனால் இது போன்ற படங்களின் நோக்கத்தில்  கலைத் தன்மையோடு சமூக அக்கறையே முக்கியம் . 

அந்த வகையில் படத்தில் சில விஷயங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 

1. வீட்டு வாசலில் கரும்பலகையில் அழகான பொன் மொழிகளை தமிழில் எழுதிப் போடும் அறிவுடை நம்பி கதாபாத்திரம்,  விட்டால் மூச்சு கூட ஆங்கிலத்திலேயே விடுகிறது.

நன்கு ஆங்கிலம் தெரிந்த ஆனால் தமிழ்த் தன்மை உள்ள கதாபாத்திரமாக அதைப் படைத்து இருக்கலாம். அவ்வளவு ஏன் ? ஐ ஐ டி யிலேயே தமிழ்ச் சங்கம் வைத்து நடத்துகிற- மாபெரும் ஆங்கிலப் புலமையும்  பெற்ற பேராசிரியர்கள் உண்டே. 

2. இறுதிக் கட்ட வினாவிடைப் போட்டிகள் ஆங்கிலத்தில் இருப்பதுதான் யதார்த்தம் . மறுக்கவில்லை . ஆனால் வெகு ஜன- குறிப்பாக கிராமப் பகுதி மாணவர்களின் புரிதலுக்காக அவற்றை தமிழ்க் குரலில் ஒலிப்பது போல ( அதாவது பின்னணியில் ஒலி குறைந்த- ஆங்கிலத்துக்கான உதட்டசைவோடு!) காட்டி இருக்கலாம் .  

3. ஐ ஐ டி வாழ்வில் பணக்கார வர்க்க அறைத் தோழிகளின் செயல்பாடுகளை – கிராமப்புற மாணவிகள் முன்னேறி வந்தால் அவர்கள் காட்டும் வன்மத்தை-  இப்படி பொசுக்கென்று முடிக்காமல் இன்னும் கொஞ்சம் ஆழமாகக் காட்டி இருக்கலாம். 

4. ஐ ஐ டி யில் இருக்கும் மேட்டுக் குடி சாதி ஆணவத்தை , கிராமப் புற மாணவர்கள் மீதான கிண்டலை , குறிப்பாக இன்று சென்னை ஐ ஐ டி தமிழர்களுக்கு இல்லை என்ற உண்மையை எங்கேனும் லேசாகச் சொல்லி இருக்கலாம். 

5. சென்னையில் ஐ ஐ டி அமைக்க ஆரம்பத்தில் ஒத்துக் கொண்ட அன்றைய பிரதமர் நேரு , கடைசி நேரத்தில் அதை அன்றைய ஆந்திரத் தலைவர் ஒருவரின் சிபாரிசு காரணமாக ஹைதராபாத்துக்குக் கொண்டு போக முடிவு செய்ய, 

விசயம் அறிந்து பதைபதைத்து ஒழுங்காக சாப்பிடக் கூடச் செய்யாமல் டெல்லிக்குச் சென்று, நேரு இருந்த கூடத்துக்குள் முன்னறிவிப்பு இல்லாமல் நுழைந்து கோபத்தோடு I WANT IIT MADRAS என்று அரைகுறை ஆங்கிலத்தில் திரும்பத் திரும்பக் கோபத்தோடு சொல்லி,

சென்னைக்கு அதைக் கொண்டு வந்த பெருந்தலைவர்  காமராஜர் பற்றி எங்காவது சொல்லி இருக்கலாம்.

குறிப்பாக இறுதிக் கட்ட வினாவிடைப் பகுதியில்  சென்னை ஐ ஐ டி யாரால் கொண்டு வரப் பட்டது என்ற ஒரு கேள்வியை வைத்து, அதற்கு  கான்பூர் மாணவன் சரியாக பதில் சொல்வது போலக்கூடக் காட்டி இருக்கலாம்.

அந்த ஐ ஐ டியில்தான் இன்று தமிழர்களுக்குக் கதவு அடைக்கப்பட்டு இன்றைய ஆந்திராவினர் ஆதிக்கம் தலை விரித்து ஆடுகிறது என்பதை ஒரு துளியாவது சொல்லி இருக்கலாம். 

5. கமலி கடைசி நேரத்தில்  கண் மூடித்தனமான காதலில் இருந்து மீண்டு விட்டாள் என்பதை இப்படி கவிதைப் பூர்வமாக மென்மையாக சொல்வதோடு விட்டிருக்காமல்,

அதை ஒரு தனி காட்சியாக வைத்து இன்னும் அழுத்தமாக, சினிமாத்தனமாக நாடகத்தனமாகக் கூட  வைத்து , 

மாணவ மாணவியர் சக ஆண் பெண் துணையைக் காதலிப்பது அவசியமில்லை . மாறாக கல்வியை, லட்சியங்களை, எதிர்காலத்தை, சுய முன்னேற்றத்தைக் காதலிக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச்  சொல்லி இருக்கலாம். 

ஆனாலும்…

இப்படி எல்லாம் பட்டியல் போட்டுச் சொல்வதால் அது ஒன்றும் இந்தப் படத்தின் தரத்துக்கும் சிறப்புக்கும் எதிரானது என்று அர்த்தம் அல்ல .

நூற்றுக்கு நாற்பத்தைந்து மதிப்பெண் பெற்றவனை இரண்டே வார்த்தையில் பாராட்டி அனுப்பி விட்டு நூற்றுக்கு 97 மதிப்பெண் பெற்றவனிடம் மிச்சமுள்ள மூன்று மதிப்பெண்களையும் பெற்றிருக்க என்ன செய்ய வேண்டும் என்று நாற்பத்தைந்து நிமிடம் பேசுவோம் இல்லையா ? அப்படித்தான் இதுவும் . 

இன்னும் கொஞ்சம் பணம் , இன்னும் கொஞ்சம் தொழில் நுட்ப நேர்த்தி, இன்னும் கொஞ்சம் திரைக்கதை மேம்பாடு இருந்திருந்தால் இன்னொரு ‘இறுதிச் சுற்’றாக வந்திருக்க வேண்டிய படம் இந்த,  கமலி from நடுக்காவேரி.

இப்போதும் கூட சமூக அக்கறை நோக்கில் அதைவிட உயர்ந்த சுற்றாகவே சிறக்கிறது படம். 

அடுத்த வரிகள்தான்  அதி முக்கியம்…

உங்கள் வீட்டில் படிக்கிற பிள்ளைகள் , அதுவும் கிராமப்புற பிள்ளைகள் அதிலும் முக்கியமாக பெண் பிள்ளைகள் இருந்தால் அவசியம் அவர்களை அழைத்துக் கொண்டு போய் நீங்கள் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் கமலி from நடுக்காவேரி . 

அது செலவு அல்ல. வருங்கால  வாழ்க்கை வெற்றிக்கான முதலீடு. !

மொத்தத்தில், 

கமலி from நடுக்காவேரி  …. கல்விக்காக செழித்து ஓடும்  ஜீவநதி . 

மகுடம் சூடும் கலைஞர்கள்

*************************************

ராஜ சேகர் துரைசாமி, ஆனந்தி, ஸ்ரீஜா, ஜெகதீசன் லோகாயன், பிரதாப் போத்தன், அப்புண்டு ஸ்டுடியோஸ் துரைசாமி. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *