ஏ வி ஏ என்டர்டைன்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி சார்பில் மோகன் பாபு தயாரிக்க, விஷ்ணு மஞ்சு , மோகன் லால், சரத்குமார், பிரபாஸ், பிரீத்தி முகுந்தன், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் , சம்பத் ராம் நடிப்பில் முகேஷ்குமார் சிங் இயக்கி இருக்கும் படம்.
காட்டுப் பகுதியில் ஐந்து இனக் குழுக்கள் . அவர்களுக்குள் பகை . அவர்களின் ஒரு இனக் குழுவை சேர்ந்த திண்ணன் (விஷ்ணு மஞ்சு). அவனின் சிறு வயதில் அவன் நண்பன் ஒருவனை காளிக்குப் பலி கொடுக்க, அதில் இருந்து நாத்திகனாக மாறுகிறான் . இந்நிலையில் அங்கு உள்ள ஒரு வாஉ லிங்கத்தை அபகரிக்க ஒரு பகைவர் கூட்டம் வர , அவர்களை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் .
அப்போதும் பலி கொடுக்க முயல, திண்ணன் எதிர்க்க அவனை தள்ளி வைக்கிறார் அவனது தந்தை (சரத்குமார்) . திண்ணனுக்கு இன்னொரு ஊர்த் தலைவர் மகளோடு காதல். அவளோடு அவன் தனியே வாழ , அவளுக்கு ஆசைப்பட்ட ஒருவன் அவளை அபகரிக்க வருகிறான் .
அவனை வென்று மனைவியைக் காக்கும் சூழலில் அவன் சிவனை வணங்கி ஆத்திகன் ஆகிறான். இந்த மாற்றத்தை சிவனும் ( அக்ஷய் குமார்) பார்வதியும் (காஜல் அகர்வால்) கைலாயத்தில் நின்று கவனிக்கிறார்கள்.
காலத்தி (காற்று வீரியமாய் சுழலும் இடம்) என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம் கண்டு அதற்கு பூஜை செய்கிறான் திண்ணன் . தன்னிடம் உள்ளவை மூலம்தான் பூஜை செய்ய முடியும் என்பதால் காட்டுப் பன்றியின் இறைச்சியை படைக்கிறான் .
அங்கு வெகுகாலமாக பூஜை செய்து வரும் பிராமணர் ஒருவர்( மோகன் பாபு) அதை அபச்சாரமாக கருதி , திண்ணனை அடிக்க, லிங்க சிவன் கண்ணில் ரத்தம் வருகிறது . எல்லோரும் திகைத்து நிற்க திண்ணன் தன் கையில் உள்ள அம்பால் தனது கண்ணைப் பிடுங்கி சிவனின் கண்ணில் வைக்கிறான் .
வாயு லிங்கத்தின் இன்னொரு கண்ணில் ரத்தம் வர ஒரு கண் போன நிலையில் இன்னொரு கண்ணைப் பிடுங்கி சரியாக சிவலிங்கத்தின் இன்னொரு கண்ணில் வைக்க வசதியாக சிவனின் அந்த இரண்டாவது கண்ணில் தன் காலை அடையாளத்துக்காக தூக்கி வைத்து தன் இன்னொரு கண்ணையும் பிடுங்கி சிவனின் இரண்டாவது கண்ணில் வைத்து குருடனாக மயங்கி சிவலிங்கம் மேல் சாய்கிறான்
சிவன் அவனை ஆட்கொள்கிறார் . திண்ணன் கண்ணப்பன் ஆகிறான் .
பிராமணரும் திண்ணனின் உயர்ந்த பக்தியை உணர்ந்து கொள்கிறார் . பூஜையில் பொருட்களை விட உண்மையான அன்பே முக்கியம் என்றும் புரிந்து கொள்ளலாம். அல்லது சிவனின் அன்பைப் பெற பிராமணர் என்றால் பூவும் புஷ்பமும் வைத்தால் போதும் . அதே மற்றவர்கள் என்றால் இரண்டு கண்ணையும் துள்ளத் துடிக்க பிடுங்கி கொடுத்தால்தான் முடியும் என்றும் புரிந்து கொள்ளலாம் .
கன்னட ராஜ்குமாரின் முதல் படமான பேடர கண்ணப்பா (வேடர் கண்ணப்பா என்று பொருள் ) படத்தின் கதையும் திண்ணனின் கதைதான் . கடவுளை அசுத்தப்படுத்தி விட்டதாக கண்ணப்பா மீது அர்ச்சகர் குற்றம் சாட்ட நடந்தது என்ன என்பதாக அந்தப் படம் போகும்
இது எல்லாவற்றுக்கும் தாத்தா அல்லது ஆத்தா யார் என்றால் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றை பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்ற சேக்கிழார் எழுதிய பக்தி இலக்கியம்தான் . அதில் தான் அறுபத்து மூவரில் ஒருவராக கண்ணப்ப நாயனார் கதை வருகிறது .
“கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்” என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், “நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்” என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர். மேலும் மாணிக்கவாசகர் தனது திருவாசகம் – திருக்கோத்தும்பி பகுதியில் “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னையும் ஆட்கொண்டருளினார்” என்று கூறுகிறார்.
அதாவது கண்ணப்பரின் அன்புக்கு ஒப்பாக அன்பு காட்ட இயலாத என்னையும் என்னப்பன் ஆட்கொண்டு அருளினார் என்று கூறுகிறார். இவ்வாறு பல்வேறு காலத்தில் பல்வேறு சிவனின் அடியார்கள் கண்ணப்பரின் அன்பினைப் பெரிதும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
முறைப்படி இந்தக் கதையை படமாக எடுத்தவர்களுக்கு நேர்மை இருந்தால் சேக்கிழாரின் பெரிய புராணத்துக்கு கிரடிட் கொடுக்க வேண்டும் . ஆனால் எழுபது வருடம் முன்பு ராஜ்குமாரும் செய்யவில்லை. இப்போ எடுத்திருக்கும் விஷ்ணு மஞ்சுவும் செய்யவில்லை.
காலஹஸ்தி சரித்ரே என்ற நாடகத்தில் இருந்துதான் படம் எடுத்தோம் என்று கன்னடப் படமும் பசப்பியது .
இப்போது இந்தப் படத்திலும் ஆதாரம் என்று ஏதோ தெலுகுலு பெயர்களைத்தான் போடுகிறார்களே ஒழிய சேக்கிழாருக்கு அங்கீகாரம் இல்லை . இவர்கள்தான் இறைவன் பெயரில் படம் எடுப்பார்கள் . நாம பாக்கணும் .
ஒரிஜினல் கண்ணப்ப நாயனார் புராணத்தில், அன்றைக்கு தமிழ் மண்ணாக இருந்து மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது ஆந்திராவுக்கு தாரை வார்க்கப்பட்ட காலத்தி என்ற பகுதி அப்புறம் காளத்தி ஆகி இப்போது காளஹஸ்தி என்று அழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்த வாடார் குல தலைவன் நாகன் அவன் மனைவி தவதத்தை இருவருக்கும் பிறந்தவன் திண்ணன் . முக்கியமாக குழந்தை இல்லாமல் இருந்து முருகன் அருளால் பிறந்த குழந்தை . முருகனின் வடிவானவன் என்பதுதான் சேக்கிழார் சொல்வது
முருகன் பற்றிய இந்த விஷயமும் ராஜ்குமார் படத்திலும் இல்லை. இந்த விஷ்ணு மஞ்சு படத்திலும் இல்லை.
அது கூட பரவாயில்லை . இந்த கண்ணப்பா படத்தில் திண்ணன் அர்ஜுனனின் அவதாரம் என்று ஒரு புதிய உருட்டு உருட்டி இருக்கிறார்கள் .
படமாகப் பார்த்தால் விஷ்ணு மஞ்சு உற்சாகமாக நடிக்கிறார் . அறிமுகக் காட்சி அபாரம் .ஆனால் இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம் .
நாயகி பிரீத்தி முகுந்தன் தோற்றம் காதல் பாடல் காட்சிகளில் கவர்ச்சி ஆவேச நடிப்பு என்று நடிப்பை வழங்கி இருக்கிறார். அவ்வளவு பெரிய நடிகர்கள் இருந்தும் சரத்குமாரும் பிரபாசும் மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள் .
மோகன் லால் கதாபாத்திரத்துக்கு தமிழ் பதிப்பில் மோகன்லாலே தமிழ் பேசுகிறேன் என்று .. மலையாள வாடை மூக்கைத் துளைக்கும் அளவுக்கு நெடி ஏற்றிப் பேசி இருக்கிறார். ஓர் ஊரின் தலைவராக சம்பத் ராம் கவனிக்க வைக்கிறார்.
என்னவென்று பெரிதாக உணராமலேயே சிவனும் பார்வதியுமாக நிற்கிறார்கள் அக்ஷய் குமாரும் காஜல் அகர்வாலும் .
அட்டகாசமான் கலை இயக்கம், நியூசிலாந்து காட்டுப் பகுதியின் லொக்கேஷன், பிரம்மாதமான சண்டைக் காட்சிகள், ஆண்டனியின் படத் தொகுப்பு மணிவர்மா ஸ்டீவன் தேவசியின் இசை, ஷெல்டன் சாவ்வின் அற்புதமான ஒளிப்பதிவு இவை படத்தின் பிளஸ் பாயிண்டுகள் .
கமர்ஷியல் கிளாமர் கம் பக்திப் பரவசத்தில் மூன்று மணி நேரம் மூழ்க தயாராக இருப்பவர்கள் பார்க்கலாம்.
