அஷ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் சார்பில் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக்,கஜராஜ் , அருள்ராஜ் நடிப்பால் சண்முகப்பிரியன் என்பவர் இயக்கி இருக்கும் படம்.
33 வயது வரை கல்யாணம் ஆகாத மதுரைக்காரப் பையன் ஒருவன் ( விக்ரம் பிரபு) உறவில் யாரும் பெண் தராத நிலையில் கோவை பகுதியில் உள்ள – தன்னைப் போன்ற இடை நிலை சாதி ஆனால் வேறு சாதிப் பெண்ணை ( சுஷ்மிதா பட்) – பெண் பார்க்க குடும்பத்தோடு போகிறான் . அவனது அத்தையின் கணவன் ( அருள்தாஸ்) ஒரு பந்தா பேர்வழி .
போன இடத்தில் பெண் பார்த்து சம்மதம் ஆகி கல்யாண ஏற்பாடுகள் செய்ய அங்கிருந்து கிளம்பும்போது கொரோனா அதிகரித்து லாக் டவுன் அறிவிக்கிறார் பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி .
பெண் பார்க்க ஒரு பேருந்தையே எடுத்துக் கொண்டு போன மதுரைக் கூட்டம் அங்கேயே தங்க வேண்டிய சூழல்.
பெண்ணின் சகோதரி (மீனாட்சி தினேஷ்) அக்காவின் மாப்பிள்ளையிடம் உரிமையாக விளையாடுகிறார்.
இந்த நிலையில் மணப்பெண். தன் தாழ்த்தப்பட்ட சாதிக் காதலனோடு ஓடிப் போக , பையனின் மாமன் கேவலமாகப் பேச, இரண்டு குடும்பத்துக்கும் அங்கேயே சண்டை . என்ன நடந்தது என்பதே படம்.
அரேஞ்சுடு மேரேஜ் போன இடத்தில் ஒரு லவ் மேரேஜால் பிரச்னை வந்தால் அப்புறம் என்ன என்பதே படம்.
கேமராவுக்குள் இருந்து புலி பாய்ந்து வந்து கடித்து விடுமோ என்ற பயம் இருக்கு . அனால் அதை வெளிக்காட்டாமல் இருக்க வெளியே கவசமாய்ஒரு புன்னகை . அந்த மூடில் படம் முழுக்க வருகிறார் விக்ரம் பிரபு.
கொசு கடித்தால் உயிர் போய்விடும் என்ற பயத்தோடு ஒருவர் வெளியே வந்தால் அவர் முகம் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார் சுஷ்மிதா .
இருவரிடமும் அப்படி ஒரு பிளாஸ்டிக் தன்மை . பூமியில் இருந்துதான் ஒழிக்க முடியாது என்று பார்த்தால் இந்த பிளாஸ்டிக்கை நடிப்பில் இருந்தும் ஒழிக்க முடியாது போலிருக்கிறது .
மீனாட்சி தினேஷ் மட்டும் உற்சாகமாக அழகாக சிறப்பாக நடித்துள்ளார் .
எண்பது தொன்னூறுகளில் எடுக்க வேண்டிய படத்தை இப்போது எடுத்து இருக்கிறார்கள் . இப்போ முப்பத்து மூணு வயது என்பது ஹீரோ கிராமத்தில் உரக்கடை வைத்து இருந்தாலும் அது பெரிய விஷயம் இல்லை.
பெண் பார்க்க கும்பலாகப் போன குடும்பம் லாக் டவுன் சமயத்தில் பெண் பார்க்க போன வீட்டில் மாற்றிக் கொண்டார்கள் என்பது தவிர இந்த படத்தில் என்ன சுவாரஸ்யம் இருக்கு?
அதை மட்டுமே வைத்து ஒரு வித்தியாசமான கலகலப்பான அல்லது உறவுகளின் அவசியம் சொல்லும் ஒரு திரைக்கதை எழுதி இருந்தால் கூட அது நன்றாக இருந்திருக்கும்.
அதையும் செய்யவில்லை .
படம் அது பாட்டுக்கு ஆரம்பித்து அது பாட்டுக்கு ஓடி அது பாட்டுக்கு முடியுது . நாம நாம பாட்டுக்கு வெளிய வர்றோம் .
மொத்தத்தில் லவ் மேரேஜ்…. லவ் டேமேஜ் .