பாகுபலி முதல் பாகம் படத்தில் கட்டப்பா பாகுபலியை கொல்வதற்கான காரணத்தைக் காணோம் . அதுதான் இரண்டாம் பாகமாகவே தயாராகிக் கொண்டு இருக்கிறது .
அந்த பாகுபலி பாகம் இரண்டு படம் அடுத்த ஆண்டுதான் வரவிருக்கிறது . அனால் அதற்குள் கட்டப்பாவைக் காணோம் என்ற பெயரில் ஒரு படமே திரைக்கு வருகிறது . (இதுக்கு பேருதான் டைமிங் !)
படத்தில் ஹீரோவாக நடித்து இருப்பது கட்டபாவாக நடித்தவரின் மகன்!
யெஸ்ஸ்ஸ்ஸ்சு !
விண்ட சிம்ஸ் மீடியா என்டர்டைன்மென்ட் சார்பில் கார்த்திக் , சிவகுமார் மற்றும் இரண்டு நண்பர்கள் சேர்ந்து தயாரிக்க,
சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் , சாந்தினி , காளி வெங்கட் , மைம் கோபி , யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க ,
இயக்குனர் அறிவழகனிடம் ஈரம் மற்றும் வல்லினம் படங்களில் அசோசியேட் இயக்குனராகப் பணி புரிந்த, மணி செய்யோன் எழுதி இயக்கி இருக்கும் படம்தான் இந்த ‘கட்டப்பாவைக் காணோம்’ .
படத்தின் பெயர் மீன் வடிவில் டிசைன் செய்யப்பட்டு இருக்க ,
‘கடப்பா மீன் இருக்கு, கடப்பாறை மீன் கூட இருக்கு… கட்டப்பான்னு மீன் இருக்கா? ’என்ற சந்தேகத்தை இயக்குனரிடம் சொன்னால் ,
ஒரு வாஸ்து மீனுக்கு படத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பெயர்தான் கட்டப்பாவாம் .
படத்தைப் பற்றி சொல்லும் இயக்குனர் மணி செய்யோன் “ அதிர்ஷ்டம் என்றால் என்ன என்ற கேள்விக்கு கூகுள் கூட சுற்றி வளைத்துத்தான் பதில் சொல்கிறது .
ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களுக்கும் முன்னேற்றத்துக்கும் வெற்றிகளுக்கும் அதிர்ஷ்டம் முக்கியமா ? உழைப்பு முக்கியமா என்ற கேள்விக்கு விடை தேடும் ஒரு முயற்சியே இந்தப் படம் .
அதிர்ஷ்டம் என்ற விசயத்தை வைத்து கதை உருவாக்கும்போது , வாஸ்து மீன் , சிரிக்கும் புத்தர் போன்ற அதிர்ஷ்டம் தருவதாக நம்பப்படும் விஷயங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன .
இவை எல்லாம் படத்தில் வருகின்றன.
அவற்றில் வாஸ்து மீனை முன் வைத்து அதற்கு கட்டப்பா என்று பெயர் வைத்து அதையே படத்துக்கு தலைப்பாக்கி விட்டோம்.
படத்தில் ஐ டி நிறுவன ஊழியராக சிபி நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை நடித்த பல படங்களில் நிஜ வயதை விட அதிக வயதுள்ள பெண்ணாகவே நடித்து உள்ளார் . இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஓர் இளம் கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்கிறார் .
வில்லனாக மைம் கோபி நடிக்கிறார் .
படம் ஆரம்பித்து ஹீரோவுக்கு அட்வான்ஸ் கொடுத்த உடனேயே ஒரு வாஸ்து மீனை வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம் . அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக சூழலைப் பழக வைத்தோம் .
அப்படியும் படப்பிடிப்பில் மீனை நடிக்க வைப்பதுதான் பெரிய வேலையாக இருந்தது . நாம் மீனை ஓர் இடத்தில் தண்ணீரில் நிற்க வைத்து விட்டு கேமராவை ஃபோகஸ் செய்து நடிப்பவர்களை நிற்க வைத்து நடிக்க வைத்தால்,
எடுத்துக் கொண்டு இருக்கும்போதே மீன் நகர்ந்து விடும். எனவே நடிக நடிகையர் மீண்டும் மீண்டும் நடிக்க வேண்டி இருந்தது . ரொம்பவே கஷ்டப்பட்டோம் .
ஒரு நிலையில் மீன் பழகி விட்டது. நாம் தொட்டிக்கு வெளியே ஓர் இடததில் கை வைத்தால் மீன் சரியாக அங்கே வந்து நின்று விடும் .
அந்த வகையில் இந்தப் படத்தை மீனுக்கு டிரைனிங் கொடுத்து நடிக்க வைத்த படம் என்றே சொல்லலாம் “ என்கிறார்
சிபிராஜ் என்ன சொல்கிறார்?
“மணி செய்யோன் எனக்கு பல வருடங்கள் பழக்கமானவர் . இதற்கு முனே இரண்டு கதைகள் சொல்லி இருக்கிறார் . ஒரு ஸ்டோரி பேங்க் மாதிரி நிறைய கதைகள் வைத்துள்ளார் . நல்ல திறமைசாலி . உழைப்பாளி.
அவர் இந்தக் கதையோடும் தயாரிப்பாளரோடும் வந்த போது. இதில் உள்ள வித்தியாசம் என்னைக் கவர்ந்தது .தயாரிப்பாளர்கள் சம்பள விசயம் உட்பட எல்லா விசயத்திலும் மிக சரியாக நடந்து கொண்டனர்.
பொதுவாக மக்களுக்கு பாசிடிவ்வான மன நிலையை தரும் உருவகங்கள் எதுவாக இருந்தாலும் அதில் தப்பு இல்லை என்பது என் கருத்து . வாஸ்து, வாஸ்து மீன் எல்லாம் அப்படித்தானே .
வாஸ்து மீன் அதிர்ஷ்டம் என்று நம்பும் ஒருவர் அவர் வீட்டில் வாஸ்து மீன் இருந்தால் அந்த நம்பிக்கையில் உற்சாகமாக செயல்படுவார் . இருக்கட்டுமே .
மற்றபடி நாங்கள் இந்தப் படத்தில் மூட நம்பிக்கையை வளர்க்கவில்லை. படத்தில் பல சம்பவங்கள் நடக்கும்.
அது அதிர்ஷ்டத்தில் வருகிறது என்று நினைத்தால் அப்படியே இருக்கும் . உழைப்பால் வருகிறது என்று நினைத்தால் அதற்கும் பொருத்தமாக இருக்கும்.
படம் எல்லோரையும் கவரும்படி இருக்கும்.
படம் பற்றி அப்பா ‘அது என்ன கட்டப்பாவைக் காணோம்னு பேரு வச்சிருக்கீங்க?’ என்றார் . கதையை சொல்லி காரணத்தை சொன்னதும் ‘பொருத்தமான தலைப்பு’ என்றார் .
ஆனா இப்படி ஒரு படம் உருவாகி இருப்பது பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு இன்னும் தெரியாது. இனிமேதான் நியூஸ் எல்லாம் பார்த்துதான் தெரிஞ்சிக்கப் போறார்” என்றார் .
தயாரிப்பாளர்கள் கார்த்திக் , சிவகுமார் இருவரும் பேசும்போது , “ வித்தியாசமான கதை . மணி செய்யோன் சிறப்பாக உருவாக்கி உள்ளார். சிபி , ஐஸ்வர்யா மற்றும் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் .
படத்தில் வாஸ்து மீன் , சிரிக்கும் புத்தா எல்லாம் வருவதற்கும்,
எங்கள் கம்பெனியின் பெயர் வின்ட் சிம்ஸ் என்று வாஸ்து கருவியின் பெயர் வைத்து இருப்பதற்கும் படத்தின் கதைக்கும் சம்மந்தம் இல்லை .
அது எதிர்பாராமல் நடந்த ஒற்றுமைதான் .
படம் செப்டம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வருகிறது “ என்கிறார்கள் .
வாழ்த்துகள்!