கிருஷ்ணா , பிந்து மாதவி, காளி வெங்கட், எம் எஸ் பாஸ்கர் , ஹரீஷ் பெராடி நடிப்பில் சத்ய சிவா இயக்கி இருக்கும் படம் . சில வருடங்களுக்கு முன்பு வந்த கழுகு முதல் பாகத்தின் தொடர்ச்சி … அல்ல !
செந்நாய்கள் மிகுந்த காட்டுப் பகுதியில் மரங்களை வெட்ட ஏலம் எடுக்கிறார் ஒரு அரசியல்வாதி ( வெங்கட்) . அதற்கு உதவுகிறார் ஒரு எம் எல் ஏ ( ஹரீஷ் பெராடி)
செந்நாய்களிடம் இருந்து மரம் வெட்டுபவர்களை காப்பாற்ற வேட்டைக்காரர்கள் தேவைப்படுகிறார்கள் .
தேனிப் பகுதியில் திருடிப் பிழைத்துக் கொண்டு, போலீசிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு ஓடி வரும் இருவரை ( கிருஷ்ணா , காளிவெங்கட்), வேட்டைக்காரர் என்று நம்பி வேலைக்கு அழைத்து வருகிறார் கண்காணி ( எம் எஸ் பாஸ்கர்)
பன்நெடுங்காலத்துக்கு முன்பு — இறந்தவர்களை வைத்துப் புதைக்கும் முது மக்கள் தாழிகள் சில, காட்டில் மண் சரிவு காரணமாக வெளிப்பட , அவற்றை உடைத்து உள்ளே உள்ள பழங்கால தங்க ஆபரணங்களை எடுக்கிறார் எம் எம் ஏ.
அவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு காதலியோடு ஓடிப் போக நாயகன் திட்ட மிட , அப்புறம் நடந்தது என்ன என்பதே கழுகு 2.
கண்ணுக்கும் மனசுக்கும் இனிக்கும், அற்புதமான் மூணாறு மற்றும் கொடைக்கானல் லொக்கேஷன்கள் …. அடர் காடுகள் …. கொட்டும் பனி நேர பகல் இரவுக் காட்சிகள் , எங்கும் வழியும் ஈரம் … வெட்டப்படும் உயர் மரங்கள், வானில் இருந்து வீழ்வது போல, சரியும் ரம்மியம் .. இவற்றை எல்லாம் அழகாகக் கொண்டு வந்திருக்கும் ராஜா பட்டாச்சார்ஜியின் கேமரா … ( முக்கியமாக அந்த ஆரம்ப கட்ட ட்ரோன் ஷாட் … ) அபாரம் ஆகா அட்டகாசம் !
மழைக்காலத்தில் அந்த காடுகள் புழங்குவதற்கு எவ்வளவு கடினமானவை என்பதை விளக்க மேட்டில் ஏறும் ஜீப் வழுக்கிக் கொண்டு ஏறும் விதத்தை காட்டிய விதத்தில் சபாஷ் வாங்குகிறார் இயக்குனர் சத்ய சிவா
முதுமக்கள் தாழியில் உயிரோடு வைத்துப் புதைப்பார்கள் என்று தவறான கருத்தை உடைத்து இறந்தவர்களையே புதைப்பார்கள் என்று விளக்கிய விதத்துக்காக இயக்குனர் சத்யா சிவாவுக்கு கோடானு கோடி நன்றிகள் !
ஆனால் முதுமக்கள் தாழிக்குள் புதையலா ?
கிருஷ்ணா , பிந்து மாதவி , காளி வெங்கட் நல்ல பங்களிப்பு .
செந்நாய் கூட்டத்திடம் இருந்து காக்க வந்தவன் நிஜமான வேட்டைக்காரன் இல்லை என்பது தெரிந்தும் அவன் அநாதை என்பதற்காக மன்னிப்பது எப்படி ?
அவனை துப்பாக்கி சுடக் கற்றுக் கொள்ள வைக்க, நாயகி என்ன முயற்சி எடுத்தார் ? டம்மி குண்டு போட்டு மேலே சுட்டால் போதும் என்றால் நிஜ வேட்டைக்காரன் எதற்கு ?
திருடன் என்று தெரிந்தும் அவன் மேல் நாயகிக்கு காதல் வருவதற்கு என்ன நியாயமான காரணம் ? வெளியூரில் இருந்து யார் வந்தாலும் லவ் பண்ணிடலாம் என்று காத்திருந்த மாதிரியே இருக்கே….
அதே போல நாயகன் மீது கண்காணிக்கு வரும் அதீத கோபம், நண்பர்களுக்குள் சண்டை, அப்பா மீது நாயகி குரோதம் என்று திடீர் திருப்பங்களுக்காக படம் முழுக்க கேரக்டர் அசாசினேஷன்கள்.
அதுவும் எம் எல் ஏ வீட்டில் நாயகன் திருடும் விதம் எல்லாம் .. லாஜிக் மரணம் !
கழுகு 2…… கண்ணுக்கு குளிர்ச்சி!