டபுள் ஆக்குபன்சி @ விமர்சனம்

பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி மூவீஸ் சார்பில் ஏ சி எஸ் அருண்குமாரும் குஷ்பு சுந்தரும் தயாரிக்க, சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விசுவநாதன், வினோத் கிஷன் , வி டி வி கணேஷ் , பகவதி பெருமாள் நடிப்பில் அஸ்வின் கந்தசாமி இயக்கி இருக்கும் படம்.

கிராமத்துத் தம்பதிக்கு ( போஸ் வெங்கட் – வினோதினி வைத்தியநாதன்) பிறக்கும் குழந்தை ஒன்று,  இரவு பனிரெண்டு மணி நேரம் ஆணாகவும் பகல் பனிரெண்டு மணி நேரம் பெண்ணாகவும் இருக்கிறது.  இதயம் மட்டுமே இருவருக்கும் ஒரே மாதிரி எப்போதும் இயங்கும் . 
ஆண் பெண் இருவருக்கும் பொருத்தமான ரஜினி என்ற பெயரை வைக்கிறார்கள். 
 
அப்பா அம்மா ஒரு விபத்தில் பகலில் சாக,   அவர்களுக்கு சடங்கு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் ஆண்  ரஜினிக்கு (சந்தோஷ்) . அது பெண் ரஜினி மேல் (ரேஷ்மா வெங்கடேஷ்)  வெறுப்பாக மாறுகிறது. 
 
இருவருக்கும் தனித்தனி போன் . அதில் அவர்கள் அனுப்பிக் கொள்ளும் வாய்ஸ் மெசேஜ் மூலம்தான் தகவல் பரிமாற்றம்,  சண்டை எல்லாம்.. 
 
பெண் ரஜினி தனது உடல்நிலை பற்றி  மேலும் அறிய ஒரு டி என் ஏ ரிசர்ச் சென்டரில் பணி புரிகிறாள். அங்கே பணி புரியும் இளைஞன் ஒருவன் (வினோத் கிஷன்) பெண் ரஜினியைக் காதலிக்கிறான் .
 
ஆண் ரஜினி இரவில் மட்டுமே இருக்க முடியும் என்பதால் ஒரு பாரில்  வேலை செய்கிறான் அங்கு வரும் கஸ்டமர் ஒருவர் (  வி டி வி கணேஷ் ) அவனுக்கு நெருக்கமாகிறார். அங்கு வரும் ஒரு மாடர்ன் மேன்லி அழகி (சம்யுக்தா விசுவநாதன்) மீது ஆண்  ரஜினிக்கு காதல்.  அவளும் நேசிக்கிறான். 
 
ஆண் ரஜினியின் பார் நண்பருக்கு இந்த  பால் மாற்ற விபரீதம் தெரிய வருகிறது. ஆனால் ஆண் ரஜினியின் காதலி,  தன் காதலன் வேறொரு பெண்ணோடு வாழ்கிறான் என்று தவறாக புரிந்து விலகுகிறாள்.
 
பெண் ரஜினி தனது காதலனோடு செக்ஸ் வைத்துக் கொள்ள, அவள் பெரிய மனுஷி ஆகிறாள். ஆனால் பன்னிரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நடக்கும் மாற்றம் ஒழுங்கற்றுப்  போகிறது. எப்போது வேண்டுமானாலும்  ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறும் என்ற நிலை. 
 
இந்நிலையில் பெண் ரஜினியின் நிறுவன முதலாளி (பக்ஸ்) ரஜினியை வைத்து ஒரு டி என் ஏ பரிசோதனைக்கு முயல,  என்ன நடந்தது என்பதே படம்.
 
தமிழ் சினிமாவில் அரைச்ச மாவையே அரைக்கிறார்கள் தமிழ் சினிமாவில் என்ற குற்றச் சாட்டை ஒரே கையால் வழித்துப் போடும் கதை.
 
மேக்கிங்கில் அசத்துகிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி.  
 
அப்பா அம்மா இறந்தபோது அந்த இறுதிச் சடங்கில் பெண் ரஜினியின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை   வேறொரு மனிதரின் இறுதிச் சடங்கில் மூலம் ஆன் ரஜினி உணரும்  காட்சி அபாரமானது . அது போல அதுவரை பகலில் மட்டுமே வாழ்ந்து வந்த பெண் ரஜினி,  நிலா பார்க்கும் காட்சி . இது போன்ற சில காட்சிகளில் எழுத்தாளராகவும் சிறக்கிறார்  அஸ்வின் கந்தசாமி   . 
 
நடிக நடிகையர் தேர்வு , மற்ற தொழில்நுட்பக்க கலைஞர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் விதம் இவற்றில் எல்லாம் இவரது தொழில் நுட்ப அறிவு புலப்படுகிறது 
 
 சாந்த குமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு படத்தை ஒரு எலைட் தன்மைக்கு கொண்டு போகிறது. 
 
பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார் சாம் சி எஸ். 
 
எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயக்குனர் சொன்னபடி உற்சாகமாக நடித்துள்ளார்  சந்தோஷ்.  
 
ஸ்டீரீயோ டைப் வில்லன் வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த வினோத் கிஷனுக்கு  ஒரு ஸ்வீட் பாய் கேரக்டர் . சிறப்பாக நடித்துள்ளார் . 
 
கைக்கு அடக்கமாக ஒரு தேவதை கிடைத்தால் எப்படி இருக்கும்?  அப்படி உணர வைக்கிற நடிப்பை கொடுத்துள்ளார் ரேஷ்மா வெங்கடேஷ். ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் மட்டுமே உள்ள பெண்ணாக அவரது பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதிகமாக வெளியே காட்டிக் கொள்ளாத கேரக்டரில்,  சிறப்பான நடிப்பு. 
 
”என்னா பொண்ணுடா இவ..” என்று வாய் பிளந்து கேட்கும்படியான கேரக்டர் சம்யுக்தா விசுவநாதனுக்கு .பிரித்து மேய்ந்திருக்கிறார். கேரக்டரை முழு உடம்புக்குள்ளும் ஏற்றிக் கொண்டு நடித்திருக்கிறார். சின்னச் சின்ன முக பாவனைகள், அர்த்தமுள்ள இடைவெளிகள் என்று அபாரமான நடிப்பு. 
 
ரஜினியின் பிரச்னையை கேட்கும்  ஆண் ரஜினியின் காதலி, ” என்ன..? கொரிய படத்துக் கதையா?”’   என்று படத்தில் கேட்பது உண்மையாகவே இருக்கட்டும். 
 
ஆனால் கதைக்கு ஏற்ற அந்த லெவலுக்கான திரைக்கதை இருக்க வேண்டாமா?
 
போர்வாளை எடுத்துக் கொண்டு புடலங்காய் நறுக்கிய கதையாக இருக்கிறது திரைக்கதை.  
 
பெண் ரஜினியை அலுவலகத் தோழன்  சுற்றி வருவது ஓகே. ஆனால்  பகல் முழுக்க பெண்ணாக இருக்கும் ஆண் ரஜினி எப்படி ஒரு பெண் மீது வழக்கமான சினிமா ஹீரோ போல கண்டவுடன் காதலாக முடியும்.? அதுவும் உடல் ரீதியான ஈர்ப்பால் வரும் காதல்?  இல்லை  அவனுக்கு பிரச்னை தெரியும் என்றாலும் அதை மீறியும் காதல் வந்தது என்றால் அதை கிளியராக சொல்ல வேண்டாமா?
 
செல்போன் பயன்பாடு விஷயங்களிலும் ஏகப்பட்ட கேள்விகள்.
 
பனிரெண்டு மணி நேர  பால் மாற்ற   விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிறார்கள்.
 
அப்பா அம்மா இறந்த நிலையில் பனிரெண்டு மணி நேர இடைவெளியில் ஒரு ஆண் பெண்ணாக மாறுவதை எப்படி ஊர் உணராமல் இருந்தது. பகலில் செத்த அப்பாவை அப்போதே தூக்கி விட்டார்களா? இரவில் ஆண்  ரஜினி அப்பா அம்மா  உடலை பாக்கவே  இல்லையா?
 
“ஹலோ .கதையே லாஜிக் இல்லாத ஒன்று .இப்படி எல்லாம் இந்தப் படத்துக்கு லாஜிக் பார்க்க வேண்டுமா ?”என்று கேட்கக் 
 கூடாது  
 
ஹலோ  ஹலோ… வித்தியாசமான கதை என்றாலும் அதில்  வரும் யதார்த்த சூழல்களை நம்பும்படி எழுதுவதுதான் வெற்றிக்கான எழுத்து. இல்ல விட்டால் படம் ரசிகனுக்கு அந்நியமாகப் போய் விடும். 
 
அதே போல காமெடி என்று நினைத்து  படத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சில காட்சிகள் முகம்  சுளிக்க வைக்கின்றன. 
 
கதையின் நேச்சருக்கு ஏற்ப,  மரபணு நிறுவன உரிமையாளர் கேரக்டரை   வைத்து ஏதாவது பெரிதாக பிளான் பண்ணி இருந்தால் படம் வேகம் எடுத்து இருக்கும்.. அந்தக் கேரக்டரையும்  ஏதோ காமெடி படத்துக்கு உப்புமா வில்லனாக மாற்றி விட்டார்கள். 
 
ஆண்  ரஜினி முதலில் காதலை சொல்லவில்லை ; அந்தப் பெண்தான் முதலில் சொன்னாள் என்று ஆரம்பித்து இருந்தால் இந்த கிளைமாக்ஸ் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.  
 
அதே நேரம் இந்த படத்தை சீரியஸாகத்தான் முடிக்க வேண்டுமா என்ற கேள்வியும் வருகிறது. 
 
படத்தின் கதைக்கு ஏற்ற திரைக்கதை அமையாமல் போனதுதான்  இந்தப் படத்தின் பெரிய பலவீனம். 
 
நல்ல ரைட்டர் உள்ளே இருந்திருந்தால் பட்டையை கிளப்பி  இருக்கலாம் . 
 
மொத்தத்தில் டபுள் ஆக்குபன்ஸி  ….. சர்வீஸ் சரியில்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *