கோடை மழை @ விமர்சனம்

kodai-21

யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.சுரேஷ்குமார் – டி. அலெக்சாண்டர் இருவரும் தயாரிக்க, 

புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிக்க, பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் கோடை மழை .
இந்த மழை பூமி  குளிர்விக்குமா ? இல்லை சூட்டைக் கிளப்பிப் போகுமா ?  பார்க்கலாம் .
Kodai Mazhai Tamil Movie Stills
‘காலகாலமாக வறுமையில் மட்டுமே செழுமையாக இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன் கோவில் பகுதிகள் !  
காவல்காரர்களாக இருந்த இவர்களை குற்றப் பரம்பரையாக்கியது ஆங்கிலேய அரசு . ஒரு நிலைக்குப் பிறகு அந்த கொடுமிஅயிஒல் இருந்து மீண்டு இவைகள் விவசாயம் செய்ய ஆரம்பிக்க,  நிலம்  வறண்டது
 
அங்கிருந்து பயணித்தால் தென்காசி , புனலூர் , வளமான கேரளா . எனவே அந்தப் பகுதிகளுக்கு இவர்கள் வேலைக்குப் போனார்கள் .
அங்கே நடந்தது அநியாயத்திலும் அநியாயம் !
கேரளாவில் குற்றவாளிகள் கிடைக்காத வழக்குகளில்,  இவர்களைக் குற்றவளியாக்கி  சிறையில் தள்ளி,  வழக்குகளை முடித்துக் கொண்டது கேரள போலீஸ் . 
 
kodai-41
‘வீணாக இப்படி அவப்பெயர் சுமந்து சாவதை விட , அவர்கள் சொல்லும் களவை  செய்து பார்த்தால்தான் என்ன/’  என்று முடிவு செய்து, இந்தப் பகுதி நபர்கள் சிலர் கேரளா போய் திருடிக் கொண்டு வர ஆரம்பித்தார்கள் ‘
— என்று முன்கதை சொல்லித்  துவங்குகிறது படம் 
சங்கரன் கோவில் பகுதியில் இருந்து போய் மிலிட்டரியில் இருக்கும் இளைஞன் ஒருவன் (கண்ணன்) அவனது ஆருயிர் நண்பன் ஒருவன் 
அந்த நண்பன்  கேரளா சென்று திருடி வரும்  நபர்களில் ஒருவன்  
kodai 6
தன் ஊருக்கு  இந்தத் திருட்டால் வரும் அவமானம் கண்டு பொங்கி எழுந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்கும் வகையில் செயல்படுகிறார்  இன்ஸ்பெக்டர் ஒருவர் (இயக்குனர் களஞ்சியம் ).
 அவருக்கு ஒரு தங்கை (பிரியங்கா)
மிலிட்டரியில் இருந்து லீவுக்கு வரும் பட்டாளத்தானுக்கு , இன்ஸ்பெக்டர் தங்கை மீது காதல் . 
தன் ஊர்  நபர்கள் கேரளா சென்று திருடுவது அவனுக்கும் பிடிக்காது . ஆனாலும் அவனது நண்பன் கேரளா போய் திருடிக் கொண்டு,  பட்டாளத்தானின் பைக்கில் வருவதாலேயே இன்ஸ்பெக்டரிடம் இருந்து தப்பிக்கிறான் . 
kodai-11
உண்மை அறியும்  பட்டாளத்தான் நண்பனை வெறுக்கிறான் . அதனால் மனம் திருந்தும் நண்பன் உழைத்துப் பிழைக்கத் துவங்குகிறான் . விடுபட்ட நட்பு மீண்டும் மலர்கிறது . 
ஒரு நிலையில் பட்டாளத்தானுடனான தன் தங்கையின் காதல் இன்ஸ்பெக்டருக்கு  தெரிய வருகிறது. அவனுக்கே  தங்கையை திருமணம் செய்து வைக்க இன்ஸ்பெக்டர் முடிவு செய்கிறார் . 
இந்த நேரம் பார்த்து கலெக்டர் ஆபீசில் காவலர்களையே கொன்று விட்டு ஒரு கொள்ளை நடக்கிறது .பட்டாளத்தானின்  நண்பனின் செல்போன் அந்த இடத்தில் கிடைக்கிறது .
இன்ஸ்பெக்டரை மேலதிகாரி அசிங்கமாக திட்ட , கொந்தளிக்கும் இன்ஸ்பெக்டர் ,  பட்டாளத்தானின் நண்பனை ஸ்டேசனில் வைத்து  உதைத்த உதையில்  அவன் செத்துப் போகிறான் .
கொந்தளிக்கும் நாயகன் இன்ஸ்பெக்டரைத்  தாக்குகிறான் . அதனால் தன் தங்கையை அவனுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவை இன்ஸ்பெக்டர் மாற்றிக் கொள்கிறார் . 
kodai 2
நாயகன் லீவு முடிந்து ராணுவத்துக்கு வந்து விட , இன்ஸ்பெக்டர் தன் தங்கைக்கு சொந்தத்தில்  திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் . 
காதலி கொடுத்த தகவல்படி ஊருக்கு வரும் நாயகனுக்கு நடக்கும் சம்பவங்களே இந்த கோடை மழை . 
யாழ் என்ற வார்த்தைக்குள் LTTE என்ற எழுத்துகள் வருமபடி துவங்கும் படத்தின் டைட்டிலுக்கு ஒரு சபாஷ் !
அசாம் காட்டில் இருந்து நாயகன் தப்பி வரும் காட்சிகளை மிக சிறப்பான ஷாட்களுடன் அழகாக ஒளிப்பதிவு(ம்) செய்து படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கதிரவன் 
திருநெல்வேலி சங்கரன் கோவில் பகுதியின் வறுமையை வெம்மையை ஆளில்லா  வெளிகளை படமாக்கிய விதம் சிறப்பு . 
மண்ணின் தன்மையோடு கதாபாத்திரங்கள் துலங்குவதும் சிறப்பு .  
kodai-31
சாம்ப சிவம்  இசையில் ”நெல்லைச் சீமையில வந்து பொறந்த நெல்லு நெறத்தாளே… ”பாடல்,  “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு ..”பாடல் உட்பட,
 வைரமுத்து எழுதி இருக்கும் அத்தனை பாடல்களும் நெல்லைத் தமிழ் மணத்தோடும் நல்ல மொழி குணத்தோடும் உள்ளன . 
அதிலும் காதுக்குள் தேன் ஊற்றும் , நெல்லைச் சீமையில பாடலின் மூன்றாவது பல்லவியில் ‘வெரசா காய்ச்சவளே…’ என்ற வரிக்கு இயக்குனர் கதிரவன்  போட்டிருக்கும் ஷாட்…
kodai
சூப்பர் .! 
நாயகனாக நடித்திருக்கும் கண்ணன் மிக ஆர்வத்தோடு நடித்துள்ளார். உடல் மொழிகளில் இன்னும் யதார்த்தம் வேண்டும்
பிரியங்கா  கருப்பழகியாக மாறி  இருக்கிறார் .  பொதுவில் காணும் நெல்லைச் சீமைக்காரியை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் .
இவரது  கண்கள் , உதடுகள் , தாவாய் இவற்றுக்கு அழகழகாக குளோசப் வைத்து ரசித்து ருசித்து படமாக்கியுள்ளார் இயக்குனர் கதிரவன் 
இன்ஸ்பெக்டராக வரும் களஞ்சியம் தோற்றம் நடை உடை பாவனையிலே பயமுறுத்துகிறார் . கடைசி காட்சியில் நெகிழ்வாக நடித்து இருக்கிறார் 
கவுன்சிலராக வரும் இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்கிறார் . குறிப்பாக விபத்து விளக்கக் காட்சி . 
நாயகனின் பாட்டியாக நடித்துள்ளவர் சிறப்பாக மிக இயல்பாக நடித்துள்ளார். 
நாயகன் வீட்டில் இருக்கும் தலைவர்கள் போட்டோக்களில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் போட்டோவை மற்றும் மறைத்து, மடைமை … அடச்சே ! கடமை ஆற்றி இருக்கிறது சென்சார்  போர்டு !
kodai-51
படத்தின்  காட்டப்படும் சூழலியல் உணர்வில் ஒரு லயம் இருக்கிறது . சிறப்பான விஷயம் .  
நிதானமாக ரசித்துப் பார்க்க  ஒரு படம்! 
கோடைமழை…… குற்றாலச் சாரல்தான் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →