டி சி @ விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக க, வாமிகா கப்பி,  சஞ்சனா, கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிருஷ் தயாள். பாலாஜி தேவி பிரசாத் நடிப்பில் , கதை  எழுதி, அருண் ரஞ்சனோடு சேர்ந்து திரைக்கதை எழுதி, பிராங்கிளின் ஜேக்கப்போடு சேர்ந்து வசனம் எழுதி, அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் படம் .  D C என்றால்  Dதேவதாஸ்,  Cசந்திரா என்ற இருவரின் கதை.  

கல்வித் தொகையாகக் கட்டுவதற்கு  கொண்டு போய்க் கொண்டிருந்த பெரும்பணத்தை போலீஸ் அடித்துப் பிடுங்க அந்தப் போலீசுடன் மோதி, அந்தப் பகை பெரிதாகி போலீசால் தேடப்படும் குற்றவாளியாகிறான்  தாஸ் என்கிற தேவதாஸ் (லோகேஷ் கனகாஜ்). நண்பர்கள் சிலரோடு சேர்ந்து  ஆயுதக்க கொள்ளையிலும் ஈடுபடுகிறான் . எனவே அவனுக்கும் போலீசுக்கும் பகை பெரிதாகிறது. 
 
பாரில் நடனமாடும் பார்வதி (சஞ்சனா)என்ற பெண் மீது அவனுக்கு ஈர்ப்பு . அதை காதலாக மாற்றுவதற்குள் தாஸைக் கொல்ல வந்த போலீசின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிறாள் பார்வதி . அவளை  மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றலாம் என்று அஷ்ரப் (பாலாஜி தேவி பிரசாத்) என்ற போலீஸ் அதிகாரி கெஞ்சியும் , தாஸ் மேல் உள்ள கோபத்தால் அவள் உடலில் மேற்கொண்டு  துப்பாக்கிக் குண்டுகள் இறக்கி கொல்கிறார் சீனியர் போலீஸ் அதிகாரி போஜராஜ் .(கிருஷ் தயாள்)
 
கல்கத்தாவைச் சேர்ந்த பெண் சந்திரா (வாமிகா கப்பி). 
 
ஆறு வயதில் பெற்றோராலேயே விற்கப்பட்டு விபச்சார விடுதிக்கு வந்து பதினெட்டு வருடம் அந்த வீட்டுக்குள் அறைக்குள்  மட்டுமே வாழ்ந்து, தமிழ் உட்பட பல மொழிகளை கட்டிலிலேயே பேசக் கற்றுக் கொண்ட அவது  அறைக்குள்,  காசு கொடுத்து நுழைகிறான் தாஸ். ஆனால் செக்ஸ்க்காக அல்ல.
 
 அப்போது அவளை அங்கு கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கும் சிலரை அவளுக்காக கொள்கிறான்.
 
பதினெட்டு வருடம் கழித்து அவனோடு  வெளியே வரும் சந்திரா,  சூரியன், மலைகள்,  காற்று , கடல் எல்லாம் பார்க்கிறாள்.ஒரு நிலையில் தாஸின் பெரும்பணம் தொலைந்து அவனுக்கு பணம் தேவைப்பட , தனது ரெகுலர் கஸ்டமர்களை எல்லாம் பார்த்து பிளாக்மெயில் செய்து பணம் வாங்கி தாஸுக்கு தருகிறாள்.
 
விபச்சாரத்தில் தடை வரக்  கூடாது என்பதற்காக தனது கருப்பையை அறுத்து எறிந்த டாக்டரை சுட்டுக் கொள்கிறாள். போலீசின் தேடல் வேட்டை தீவிரமாகிறது. 
 
தப்பிக்கும் பயணத்தில்  எளிய மக்கள் பலருக்கும் உதவுகிறான் தாஸ். ஒரு நிலையில் நண்பர்கள் எல்லோரும் கூட தாஸை கை  விட்டபோதும் கூட சந்திரா அவன் கூடவே இருந்து அவனது பெண் வடிவம் போல அவனுக்காக  அவனோடு செயல்படுகிறாள் . போலீசின் தேடுதல் உச்சம் தொட,  நடந்தது என்ன என்பதே டி சி  .
 
‘அடி, உதை, முறி, கிழி, உடை ,முறுக்கு, நெம்பு , குத்து, குதறு , ஓகேவா?  அப்புறம் ரத்தம்  எல்லாம் இருக்கட்டும். வேர்வை ,  கண்ணீர்,  நிணநீர் , எச்சில் எல்லாம்   வழியட்டும் , போதாது ,  கதற விடு, ஓலம், கூக்குரல் , ஊளை , அலறல், எல்லாம் இருக்க வேண்டும்.’ என்ற தனது வழக்கமான பாணியில் படத்தை எடுத்து இருக்கிறார்  அருண் மாதேஸ்வரன். 
 
 இடைவேளையில் வெளியே வரும்போதே  ஆடு தொட்டியில் அம்பது நூறு ஆடுகளை அறுத்துப் போடு விட்டு வெளியே வருவது போல ஒரு மனநிலை படம் பார்க்கும் நமக்கே வந்து விடுகிறது.
 
 அப்படி இருக்க, அவருக்கு பொருத்தமாக வேறு யார் இருக்க முடியும் , லோகேஷ் கனகராஜை விட . 
 
சிறுவயதில் இருந்தே போலீசோடு மோதி மேலே   சொன்ன  எல்லாம் பார்த்த தாஸின் கேரக்டரில் இறுகிப் போய் நடிக்கிறார் லோகேஷ் கனகராஜ். எதற்கும் பெரிதாக எக்ஸ்பிரஸ் செய்து பழக்கம் இல்லாத கேரக்டரில் பொருந்துகிறார். ஆக்ஷன் பட ஹீரோவாக அசால்டாக பாஸ் ஆகிறார். 
 
சிறிய கேரக்டரில் சஞ்சனா  மனம் கவர்ந்து மறைகிறார் . 
 
அடுத்து வருவதுதான் பஞ்சாபி நாட்டு வெடிகுண்டு வாமிகா கப்பி.  ஒரே வீட்டுக்குள் விபச்சாரம் செய்வது  தவிர வேறு ஏதும் அறியாத பெண்ணின் மன மற்றும் உடல் மொழிகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் வாமிகா . 
 
ஒரு காட்சியில் அறைக்குள் இருந்து வெளியே வரும்போது ‘இந்த  உடம்பே  என்னது இல்ல..” என்பது போல ஒரு நடை நடக்கிறார் பாருங்கள். அபாரம்.
 
விபச்சாரத்துக்கு தடையாக இருக்கக்கூடாது என்று தனது கருப்பையை அறுத்த டாக்டரை சுட்டுக் கொல்லும் காட்சி,  கடைசியில் மீண்டும் தாசுக்காக அதே ஆவேசம் காட்டும்  காட்சி எல்லாம் அருமை 
 
குடும்பப் பாசமுள்ள போலீஸ் அதிகாரி அஷ்ரப் கதாபாத்திரம் அருமை .அதில் பாலாஜியின் நடிப்பும் சிறப்பு. 
 
வித்தியாசமான பின்னணி இசையால் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார் அனிருத். முகேஷின் ஒளிப்பதிவு , ஜி கே பிரசன்னாவின் படத்தொகுப்பு  இரண்டும் பாராட்டுக்குரியது. 
 
இடைவேளைக்குப் பிறகு படத்தில் சில நல்ல தருணங்கள் வருகின்றன . ஆனால் அதற்கும் முன்பே குடி (ரத்தத்தில் ) முழுகி விட்டது. 
 
இது கூடப் பரவாயில்லை.வண்டி வண்டியாய் , வண்டை வண்டையாய் , வளைய வளையமாய் …
 
 கோபக்  காட்சிகள், கிண்டல் காட்சிகள், பெயர்கள்  இவற்றை வைத்து வரும்….
 
 பச்சை பச்சையான ஆபாச வார்த்தைகள் (இரண்டு அர்த்தம் எல்லாம் இல்லை. நேரடியாக  ஒரே அர்த்தம்தான்) ….
 
 சாப்பிட்டியா? தூங்கிட்டியா? வீட்டுக்கு போ, அப்புறமா வர்றேன் என்பது போல சகஜமாக வந்து கொண்டே இருக்கிறார்கள்.லோகேஷ் கனகராஜ் மற்றும் படம் பார்க்கும் ரசிகர்கள் தவிர மற்ற எல்லாருமே படத்தில் சந்திராவை ‘தே’யன்னா போட்டுதான் அழைக்கிறார்கள். 
 
முடியலடா சாமி 
 
போலீஸ் செய்யும் அராஜகத்தால் பாதிக்கப்பட்டு அடிதடி என்று போய் போலீசோடு தீவிரமாக மோதும் கதைகள் எவ்வளவு உண்டு.  
 
ஆனால் நிஜத்தில் இப்படி நடந்த விஷயமான வீரப்பன் விவகாரத்தில் கூட இவ்வளவு  ரத்தம்,  வன்முறை இருந்திருக்குமா தெரியவில்லை. அந்த அளவுக்கு கும்பலாக குமபலாக வந்து குத்துகிறார்கள் அல்லது குத்துப்பட்டு அலறுகிறார்கள்.சுடுகிறார்கள் அல்லது சுடப்பட்டு சாகிறார்கள்.
 
படம் முடிந்ததும் எங்காவது ஆறு குளத்தில் நீராடி வந்தால் பரவாயில்லை என்ற மன நிலைக்கு வந்து விடுகிறோம் 
 
பொதுவாக ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பார்க்க மற்றவர்களுக்கும் அனுமதி கிடைக்கத்தான் செய்கிறது. யாரும் அதை சரியாக கடைபிடிப்பது இல்லை. ஜனநாயகன் படத்தை குஞ்சு குளுவான்களோடு போய் பாத்தா பயலுகத்தானே அம்ம பயலுக எல்லாம்.
 
ஆனால் அப்படி தப்பித்தவறி கூட அழைத்துப் போய்விடக் கூடாத படம் இது. வன்முறை , ஆபாசம் என்ற இருமுனைத் தாக்குதலையும் இடி மின்னலாய் இறக்கி இருக்கிறார்கள்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *