நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் , யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் ஆகியோர் தயாரிக்க கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி நடிப்பில் இராஜேஷ் கதை திரைக்கதை வசனம் எழுத மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கி உள்ள படம் குதிரைவால் .
தூக்கத்தில் இருந்து விழிக்கும் இளைஞன் சரவணுக்கு ( கலையரசன்) வால் முளைத்து இருக்கிறது. குதிரைவால். தன் பெயர் மறந்து தன்னை ஃபிராய்ட் என்ற பெயர் கொண்டவனாக நினைத்துக் கொள்ளும் சரவணன் வால் முளைத்த காரணத்தைத் தேடி அலைகிறான். தனக்கு வரும் கனவில் அதற்கான காரணம் இருப்பதாக நம்பி குறி சொல்லும் பாட்டி, ஜோசியர், ஆறு மாதம் மட்டுமே வாத்தியாராக (சரவணனுக்கும்) இருந்த ஒரு கணக்கு வாத்தியார் ஆகியோரைச் சந்தித்து காரணம் தேட முயல்கிறான்.
அவனுக்கு ஏற்படும் நிகழ்வுகள் , உணர்வுகள், பிறழ்வுகள் அவற்றின் விளைவுகளே இந்த குதிரை வால்.

குறும்படங்களில் மட்டுமே இதுவரை தமிழில் நாம் கண்ட கட்டுகள் அற்ற, தடைகளை உடைக்கிற , வினோத , ஆவேச சிந்தனைக் கதைகள் வெள்ளித் திரையையும் தொடுகிறது என்பதற்கான அடையாளம் இந்தப் படம்.
கதை சொல்லல் என்பதை மீறி உணர்வுகளை சொல்ல முயலும் படம் இது.
படத்தில் முதலில் கவர்வது சரவணனுக்கு முளைத்த குதிரைவாலை படத்தில் இயங்க வைத்திருக்கும் விதம் . ஆனால் கலையரசன் கொஞ்சம் அதிகபட்சமாக (அது வால் தானே பாஸ். கடப்பாறை இல்லையே) இயங்கி இருந்தாலும் நடிக்க மிக சிரமமான ஒரு கதாபாத்திரத்தை அனாயாசமாக செய்திருக்கிறார் . பாராட்டுகள் .
கண்களை திரையில் இருந்து எடுக்க முடியாமல் கட்டிப் போடுவது கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு, ராமு தங்கராஜின் கலை இயக்கம், மற்றும் ஆடை வடிவமைப்பு, வண்ணப் பயன்பாடு, கிரேடிங் இவற்றின் கூட்டணிதான். இன்னும் ஈரம் காயாத இணையற்ற ஓவியம் போல உள்ளம் கவர்கிறது இந்த கூட்டணி . மலை முகடுகள் , ஈரம் ஊறும் கிணறு, என்று அபாரம். படத்துக்கு தேவைப்படும் அப்நார்மல் தன்மையை நம்பகத்தன்மையாக மாற்றி இருப்பது இந்த அணிதான். சபாஷ் .

”நினைவில் தொலைத்ததை கனவில் தேடுகிறேன்” என்ற வசனம்தான் இந்தப் படத்தில் ஒற்றை வரி அடையாளம். ”பூமியின் தோலான தரைக்குக் கீழ் நீர் ஓடுகிறது . மனிதனின் தோலுக்கு உள்ளே ரத்தம் ஓடுகிறது” என்பது போன்ற வசனங்கள் சிந்தனைத் தெறிப்பு . கர்ப்பமானது யாரால் என்று சொல்ல மறுக்கும் பெண்ணைப் பற்றி அவள் அம்மா பேசும் ” அவ வயித்துல ஒளிஞ்சு இருக்கற அந்த ஒத்தை சொல்லை வெளிய எடுக்க முடியல இல்ல?” என்ற வசனம் கவிதை .
நான் லீனியர் கதை சொல்லலுக்கு பலம் சேர்க்கும் சிறப்பான படத் தொகுப்பில் அசத்தி இருக்கிறார் எடிட்டர் கிரிதரன். அந்தோணி ரூபனின் ஒலி வடிவமைப்பு இந்தப் படத்துக்கு முக்கிய பலம்
புவி வெப்பமயமாதல், மனிதனின் அடையாளம் எண்களாக மாறிக் கொண்டு இருப்பது போன்ற விஷயங்களை ஆங்காங்கே பேசுகிறது படம்.
படம் முழுக்க பெண்களை பயன்படுத்தி இருக்கும் விதம் அருமை.

வித்தியாசமான தோற்ற சேத்தன், உயரச் சவால் கொண்ட ஆனால் ஸ்டைலிஷான அந்த டிடக்டிவ் எல்லாம் அசத்தல் .
பின்புலங்களின் வழியே உணர்வுகளை புரிய வைத்த விதம் சிறப்பு . அரசியல் மற்றும் சமூக அரசியல் குறியீடுகள் அருமை . எம் ஜி ஆரை அழகாக எம்ஜி ஆர் இல்லாமலே பயன்படுத்தி இருப்பது சிறப்பு .
பச்சையான கிணற்று நீரில் மிதக்கும் எம்ஜிஆரின் தொப்பி கண்ணாடிக்குக் கீழ் , நம்மையே அவரது மூக்கு வாய் , இரட்டை நாடித் தாவாய் ஆகியவற்றைத் தேட வைத்து நம்மையும் கொஞ்ச நேரம் ஃபிராய்ட் என்கிற சரவணன் ஆக்கி விடும் இடத்தில் அனாயாசமாக ஜெயிக்கிறது இந்தப் படக் குழு
போலவே இது போன்ற முயற்சிகளில் கோர விபத்தாக நிகழும் அதீத நாடகத்தன்மைக்கு இந்த படமும் சிக்கி விட்டது. ஆபிசில் சரவணன் மேனஜரை தாக்கும் காட்சிகள், சரவணன் கணக்கு வாத்தியார் சந்திப்பு போன்றவை எடுக்கப்பட்ட விதம் உதாரணம் .

சோழர்கள் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற வசதியை இந்தப் படமும் எடுத்துக் கொண்டுள்ளது . இப்படியே போனால் நாளைக்கு சோழர் வரலாறு என்பதே கட்டுக் கதைதான் அது வரலாறே இல்லை என்று நம் இன எதிரிகள் சொல்லும் அபாயம் உண்டு .
சீன டிராகனை ஒத்த பழங்கால தமிழக விலங்கு ஒன்றின் பெயர் யாளி. அதைக் காட்டி விட்டு யாழி என்று எழுதி அதையே தயாரிப்பு நிறுவனத்தின் பெயராகவும் வைத்துள்ளார்கள். அது தவறு. யாழி என்பது யாழ் மீட்டும் பெண் அல்லது யாழ் போன்ற பெண் என்றே பொருள்படும் (யாழன் ஆண்பால் பெயர்)
இது போன்ற வித்தியாச முயற்சிகளை சினிமாவில் வெகுஜனப் படுத்தும்போது ஆரம்பத்தில் வீரியத்தின் அளவைக் குறைத்து ரசிகனை பழக்கப்படுத்தி பின்னர் அடுத்தடுத்த படங்களில் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போக வேண்டும் . அப்போதுதான் வணிக ரீதியான வெற்றி சாத்தியப்படும் .
எடுத்த உடனே பதினாறு அடி பாய்ந்து இருக்கிறார்கள் .
நல்லதே நடக்கட்டும்,
குதிரை வால் .. புதுமை வாள்