சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க , செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் கங்கை அமரன், ரோஜா, நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் . ஷ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியான், போஸ் வெங்கட் நடிப்பில் டிடி பாலச்சந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
காதலித்து திருமணம் செய்த மனைவியின் ( ஷ்ரிதா ராவ்) வீட்டாரும் மதிக்காத நிலையில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றும் மாறவர்ம சுந்தர பாண்டியனுக்கு ( தர்ஷன் கணேசன்) , ஸ்டேஷனிலும் மரியாதை இல்லை. கிடைப்பது எல்லாம் எடுபிடிவேலைதான். காரணம் இல்லாமல் அவமானம் செய்து எரிந்து விழும் இன்ஸ்பெக்டர் ‘கடைசிவரை நீ துப்பாக்கியை தொடக்கூட முடியாது’ என்கிறார் .
பக்கத்து கிராமத்தில் மனைவியோடு ( ரோஜா) வாழ்ந்து வரும் முதியவர் லெனின் ( கங்கை அமரன்) , குழந்தைகள் இல்லாத நிலையில் ஓர் ஆட்டுக்குட்டியை பிள்ளை போல வளர்த்து வருகிறார்.
சட்ட விரோத மணல் கடத்தல் கும்பல் ஒன்றின் லாரி, அந்த ஆட்டுக்குட்டியை அடித்துக் கொன்று விடுகிறது. தட்டிக்கேட்ட லெனினை அடித்து விடுகிறார்கள்
அவர் அவரது ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு போக, அங்கே மணல் கடத்தல் முதலாளிகளுக்கு (யுகேந்திரன், ஆடுகளம் நரேன்) ஆதரவாக செயல்படும் அந்த இன்ஸ்பெக்டர் (போஸ் வெங்கட்) பெரியவரை அடித்து அவமானப்படுத்துகிறார் .
விஷயம் கோர்ட்டுக்குப் போக , சமூக நீதியிலும் நேர்மையிலும் அக்கறை உள்ள நீதிபதி ( ஜார்ஜ் மரியான்), பக்கத்து ஸ்டேஷனில் இருந்து லெனினுக்கு ஒரு காவலரை துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக நியமிக்கிறார். அப்படி நியமிக்கப்படுபவர்தான் , ‘உன் வாழ்நாளில் நீ துப்பாக்கியை தொடவே முடியாது’ என்று தனது மேலதிகாரியால் வஞ்சம் வைக்கப்பட்ட மாறவர்ம சுந்தர பாண்டியன்.
பாண்டியனும் அவர் மனைவி சந்தனமும் ( ரோஜா) மாறவர்மனை பாசமாக பார்த்துக் கொண்டு , அவனுக்கு அவன் மனைவிக்கும் இடையிலான பிரச்னையை தீர்க்க எல்லாம் உதவுகிறார்கள்.
பாண்டியனை எப்படியாவது கொலை செய்ய மணல் கடத்தல் மாபியாக்களும் அந்த போலீஸ் ஸ்டேஷனும் முயல, ஒரு பொருளாதார இக்கட்டு சூழலில் மணல் மாபியா மாறவர்மனை மடக்கி , லெனினை காக்கும் கடமையில் இருந்து விலகிக் கொள்ளச் சொல்ல… நடந்தது என்ன என்பதே படம்.
புதிதாக எதுவும் இல்லைதான். ஆனால் ஒரு பக்கம் மாறவர்ம சுந்தரபாண்டியனின் பிரச்னை, இன்னொரு பக்கம் லெனினின் பிரச்னை என்று இரண்டு விஷயங்களையும் இணைத்து காட்சிகள் வைத்த வகையில் கவனம் கவர்கிறார் இயக்குனர் டிடி பாலச்சந்திரன். இரண்டு கதைப் பாதைகளையும் அவர் டீல் செய்திருக்கும் விதம் அலாதியானது.
நீதிபதி ஜார்ஜ் மரியான் சம்மந்தப்பட்ட காட்சிகள் பிரமாதம். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற குறளை காட்சிகளாக வைத்திருக்கும் விதம், போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அவமானப்படுத்தப்பட்ட லெனினுக்கு போலீஸ் ஸ்டேஷனே ஒன்று சேர்ந்து கவுரவ அணிவகுப்பு மரியாதை தர வேண்டும் என்று அந்த நீதிபதி கொடுக்கும் தீர்ப்பு. அதை ஒட்டிய சில சிறப்பான காட்சிகள், லெனினின் மனைவி சந்தனம் கதாபாத்திர வடிவமைப்பு , ஒரு முக்கிய நிலையில் மாறவர்மனின் இருதலைக் கொள்ளி எறும்பு மனநிலை. அம்பேத்காரை ஆங்காங்கே காட்சிப்படுத்திய விதம் என்று….
முதல்பாதியில் ஆகா ஓகோ என்று பாராட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன .
நடிகர் திலகத்தின் கண்கள் மற்றும் முக அமைப்போடு சிறப்பாக நடித்துள்ளார் தர்ஷன் . கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார். மிக அக்கறையோடு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் பெரிய உயரங்களுக்கு வரலாம் வாழ்த்துகள்
இயக்குனர் , இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று இத்தனை வருடங்களில் எவ்வளவோ சாதித்த கங்கை அமரன், லெனின் கதாபாத்திரத்தில் அவ்வளவு யதார்த்தமாக சிறப்பாக நடித்துள்ளார் . ரோஜா பொருத்தம்
ஷ்ரிதா , அர்ச்சனா எல்லோரும் சிறப்பு.
தனது உருவத் தோற்றத்துக்கு பொருத்தமான நடிப்பில் நூறு சதவீதம் பொருந்திப் போகிறார் ஜார்ஜ் மரியான்.
இசைஞானி இளையராஜா இசை. சிறப்பாக இருக்கிறது என்றாலும் முதல் மரியாதை என்னும் காவிய படத்தின் தீம் மியூசிக்கை இதில் கங்கை அமரன் ரோஜாவுக்கு போடும்போது தியேட்டரில் குபீர் என சிரித்து விட்டார்கள். எனினும் கிளைமாக்சிலும் அதே இசையைப் பயன்படுத்தி இருக்கிறார்.
எட்வின் சகாயின் ஒளிப்பதிவு கிராமிய வனாந்திர சூழலை உணர வைக்கிறது. நாகூரான் ராமச்சந்திரனின் படத் தொகுப்பும் சிறப்பாக இருக்கிறது.
இப்படி பல சிறப்புகள் இருந்தும், இடைவேளக்குப் பிறகு இரண்டாம் பகுதியில் ஏக தடுமாற்றம். லெனினின் கதை , பாண்டியனின் கதை இரண்டையும் சரியாக செலுத்தும் திரைக்கதை அமையவில்லை. .
லெனின் – சந்தனம் தம்பதியின் மாறவர்மன் மீதான பாசம் கூட பிற்பகுதியில் நாடகத்தனமாக போகிறது .
போலீஸ் ஸ்டேஷனில் மாறவர்மனுக்கு மரியாதை இல்லை என்ற விஷயம் முதல் பாதியின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது . ஆனால் இரண்டாம் பகுதியில் அது ஒரு பிரச்னையாகவே இல்லாமல் போகிறது. எனில் முதல் பாதியில் அதற்கு அவ்வளவு நேரம் எதற்கு? படத்தின் முக்கியமான இரண்டு போலீஸ் அதிகாரிகள் கேரக்டருக்கும் பின்பாதியில் படத்தில் பெரிதாக வேலை இல்லை என்பது திரைக்கதையின் பின்னடைவே. திரைக்கதை வடிவமைப்பு சரியில்லை.
முட்டைக்காளான் என்பது படத்தில் மழை பெய்யும்போதே முட்டிக் கொண்டு வராது சில மணி நேரங்களுக்கு பிறகே மண்ணை முட்டிக் கொண்டு வெளியே வரும் லாஜிக் லக லக
கிளைமாக்ஸ் பகுதி பயங்கர பின்னடைவு . இந்த கதைக்கும் கதை போக்குக்குமான கிளைமாக்ஸ் இது இல்லை. சொல்லப் போனால் தப்பான சொல்லக் கூடாத கிளைமாக்ஸ் .
துப்பாக்கியை தொடக் கூட தகுதியில்லாதவன் என்று சொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஒரு நேர்மையான வெள்ளந்தி மனிதரை காக்க வேண்டிய வேலை கிடைக்கிறது. என்ன நடந்து இருந்தால் அந்தக் கதைக்கு ஒரு நியாயம் கிடைக்கும் என்ற பாணியில் சரியாக யோசித்து இருந்தால் இந்தப் படம் மிக சிறப்பாக வந்திருக்கும் .
சும்மா தீபாவளி பட்டாசு மாதிரி கிளைமாக்சில் டுப் டுப் என்று சுடுவதால் பலன் கிடைத்து விடாது . மக்களுக்குப் பிடிக்கிற நல்ல படமாக ஆகி விடாது
மொத்தத்தில் லெனின் பாண்டியன்… லெனின் பாதியன்.