பாரடைஸ் @ விமர்சனம்

ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் ஐவி என்டர்டைன்மெண்ட் சார்பில் சுதாகர் செருகுரி, மற்றும் இஷான் சக்சேனா தயாரிக்க,  நானி, மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி , ராகவ் ஜுயல் நடிப்பில், 

கதை எழுதி, வினய் சாகர் ஜொன்னாலாவோடு சேர்ந்து திரைக்கதை எழுதி,   ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கி இருக்கும் படம் 

 
தெலுங்கானாவின் நாட்டுப் புறப்பகுதியில் இருந்து ஸவாரி என்ற பழங்குடியினர் செகந்திராபாத் பகுதியில் வந்து தங்குகிறார்கள். அங்கு வாழும் சிக்கஞ்சா மாலிக் என்ற தாதா ( மோகன்பாபு) தனது பண பல,  அரசியல் பல , ஆள் பல செல்வாக்கை   வைத்து, அந்த பழங்குடி மக்களுக்கு, குடிமக்கள் என்பதற்கான அடையாள அட்டை, அடிப்படை உரிமைகள், வாக்குரிமை , போன்ற எதுவும் வழங்காமல், அவர்களை   அடையாளம் அற்றவர்களாக,  சுயமாக பிழைக்க வழியற்றவர்களாக,  தன்னிடம் அடிமை ஊழியம் செய்பவர்களாக வைத்து,  மிருகத்தை விட கேவலமாக நடத்துகிறான் . 
 
அந்த சமூகப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் . 
 
சில பெண்கள் தங்கள்  பிள்ளைகளுக்கு நல்ல சோறு போட, பாலியல் இச்சைக்கு பலியாகிறார்கள். 
 
அந்த மக்களின் விடுதலைக்கு போராடிய கணவன்,  கொல்லப்பட்ட நிலையில் மகனைக் காக்க , அப்படி பாலியல் தொழிலுக்குப் போன ஒரு  பெண்ணின் (சோனாலி குல்கர்னி)மகனான சடையன் என்பவனை , மாலிக்கும் அவனது குடும்பமும் அவமானப்படுத்தி அவனது கையில் வேசி மகன் என்று பச்சை குத்துகிறார்கள். அவன் அம்மாவை வெறுக்கிறான் . வளர்ந்து பெரியவனாகி (நானி) அம்மாவிடம் பேசாமலேயே இருக்கிறான். 
 
அப்பாவின் கடனை அடைக்க  இளம்பெண் ஒருத்தி ( கயாடு லோஹர்) செக்ஸ் படங்களில் நடிக்கிறாள். அவளது அம்மாவே அவளை ஆபாசமாக படம் எடுக்கிறாள். 
 
அவனுக்கும் அவளுக்கும் நட்பு வருகிறது. 
 
சவாரி மக்கள் தங்களுக்கு அரசின் அடையாள அட்டை வேண்டும் என்று தொடர்ந்து நடத்தும் போராட்டங்களை மாலிக்கின் மகனான ஒரு அரசியல்வாதி (ராகவ் ஜுயல்)  தடுக்க, அதை சடையனின் அம்மா தட்டிக் கேட்க 
 
மாலிக் மகன், சடையனின் அம்மாவை மானபங்கப்படுத்த,  சடையன் மாலிக்கின் மகனை கொல்ல, மாலிக் களம் இறங்க, 
 
பின்னாளில் பாரத் ராஷ்ட்ர சமிதி என்று சோரம் போன, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் கே. சந்திரசேகர் ராவ் போல ஒருவர் சவாரி மக்களுக்கு   உதவ , துணைக்கு வர, நடந்தது என்ன?
 
 தன் நிஜப் பெயரையே சொல்லி அறியாத அந்த மக்களுக்கு அடையாளமும் குடி உரிமையும் கிடைத்ததா என்பதே படம். 
 
இந்திய சுதந்திர காலத்தில் ராஜஸ்தானில் இருந்து ஷிகாரி என்ற இனக்குழு மக்கள் ராஜஸ்தானில் இருந்து தெற்காக ஆந்திரா வந்து செட்டில் ஆனார்கள், அவர்கள் இன்றும் இந்தப் படத்தில் காட்டப்படுவது போல அடையாளமற்ற மக்களாக அடிப்படை உரிமைகள் இன்றி  ஆந்திர அரசியல், முதலாளித்துவ, தாதாக்களிடம் சிக்கி சீரழிகிறார்கள். அதை அப்படியே சொன்னால் அது ஆந்திர  மக்களின் ஆதிக்க அடாவடி மன நிலையை காட்டும் என்பதால் படத்தில் இப்படி மாற்றி கதை விட்டிருக்கிறார்கள். 
 
படத்தின் பிரம்மாண்டம், காட்சிகளை எடுத்த வகையில் இயக்குனர் கொடுக்கும் விவரணைகள்… இவை பாராட்டுக்குரியன.
 
ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு அடையாளமும் உரிமையும் தர வேண்டும்; ஒடுக்கும் சக்திகள் ஒடுக்கப்பட்ட வேண்டும் என்பதை யார் எங்கே சொன்னாலும் அது பாராட்டுக்குரிய விஷயம்தான். 
 
ஆனால் அதற்காக இப்படியா மொத்தப்படத்தையும் வன்முறைக் கொடுங் கொடூரக் களமாக காட்டுவது?
 
கசப்புக்கடையில் ஆடு வெட்டும் இடத்தில் கூட இப்படி விதம் விதமான வெட்டல்களை பார்க்க முடியாது.சீறும் துப்பாக்கிக் குண்டுகள், அதில் சிதறும் மனித சதைகள்,  பீச்சியடிக்கும் ரத்தம்,  சிதறும் உடல் உறுப்புகள், நொறுங்கும் எலும்புகள் யப்பா சாமி …
 
நாயகனின் கையில் விலைமாது மகன் என்ற சொல்லைக் குறிக்கும் பச்சையான , ‘தே…” என்று துவங்கும் சொல்லை பச்சை குத்துவதோடு அதை எல்லோரும் நீட்டி முழக்கி சொல்வார்களாம் . இந்தக் கேடுகெட்ட வசனத்தத்துக்கு,  படத்துக்கு ஆறு வசனகர்த்தாக்கள்.
 
இது போதாது என்று கதாநாயகி , தனது  அப்பாவின் கடன்களை அடைக்க ஆபாசப்படத்தில் நடிப்பாளாம் …மறுக்கும் அம்மாவின் மார்பில் கையை வைத்து கசக்கி அதன் நியாயத்தை (?!) புரிய வைப்பாளாம், அப்புறம் அம்மாவே மகளை வைத்து ஆபாசப்படம் எடுப்பாளம் 
 
அப்படிப்பட்ட ஹீரோயினும்  ஹீரோவும் மாறி மாறி சிகரெட் புகைத்துக் கொண்டு ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்களாம் . 
 
எல்லாம் இந்த கே ஜி எஃப் எடுத்த பிரஷாந்த் நீலை சொல்ல வேண்டும். ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவையும் கசாப்புக்கடை ஆக்கிய குற்றவாளி 
 
மொத்தத்தில் பாரடைஸ் .. நரகத்துக்கும் மேல. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *