தி கிராண்ட் மாஸ்டர் ( The Grand Master ) @ விமர்சனம்

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வேலாயுதம் தயாரிக்க, அபர்ணதி, லிங்கேஷ் , சுரேஷ் மேனன் நடிப்பில் வெற்றிச்  செழியன் எழுதி இயக்கி இருக்கும் படம். 

மலம் அள்ளும் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச்  சேர்ந்த தம்பதி ஒன்றில் ( லிங்கேஷ்- அபர்ணதி), மனைவி பிரம்மாதமாக ஆடு புலி ஆட்டம் , சதுரங்கம் எல்லாம்  விளையாடுவாள். 
 
ஊரில் நடக்கும் போட்டி ஒன்றில் உயர் சாதி ஆட்களுடன் ஆடி ஜெயிக்கிறாள், கோபம் கொண்ட அவர்கள்  கணவனை பிடித்து அடித்துக் கட்டி வைத்து, தாங்கள் சொல்லும் ஒரு நபருடன் செஸ் ஆடி ஜெயித்தால்தான் கணவனை உயிரோடு விடுவோம் என்கிறார்கள்.. கண்ணீரும் கம்பலையுமாக பயந்தபடி ஆடி, அதிலும் ஜெயிக்கிறாள்.கணவனை விடுகிறார்கள். 
 
நகர்ப்புறம் வந்து போட்டிகளில் கலந்து கொள்கிறாள். அங்கு , அதுவரை  ஜெயிக்கும் ஒரு பெண்ணின் அப்பாவான  ஆதிக்க சாதி தொழில் அதிபருக்கு (சுரேஷ் மேனன்) , தன் மகளை ஒரு மலம் அள்ளும்   பெண் ஜெயிப்பது பிடிக்கவில்லை 
 
போட்டியில் இருந்து விலகச்  சொல்கிறார். அவள் மறுத்து மீண்டும்  ஜெயிக்க, 
 
கோபம் கொண்ட ஆதிக்க சாதி நபர்  கணவனைக் கொல்கிறார். அப்போது அவர்கள் மகன்   ஐந்து மாதக் குழந்தை. அவள் மகனோடு உயிர் தப்பி வேறு ஊருக்கு வந்து பிழைக்கிறாள்.. வளரும் மகனுக்கு செஸ் ஆர்வமும் திறமையும் அதிகம் இருக்கிறது 
 
ஒரு நிலையில் தீர்மானித்து மகனை களத்தில் இறக்க, தொழில் அதிபர் உயிராபத்து வரை ஏற்படுத்த , நடந்தது என்ன என்பதே படம். 
 
விளிம்பு நிலையின் முனையில் வாழும் மக்கள் அறிவு தளத்தில் ஆதிக்க சாதி மக்களோடு முகத்துக்கு முன்னால் போட்டியிட்டால் என்ன நடக்கும் என்பதை சொல்ல முயன்றிருக்கும் படம். 
 
அபர்ணதி , அவரது மகனாக நடிக்கும் அஸ்வின் சிறப்பாக நடித்துள்ளனர். 
 
படம் சொல்லும் விஷயம் யதார்த்தமானது . சொன்ன முறை செயற்கையாகவும், நாடகத்தனமாகவும்  இருக்கிறது. 
 
கிராமத்தில் விளையாட்டு தொடர்பான ஆதிக்க சாதி பகை என்ற விஷயம் சரியானது . ஆனால் அதை காட்சிகளாக  சொன்ன விதத்தில் பக்குவமோ, சிறப்போ இல்லை. 
 
நகர்ப்புறம் தனது சாதிக் கொடுமையை ஐஸ் கத்தி மாதிரி வேறு விதமாக சொருகும் என்று காட்டுவார்கள் என்று பார்த்தால், அதுவும் ”என் மகளை நீ ஜெயித்தால் உன்  வீட்டு கக்கூசை நான் அள்ளுறேன்” என்று சினிமா வசனம்தான் பேசுகிறது. 
 
விளையாட்டில் சாதி ஆதிக்கப் போட்டி –  ஜெயிக்க விடாமல் ஆதிக்க சாதி எப்படி எல்லாம் தடுக்கும்.என்பதை சொல்லி அதை மீறி தாழ்த்தப்பட்ட சிறுவன் எப்படி ஜெயித்தான் என்று சொல்லி, அதோடு புரஃபஷனலாக  படத்தை நிறுத்தி இருந்தால் இந்தப் படம் கேள்விகளை எழுப்பி இருக்கும் . 
 
ஆனால் சாத்தியமில்லாத – விஷம் வைக்கிற கிளைமாக்ஸ் கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் போவது, நாம் பார்ப்பது வாழ்வியல் இல்லை ஜஸ்ட் சினிமா என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 
 
ஒரு நல்ல கதையை எடுத்துக் கொண்டு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத காட்சிகளோடு படம் போகிறது. 
 
சினிமாவுக்கு காமெடி அவசியம்தான். ஆனால் காமெடி வைக்க வேண்டிய இடங்களை எல்லாம் விட்டு விட்டு, ஒரு சமூக நீதி படத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் அடித்து நொறுக்கப்படும் இடங்களை எல்லாம் காமெடியாக சித்தரிப்பது படத்தின் நோக்கத்துக்கே எதிரானது . 
 
விளையாட்டுத் திறமை மிக்க ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பம் இப்படி சிதைக்கப்படும்போது மற்ற குடும்பங்கள் என்ன செய்தன என்ற கேள்வியும் வருகிறது. 
 
என்ன சொல்கிறோம் என்பது நோக்கம். எப்படி எந்த ஊடகத்தில் சொல்கிறோம் என்பது உத்தி. உத்தி இல்லாமல் ஜெயிக்க முடியாது. இப்படி ஒரு திரைக்கதை தியேட்டரிக்கலாக எப்படி ஜெயிக்கும் என்று நம்பினார்கள் என்பதுதான் புரியாத புதிர் 
 
மொத்தத்தில் தி கிராண்ட் மாஸ்டர்…. மேட்ச் டிரா 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *