ஏகா என்டர்டைன்மென்ட் சார்பில் ஹெப்சி தயாரிக்க, கவின், அம்ருதா நடிப்பில் வினீத் வரப்பிரசாத் இயக்கி இருக்கும் படம் லிஃப்ட் .
ஐ டி அலுவலகம் ஒன்றில் புதிதாக டீம் லீடராக சேரும் இளைஞனுக்கும் (கவின்) அங்கு மனித வள அதிகாரியாகப் பணியாற்றும் பெண்ணுக்கும் (அம்ருதா) முன்பே எலியும் பூனையுமாக அறிமுகம் .
அந்த அலுவலகத்துக்கு செல்லும் லிஃப்ட் மற்றும் அறைகளில் இரவு நேரப் பணியின் போது பேயின் மிரட்டல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் இருவரும் .

ஏன்? யார் ? என்ன ஆனது ?என்பதே லிஃப்ட்
ஒரு லிஃப்ட், அலுவலக ஹால் , கேபின்கள் மற்றும் அறைகள், ஒரு பில்டிங் அதன் சில பகுதிகள் , பெரும்பாலான காட்சிகளில் இருவர் அல்லது ஒருவர் மட்டுமே …
என்று கைக்கு அடக்கமான பட்ஜெட் படத்தில் , ஐ டி உலகின் கொடுமைகள் பற்றி ஓர் அருமையான கதையும் சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குனர் வினீத் சீனிவாசன்
அந்தக் காரணத்தினாலேயே ஆரம்பத்தில் சில காட்சிகள் தேவை இன்றி இருக்கின்றன . தவிர தனி நபர் காட்சிகள் தேவைக்கு மேல் நீள்கின்றன .

எனினும் படம் போகப் போக கனம் ஏறி முழுமையாகக் கவர்கிறது படம் . ஏறிய மாடிக்கே மீண்டும் ஏறுவது , இறங்குவது, தொலைக்கட்சியில் வரும் மரணச் செய்தி, வெகு நேரம் பேயின் உருவங்களைக் காட்டாமலே பொருட்களை உருட்டி மிரட்டுவது என்று பல இடங்களில் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் . சபாஷ்
பேயால் இயக்கப்படும் தனது ஒரு கை தன் கழுத்தில் கத்தியை வைத்து கொல்லப் போக , அதை இன்னொரு கையால் தடுப்பது போன்ற காட்சிகளில் அசத்தி இருக்கிறார் கவின். பொதுவிலும் சிறப்பு .
பயப்படும் காட்சிகளில் அமிர்தாவும் சிறப்பு . பாலாஜி வேணுகோபாலும் .

யுவாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும்பலம் . மைக்கேல் பிரிட்டோவின் இசையும் !
சரி அந்தப் பேய்கள் இந்த இருவரையும் என்னத்துக்கு இப்படி பயமுறுத்த வேண்டும் என்பதற்கு பொருத்தமான லாஜிக் இல்லை. ( அதே வேலைக்கு வந்தவர்கள் என்ற காரணம் பத்தாது)
எனினும் கடைசியில் ஒரு முக்கியமான பிரச்னையை கதையாக்கி அதை நெகிழும்படி சொன்ன வகையில்….
லிஃப்ட்…. மேலே மேலே உயர்கிறது