விஜய் ஆண்டனியின் ‘ மார்கன் ‘

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’.

இதில்  விஜய் ஆண்டனி கதாநாயகனாக  நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன்  அஜய் திஷான் விஜய் ஆண்டனிக்கு இணையான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் . 

மேலும் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, அர்ச்சனா, கனிமொழி உட்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இசையையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டுள்ளார். பல படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ள முன்னணி எடிட்டர் லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சசி, நலன் குமாரசாமி, ரவிக்குமார், மிலிந்த் ராவ், சி.வி.குமார், ரோகினி வெங்கடேசன், அருண் பிரபு, ஜோஸ்வா சேதுராமன், பெப்பின் ஜார்ஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜயன், டி.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விஜய் ஆண்டனி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். முதலில் இங்கு வந்துள்ள அத்தனை இயக்குநர்கள். தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றி. குறிப்பாக இயக்குனர் சசி சாருக்கு நன்றி. நான் வாழ்க்கையில் எத்தனை படங்கள் நடித்தாலும் ‘பிச்சைக்காரன்’ படம் போல் ஒரு படம் இனி அமையாது. அந்த அளவுக்கு ஒரு அற்புதமான படத்தை எனக்கு கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை எடிட்டர் லியோ ஜான்பால் சொன்னவுடன் நடிக்க முடிவு செய்தேன். பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும்போது ஏதாவது ஒரு விஷயம் புதிதாக இருந்தால் உடனே ஓகே சொல்லி விடுவேன். அப்படித்தான் இந்த ‘மார்கன்’ படத்திலும் நடித்துள்ளேன்.

லியோ மிகச் சிறந்த எடிட்டர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்துக்கு பிறகு சிறந்த இயக்குநராகவும் அறியப்படுவார். அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக, அதே நேரம் தேவைப்படும் காட்சிகளை மட்டும் எடுத்தார்.

எப்போதும் இயக்குநர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது. ஒரு குழந்தைக்கு அம்மா எப்படியோ, அப்படித்தான் ஒரு கதைக்கு இயக்குநர் என்பவர். அவருக்குத்தான் தெரியும் அந்த குழந்தைக்கு என்ன வேண்டும் என்று..! எனவே இயக்குநர்கள்தான் அந்த கதையை சுமந்து வந்து ஒரு குழந்தையை போல் நமக்கு உருவாக்கித் தருகிறார்கள்.

நான் வரிசையாக படங்களில் நடிப்பதும், படத்தை தயாரிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பணம் அதிகமாக வைத்துக் கொண்டு படத்தை எடுக்கவில்லை. கடன் வாங்கித்தான் படத்தை எடுத்து வருகிறேன். ஒழுங்காக வட்டி கட்டுவதால் எப்பொழுது கேட்டாலும் பணம் கொடுக்கிறார்கள். என்னுடைய படங்கள் பெரிய லாபம் சம்பாதிக்காவிட்டாலும், நஷ்டம் ஏற்படுவதில்லை.

அதற்கு காரணம் நானே நடிப்பதால் ஹீரோ சம்பளம் கிடையாது. இசையமைப்பாளர் வேலையையும் நானே செய்கிறேன். அதோடு ஒரு சில படங்களுக்கு எடிட்டிங் பணியையும் மேற்கொள்கிறேன். அதனால் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதில்லை.

இவ்வளவு காலமாக எங்கள் தயாரிப்பில் நான் மட்டும்தான் ஹீரோவாக நடித்து வருகிறேன். இனிவரும் காலங்களில் மற்ற ஹீரோக்களை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகியுள்ள எனது சகோதரர் அஜய் திஷான் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அவரிடம் அந்த திறமை இருந்ததால் அவரை நடிக்க வைத்தேன். அதை அவரும் சரியாகப் பயன்படுத்தி இன்று அடுத்த படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

என்னுடைய படங்களுக்கு நெகட்டிவ் டைட்டில் வைப்பது பற்றி பலர் என்னிடம் கேட்டுள்ளனர். எனக்கு நெகட்டிவ் என்பதே கிடையாது. நான் நடித்த ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘கொலைகாரன்’ என பல படங்களுக்கு நெகட்டிவ்வாக தலைப்பு வைத்துள்ளதாக சொன்னார்கள். ஆனால், அந்தப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் ஆமை மற்றும் ஆந்தை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. பொதுவாக ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என ஊரில் பழமொழி சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை ஆமையும் ஒரு உயிர்தான். அதேபோல் அமீனாவும் ஒரு மனிதர்தான். எனவே நெகட்டிவ்வாக பார்க்காமல், பாசிட்டிவாக பார்த்தால் எல்லாம் நன்மையாக முடியும்.

தொடர்ந்து படங்களில் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாக இருந்ததால் இசையில் கவனம் செலுத்த முடியவில்லை. இனி வரும் காலங்களில் நிறைய படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்துள்ளேன். என்னுடைய படங்களை தவிர்த்து பிற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன்.

இந்த ஆண்டு மட்டும் எனது இசையில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும். ஒவ்வொரு படங்களின் புரோமோஷனுக்கு வரும்போது அந்த படத்தில் நான் எந்த கேரக்டரில் நடிக்கிறேனோ அந்த கெட்டப்பில் வருகிறேன். இதற்கு காரணம் அந்தப் படம் குறித்த ஆர்வம் மக்களிடம் ஏற்படும் என்பதற்காகத்தான். இந்தப் படத்தில் தீக்காயங்கள் ஏற்பட்ட முகத்துடன் நடித்திருக்கிறேன். அதனால் அந்த தோற்றத்தில் வந்துள்ளேன்.

இத்திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி படம் வெளியாகிறது. ரசிகர்களுக்கு  நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இது நிச்சயமாக அமையும்…” என்றார் விஜய் ஆண்டனி.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சசி , ” பிச்சைக்காரனுக்குப் பிறகு நானும் விஜய் ஆண்டனியும்  மீண்டும் இணைகிறோம். எனது அடுத்த படம் அதுதான் ” என்றார் . 

மார்கன் படத்தின் முன்னோட்டம் தொழில் நுட்பச் சிறப்புடன் அற்புதமாக இருந்தது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *