மனிதர்கள் @ விமர்சனம்

ஸ்டுடியோ மூவிங் டர்ட்டில் மற்றும் ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத், நவீன் குமார், சாம்பசிவம், தரணிதரன் பரிமளா, குலோத்துங்கன் , யுவராஜ் ஆகியோர் தயாரிக்க, கபில் வேலவன், தக்ஷா (பெண் இல்லை ஆண்தான்), குணவந்தன், அர்ஜுன் சரவணன், சாம்பசிவம் ஆகியோர் நடிப்பில்  ராம் இந்திரா எழுதி இயக்கி இருக்கும் படம் 

காரில் பயணிக்கும் நண்பர்கள் ஆறுபேர் ஒரு இடத்தில் அமர்ந்து குடிக்கையில் போதை ஓவராகி அவர்களில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு விடுகிறார். பரிசோதிக்கையில் அவர் இறந்து போனதாக தெரியவர, குத்தியது யார் அல்லது அவனே குத்திக் கொண்டானா என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  போலீசில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக பிணத்தை கார் டிக்கியில் போட்டுக் கொண்டு புதைக்க இடம் தேடி அலைகிறார்கள் . 
வழியில் போலீஸ் போல தோன்றும் வாட்ச்மேன்  , பொதுமக்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வழிப்பறித் திருடர்கள் என்று பல பேரிடம் சிக்கி ஒருவழியாக உண்மை வெளிப்படாமல்  தப்பித்து ஒரு காட்டுக்குள் வந்து  குழி தோண்டிப் புதைக்க முயலும் போது, இறந்ததாகக் கருதப்பட்டவர் இன்னும் உயிரோடு இருப்பது தெரியவருகிறது. . 
”காப்பற்றி விடலாம்” என்று சிலர் சொல்ல, ”போகும் வழியிலோ ஆஸ்பத்திரியிலோ அவன் இறந்து விட்டால் நாம் எல்லோரும் ஜெயிலுக்குப் போக வேண்டும் ; எனவே அப்படியே புதைத்து விடுவோம் ” என்று  சிலர் சொல்ல,  அவர்களுக்குள் அடித்துக் கொள்ள நடந்தது என்ன என்பதே படம்.

பெண்களே இல்லாத படம் . ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தால் இது பெருமை. ஸ்கிரிப்ட் கொடுமையாக இருந்தால் இது மடமை. 

படத்தின் பெரும்பலம் அஜய் ஆபிரகாம் ஜார்ஜின் ஒளிப்பதிவு, அட்டகாசமான குளோசப்கள், நேர்த்தியான டைட் ஃபிரேம்கள் , வித்தியாசமான கேமரா கோணங்கள், ஒளிவிளைவுகளை சரியாகப் பயன்படுத்தும் அழகியல் என்று அசத்தி இருக்கிறார்.  ஜான் ராபின்சின் பின்னணி இசையும் சிறப்பு. 

இதை கொஞ்சமாவது  சினிமா ஆக்குவது இந்த ரெண்டு பேரும்தான் 

யார் குத்தியது என்பது யாருக்கும் தெரியவில்லை. கடைசிவரை அதை யாரும் யாருக்கும் சொல்லவில்லை என்பது என்ன திரைக்கதை? குத்தியவனுக்கு தெரிய வேண்டும் .தெரியவில்லை என்றால் ஆடியன்சுக்காவது சொல்ல வேண்டும் . இல்லை எனில் அவனே குத்திக் கொண்டானா என்பதை ஆடியன்சுக்காவது சொல்லித்  தொலைக்க வேண்டும் . இல்லை இதுதான் கதை என்றால் அதற்கேற்ற இன்டரஸ்டிங் காட்சிகள் வேண்டும் . எதுவுமே இல்லாமல்  பிணத்தை வைத்துக் கொண்டு அலைவதை ராவாகப் பார்க்க வேண்டும் என்றால் எப்படிங்க ? கொஞ்சமாச்சும் மனசாட்சி  வேண்டாமா?

அப்படி ஒரு சம்பவம் நடந்த பின்பும் எல்லோருக்கும் அது தெரிந்த பின்பும் பல மணி நேரம் ஆன பின்பும்  பல பேருக்கு போதை தெளியவே இல்லை. சரி, அது கூட மட்டமான டாஸ்மாக் சரக்கு  காரணம் என்று வைத்துக் கொள்வோம் . 

ஆனால் ஒருநிலையில்  மேற்படி கேரக்டர்கள் பதட்டம் குறைந்து நிதானத்துக்கு வந்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும் . அதற்கு ஏற்ற கேரக்டர்கள்தான் அவை. 

ஆனால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாக உணரும் நொடியில் இருக்கும் அதிர்ச்சி, பயம் , புலம்பலிலேயே எல்லோரும் படம் முடியும் வரை இருந்து தொலைக்கிறார்கள் . அப்படி ஒன்று அவர்கள் அப்பாவிக் கேரக்டர்களும் இல்லை . 

படம் பார்க்கிறவனுக்கு புரியுமா புரியாதா என்பது பற்றிய கவலையே இல்லாத அளவுக்கு என்னென்னமோ கதைகளை கொழ கொழ என்று குழறல் மொழியில் பேசியே கொல்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு கருமமும் புரியவில்லை . செங்கல் சூளை அடுப்புக்குள் ஒவ்வொருவரையும் தூக்கிப் போட்ட மாதிரி ஒவ்வொருவரும் குதித்துக் கொண்டே இருக்கிறார்கள். 

என்னடா ஆச்சு….  சொல்றா.. வாடா … என்று எதாவது ஒரு வார்த்தையை சொல்ல ஆரம்பித்தால் ஒவ்வொரு வார்த்தையையும் நூத்தி எட்டு தடவை சொல்லிட்டுதான் அடுத்த வார்த்தைக்கே போகிறார்கள் . டெம்போ ஏத்துறாங்களாமாம் . ஐயோ கடவுளே 

இது போதாது என்று ஒரு கதாபாத்திரம் – காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் பேய் .. “ஹ்க்கே ஏ  .. ஹ்க்கே ஏ ஏ ஏ ஏ .. … ஹ்க்கே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ .. ” என்று கேவிக் கொண்டு இருக்குமே,  அதை விடக் கொடுமையாக கடைசிவரை கேவிக் கொண்டே இருக்கிறார். 

யதார்த்தம் என்ற பெயரில் எல்லாரும் எக்சென்ட்ரிக், அப்நார்மல், மென்டல்களாக பிகேவ் பண்ணுகிறார்கள் . 
பத்து ஆண்டுகள் பத்தரை மாற்றுத் தங்கமாக தவத்தில் இருந்த முனிவரைக் கூப்பிட்டு இந்தப் படத்தைப் போட்டுக் காட்டினால் கூட, பாதியிலேயே அவர் கமண்டலத்தையும் கைக் கட்டையையும் எடுத்து மடேல் மடல் என்று தன் தமண்டையிலேயே அடித்துக் கொள்ளும் அபாயம் உண்டு 

அப்படி ஒரு இர்ரிடேட்டிங் நடிப்பு. 

அனேகமாக இந்தப் படத்தின் நிஜமான கடைசிக் காட்சியை இவர்கள் படம் எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது . ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி வேன் வந்து எல்லாரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போவதுதான் அந்தக் காட்சி . 

குறைவான கதாபாத்திரங்கள் , குறைந்த செலவில் படம் எடுப்பது பொதுவில் நல்ல விஷயம். ஆனால் அது நல்ல படமாக வந்தால்தான் உண்மையிலேயே நல்ல விஷயம் . இல்லை  எனில் இப்படி ‘மனிதர்கள்’தான் எடுக்க முடியும் 

மொத்தத்தில் மனிதர்கள்…… மன நோயாளிகள் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *