சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்க, சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, யோகிபாபு, மிஸ்கின், தெலுங்கு நடிகர் சுனில் , மோனிஷா ப்ளஸ்ஸி நடிப்பில் , இதற்கு முன்பு யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கி இருக்கும் படம்.
தினத்தந்தி பத்திரிகையில் வந்த கன்னித்தீவு சிந்துபாத் போல தினத் தீ என்ற பத்திரிகையில் வரும் மாவீரன் என்ற படக்கதைத் தொடருக்கு படம் வரைந்தாலும் அதை இன்னொருவன் தன் பெயரில் போட்டு ஏமாற்றிக் கொள்வதையும் மன்னிக்கும் அளவுக்கு இளிச்சவாயனாக இருக்கும் ஒரு இளைஞன் சத்யா ( சிவா கார்த்திகேயன்),
தனது அம்மா (சரிதா), தங்கை மோனிஷா ப்ளஸ்ஸிஆகியோரோடு, கூவக்கரையை ஒட்டிய சேரியில் குடி இருக்கிறான். விதவை அம்மாவுக்கு இருக்கும் துணிச்சல், தைரியத்தில் துளி கூட இல்லாதவன். அரசியல்வாதிகள் என்றாலே பயம்.
தினத் தீ பத்திரிகையில் பணியாற்றும் உதவி ஆசிரியர் நிலா ( அதிதி சங்கர்) மூலம் அவனுக்கு அங்கே அதே வேலையை செய்யும் பணியும் கிடைக்கிறது.
சத்யாவும் அவன் குடும்பமும் குடி இருக்கும் பகுதிக்குக் குறி வைக்கும் ஒரு அமைச்சர் ( மிஸ்கின்) அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் முன்பே கட்டப்பட்ட ஒரு படுக்கை அறை, ஹால் , கிச்சன் கொண்ட வீடுகளுக்கு அனுப்புகிறான்.
மிக மோசமாக தரமின்றி கட்டப்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு குடியேறிய உடனேயே மேற்கூரை உடைவது , சுவர்கள் உதிர்வது என்று ஆபத்தான இடமாக மாறுகிறது.
இதை எதிர்த்து அம்மா, தங்கை உட்பட பலர் போராடியும் இவன் பயமும் சுய நலமுமாக இருக்கிறான்.
அங்கு இருக்கும் மோசமான என்ஜினீயர் ஒருவன் ( அருவி மதன்) வீடு புகுந்து தங்கையை கற்பழிக்க முயல , அதைத் தடுத்த அம்மாவை அடிக்க , அது தெரிந்தும் பயத்துடன் சக்தி இருக்க, இதற்கு செத்துப் போகலாம் என்று அம்மா திட்ட,
தற்கொலைக்கு முயலும் சக்தி தடுக்கி விழுந்து அடிபட்டு , அவன் வரையும் மாவீரன் படக்கதை நாயகனின் குரல் ( விஜய் சேதுபதி குரல்) அவனை வீரனாக்குகிறது. விளைவாக மந்திரி வரை பகை வளர்கிறது .
அதே நேரம் குரலின் ஆணைப்படி இவன் அடிக்கும் அடிகளில் அமைச்சரின் சாம்ராஜ்யமே சரிகிறது . காரணம் புரியாத அமைச்சரின் கூட்டம் ஒரு நிலையில் உண்மை உணர்ந்து சக்தியை கொல்ல முயல நடந்தது என்ன என்பதே படம்.
2006 ஆம் ஆண்டு வந்த அமெரிக்க ஆங்கிலப் படமான STRANGER THAN FICTION படத்தின் அடிப்படையை எடுத்துக் கொண்டு அதில் மாநகர் வாழ் சேரி மக்களை காலகால வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்துதல் , மக்களுக்குக் கட்டப்படும் தரமற்ற வீடுகள் மண்ணில் புதைய மக்கள் சாவது,
வடமாநிலத் தொழிலாளர்களால் உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு இவற்றை வைத்து கதை – திரைக்கதை செய்திருக்கிறார் மடோன் அஸ்வின். பாராட்டப்பட வேண்டிய விஷயம்
நாயகனின் காதில் கேட்கும் கதை சொல்லியின் குரல் , அதற்கு நாயகன் பதறுவது, குழம்புவது, பயப்படுவது, பழகுவது, திட்டுவது, அது சொன்னபடி கேட்பது, சொன்னதை செய்ய மறுப்பது, ஒரு நிலையில் குரல் இனி கேட்காதா என்று ஏங்குவது, மீண்டும் கேட்கும்போது அது சொன்னதை விடவும் சிறப்பாக செயல்படுவது என்று அந்த கதைப் போக்கும் அருமை .
ஆரம்பத்தில் நிலா மூலம் நடக்கும் டுவிஸ்டும் பலே.
அமைச்சர் மிஸ்கின் அவரது ரகசிய நண்பன் தொடர்பான காட்சிகள் எதிர்பாரத திருப்பம்.
வசனங்களும் ஆங்காங்கே அசத்தல்
ரஜினி முருகனுக்கு அப்புறம் தனக்கு மிகவும் பொருத்தமான ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தில் சிவ கார்த்திகேயன் நகைச்சுவை தரிக்கவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார் . அருமை
ஆனால் ஒரு நிலையில் கட்டிடத்தில் எந்தக் குறையும் இல்லை. நல்ல பில்டிங்தான் என்று பேட்டி கொடுக்கும் அளவுக்கு இறங்கிப் போகும்போது , அது கதாபாத்திரச் சீர்குலைப்பு போல ஆகி, இந்தக் கதைக்கு இந்த சிவா எதுக்கு? மிர்ச்சி சிவா போதுமே என்று ஆகி விடுகிறது .
வைக்கக் கூடாத கேமராக் கோணங்கள் வைத்து அதிதி சங்கரை படக்குழு சம்பவம் செய்திருந்தாலும், அவரது உச்சரிப்புக் குறைகளையும் மீறி அந்தத் தேன் குரல் கேட்கக் கேட்க , ஆகா என்ன சுகம் !
அதகளம் செய்திருக்கிறார் யோகிபாபு. சிவ கார்த்திகேயன் சம்மந்தப்பட்ட சிச்சுவேஷன் காமெடிகளை எல்லாம் பின்னிப் பெடல் எடுக்கிறார் யோகிபாபு .
பலவீனமான அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு காட்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு குணமாகி வந்திருக்கும் சிவகார்த்திகேயனை நலம் விசாரிக்க வந்த பல பெண்கள் ஒன்றாக உட்கார்ந்து இருக்க, அங்கு வரும் பாபு ” என்ன தைரியத்துல இத்தனை பேர் ஒரே எடத்துல ஒண்ணா உக்காந்து இருக்கீங்க ?” என்று போடுகிறார் பாருங்கள் ஒரு பஞ்ச்
அடடா… அடடா.. அட்டகாசம்… கடந்த பத்தாண்டுகளில் இப்படி ஒரு இன்டல்லக்சுவல் காமெடியை தமிழ் சினிமா கண்டதில்லை. (இதே கோணத்தில் சரிதாவையும் தன்னைத் தானேயும் பாபு எப்படி விட்டு வைத்தார் என்றுதான் தெரியவில்லை)
அட்டகாசமான நடிப்பில் தமிழ் சினிமாவில் ஜஸ்ட் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார் சரிதா. மகன் சிக்கிக் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு இடியும் விதத்தில், நடக்கப் போவதை ஊகித்து கண்களை உருட்டி திரட்டி கீழ் இமையில் சற்றே கண்ணீர் தேங்க உறைந்து இறுகிப் போய் ஒரு பார்வை பார்க்கிறார் பாருங்கள் .. ஒரு நொடி உடம்பெல்லாம் சிலிர்க்கிறது . சரிதா… ஒரு குறிஞ்சி மலர் !
மிஸ்கின் தன் பங்குக்கு அசத்துகிறார். காதில் கேட்கும் குரல் தொடர்பாக ஒரு காட்சியில் தன்னையும் சிவ கார்த்திகேயனையும் ஒப்பிட்டுப் பேசும் காட்சியில் உடல் மொழிகளால் நகைச்சுவை தெறிக்க வைக்கிறார் .
விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு கதை நடக்கும் சூழலை கண் முன் கொண்டு வருகிறது
சண்டைக் காட்சிகளுக்கு ரசித்தும் ரசிக்கும்படியும் பின்னணி இசை கொடுத்து இருக்கிறார் பரத் சங்கர் .
முதல் பாதியில் மிகச் சிறப்பாகப் போன இடம் இரண்டாம் பகுதியில் பல விதங்களில் பின் தங்குகிறது கதையின் பாய்வு குறைகிறது . பல இடங்களில் நிற்கிறது . கதாநாயகி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிறார் . பல படங்களை நினைவு படுத்துகிற காட்சிகளால் நிறைகிறது கிளைமாக்ஸ் .
இது சிவ கார்த்திகேயனின் வழக்கமான ஹீரோயிசப் படம் இல்லை என்று ஆன பிறகு , படத்துக்கு இந்த எம் ஜி ஆர் ரஜினி கிளைமாக்ஸ் எதற்கு ? நேர்மாறாக படத்தை முடித்து கனம் கூட்டி இருந்தால் கூட நன்றாகவே இருந்திருக்கும் . படத்தின் இறுதிக் காட்சியில் சிவ கார்த்திகேயன் செய்யும் வேலையே அவரால் கற்பிக்கப்பட்ட ஒரு சிறுமி கண்ணீரோடு செய்வது போல காட்டி இருந்தால் படத்துக்கு வேறொரு உணர்வு பலம் கிடைத்திருக்கும் . அப்படி இல்லாமல் முதல் பாதி டைரக்டர் படமாகவும் இரண்டாவது பாதி ஆக்ஷன் ஹீரோ படமாகவும் ஆகி விட்டது படம்.
எனினும் படம் சொல்லும் சமூகப் பிரச்னை, அதன் வழியே இயக்குனர் வெளிப்படுத்தும் சமூக அரசியல் பார்வை , யோகிபாபுவின் காமெடி வெடிகள் , விஜய சேதுபதி குரல் அதற்கு சிவ கார்த்திகேயன் பதில் மற்றும் அசத்தலான நடிப்பு என்ற அந்தக் காம்போ, பிரம்மிக்க வைக்கும் சரிதா, அசத்தும் மிஸ்கின் இவை படத்துக்கு பலம் கூட்டுகின்றன.