சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி தயாரிக்க, ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா ஆகியோர் நடிக்க .
சிங்கம் புலி படத்தை இயக்கிய சாய் ரமணி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா .இவன் ரசிகனுக்கு எப்படிப்பட்ட சிவா ? பார்க்கலாம் .
வடக்கத்தி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சரை (வி டி வி கணேஷ்) காப்பாற்றி ,
அவர் மூலம் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு வருகிறார் அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் சிவா (ராகவா லாரன்ஸ் )
ஒரு போன் காலில் அமைச்சர் உட்பட யாரை வேண்டுமானாலும் பதவியை விட்டுத் தூக்கும் சர்வ வல்லமை வாய்ந்த,
பணக்கார அரசியல்வாதி தாதாவான ஜி.கே.(அஸ்வத் தோஸ்ரானா) என்பவனின் கொடூரமான சட்ட விரோத செயல்கள் அனைத்துக்கும் துணை போகிறார் சிவா .
கமிஷனரான கிருபாகரனை (சத்யராஜ்) வெறுப்பேற்ற வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். காரணம் ஒரு பிளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது .
இதற்கிடையிலும் ஒரு பேச்சு கேட்பு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் மீது சிவாவுக்கு பாசம் வருகிறது . அந்தப் பெண்ணுக்கு ஜே.கே வின் ஆட்கள் உட்பட யார் மூலம் ஆபத்து வந்தாலும் உதவுகிறார் சிவா
சிவாவுக்கும் சன் டிவி ரிப்போர்ட்டர் ஜானுவுக்கும் (நிக்கி கல்ராணி) காதல் வருகிறது .
இந்த நிலையில் ஜே கே வின் மகனான கொடூர காமுகன் (வம்சி கிருஷ்ணா) ஐ டி நிறுவனத்தில் வேலை முடித்து வரும் ஓர் இளம் பெண்ணை கடத்திச் சென்று கற்பழிக்க முயல,
அதன் விளைவாக சிவாவுக்கு பலத்த அதிர்ச்சியான ஓர் சம்பவம் நிகழ்கிறது . ஜே கே வுக்கு எதிராக மொட்டை அடித்துக் கொண்டு சிவாவும் கிருபாகரனும் களம் இறங்குகின்றனர் .
ஜே கே தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்க அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த மொட்ட சிவா கெட்ட சிவா .
சுத்தமான ஏ சி தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்தாலும் டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கு தும்மல் வரலாம் .
அந்த அளவுக்கு முழுக்க முழுக்க புழுதி பறக்கும் கமர்ஷியல் படமாக இதை எடுத்துள்ளார் இயக்குனர் சாய் ரமணி . ஒரு காட்சியில் ராகவா லாரன்ஸ் தானே சொல்கிற மாதிரி தரை லோக்கல் படம் இது .
வழக்கமாக அப்பாவியான பயப்படும் நபராக, படங்களில் அறிமுகமாகி ஒரு நிலையில் பேய் அல்லது பிசாசு காரணமாக சக்தி உள்ள ஹீரோவாக மாறுவார் ராகவா லாரன்ஸ்
அப்படி இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே லாரன்ஸுக்கு முதன் முதலாக முழு ஹீரோ பில்ட் அப் கொடுத்து இறக்கி விடுகிறார் சாய் ரமணி .
லாரன்ஸும் வழக்கம் போல பிரம்மாதமாக ஆடுகிறார் . ரஜினி ஸ்டைலில் கிம்மிக்ஸ் கூட்டி கண்ணாடி சுழற்றுகிறார் சண்டைக் காட்சிகளில் இதுவரை இல்லாத வேகம் மற்றும் அதிரடி . சூப்பர்
அம்ரேஷ் இசையில் பாடல்கள் கமர்ஷியல் தன்மையோடு அமைந்து இருக்கிறது. எல்லா பாடல்களுமே ஹிட் பின்னணி இசையும் சிறப்பு .
பாராட்டுக்கள் . அடுத்தடுத்து நிறைய படங்கள் வரும் வாய்ப்பு உண்டு அம்ரேஷுக்கு. வாழ்த்துகள் !
சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவில் ஃபிரேம்கள் அழகாக இருக்கிறது. சிறுத்தை கே கணேஷின் சண்டைப் பயிற்சி அசத்தல் .
ஐ டி ஊழியர பெண்ணை ஜே கே வின் மகன் கடத்தும் பகுதியில் வரும் திருப்பம் சபாஷ் . இது போல சில இடங்களில் திரைக்கதை கவனிக்க வைக்கிறது .
நிக்கி கல்ராணி கவர்ச்சிக் குத்தகை எடுத்து இருக்கிறார் . ஒரு பாட்டுக்கு ராய் லக்ஷ்மி ஆடுகிறார் .
கோவை சரளா, சதீஷ், மயில் சாமி, மகாநதி ஷங்கர் , நான் கடவுள் ராஜேந்திரன் என்று ஒரு காமெடி பட்டாளமே படத்தில் இருக்கிறது .
வில்லனாக அஸ்வத் தோஸ்ரானா மிரட்டுகிறார்
குடி இருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற ஆடலுடன் பாடலை… ” பாட்டை ரீமிக்ஸ் செய்து இருக்கிறார்கள் .
லாஜிக் , யதார்த்தம் பற்றி பேசுகிற படம் இல்லை இது . ஆனாலும் மொத்தமாகவே கொஞ்சம் லாஜிக்கைக் கொண்டு வந்திருக்கலாம் .
சிவாவுக்கும் கிருபாகரனுக்கும் இடையேயான பிரச்னைக்கான காரணம் வித்தியாசமாக உள்ளது . ஆனால் அது ஹீரோ மெட்டீரியல் இல்லையே .
இன்னும் சொல்லப் போனால் படம் முழுக்க ஐ ஹேட் போலீஸ் என்று சொல்லும் வில்லனுக்குதானே அது ரொம்ப பொருந்தும் ?
மொத்தத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா …. லாஜிக் இல்ல மேஜிக் !









