மனிதன் @ விமர்சனம்

mani 4

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, டத்தோ ராதாரவி, பிரகாஷ் ராஜ், விவேக் , ஹன்சிகா மோத்வானி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் , 

என்றென்றும் புன்னகை வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர்  ஐ .அஹமது இயக்கி இருக்கும் படம் மனிதன் . இவன் புனிதனா ? பார்க்கலாம் .
வக்கீலுக்கு படித்து விட்டு, பொள்ளாச்சியில் கோர்ட் வளாகத்தில் சுற்றிக் கொண்டு இருந்தாலும்,  ஒரு வழக்கிலும் ஜெயிக்காத வக்கீல் சக்தி (உதயநிதி ஸ்டாலின்). 
ஏரியாவில் கொஞ்சம் பெரிய வக்கீலான தன் தாய்மாமனின் மகளான பிரியாவுக்கும் (ஹன்சிகா  மோத்வானி) சக்திக்கும் காதல் .
ஆனால் ‘ஒரு வழக்கிலாவது ஜெயித்தால்தான் பெண்ணைக் கொடுப்பேன்’ என்று மாமா சொல்லிவிட , சக்திக்கு அது முடியாத விசயமாக இருக்கிறது . 
mani 2
ஒரு நிலையில் சக்தி அங்கு எல்லோரின் கேலிப் பொருளாகவும் ஆகிவிட, காதலியும் கோபத்தில் பொங்கி விட , ‘சென்னைக்குப் போய் பெரிய வக்கீலாகி என்னை நிரூபிப்பேன் ‘ என்று  முடிவெடுத்து,
 அங்கிருந்து  சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி  சென்னையை அடைகிறான் சக்தி . 
சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் ஊறுகாய் விற்றுப் பிழைக்கும் தன் சொந்தக்காரரும் , தேறாத வக்கீலுமான சூர்யா (விவேக்)வின் உதவியோடு சென்னையில் தங்கி வக்கீலாக முன்னேறப் போராடுகிறான் சக்தி.
ஆனால் நிலைமை பொள்ளாச்சியை விட மோசமாக இருக்கிறது . 
இந்த நிலையில்,  
நள்ளிரவில் ஒரு பெண்ணை கரெக்ட் செய்வதற்காக அதி வேகத்தில் கார் ஒட்டி, பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் மக்கள் மீது கரை ஏற்றி , இரண்டு வயதுக் குழந்தை உட்பட ஆறு பேரைக் கொன்ற,
 ராகுல் திவான் என்ற பணக்காரக் குற்றவாளியை காப்பாற்ற, 
mani 7
சென்னைக்கு விஜயம் செய்கிறார் பிரபல சுப்ரீம் கோர்ட் வக்கீலான ‘பிரதிவாதி பயங்கரம்’ ஆதிசேஷன் ( பிரகாஷ் ராஜ் ).
பத்தே நிமிட வாதத்தில்   குற்றவாளி விடுதலையாகிறான் .ஆதிசேஷனின்  வாதத் திறமையை பார்த்து சக்தி வியக்கிறான் .  
ராகுல்திவான்தான் நிஜ குற்றவாளி என்பதை அறிந்த ஸ்கை டிவி செய்தியாளர்  ஜெனிபர் (ஐஸ்வர்யா ராஜேஷ்) ‘தீர்ப்பில் நியாயம் இல்லை’ என்று தொடர்ந்து செய்திகள் வெளியிடுகிறாள் .
ஹைகோர்ட் வளாகத்தை ஒட்டி ஹோட்டல் வைத்து இருக்கும் மூர்த்தியின் (சங்கிலி முருகன்) மகளை கற்பழித்துக் கொன்ற குற்றவாளியை விடுவித்ததும் ஆதி சேஷனின் வாதத் திறமைதான் .
எனவே ஆதிசேஷனை வீழ்த்தும் ஒரு நல்ல ‘மனிதன்’ வருவான் என்று  காத்திருக்கிறார் மூர்த்தி, 
mani 10
இன்னொரு பக்கம்  பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களின் பரிதாபகரமான வாழ்க்கை சக்தியின் மனதைத் தொடுகிறது . 
இந்த வழக்கில் மறு விசாரணை கோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்தால்,  தான் பிரபலம் ஆகலாம் என்று எண்ணும் சக்தி , அப்படியே செய்கிறான் .
வழக்கு விசாரணைக்கு வருகிறது . நீதிபதி தனபால் ( டத்தோ ராதாரவி) கூட, தான் ஒரு ஆடம்பர வீடு வாங்க ஆதிசேஷனின் உதவியை நேரடியாக கோர்ட்டிலேயே  கேட்கும் அளவுக்கு,
ராட்சஷ  பலத்துடன் இருக்கிறார் ஆதிசேஷன் . 
 
அதையும் மீறி சக்தி முட்டி மோதிப் போராட, ஒரு நிலையில் சக்தியையே இருபது லட்ச ரூபாய்க்கு விலைக்கு வாங்குகிறார் ஆதிசேஷன் .
 விஷயம் அறிந்த பிரியா சக்தியை வெறுக்கிறாள்.  பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடுகிறான் என்று சக்தியை நேசித்த ஏழை மக்களும் அவனை வெறுக்கின்றனர் . ஃஜெனிபரும் புறக்கணிக்கிறாள். 
mani 9
சக்தி மனம் திருந்தி  நிஜமாக நல்லவனாக மாறி ,ராகுல் திவானால் அநியாயமாக கொல்லப்பட்ட ஏழை பிளாட்பாரவாசிகளுக்கான  போராட ஆரம்பிக்க . 
அதுவர எந்த வழக்கிலும் தோல்வியை அறியாத ஆதி சேஷன் சக்தியை அழிக்க , அடியாள், போலீஸ், சட்டம் என்று தன்னுடைய அனைத்து சக்தியையும் பிரயோகிக்க அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த மனிதன் . 
குடிபோதையில் காரோட்டி பிளட்பாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த மக்களைக் கொன்ற இந்தி நடிகர் சல்மான் கானின் பாதிப்பில் உருவான ஜாலி எல் எல் பி  என்ற நகைச்சுவையான ,
மெல்லிய கதை கொண்ட இந்திப் படத்தின் மறு உருவாக உரிமையை வாங்கி, 
 அதன் விதையை மட்டும் எடுத்துக் கொண்டு காதல் , செண்டிமெண்ட் , விறுவிறுப்பு , பரபரப்பு எல்லாம் கூட்டி அர்த்தமுள்ள சமூக அக்கறை கொண்ட,  
mani 3
கருத்தியல் ரீதியாக கம்பீரமாக ஜொலிக்கும் வகையில் குடும்பத்தோடு பார்க்க முடிகிற படமாக மனிதனை உருவாக்கி இருக்கிறார்கள் 
பொதுவாக படத்தின் பெயரை டைட்டிலில் போடும்போது அதற்கான எழுத்துரு (ஃபாண்ட்) நன்றாக இருக்கிறதா ? கலர் நன்றாக இருக்கிறதா ? என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் பல இயக்குனர்கள் யோசிப்பதே இல்லை . 
ஆனால் மனிதன் என்று டைட்டில் போடப்படும் அந்த நான்கைந்து நொடிகளில் படத்தின் கதையை ஒரே ஃபிரேமில் சொல்லும் அந்த துவக்கத்திலேயே,
 ஓர் இயக்குனராக தனது முத்திரையை பதிக்கிறார் இயக்குனர் ஐ,அஹமது . அருமை!  
படத்தை தயாரித்துக் கதாநாயகனாக நடித்து இருந்தாலும் டைட்டிலில் முதலில் டத்தோ ராதாரவி, அப்புறம் பிரகாஷ் ராஜ் , அடுத்து  விவேக் ஆகியோரின் பெயர்களை போட்டு விட்டு, 
mani 14
அதன் பிறகு தன் பெயரையும் ஹன்சிகா பெயரையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்கிற உதயநிதியின் பண்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை .
சினிமாவை ஒரே நேரத்தில் கண்ணியமாகவும் வெறித்தனமாகவும் நேசிக்கிற ஒரு மனிதனால் மட்டுமே இது சத்தியம் ஹேட்ஸ் ஆஃப் உதயநிதி !மனம் நெகிழ வைக்கிறீர்கள் .! 
பொய் வாழ பாடலை அற்புதமான மாண்டேஜ்களை அமைத்துப் படமாக்கி இருக்கும் விதத்தில் யதார்த்தத்தின் சிகரம் தொடுகிறார் அஹமது . அகம் அது மலரும் பாராட்டுகள் ! 
பிரகாஷ்ராஜ் கோர்ட்டில் வாதாடும் அந்த முதல் காட்சியிலேயே (சத்தம் கொஞ்சம் ஜாஸ்தி என்றாலும் …) சும்மா தீப்பொறி கிளப்புகிறது படம். 
சக்தி கதாபாத்திரத்தை எந்த  தேவையற்ற ஜிகினாவும் இல்லாமல் மிக யதார்த்தமாகப் படைத்து இருப்பது அழகு.
 
ஒரு காட்சியை நறுக்கென்றும் கம்பீரமாகவும் எப்படி  தருவது என்பதில் வியக்க வைக்கிறார் அஹமது .
mani 8
மூர்த்தியின் இழப்பு  என்ன என்று  சொலப்படும் நிலையில்  அவரை ரொம்ப சோகமாக எல்லாமல் காட்டி ‘சீன்’ போடாமல் அவர் மாத்திரை போடுவதை ( B.P. மாத்திரை ?) இயல்பாகக் காட்டும் விதமும் ,
சக்தி பணத்துக்கு சோரம் போய்விட்டதை அறிந்ததும் அவனுக்கு மூர்த்தி கொடுக்கும் பளீர் அறையும் உதாரணங்கள் . 
பெற்ற மகனைத் தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்றிக் கொடுத்த வக்கீலுக்குக் கொடுக்க வேண்டிய ஃபீஸைக் கூட குறைவாக கொடுப்பதும் கேட்டால் மிரட்டுவதுமான,
 அந்த கோடீஸ்வர அல்பத்தனம் கலந்த வில்லத்தனம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு 
சக்தியின் பாதுகாப்புக்கு வேண்டும் என்றே ஒரு நோஞ்சான் போலீசை அரசு நியமிப்பதும் அதை வைத்து காமெடி மட்டும் செய்து விட்டு அப்படியே அம்போ என்று விட்டு விடாமல்,  
சரியான சமயத்தில் அந்தக் கேரக்டரை சரியாகப் பயன்படுத்தும் வகையில் செய்திருப்பது அருமை . ஜென்டில் மேன் படத்துக்குப் பிறகு அந்த குணாதிசயத்தில் (ஆனால் காப்பி அல்ல ) அப்படி ஓர் அட்டகாசமான காட்சி . 
mani 11
மழைக் காலத்தில் பிளட்பார மக்கள் படும் கஷ்டம் , அந்த ஏழ்மையிலும் அவர்களுக்கு இருக்கும் தயாள குணம் என்று நெகிழ்ந்து மகிழவும் மகிழ்ந்து நெகிழவும் படத்தில் பல காட்சிகள் ! 
இப்படியாக திரைக்கதை பல இடங்களில்  வசனமே இல்லாமல் உள்ளம் கொள்ளை கொள்ள, இன்னொரு பக்கம் ரொம்ப நாளைக்குப் பிறகு,
 திரைக்கதையோடு அப்படியே இணைந்து இயைந்து குழைந்து கலந்து நிற்கிறது அஜயன் பாலாவும் அஹமதுவும் இணைந்து எழுதி இருக்கும் வசனங்கள் . 
‘இந்த வசனம் நல்லா இருக்கு… அந்த வசனம்  நல்லா இருக்கு’ என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒட்டு மொத்தமாக உள்ளம் கொள்ளை கொள்கிறது வசனங்கள் . 
பிளட்பாரம் படுத்துத் தூங்க இல்லை என்று ஆதிசேஷன்  சொல்லும்போது அவர் சொல்வது நியாயம்தானே  என்று வெகு ஜன ரசிகனுக்கு தோன்ற வைக்கும் வகையில் இருப்பதும், 
mani 13
அடுத்து பிளட்பாரம் எனபது கார் ஓட்டுவதற்கு அல்ல என்று சக்தி சொல்லும்போது நியாயம்தானே என்று  தோன்றவைக்கும் விதத்தில் இருப்பதும் அட்டகாசமான வசன சதிராட்டம் . 
திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியையும் 360 டிகிரிக்கு யோசித்து இருக்கிறார் அஹமது . உதாரணமாக பிளாட்பாரத்தில் படுத்து உறங்கி அடிபட்டு சாகும் மனிதர்களை,
 சும்மா ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி பயன்படுத்தாமல் அந்த மக்கள் யார் ? அவர்களின் நிலைமைக்கு யார் காரணம் என்று விளக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சி படத்தின் மகுடம் . 
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை . காட்சியின் கனத்தை கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது பின்னணி இசை . அதோ பாடலும்  அந்த தீம் மியூசிக்கும் மனசை என்னமோ செய்கிறது . வெகு சிறப்பு 
ஒரு பக்கம் கோர்ட் .. இன்னொரு பக்கம் கிராமம் என்று புவியியல் சூழல் ,இன்னொரு பக்கம் காட்சியின் உணர்வுச் சூழல் என்று இரண்டுக்கு நியாயம் செய்கிறது மதியின் ஒளிப்பதிவு 
mani 12
விதி படத்துக்குப் பிறகு அதிகம் கோர்ட் சீன் கொண்ட படம் இது  . இன்றைய ரசிக மனநிலையில் கொஞ்சம் அசந்தாலும் களேபரம் ஆகி இருக்கும் .
ஆனால் மிக தெறிப்பாக அவற்றைக் கொடுத்ததிலும் நடிகர்களின் சிறப்பான நடிப்பை சரியாகப் பரிமாறி இருப்பதிலும் மணி பாலாஜியின் படத்தொகுப்பு பெரும்பங்கு ஆற்றி இருக்கிறது. 
ஆரம்ப கார் சேசிங் காட்சியில் ஒளிப்பதிவு எடிட்டிங் இரண்டும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கிறது. சபாஷ் !
படத்தில் காட்டப்படும் பொள்ளாச்சி கோர்ட் ஹாலும் சென்னை ஹாய் கோர்ட் ஹாலும் ஒரிஜினல் இல்லையாம் . செட் போடப்பட்டதாம் . நம்பவே முடியாத அளவுக்கு நயமான ஆர்ட்  டைரக்ஷன் . 
நான் சிகப்பு மனிதன் போன்ற ஓரிரு  படங்களில் ஏதோ கொஞ்சம் காட்டியதை தவிர,  ஒரு நீதிபதியின் மனநிலையை இந்தப் படம் அளவுக்கு தமிழில் எந்தப் படமும் காட்டியது இல்லை . 
mani 1
இதுவரை கொஞ்சம் காமடி, அப்புறம் கொஞ்சம் டான்ஸ் , பிறகு கொஞ்சம் ஸ்டன்ட் என்று  புற வேலைகளில் மட்டும் முன்னேறிக் கொண்டு இருந்த உதயநிதி,
இந்தப் படத்தில் முதன் முதலில் சக்தி என்ற அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக சிறப்பாக நடித்து உள்ளார். 
ஒரு பக்கம் ராதாரவி இன்னொரு பக்கம் பிரகாஷ்ராஜ் என்று,  இரண்டு பழம் தின்று கோட்டை போட்ட நடிகர்களுக்கு மத்தியில் , வெற்றிப் பூவாக பூத்திருக்கிறார் உதயநிதி  .
இனி உதயநிதியை நம்பி கனமான கதைகளும் தரலாம் என்கிற அளவுக்கு  ஒரு எக்ஸ்ட்ரார்டினரி ஏரியாவுக்குள் நுழைந்து விட்டார் உதயநிதி .
அதிரடி வக்கீலாக பிரகாஷ் ராஜ் இடி இடித்து மின்னுகிறார் ஒரு திகில் படத்தைப் பார்க்கிற உணர்வை ஏற்படுத்துகிறது அவரது நடிப்பு 
.அனுபவத்தில் தேர்ந்த நீதிபதியாக அனுபவத்தில் தோய்ந்த ராதாரவி சும்மா ஜமாய்க்கிறார் . நிஜமான கோர்ட்டில் நிஜமான ஒரு நீதிபதியை பார்க்கிற உணர்வை ஏற்படுத்துகிறார் .
mani 6
விவேக் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் சில இடங்களில் நகைசுவை வெடி வெடிக்கிறார் .. 
ஹன்சிகா வழக்கமான சிரிப்பு நெளிப்பு நடிப்பு .ஆனால் உடம்பை கொஞ்சம் ‘மெயின்டைன்’ செய்து கொள்ளாவிட்டால்  அடுத்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாவது சிரமமாகி விடலாம் . கவனம், 
நேர்மையான பத்திரிக்கையாளர் கேரக்டரை ஷட்டில் ஆகவும் ஷார்ப்பாகவும் நடித்து பாராட்டுப் பெறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சங்கிலி முருகன்  நேர்த்தி ..ராகுல் திவானின் தாத்தா மற்றும் கமலக் கண்ணன் பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வும் அவர்கள் நடிப்பும்  வெகு சிறப்பு .
படம் மிக இயல்பாக ஆரம்பித்து , மெல்ல மெல்ல கனம் கூடி இடைவேளையில் பரபரப்பும எதிர்பார்ப்பும் ஏற்றி , அப்புறம் செண்டிமெண்ட் சுவாரசியம் கூடி 
mani 5
இரண்டாம் பகுதியின் நடுவில் ஒரு சில  நிமிடங்கள் சற்றே தொய்வடைந்து பின்னர்  சுதாரித்துக் கொண்டு எழுந்து அட்டகாசமாக ஓடி வெற்றிக் கோட்டை பிரம்மாதமாகக் கடக்கிறது . 
மனிதன் … மாண்பு மிகு !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————–
ஐ.அஹமது, உதயநிதி ஸ்டாலின் , ராதாரவி, பிரகாஷ்ராஜ்,சந்தோஷ் நாராயணன்,மணி பாலாஜி,  மதி, சங்கிலி முருகன், கமலக் கண்ணனாக நடித்து இருப்பவர் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →