மனோஜ் பரமஹம்சா , முரளி கிருஷ்ணன் தயாரிப்பில் பிரவீன் கிஷோர், கவுரவ் காளை, எஸ்தர் அனில் நடிப்பில் ஹலீதா ஷமீம் எழுதி இயக்கி இருக்கும் படம்.
படத்தின் ஒரு பகுதியை படமாக்கி விட்டு நடித்தவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்களை வைத்தே மீதிப்படம் எடுக்கப்பட்டது என்பது இந்தப் படத்தின் சிறப்பம்சம் . வாழ்த்துகள் பாராட்டுகள். படம் எப்படி இருக்கிறது ? பார்க்கலாம்
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சபரி கார்த்திகேயனும் ( பிரவீன் கிஷோர்) பாரி முகிலனும் ( கவுரவ் காளை) .
சபரிக்கு மிகப் பெரிய ஓவியனாகி உலகின் சிறந்த ஓவிய அரங்குகளில் தனது ஓவியத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பது லட்சியம். பாரிக்கு இருசக்கர வாகனப் பயணியாகி வட இந்தியாவில் இமயமலைப் பகுதி முழுக்க சுற்ற வேண்டும் என்பது லட்சியம்.
இருவருக்குள்ளும் எப்போதும் சண்டை . தொடர்ந்து பாரி சீண்ட , சபரியின் பொறுமை மற்றும் மன்னிக்கும் குணம் காரணமாக இருவருக்குள்ளும் சொல்லப்படாத நட்பு ஒன்று பூக்கிறது . அது முழுமையாக வெளிப்படுத்தப்படும் முன்பே நடக்கும் ஒரு விபத்தில் சபரியைக் காக்கும் முயற்சியில் மரணம் அடைகிறான் பாரி .
உடைந்து போகும் சபரி தனது ஓவிய லட்சியங்களை விடுத்து , பாரியின் லட்சியமான குதிரை ஏற்றம், விளையாட்டு, இமயம் முழுக்க இரு சக்கரப்,பயணம் என்று அவனின் லட்சியங்களை நிறைவேற்றும் நபராக மாறுகிறான் .
மூளைச் சாவு அடைந்த சபரியின் இதயத்தை , மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற மாணவி பிரவீணா( எஸ்தர் அனில்) பாரி பற்றி அறிய அதே பள்ளியில் சேர்கிறாள் .
அங்கே சபரி பாரியாக மாறிக் கொண்டு இருப்பதைப் பார்த்து சிலிர்த்து உறைகிறாள்.
பாரியாக மாறுவதில் ஏற்படும் சிரமம் , மற்றும் தடங்கல்களைத் தாங்க முடியாமல் ஒரு நிலையில் எங்கோ போய் விடுகிறான் சபரி .
எட்டு வருடம் வளர்ந்த நிலையில் , சபரி ஆசைப்பட்டபடி பைக் பயணியாகி இமயமலைப் பகுதியில் பயணிக்கும் பிரவீணா, சபரியையும் அப்படி ஒரு பயணியாகப் பார்க்கிறாள். பிரவீணாவுக்கு சபரியைத் தெரிகிறது . ஆனால் சபரிக்கு பிரவீணாவைத் தெரியவில்லை ( என்கிறார் ஹலிதா )
அவனிடம் தான் யார் என்று சொல்லாமல் அவன் கூடவே பயணிக்கிறாள் பிரவீணா. பொதுவாகப் பேசுவது போல உன் சொந்த லட்சியங்களை அடைய முயற்சி செய் என்று அறிவுரை சொல்கிறாள் இருவரும் இமயத்தின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்து, பலவித கலாச்சார மக்கள், உணவு, இசை என்று பழகுகிறார்கள் .
ஒரு நிலையில் பிரவீணா சொல்லாமலே அவள் யார் என்பது சபரிக்குத் தெரிய வர , அவன் கோபித்துக் கொள்ள, அப்புறம் என்ன நடந்தது என்பதே படம்
– என்று எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு ஜஸ்ட் முடிகிறது படம்.
புதிய முயற்சியைப் பாராட்டலாம்.
மோதலில் காதல் மட்டுமா பூக்கும் ? நட்பும் மலரும் என்று சொல்லும் அந்த பகுதி , பிரவீணாவின் பின் கதை , அவள் பள்ளியில் சேர்வது .. இறந்து போன பாரியின் மீதான உணர்வில் இந்தப் பள்ளியில் சேர்ந்தவள் சபரியின் மாற்றங்களைப் பார்த்து சிலிர்ப்பது என்று அந்த ஏரியா அபாரம்.
ஓர் அட்டகாசமான திரைக்கதை உள்ள படத்தை எதிர்கொள்ளப் போகிறோம் என்று ஆவலோடு காத்திருந்தால் அஸ்கு பிஸ்கு என்று பழிப்புக் காட்டுகிறது படம் .
அதே நேரம் இரண்டாம் பாதியில் இமயமலைப் பகுதியின் லொக்கேஷன்கள் அந்தப் பயணம் அது தரும் அனுபவங்கள் எல்லாம் ஒரு நிலைவரை சுவாரஸ்யமாகவே இருந்தது .
ஆனால் படம் அப்படியே போய்க் கொண்டே ஏ ஏ ஏ ஏ ஏ.. …இருக்க, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த விலை உயர்ந்த பொருள் போல, முதல் பாதியில் துவங்கி வைத்த உணர்வுப் பூர்வமான கதையம்சம் காணாமல் போகிறது . (ஒரு சிறுவனுக்கும் இவர்கள் இருவருக்குமான நட்பு பகுதி மட்டும் பாலைவனச் சோலை)
இதையும் மீறி , மனோஜ் பரமஹம்சாவின் அட்டகாசமான ஒளிப்பதிவு விழிகளை விரிய வைக்கிறது.
வயலின் பியானோ இவற்றின் ஆதிக்கம் மட்டும் அதிகம் இருப்பது சற்றே உறுத்தினாலும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையால் ஈர்க்கிறார் ,அறிமுக இசை அமைப்பாளரும் ஏ ஆர் ரஹ்மான் மகளுமான கதீஜா ரஹ்மான்.
ரேமன்ட் டெர்ரிக் க்ரஸ்ட்டாவின் தவறான படத் தொகுப்பு பாணியால் அடுத்தடுத்து நடக்கப் போவது அப்படியே புரிகிறது . (விபத்துக் காட்சி)
நான் மட்டும் சாதரணமா என்று A GOOD FRIENDSHIP STARTS FROM A RIVAL NOTE என்ற ரீதியில் அவ்வப்போது கொட்டேஷன் காட்டி திரைக்கதையைப் பின்னுக்கு இழுக்கிறார் ஹலீதா ஷமீம். விளைவு முன்பே நடக்கப் போவது தெரிந்து விடுவதால் எதிர்பாராமல் கிடைக்க வேண்டிய உணர்வு அனுபவங்கள் நீர்த்துப் போய் விடுகிறது
எட்டு வருடங்கள் காத்திருந்து இரண்டாம் பகுதியை எடுத்தவர்கள் அந்த எட்டு வருட காலத்தில் ஒரு எட்டு நிமிஷத்துக்கவது உருப்படியான காட்சிகளை இரண்டாம் பகுதிக்கு எழுதி இருக்கலாம்
அல்லது அதீத பயணத்தில் எடுத்துப் போன கதையை எங்காவது தொலைத்து விட்டார்களோ என்னவோ .
ஒழுங்கான எழுத்து இல்லாததால் ஒரு பகீரத முயற்சி பலவீனப்பட்டு விட்டது .
மொத்தத்தில் மின்மினி ….
முதல் பகுதி இதயத்தின் ஒலி
இரண்டாம் பகுதி இமாலயன் டிராவல் கைடு