ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, வேல. ராமமூர்த்தி, மறைந்த மாரிமுத்து, தீபா சங்கர், நந்தனா, ரமா , செந்தி குமாரி, ஜெரால்ட் மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் நடிக்க, நாகராஜ் கருப்பையா எழுதி இயக்கி இருக்கும் படம்.
புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூரைச் சேர்ந்த தீயத்துரையின் மனைவி வீராயி. இளம் வயதிலேயே கணவனை இழந்த வீராயி தனது மூன்று மகன்கள், ஒரு மகளுக்காக அந்த பாலைக் காட்டில் வாழ்வை அர்ப்பணித்தவர்.
எல்லோரும் வெம்பாடு பட்டு இளைய மகனைப் படிக்க வைக்க, அவன் ( ஜெரால்டு மார்ட்டின்) பட்டணத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை புறக்கணிக்கிறான் .
முதல் மகனின் ( வேல. ராமமூர்த்தி) குணவதி மனைவி ( ரமா) இரண்டாவது மகனின் ( மாரி முத்து) உறவுகளை மதிக்காத மனைவி ( செந்தில் குமாரி) , மகளின் ( தீபா சங்கர் ) பணத்தாசை பிடித்த கணவன் என்று குடும்பத்தில் சிக்கல்கள் பெரிதாக ,
ஒரு பஞ்ச காலத்தில் மூத்த மகனும் மனைவியும் பஞ்சம் பிழைத்து குடும்பத்துக்கு பணம் அனுப்ப வெளியூர் செல்கின்றனர் . இரண்டாவது மகனின் மனைவி, வீராயியை அவமானப்படுத்திப் புறக்கணிக்க, அவள் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் பட்டினி கிடக்கிறாள் . மகள் அம்மாவைப் பார்த்துக் கொள்ள நினைக்க, மருமகன் மறுக்கிறான்.
வீராயி செத்துப் போக, பெரிய மகன் ஊருக்கு வந்து கொந்தளிக்க, உறவுகள் நொறுங்குகின்றன . அண்ணன் -தம்பி- தங்கை இடையே நிரந்தரப் பிரிவு .
இது போதாது என்று தம்பியின் மனைவி தினம் அண்ணன் குடும்பத்திடம் வம்பிழுக்க சண்டை, வெட்டுக்குத்து வரை போகிறது .
அண்ணனின் மகன் ( சுரேஷ் நந்தா) அத்தையை சந்தித்து , அத்தைப் பெண்ணை ( நந்தனா) காதலித்து சித்தப்பாவிடமும் அவர் பிள்ளைகளிடமும் நெருங்கி, சின்னம்மாவை சமாதானப்படுத்தி உறவுகளை ஒன்றிணைக்க முயல நடந்தது என்ன என்பதே வீராயி மக்கள் .
அற்புதமான , நெகிழ்வான, உணர்வுப்பூர்வமான , வாழ்வியலான, இன்றைக்குத் தேவையான கதை.
‘குணத்தில் பண்பில் முன்ன பின்ன இருந்தாலும் சொந்தம் சொந்தம்தான் . இன்னொரு பிறவி இருக்கா? இருந்தாலும் இதே உறவு வருமா? விட்டுக் கொடுத்து தட்டிக் கொடுத்து உறவுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் . அதே போல பிறந்த ஊரில் இருந்து மொத்தமாக அறுத்துக் கொள்ளவும் கூடாது ‘என்ற இரண்டு சிலிர்ப்பான விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கும் படம்
பேசாமல் போகும் பெரியப்பாவிடம் வயதுக்கு வந்த இளம்பெண் காட்டு வழியில் ஆசீர்வாதம் வாங்கும் காட்சி கண்களை சுரக்க வைக்கிறது என்றால் ,
கடைசியில் ஊருக்கு வரும் இளையமகனிடம் ஊர்ப் பாட்டி பேசும் விஷயங்கள் அதே கண்களை அருவியாக்குகிறது .
“இது ஊரு இல்லய்யா… உங்க வேரு….” என்ற வசனம்…. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றின் ஈடு இணையற்ற வசனங்களின் வரிசையில் நிற்கும்
வாழ்த்துகள் பாராட்டுகள் இயக்குனர் நாகராஜ் கருப்பையா
தீபன் சக்கரவர்த்தியின் பாடலிசை, அதற்கு இயக்குனர் நாகராஜ் கருப்பையாவும் பாடலாசிரியர் மதுரகவியும் எழுதி இருக்கும் பாடல் வரிகள் உயிருக்குள் நுழைகின்றன .. பாடியவர்கள் வரை உருக வைக்கிறார்கள்
பின்னணி இசையில் போதாமை .
சீனிவாசனின் ஒளிப்பதிவு எளிமையுடன் இருப்பதால் உயிர்ப்புடன் ஜொலிக்கிறது . நீளமான பிளாஷ்பேக்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முகன் வேலின் படத்தொகுப்பும் சிறப்பு .
படத்தின் பெரும்பாலான நடிகர்கள் பொருத்தமான தோற்றம் உடல் மொழிகள் முக பாவனைகளோடு இயல்பாக நடித்துக் கவர்கின்றனர்.
வேல ராம மூர்த்தியின் ஒரே பாணி நடிப்பு , தீபா சங்கரின் அதீத நடிப்பு , வீராயியாக நடித்து இருப்பவரின் போதாத நடிப்பு இவை எல்லாம் கூட இந்தப் படத்தில் தவறாகத் தெரியவில்லை என்றால் அதற்குக் காரணம் இந்தக் கதையின் ஆன்மாதான்
எரிச்சலூட்ட வேண்டிய கதாபாத்திரத்தில் சிலம்பம் ஆடி இருக்கிறார் செந்தி மீனா. இவரை இந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தது மிக சிறப்பான முடிவு .
நம் ஒவ்வொருவருக்குமான கிராமத்து அத்தை மகள்களின் ஒட்டு மொத்த வார்ப்பு நந்தனா.
கிராமத்து யதார்த்த நாயகன் கதாபாத்திரத்துக்கு ,அந்த அசத்தும் கருப்போடு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார் சுரேஷ் நந்தா .
இந்தக் கதைக்கு இன்னும் மிகச் சிறப்பான திரைக்கதை அமைத்திருக்க வேண்டும் . அமைத்திருக்க முடியும் . அதற்கான ரா மெட்டீரியல் உள்ளேயே இருக்கிறது .
ஆனால் ‘எதுக்குக் கழுத இட்லி சுடணும்? ஆட்டுன பச்சை மாவையே அள்ளிப் பரிமாறிடுவோம். இட்லிலையும் அதே மாவுதானே இருக்கு ‘என்று விட்டு விட்டார்கள்
காட்சிகளும் நீட்சிகளும் தொடர்பு இல்லாமல் தாவித்தாவிக் குதிக்க , அடுத்தடுத்து ஸ்பீட் பிரேக்கர்களே இருக்கும் பாதையில் வண்டி ஓட்டுவது போல இருக்கிறது படம் பார்க்கும்போது .
செந்தில்குமாரி கதாபாத்திரத்தின் குணாதிசயத்துக்கு ஒரு காரணம் (அட்லீஸ்ட் ‘நான் பொறந்த வீட்டுல சொந்தக்காரன் எல்லாம் கழுத்தருக்கிறவனா இருந்தாங்க . அதுபோல இங்கயும் இருப்பாங்கன்னு பயந்தேன் ‘ என்பது போல ) .. அதேபோல அவர் மனம் மாறுவதற்கான ஒரு கால அவகாசம் … இவை எதுவுமே இல்லாமல் டக்கென்று அவர் கோவிலில் கும்பலோடு கும்பலாக நிற்பது எல்லாம் ஓவர் .
எல்லா காட்சிகளையுமே இன்னும் திருத்தமாக அமைத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு . இன்னும் பலமான தயாரிப்பு வளம் அமைந்து இருந்தாலும் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்
எனினும் வீராயி மக்கள் ….. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ ?