
ஜெயம் ரவி , லக்ஷ்மி மேனன் நடிக்க , நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கி இருக்கும் சக்தி சவுந்திரராஜன் இயக்கி இருக்கும் படம் மிருதன்.
அதாவது மிருகமான மனிதன் என்பதன் சுருக்கமே மிருதன் . இந்த மிருதன் விருதனா ? இல்லை எருதனா ? பார்ப்போம் .
மனிதனின் மூளையில் மிருக வெறியை மட்டுமே முழுக்க முழுக்கத் தூண்டி விட்டு உடலை உருக்குலைத்துக் கோரமாக்கி , சக மனிதனையே வெறி பிடித்துக் கடிக்க வைக்கும் அதி தீவிர வைரஸ் அடங்கிய,
உயிர் வேதியியல் திரவம் ஒன்று ஊட்டியில் ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லும்போது சாலையில் கொட்டி விடுகிறது .
அதை ஒரு நாய் ஒன்று குடித்து விட , அந்த நாய் வெறி பிடித்த நாயாகி ஒரு மனிதனைக் கடிக்கிறது . அது கடிக்கும் ஒரு மனிதன் மேலே சொன்னபடி மிருக வெறியேறி தன் அம்மாவைக் கடிக்க,
அவளும் மாறி மருமகளைக் கடிக்க ,
அந்த மருமகள் தானும் மாறி வெளியே வந்து மற்ற மனிதர்களைக் கடிக்க, இப்படியே ஊட்டியில் கடி வாங்கும் எல்லோரும் மற்றவர்களைக் கடிக்கும் மிருக வெறி மனிதர்களாக அதாவது ‘மிருதன்’களாக மாறுகின்றனர் .
சட்டம் ஒழுங்கு போலீசுக்கும் போக்குவரத்து போலீசுக்கும் ஒரே சம்பளம்தான் எனும்போது, எதற்காக ரிஸ்கான சட்டம் ஒழுங்கு போலீசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து,
போக்குவரத்து போலீசாக மாறி ஊட்டியில் பணியாற்றும் இளைஞன் (ஜெயம் ரவி) .
அப்பா அம்மா இல்லாத நிலையில், அண்ணனுக்கு பெண் பார்க்கும் அளவுக்கு பாசம் உள்ள சிறுமியான ஒரு தங்கை (அனிகா) அவனுக்கு உண்டு .
ஒரு பெண் மருத்துவர் (லக்ஷ்மி மேனன் ) மீது நாயகனுக்கு காதல் வர, அவளுக்கு காதலன் இருப்பது அவனுக்கு தெரிய வருகிறது . எனவே மனதளைவில் அவனுக்கு அவள் ‘முன்னாள் காதலி’ என்றாகிறாள் .
இந்த நிலையில் மிருதன்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி ஊருக்குள் எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது .
கொடிய வைரசுக்கு ஏற்ற மாற்று மருந்து கண்டுபிடித்து, மேற்கொண்டு மிருதன்கள் உருவாவதை தடுப்பதோடு , மிருதன்களாக மாறிய ஆண் பெண்களை காக்கும் பணியில் ,
அந்த பெண் மருத்துவரும் அவரது மருத்துவக் குழுவும் ஈடுபட, அதற்கு நாயகனும் அவனது நண்பனும் உதவுகிறார்கள் . கூடவே பாதுகாப்புக்காக நாயகனின் தங்கையும் அவர்களோடு !
நோய் தீர்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா ? இல்லையா ?
அலையலையென ஓடி, பாய்ந்து, குதித்து, சீறி, பறந்து, தாவி,, தவ்வி , தவழ்ந்து, மிதந்து வரும் ஏராளமான மிருதன்களிடம் இருந்து, இவர்கள் தப்ப முடிந்ததா ?
இல்லை கடி வாங்கி இவர்களும் மிருதன் ஆனார்களா? என்பதை சொல்லி மிருதன் இரண்டாம் பாகத்துக்கு அடி போட்டு முடிகிறது இந்தப் படம்
படத்தில் முதலில் இருந்தே முழுசாக நம்மைக் கவர்பவர் ஜெயம் ரவி . ஒரு பேட்டியில் இயக்குனர் சக்தி சவுந்திரராஜன் சொன்னது போல, ஜெயம் ரவி இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கக் கூட முடியாது .
அப்படி ஒரு அற்புதமான பங்களிப்பு .
போக்குவரத்துக் காவலராக , பாசமுள்ள அண்ணனாக, கவுரவம் மிக்க காதலனாக , இலகுவான நண்பனாக, ஆழப் பார்வையில் மனம் ஊடுருவும் மனிதனாக ,
ஒரு நிலையில் மிருதனாக , மிருதனான பின்னும் குணம் மாறாத காதலானாக வெல்டன் ரவி .
அதுவும் இரண்டாம் பகுதியில் மனம் நொறுங்கும் அண்ணனாகவும் இதயம் இடியும் காதலனாகவும் படத்தை தூக்கிப் பிடிக்கிறார் . சபாஷ் . அழுத்தமான கைகுலுக்கல்கள்.
காளி வெங்கட் அவ்வப்போது சற்றே சிரிக்க வைக்கிறார் .
மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அந்த கணவன் , அம்மா . மருமகள் காட்சி, விவரிக்கப்பட்ட விதம் அருமை இயக்குநரே!
முன்னாள் காதலி பாடல் படமாக்கப்பட்ட விதமும், அதில் கொட்டப்பட்டு இருக்கும் உணர்வும் டைரக்டருக்கு ஜே சொல்ல வைக்கிறது .
பெரும்பாலான காட்சிகளில் கோர முகத்துடன் எவ்வளவு ஆட்கள் ! இவர்களையெல்லாம் கட்டிக்காத்து காட்சிகளை எடுத்த உழைப்புக்கே இந்த யூனிட்டைக் கொண்டாடலாம் .
இமானின் இசையில் முன்னாள் காதலி பாடல் ஒகே . மிருதன் பாடல் மனசுக்குள் பூக்குவியலாக உட்காருகிறது பின்னணி இசை சில பல காட்சிகளில் ஒப்பேற்றலாகவும் சில காட்சிகளில் நன்றாகவும் இருக்கிறது .
வெங்கடேஷின் ஒளிப்பதிவும் கணிப்பொறி வரைகலையும் சேர்ந்து காட்சிகளின் திகிலுக்கு உதவி பலம் சேர்க்கின்றன .
மிக மெல்லிய லைன் திரைக்கதையை, பார்வைக்கு மதிப்புக் கூட்டி தருவதில் வெங்கட் ரமணனின் படத்தொகுப்பு சிறப்பாக செயல்பட்டுள்ளது . கணேஷ் குமாரின் சண்டைப் பயிற்சியும் பாரட்டுக்குரியதே.
இன்றைய நிலையில் எதாவது வித்தியாசமாக ரசிகர்கள் எதிர்பார்ற்கும் சூழலில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து இருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.
ஆனால் அதை முடிந்தவரை பிரம்மாதமாக சொல்வதுதானே முக்கியம் . அதுதான் குறைகிறது .
மிருதன் ஒரு முழுமையான பக்கவான ஸோம்பி வகைப் படம் இல்லை என்றாலும் அந்த அடையாளம்தான் இந்தப் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது .
இந்த வகைப் படங்களின் மிகப் பெரிய பலமே ஒரு கட்டம் வரை திகில் கூட்டும் அமைதியும், எப்போது எங்கே எப்படி கடிக்கப்படுவது நடக்கும் என்ற சஸ்பென்சும்தான் .
ஆனால் மிருதனில் சோம்பிக்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்து கொண்டே இருகிறார்கள் . துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிக் கொண்டே இருக்கிறார்கள் .
இரண்டாம் பகுதியில் நாயகனின் தங்கை சம்மந்தப்பட்ட காட்சிகள் வரும்வரை இதுவே மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.
டாக்டர் சோம்பியின் சஸ்பென்ஸ் உடைபடும் இடமும் பெரிதாகப் பலன் தரவில்லை .
சோம்பி தன்மையில் சென்டிமென்ட்டை கலக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு சும்மா பின்னிப் பெடலேடுத்து பட்டையைக் கிளப்ப வேண்டாமா?
கடிபட்டு சோம்பி ஆகிற எல்லோருமே உடனே ஏதோ புரோக்ராம் செய்யப்பட ரோபோக்கள் போல ஆகி விடுகிறார்கள் .
அம்மாவைக் கடிக்கும் மகன் , கணவனைக் கடிக்கும் மனைவி, காதலனைக் கடிக்கும் காதலி, இப்படி கடிப்பவர்கள் எல்லோரும் தமக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்து,
முழு சோம்பியாக மாறுவதற்குள் அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுச் சிக்கல்களை விதம் விதமான சூழலில் காட்சியாக்கி ,
அவற்றை எல்லாம் மிஞ்சியதாக நாயகன், நாயகி, தங்கை இவர்களின் உணர்வு நெகிழ்வுகளை படமாக்கி இருந்தால் இந்தப் படததின் ரேஞ்சே வேறு .
உதாரணமாக டைட்டானிக் படத்தில் எல்லோரும்தான் கடலில் மூழ்கினார்கள். ஆனால் ஒவ்வொரு சிறு கதாபாத்திரத்தின் மரணத்துக்கும் ஒரு சிறிய கதையும் ,
அதை எல்லாம் மிஞ்சும் விதமாக நாயகன் நாயகிக்கான நிகழ்வுகளும் இருந்தது அல்லவா ? அது போல .
தண்ணீரைக் கண்டால் சோம்பி பயப்படும் என்பதும் எப்படிப்பட்ட ஒரு ஏரியா. அதை வைத்து தண்ணீரைப் பயன்படுத்தி விதம் விதமாக காட்சிகளை பண்ணி கைதட்டல் வாங்கிக் குவிக்க வேண்டாமா கண்ணுகளா !
ஒரு தீயணைப்பு வண்டியின் ஒரு டேங்க் தண்ணியோடு அந்த விசயத்தை காலியாக்கியது நியாயமா ?
சோம்பி என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் . அதைக் கையாளும் விதத்தில்தான் நம்ப வைத்து மிரட்ட வேண்டும் . அப்படி இருக்க அலை அலையாய் வரும் சோம்பிகளை ,
நாயகன் அச்சு அசல் கோடம்பாக்க ஹீரோவாக , சுத்தியல் , இரும்புக் குழாய் கொண்டு எல்லாம் அடித்துக் கொல்வதெல்லாம் ரொம்ப போங்கு ஆட்டம் .
அதே போல இயக்குனரின் காட்சி இணைத் தொகுப்பு வசதிக்காகவோ என்னவோ கடிக்க வரும் சோம்பிக்கள், பல காட்சிகளில் கடிக்காமல் கழுத்துகளை மோர்ந்து பார்த்துக் கொண்டே ஜெயம் ரவி சுடும்வரை காத்திருந்து ,
சட்டென்று சுட்ட உடன் பொட்டென்று சாகின்றன .
இந்த விசயங்களிலும் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .
எனினும் ….
ஜெயம் ரவியின் அட்டகாசமான நடிப்பாலும் …. தமிழின் முதல் சோம்பி வகை படம் என்ற எதிர்பார்ப்பாலும் நிமிர்ந்து நிற்கிறது படம் .
மிருதன் … புதியன்.
மகுடம் சூடும் கலைஞர்
———————————
ஜெயம் ரவி