மிருதன் @ விமர்சனம்

jeyam ravi

ஜெயம் ரவி , லக்ஷ்மி மேனன் நடிக்க , நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கி இருக்கும் சக்தி சவுந்திரராஜன் இயக்கி இருக்கும் படம் மிருதன்.  

அதாவது  மிருகமான மனிதன் என்பதன்  சுருக்கமே மிருதன் .  இந்த மிருதன் விருதனா ?  இல்லை எருதனா ? பார்ப்போம் . 

மனிதனின் மூளையில் மிருக வெறியை மட்டுமே முழுக்க முழுக்கத் தூண்டி விட்டு உடலை உருக்குலைத்துக் கோரமாக்கி , சக மனிதனையே வெறி பிடித்துக்  கடிக்க வைக்கும் அதி தீவிர வைரஸ் அடங்கிய,
 உயிர் வேதியியல் திரவம் ஒன்று ஊட்டியில் ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லும்போது சாலையில் கொட்டி விடுகிறது . 
அதை ஒரு நாய் ஒன்று குடித்து விட , அந்த நாய் வெறி பிடித்த நாயாகி ஒரு மனிதனைக் கடிக்கிறது . அது கடிக்கும் ஒரு மனிதன் மேலே சொன்னபடி மிருக வெறியேறி தன் அம்மாவைக் கடிக்க,
ravi 4
அவளும் மாறி  மருமகளைக் கடிக்க , 
அந்த மருமகள் தானும் மாறி வெளியே வந்து மற்ற மனிதர்களைக் கடிக்க,  இப்படியே ஊட்டியில் கடி வாங்கும் எல்லோரும் மற்றவர்களைக் கடிக்கும்  மிருக வெறி மனிதர்களாக அதாவது ‘மிருதன்’களாக மாறுகின்றனர் . 
சட்டம் ஒழுங்கு போலீசுக்கும் போக்குவரத்து போலீசுக்கும் ஒரே சம்பளம்தான் எனும்போது,  எதற்காக ரிஸ்கான சட்டம் ஒழுங்கு போலீசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து,
போக்குவரத்து போலீசாக மாறி ஊட்டியில் பணியாற்றும் இளைஞன் (ஜெயம் ரவி) .
அப்பா அம்மா இல்லாத நிலையில், அண்ணனுக்கு பெண் பார்க்கும் அளவுக்கு பாசம் உள்ள சிறுமியான ஒரு தங்கை (அனிகா) அவனுக்கு உண்டு . 
ravi 3
ஒரு பெண் மருத்துவர் (லக்ஷ்மி மேனன் ) மீது நாயகனுக்கு காதல் வர, அவளுக்கு காதலன் இருப்பது அவனுக்கு தெரிய வருகிறது . எனவே மனதளைவில் அவனுக்கு அவள் ‘முன்னாள் காதலி’ என்றாகிறாள் . 
இந்த நிலையில் மிருதன்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி ஊருக்குள் எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது .  
கொடிய வைரசுக்கு ஏற்ற மாற்று மருந்து கண்டுபிடித்து,  மேற்கொண்டு மிருதன்கள் உருவாவதை தடுப்பதோடு , மிருதன்களாக மாறிய ஆண் பெண்களை  காக்கும் பணியில் ,
அந்த பெண் மருத்துவரும் அவரது மருத்துவக் குழுவும் ஈடுபட, அதற்கு நாயகனும் அவனது நண்பனும் உதவுகிறார்கள் . கூடவே  பாதுகாப்புக்காக நாயகனின் தங்கையும் அவர்களோடு !
நோய் தீர்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா  ? இல்லையா  ? 
அலையலையென ஓடி,  பாய்ந்து,  குதித்து,  சீறி,  பறந்து,  தாவி,, தவ்வி , தவழ்ந்து, மிதந்து  வரும் ஏராளமான மிருதன்களிடம் இருந்து,  இவர்கள் தப்ப முடிந்ததா ?
jeyam ravi 2
இல்லை கடி வாங்கி இவர்களும் மிருதன் ஆனார்களா? என்பதை சொல்லி  மிருதன் இரண்டாம் பாகத்துக்கு  அடி போட்டு  முடிகிறது  இந்தப் படம் 
படத்தில் முதலில் இருந்தே முழுசாக நம்மைக் கவர்பவர்  ஜெயம் ரவி . ஒரு பேட்டியில் இயக்குனர் சக்தி சவுந்திரராஜன் சொன்னது போல,  ஜெயம் ரவி இல்லாமல் இந்தப் படத்தை  யோசிக்கக் கூட முடியாது .
அப்படி ஒரு அற்புதமான பங்களிப்பு . 
போக்குவரத்துக் காவலராக , பாசமுள்ள அண்ணனாக, கவுரவம் மிக்க காதலனாக , இலகுவான நண்பனாக, ஆழப் பார்வையில் மனம் ஊடுருவும் மனிதனாக ,
ஒரு நிலையில் மிருதனாக , மிருதனான பின்னும் குணம் மாறாத காதலானாக வெல்டன் ரவி . 
அதுவும் இரண்டாம் பகுதியில் மனம் நொறுங்கும் அண்ணனாகவும் இதயம் இடியும் காதலனாகவும்  படத்தை தூக்கிப் பிடிக்கிறார் . சபாஷ் . அழுத்தமான கைகுலுக்கல்கள்.
ravi 3
காளி வெங்கட் அவ்வப்போது சற்றே  சிரிக்க வைக்கிறார் . 
மனிதர்களுக்கு வைரஸ் பரவும்  அந்த கணவன் , அம்மா . மருமகள் காட்சி, விவரிக்கப்பட்ட விதம் அருமை  இயக்குநரே!
முன்னாள் காதலி பாடல் படமாக்கப்பட்ட விதமும், அதில் கொட்டப்பட்டு இருக்கும் உணர்வும் டைரக்டருக்கு ஜே சொல்ல வைக்கிறது . 
பெரும்பாலான காட்சிகளில் கோர முகத்துடன் எவ்வளவு ஆட்கள் ! இவர்களையெல்லாம் கட்டிக்காத்து காட்சிகளை எடுத்த உழைப்புக்கே இந்த யூனிட்டைக் கொண்டாடலாம் .
இமானின் இசையில் முன்னாள் காதலி பாடல் ஒகே . மிருதன் பாடல் மனசுக்குள் பூக்குவியலாக உட்காருகிறது  பின்னணி இசை சில பல காட்சிகளில் ஒப்பேற்றலாகவும் சில காட்சிகளில் நன்றாகவும் இருக்கிறது . 
வெங்கடேஷின் ஒளிப்பதிவும் கணிப்பொறி  வரைகலையும் சேர்ந்து காட்சிகளின் திகிலுக்கு உதவி பலம் சேர்க்கின்றன . 
ravi 1
மிக மெல்லிய லைன் திரைக்கதையை,  பார்வைக்கு மதிப்புக் கூட்டி தருவதில் வெங்கட் ரமணனின் படத்தொகுப்பு சிறப்பாக செயல்பட்டுள்ளது . கணேஷ் குமாரின் சண்டைப் பயிற்சியும் பாரட்டுக்குரியதே. 
இன்றைய நிலையில் எதாவது வித்தியாசமாக ரசிகர்கள் எதிர்பார்ற்கும் சூழலில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து இருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.
ஆனால் அதை முடிந்தவரை பிரம்மாதமாக சொல்வதுதானே முக்கியம் . அதுதான் குறைகிறது . 
மிருதன் ஒரு முழுமையான பக்கவான ஸோம்பி வகைப் படம் இல்லை என்றாலும்  அந்த அடையாளம்தான் இந்தப் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது .
இந்த வகைப் படங்களின் மிகப் பெரிய பலமே ஒரு கட்டம் வரை திகில் கூட்டும் அமைதியும்,  எப்போது எங்கே எப்படி கடிக்கப்படுவது நடக்கும் என்ற சஸ்பென்சும்தான் . 
ravi 2
ஆனால் மிருதனில் சோம்பிக்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்து கொண்டே  இருகிறார்கள் . துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிக் கொண்டே இருக்கிறார்கள் .
இரண்டாம் பகுதியில்  நாயகனின்  தங்கை சம்மந்தப்பட்ட  காட்சிகள் வரும்வரை இதுவே மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.
டாக்டர்  சோம்பியின் சஸ்பென்ஸ் உடைபடும் இடமும் பெரிதாகப் பலன் தரவில்லை .
சோம்பி தன்மையில் சென்டிமென்ட்டை கலக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு சும்மா பின்னிப் பெடலேடுத்து பட்டையைக் கிளப்ப வேண்டாமா? 
கடிபட்டு சோம்பி ஆகிற எல்லோருமே உடனே ஏதோ புரோக்ராம் செய்யப்பட ரோபோக்கள் போல ஆகி விடுகிறார்கள் . 
ravi 2
அம்மாவைக் கடிக்கும் மகன் , கணவனைக் கடிக்கும் மனைவி,  காதலனைக் கடிக்கும் காதலி, இப்படி கடிப்பவர்கள் எல்லோரும்  தமக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்து,
முழு சோம்பியாக மாறுவதற்குள் அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுச் சிக்கல்களை விதம் விதமான சூழலில் காட்சியாக்கி , 
அவற்றை எல்லாம் மிஞ்சியதாக நாயகன், நாயகி, தங்கை  இவர்களின் உணர்வு நெகிழ்வுகளை படமாக்கி இருந்தால் இந்தப் படததின் ரேஞ்சே வேறு .
உதாரணமாக டைட்டானிக் படத்தில் எல்லோரும்தான் கடலில் மூழ்கினார்கள். ஆனால் ஒவ்வொரு சிறு கதாபாத்திரத்தின் மரணத்துக்கும் ஒரு சிறிய  கதையும் ,
அதை எல்லாம் மிஞ்சும் விதமாக நாயகன் நாயகிக்கான நிகழ்வுகளும் இருந்தது அல்லவா ? அது போல . 
jeyam ravi 3
தண்ணீரைக் கண்டால் சோம்பி பயப்படும் என்பதும் எப்படிப்பட்ட ஒரு ஏரியா. அதை வைத்து தண்ணீரைப் பயன்படுத்தி விதம் விதமாக காட்சிகளை பண்ணி கைதட்டல் வாங்கிக் குவிக்க வேண்டாமா கண்ணுகளா !
 ஒரு தீயணைப்பு வண்டியின் ஒரு டேங்க் தண்ணியோடு அந்த விசயத்தை  காலியாக்கியது நியாயமா ?
சோம்பி என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் . அதைக் கையாளும் விதத்தில்தான் நம்ப வைத்து மிரட்ட வேண்டும் . அப்படி இருக்க அலை அலையாய் வரும் சோம்பிகளை ,
நாயகன் அச்சு அசல் கோடம்பாக்க  ஹீரோவாக , சுத்தியல் , இரும்புக் குழாய் கொண்டு  எல்லாம் அடித்துக் கொல்வதெல்லாம் ரொம்ப போங்கு ஆட்டம் . 
அதே போல இயக்குனரின் காட்சி இணைத் தொகுப்பு  வசதிக்காகவோ என்னவோ கடிக்க வரும் சோம்பிக்கள்,  பல காட்சிகளில் கடிக்காமல் கழுத்துகளை மோர்ந்து பார்த்துக் கொண்டே  ஜெயம் ரவி சுடும்வரை காத்திருந்து ,
சட்டென்று சுட்ட உடன் பொட்டென்று சாகின்றன . 
இந்த விசயங்களிலும் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .
ravi 1
எனினும் ….
ஜெயம் ரவியின் அட்டகாசமான நடிப்பாலும் …. தமிழின் முதல் சோம்பி வகை படம் என்ற எதிர்பார்ப்பாலும் நிமிர்ந்து நிற்கிறது படம் .
மிருதன் … புதியன். 
மகுடம் சூடும் கலைஞர் 
———————————
ஜெயம் ரவி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →