வெங்கீஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெங்கடேஷ் ராஜா வெளியிட, WTF என்டர்டைன்மென்ட் சார்பில் ரோஹித் ரமேஷ் தயாரிக்க,
ஐஸ்வர்யா ராஜேஷ், சுரேஷ் ரவி, முன்டாசுப்பட்டி முனீஸ் காந்த் ராமதாஸ், ரமேஷ் திலக், யோகி பாபு, தர்புக சிவா, மைம் கோபி , செல்வா ஆகியோர் நடிக்க,
அறிமுக இயக்குனர் புவன் ஆர்.நல்லான் இயக்கி இருக்கும் படம் மோ . மோ என்னமாய் இருக்கிறது என்று சொல்ல வைக்கிறதா ? இல்லை என்னமோ என்று இருக்கிறதா ? பார்க்கலாம் .
சிறு வயது முதல் எதாவது ஏமாற்று வேலை செய்தே சம்பாதிக்கும் சில இளைஞர்கள் ( சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், யோகி பாபு, தர்புக சிவா).
ஒரு நிலையில் மக்களின் பேய் பயத்தைப் பயன்படுத்தி ஏமாற்றி சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள் . பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் குடியிருப்புகளை செய்தித் தாள் மூலம் அறிந்துகொண்டு,
கதாநாயகி ஆகும் கனவிலும் ,தம்பியைப் படிக்க வைக்க பணம் தேவைப்படும் நிலையிலும் உள்ள ஒரு சினிமா துணை நடிகைக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) , சினிமா மேக்கப் மேன் ஒருவர் மூலம் பேய் மேக்கப் போட்டு ,
சம்மந்தப்பட்ட அபார்ட்மென்ட்களில் பேயாக உலவவிட்டு, குடியிருப்பு வாசிகளுக்கு பயத்தை உண்டு பண்ணி , பிறகு பேயோட்டுவது போல நடித்து ஏமாற்றி அதற்கு பணம் பெற்று ஜாலியாக செலவு செய்கிறார்கள் .
ஒரு முறை ஒரு குடியிருப்பில் பேயோட்ட இவர்கள் போடும் திட்டம் அங்கு வசிக்கும் ஒரு பில்டிங் கான்ட்ராக்டருக்கு (செல்வா) தெரிய வர , அவரிடம் கையும் பேய் வேஷமுமாக பிடிபடுகிறார்கள்,
மேற்படி காண்ட்ராக்டர் அந்த பகுதியில் பல வருடமாக இயங்காமல் இருக்கும் ஒரு பாழடைந்த பள்ளிக் கூட கட்டிடத்தை வாங்கி அதை இடித்து விட்டு ஒரு ரெசார்ட் கட்ட விரும்புகிறார்.
ஆனால் அந்தப் பகுதியின் அரசியல்வாதி ஒருவரும் ( மைம் கோபி) அந்த இடத்துக்கு போட்டி போடுகிறார் .
அதே நேரம் பேய் , பிசாசு சம்மந்தப்பட்ட இடங்களை அரசியல்வாதி வாங்க மாட்டார் என்பதை அறிந்த காண்ட்ராக்டர் ,
” இங்கே எங்களை பேயாக நடித்து ஏமாற்ற முயன்றது போல , அந்த பள்ளிக் கூட கட்டிடத்தில் பேய் இருக்கிறது என்று அரசியல்வாதியை நம்ப வைக்க வேண்டும் . நம்ப வைத்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் .
இல்லை என்றால் எங்களை ‘பேய் விரட்டுகிறோம்’ என்ற பெயரில் ஏமாற்ற முயன்ற உங்களை போலீசில் ஒப்படைத்து விடுவேன்” என்கிறார் .
அதன்படியே அரசியல்வாதிக்கு பேய் பயத்தை ஏற்படுத்தும் சில செட்டப்களை பள்ளிக் கட்டிடத்தில் செய்ய , அப்படியே அரசியல்வாதியும் பயந்து ஓட,
பின்னால் வரும் காண்ட்ராக்டர் ‘அடேய் இங்க உண்மையிலேயே பேய் இருக்குடா..” என்று அலற அதன் பிறகு நடக்கும் அதகள ரணகள கலகல நிகழ்வுகளே இந்தப் படம்.
எந்த அழுத்தமும் இல்லாமல் ஜஸ்ட் ஜாலியாக படத்தை துவக்கி நகர்த்துகிறார் இயக்குனர் புவன் நல்லான் .
மிரட்டல் கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் என்று போகும் படம் போகப் போக பயம் காமெடி இரண்டின் டோசேஜையும் ஏற்றிக் கண்டே போவதில் தப்பிக்கிறது .
கிறிஸ்தவ மத போதக நிகழ்வுகளை ஆரம்பத்தில் கிண்டல் செய்து விட்டு பின்னர் அதற்கு பாவமன்னிப்பு கேட்பது காட்சிகளை வைத்து இருப்பது கில்லாடித்தனம் .
பயம் நகைச்சுவை என்று மாறி மாறி கொடுப்பதில் கவனம் கவர்கிறது படம் .
தான் செத்துப் போனதற்கு பேய் சொல்லும் காரணமும் அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளின் குணாதிசயமும் தமிழுக்கு புதுசு மட்டுமல்ல , வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறது .
படத்தில் வரும் எல்லா நடிக நடிகையருமே திரைக்கதைக்குப் பொருத்தமாக நடித்துள்ளனர் .
ஐஸ்வர்யா ராஜேஷ் , முனீஸ் காந்த் போன்றவர்கள் பேய் மேக்கப்பில் பயப்படவும் சிரிக்கவும் வைக்கிறார்கள் . ஒலி வடிவமைப்பு ரொம்பவே சிறப்பு .
படம் போவதே தெரியாத அளவுக்கு மிரட்டலும் நகைச்சுவையும் மாறி மாறி தந்த வகையில் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தருகிறது மோ
மொத்தத்தில் மோ …. கலகல ப்ளஸ் லகலக