மூக்குத்தி அம்மன் 2 @ விமர்சனம்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் ,அவ்னி பிக்சர்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர், ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் ஆகியோர் தயாரிக்க, 

நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா , ஊர்வசி, குஷ்பூ, சினேகா, யோகிபாபு, அபிநயா, ராமச்சந்திர ராஜு, சுனில், இனியா , மைனா நந்தினி நடிப்பில் வெங்கட்ராகவனோடு சேர்ந்து எழுதி , சுந்தர் சி இயக்கி இருக்கும் படம். 
 
 போலீஸ் கான்ஸ்டபிள்  ஒருவருக்கு (நயன்தாரா) தூங்கும்போது கெட்ட கனவுகளாக வருகிறது. குதிரையில் ஒரு அமானுஷ்ய உருவம் வருவது , ஒரு குதிரைப் படையே வருவது போன்ற ஒலிகள்  நிஜத்திலும்  கேட்கிறது . 
 
அம்மாவிடம் (ஊர்வசி) சொல்லி அவள் நம்பாத நிலையில் , ஒரு நிலையில் அம்மாவுக்கும் அதே சப்தங்கள் கேட்கிறது. அமானுஷ்ய  உருவங்கள் தெரிய ஆரம்பிக்கிறது. 
 
தவிர மைலாஞ்சி என்ற ஊருக்கு போ என்று குரல்கள் கேட்கிறது. அந்த ஊர் எங்கே இருக்கிறது என்றே  அவர்களுக்கு தெரியவில்லை. 
 
தீய சக்திகளை ஏவி ஆட்களைக் கொன்று , கொலை செய்ய சொன்னவர்களிடம் இருந்து கோடிகோடியாக சம்பாதிக்கும் மந்திரவாதி ஒருவரின் ( ராமச்சந்திர ராஜு) மகன் (நிதின் சத்யா) , அப்படி ஒரு நபருக்காக  ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முயல., மேற்படி பயந்தாங்குளி கான்ஸ்டபிளின்  உடலுக்குள்  ஒரு சக்தி வந்து அவனைக்  கொன்று குழந்தையை காப்பாற்றுகிறார். 
 
அவளுக்கு புரமோஷன் கிடைக்கும் சமயத்தில் மைலாஞ்சி  ஊர் பற்றி அவளுக்கு தெரியவருகிறது. 
 
பணி மாறுதல் பெற்று அம்மாவோடு அங்கே போய் பணியில் சேர்கிறார் கான்ஸ்டபிள். 
 
அங்குள்ள  கோவிலில் தெய்வாம்சமாக அமர்ந்து இருக்கும் இரு பெண்கள் (குஷ்பூ, ஸ்னேஹா) கான்ஸ்டபிளை வரவேற்கின்றனர். ‘நீ எப்போது அழைத்தாலும் உதவிக்கு வருவோம்’  என்று சொல்கின்றனர். 
 
அந்த ஊரில்   பேய்மலை  என்ற பெயரில் இருக்கும் ஒரு குன்றில் தீய சக்திகள் இருப்பதாக மக்கள் சொல்கின்றனர். 
 
மகனை இழந்த மந்திரவாதி,  கான்ஸ்டபிளை கொல்ல  அங்கு வருகிறான் .
 
கான்ஸ்டபிளால்  பாதிக்கப்பட்ட  இன்னொரு நபர் ( சுனில்), மைலாஞ்சியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக புதை குழியில் இருக்கும்  சூனியக்காரியை  (ரெஜினா கசாண்ட்ரா )   புதை குழியில் இருந்து எழுப்புகிறான். 
 
ஜெயிலில் இருக்கும் அரசியல்வாதி ஒருவரின் ( பழ. கருப்பையா)  மகனை ( துனியா விஜய்)  தனது இரண்டாயிரம் ஆண்டு கணவன் என்கிறாள் சூனியக்காரி 
 
சூனியக்காரி பழி வாங்க வந்திருப்பது பெண் கான்ஸ்டபிளை என்பது புரிகிறது. ஏனென்றால் அந்த கான்ஸ்டபிள்தான் மூக்குத்தி அம்மன் 
 
காரணம் ?
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வளநாட்டை ஆண்ட அரசனின் மகன்தான் இப்போது அரசியல்வாதி மகனாக இருப்பவன் . அந்தப் பிறவியில் அவன்  சூனியக்காரியின் அழகில் மயங்கி அவளோடு வாழ, அது பிடிக்காத மன்னன்  தனது மகளின் (அபிநயா)  குழந்தையை  அரசனாக்க முடிவு செய்கிறான் .
 
ஆனால் சூனியக்காரியின் வயிற்றில் வளரும் தனது வாரிசுதான் மன்னனாக வேண்டும் என்று  சூனியக்காரி ஆசைப்பட அவளது கணவன்,  தனது தந்தையாகிய அரசனையும் தங்கையையும் தங்கையின்  கணவரையும் கொன்று விடுகிறான். 
 
காப்பாற்றப்பட்டு ஒரு குயவர் வீட்டில் வளரும்  மழலை சிறுவனை ,  சூனியக்காரியும் அவளது கணவனும் கொல்ல முயல , அந்தக் குழந்தையை காப்பாற்றும் மூக்குத்தி அம்மன் இருவரையும் கொல்ல, 
 
சூனியக்காரி மட்டும் மண்ணுக்குள் புதைந்து போகிறாள்.அப்போது சூனியக்காரியின் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து போக, மூக்குத்தி அம்மன் குற்ற  உணர்ச்சியில் கோவிலை விட்டுப்  போய்விடுகிறாள்.
 
இப்போது மண்ணில் புதைந்த சூனியக்காரி வெளியே வர, மந்திரி மகன் முற்பிறவி விஷயங்களை அறிய, கான்ஸ்டபிளாக இருக்கும் மூக்குத்தி அம்மன் மைலாஞ்சிக்கு வந்திருக்க, 
 
சூனியக்காரி, அவளது கணவனாகிய  மந்திரி மகன்,  மந்திரவாதி… இவர்கள்  மூவரும் சேர்ந்து மூக்குத்தி அம்மனை வென்று, மேலும்  , நரபலிகள் கொடுத்து மரணம் இல்லா  ஆயுளும் மாபெரும் சக்திகளும் பெற முயல, நடந்தது என்ன என்பதே மூக்குத்தி அம்மன் 2 
 
இதே தயாரிப்பளார் ஐசரி கணேஷ் தயாரிக்க இதே நயன்தாரா மற்றும் ஊர்வசி  நடிக்க ஆர் ஜெ பாலாஜியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் முதல் படம் 2020 ஆம் ஆண்டு வந்தது.
 
மற்றபடி இரண்டு படத்துக்கும் சம்மந்தம் இல்லை. 
 
கான்ஸ்டபிளாக இயல்பாக அறிமுகம் ஆகும் நயன்தாரா சப்தங்கள் கேட்டு   பயப்படுவது,ஊர்வசியும் அதில் சேர்வது என்று…  இயல்பாக படம் துவங்குகிறது .
 
நரபலிக்கு முயலும் காட்சிகள், நடக்கும் சம்பவங்கள் , என்று பரபரப்பாக படம் போகிறது. மைலாஞ்சிக்கு அழைக்கும் குரல் ஆர்வம் தூண்டுகிறது. யோகிபாபுவின் அறிமுகக் காட்சி காமெடியும் சிறப்பு. 
 
சூனியக்காரி மீண்டும்  எழும் காட்சி திரில். அந்தக் காட்சிகள்   கலை பொருட்கள்,  சி ஜி மற்றும் ஏ ஐ என்று எல்லாவகையிலும் சிறப்பாக இருந்தது. 
 
ஒரு பக்கம் மந்திரவாதியின் பூஜைகள், இன்னொரு பக்கம் சூனியக்காரி அவள் கணவனின் ஆக்ரோஷ காத்திருப்பு , கான்ஸ்டபிள் அவர்களிடம் மாட்டுவது  எல்லாம் பரபரப்பு. 
 
ஒரு மண் மேட்டில் கான்ஸ்டபிளாக உட்காரும் நயன்தாரா,  மழை பெய்து மண் கரைந்து சிங்க வாகனத்தில் உட்கார்ந்து இருக்கும் மூக்குத்தி அம்மனாக வெளிப்படும் காட்சியும் சிறப்பு. 
 
வளநாட்டு அரசன் கதை, சூனியக்காரி பூஜை செய்யும் சாத்தான் சிலை, விதமான மாய மந்திர ஆயுத்தங்களோடு மோதும் காட்சிகள் எல்லாமே ரகளை.   
 
ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போகிறார் நயன்தாரா. 
 
மிக அட்டகாசமாக பிரம்மாதமாக நடித்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா. தோற்றம் , உடல்   மொழிகள்  யாவும் அபாரம்.
 
ஊர்வசிக்கு வழக்கமான கேரக்டர்தான். 
 
மூக்குத்தி அம்மனுக்கு உதவ வரும் இரண்டு  தேவியர்களாக குஷ்பூவும் ஸ்னேஹாவும்  அசத்துகிறார்கள்.  இருவரும் ஆடும் நடனப் பாட்டும் கிளைமாக்சில் உண்டு. அதில் சினேகா பட்டையைக் கிளப்புகிறார்  
 
பின்னணி இசை பாடல் இசை இரண்டிலும்  உருவேற்றுகிறார். ஹிப் ஹாப் ஆதி. 
 
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. அரங்க அமைப்பு,  கலை இயக்கம் , சில பல இடங்களில் கணினி வரைகலை  வண்ணங்கள்  கவர்கினறன் 
 
நயன்தாரா தான்மூக்குத்தி அம்மன் என்பது படம் துவங்குவதற்கு முன்பே எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது படத்தில்  வருவதற்கு இடைவேளை வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது 
 
இரண்டாம் பகுதியில்  டோஸ் அதிகம் ஆகிறது. தெலுங்கு, கன்னட ரசிகர்களையும் குறிவைத்து  இருக்கிறார்கள். அதனால்தான் படத்தின் முதன்மையான ஆண் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் துனியா விஜய்  நடித்துள்ளார் 
 
 முதல் பாதியில் சிறப்பாக இருந்த பல விஷயங்கள் பலவீனமாகின்றன . 
 
பிளாஷ்பேக் கதை இழுக்கிறது.  இதனால் பென்னி ஆலிவரின் எடிட்டிங்கும்  பலன் தரவில்லை. தெலுங்கு கன்னடத்தையும் குறிவைத்து படத்தை   எடுத்து இருக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு வரும் காமெடி காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றன.படத்தின் முதன்மையான ஆண் கதாபாத்திரத்தில் துனியா விஜய் என்ற கன்னட நடிகர் இருப்பது அதையே உணர்த்துகிறது .
 
சரியாக  சொல்ல வேண்டும் என்றால் தொண்ணூறுகளில் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்த – ராம நாராயணன் எடுத்த ஆடிவெள்ளி , தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா எடுத்து தமிழிலும் பட்டையைக் கிளப்பிய அம்மன்.. இவை  போன்ற ஒரு படத்தை (கடைசிக் காட்சியைப் பார்க்கும்போது ரம்யா கிருஷ்ணன் எல்லாம் ஞாபகம் வருகிறார்.)   கொடுத்து இருக்கிறார் சுந்தர் சி . 
 
அந்தப் படங்களை ரசித்தவர்களுக்கு இந்தப் படமும் பிடிக்கும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *