ராமாயணா பகுதி 1 @ விமர்சனம்  

பிரைம் ஃ போகஸ் ஸ்டுடியோஸ் , மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் மற்றும் டி என் ஜி சார்பில் நமித் மல்கோத்ரா மற்றும் நடிகர் யாஷ் தயாரிக்க, 

ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, சன்னி தியோல் நடிப்பில் வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் (?),  ஸ்ரீதர் ராகவனோடு சேர்ந்து திரைக்கதை எழுதி, ஷ்ரேயஸ் ஜெயினோடு சேர்ந்து வசனம் எழுதி , நித்தீஷ் திவாரி இயக்கி இருக்கும் படம்
 
இந்தப் படத்தின்படி, 
 
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையேயான தொடர் போரில், அசுரப்படைகளுக்கு தலைமை தாங்கி வரும் கைகஷி என்ற அரக்கி (ஷோபனா)தேவர்களை துன்புறுத்த , 
 
அவர்களைக் காப்பாற்ற மகா விஷ்ணுவின் மகன் இந்திர தேவன்  , பறக்கும் வெள்ளை யானையான ஐராவதத்தில் வந்து அரக்கப்படைகளை அழிக்கிறான். கைக்ஷியை கிண்டல் செய்து  உயிர்ப்பிச்சை அளிக்கிறான். 
 
கைகஷி விஷ்ரவ முனிவரை மணக்கிறார். (கைகஷியின் ரெண்டு அக்காக்களும் கூட அவருக்கே. ம்ம்ம்..ம்ம்ம்… ). 
 
அவளுக்கு தஷாணனன்  , கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை என்று நான்கு பிள்ளைகள் . சூர்ப்பனகை அழகியல் ஆர்வத்துடனும், கும்பகர்ணன் தூக்கத்தில் ஆர்வத்துடனும் விபீஷணன் நியாயம் நேர்மை என்றும் இருப்பதால், தஷானனை உருவேற்றி தேவர்கள்  குலத்தை அழிக்கும் லட்சியத்தை வளர்க்கிறார் கைகஷி .  
 
தஷாணனன்   (பத்துத் தலைகளைக் கொண்டவன் என்று பொருள்) பிரம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்து ‘ அசுரர்கள், தேவர்கள், தேவர்கள், கின்னரர்கள், கிம்புருவர்கள் , யட்சர்கள், பாதாள லோபிகள் இவர்களோ..  காலமோ,  இயற்கையோ தன்னை அழிக்க முடியாது என்ற மாபெரும் வரத்தை பிரம்மனிடம் இருந்து பெறுகிறான். மனிதர்களால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் மனிதர்களை மட்டும் அந்த லிஸ்டில் அவன் சேர்க்கவில்லை. ,
 
அந்த வரம் தந்த வலுவோடு இலங்கையை ஆண்டு கொண்டிருந்த குபேரனை அடித்து விரட்டி ‘ரா….வணன்’ டா ….என்ற பெயரோடு முடி சூடிக் கொள்கிறான் தஷாணனன்.
 
அதோடு தனக்கு எதிராக ஒரு சக்தி பிறக்கப் போவதை தனது வானியல் சாஸ்திர அறிவால் கண்டு பிடிக்கிறான். கைகஷி கலங்குகிறாள்  
 
அதேபோல் தேவர்கள் முனிவர்கள், முனிபுங்கவர்கள்  வேண்டுதல்படி  மகா விஷ்ணு,  தசரதன் (அருண் கோவில்) –  கௌசல்யா எனப்படும் கோசலை (இந்திரா கிருஷ்ணன்) தம்பதியின்  மூத்த மகனாகப்  பிறக்கிறான்   
 
வளர்ந்து வில் வித்தைகள் கற்று இளவரசன் ஆகிறான் ராமன் ( ரன்பீர் கபூர்)
 
தனது  யாகத்துக்கு தடையாக இருந்த தாடகை மற்றும் அவளது மகன் சுபாகு ஆகியோரைக் அழிக்க விரும்பிய விசுவாமித்திரர் (அஜிங்கியா தியோ), அதற்காக ராமனை பயன்படுத்திக் கொள்ள  நினைக்கிறார். தசரதன் மறுக்க,  அவரை மிரட்டி ராமனை அழைத்துப் போகிறார் .
 
ராமன் அவர்களைக்  கொல்கிறான் . சீதை பற்றி அவனுக்குத்  தெரிய வருகிறது 
 
விஸ்வாமித்திரரின் ஆசியோடு பினாகம் என்ற வில்லை (நமக்கு தெரிந்த பெயர் சிவதனுசு) உடைத்து சீதையை (நம்ம சாய் பல்லவி) மணக்கிறான் ராமன். 
 
ராமனுக்கு முடி சூடும் காலம் வர,  மந்தாரை எனப்படும் கூனியின் (ஷீபா  சத்தா) ஆலோசனைப்படி, தன் மகன் பரதனுக்கு (ஆதிநாத் கோத்தாரே) முடி சூட்ட விரும்பும்  கைகேயி (லாரா தத்தா) , ராமனை காட்டுக்குப் போகச் சொல்கிறாள். 
 
 ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி என்று அவளும் உடன்  போக, கூடவே போகிறான் தம்பி லட்சுமணன் ( ரவி துபே)
 
காட்டுக்குள் மூவரும் வசிக்க , பரதன் அங்கு வந்து நாட்டுக்கு அழைக்க,  அவனை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு, அயோத்தி எல்லையை விட்டே வெளியேறி  ராவண ராஜ்ஜியத்துக்குள் நுழைகிறார்கள் 
 
ராவணனின் அரக்க வம்சத்தோடு பகை கொண்ட காலகேய வம்சத்தை சேர்ந்த ( ராஜா மவுலி ஞாபகம் வருகிறாரா? லல்லல்ல சச்சச்ச .. பர்ர்ர்ர.. ய்யய்யய்ய….)   வித்யுத்ஜிவன் என்ற அரக்கனை ( விவேக் ஓபராய்) காதலித்து மணக்கிறாள் ராவணனின்  சூர்ப்பனகை ( ராகுல் பிரீத் சிங் ) 
 
ராவணன் வித்யுதஜிவனை கொன்று விட , தங்கை சூர்ப்பனகையை தேற்றும் இராவணன், ” நீ யாரை விரும்புகிறாயோ அவனை திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று சொல்லி, அவள் மன ஆறுதல் பெறுவதற்காக,  தனது ஆளுகைக்கு உட்பட்ட ஜனஸ்தானம் என்ற நாட்டின் இளவரசியாக்கி, தனது மாற்றாந்தாய்  மகன்களான  கரண், தூஷணன் என்ற அரக்க அரசர்களின் பாதுகாப்போடு வாழச் செய்கிறான். 
 
ராமன், சீதை, லக்ஷ்மணன் வசிக்கும் பஞ்சவடி ஆசிரமம் அங்குதான் இருக்கிறது. . அங்கே ராமனை பார்க்கும் சூர்ப்பனகை அவன் மேல் காதல் கொள்கிறாள். மறுக்கும் ராமனிடம்  சீதை போன்ற உருவத்தில் சூர்ப்பனகை உரையாட, அதை அறிந்த லட்சுமணன் அவள் மூக்கை அறுக்கிறான். 
 
லட்சுமணனின் இந்த இழிசெயலால் வஞ்சம் கொள்ளும் சூர்ப்பனகை இராவணனைத்  தூண்டி விட, பஞ்சவடிக்கு வருகிறான் இராவணன் .  மாரீசன்  (இவனும் தாடகையின் மகன்தான்) என்ற அரக்கன்(சவுரவ் சச்தேவா ) மான் வடிவம் எடுத்து வர, சீதை மயங்க, ராமன் லக்ஷ்மணன் மானை தேடிப்  போக, 
 
இராவணன் புஷ்பக விமானத்தில்  சீதையைத் தூக்கிப் போக, ஜடாயு (குரல் நடிப்பு : அனுபம் கேர்) ராவணனோடு போரிட,  போரில் ஜடாயுவை கொல்லும் ராவணன் சீதையோடு போய்விட,  ஜடாயுவின் சிதைக்கு தீ மூட்டி விட்டு, ராவணனை கொன்று மனைவியை மீட்பேன் என்று ராமன் சபதம் போடுவதோடு முடிகிறது,  இந்த ராமாயணம் பாகம் 1 
 
ராமாயணம் என்றாலே நமக்கு பெஸ்ட் 1958 ஆம் ஆண்டு தமிழில்  வெளிவந்த சம்பூர்ண ராமாயணம் படம்தான். . என் டி ராமராவ் ராமனாக பத்மினி சீதையாக நடித்த அந்தப் படம் , பரதனாக சிவாஜி நடித்த நடிப்புக்காகவே சூப்பர் ஹிட் ஆனது ஆச்சர்ய சாதனை  . 
 
படம் முழுக்க எல்லோரும் அரை மயக்கத்தில் இருப்பது போல, ”நாதா..சுவாமி” என்று பேசிக்கொண்டிருக்க படம் பார்ப்பவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருப்பார்கள். திடீரென ஆவேசத்துடன் வரும் சிவாஜி நம் போன்ற மனிதர்கள் பாணியில் , ” தாயே .. இது நியாயமா? தர்மமா?…” என்று பொங்கி எழுந்து குமுறும்போது,தூங்கி கொண்டிருந்த  எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு  எழுந்து படத்தைப் பார்ப்பார்கள்.. சிவாஜி போய்விட மீண்டும் தூக்கம்.. அப்புறம் சிவாஜி வரும்போது மீண்டும் முழிப்பு …இப்படியே மூன்றரை மணி நேரம் ஓடும் படம் அது. (இந்த புதிய  படம் மூன்றே கால் மணி நேரம்தான்)
 
 வட இந்தியர்களை பொறுத்தவரை ராமாயணத்தில்  பெஸ்ட் எது என்றால் ராமானந்த சாகர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வந்து இந்தியாவையே  கொண்டாட வைத்த ராமாயணம் டிவி  சீரியல்தான். “இந்த சீரியல் இவ்வளவு சிறப்பாக வர காரணம் தமிழில் இருக்கும் கம்பராமாயணம்தான். ” என்று சொன்னவர் ராமணந்தசாகர். மனிதர் நிஜமாகவே புத்திசாலி. .(அதில் ராமனாக நடித்த அருண் கோவில் தான் இந்தப் படத்தில் தசரதனாக புரமோஷன் ஆகி இருக்கிறார் )
 
இந்த ராமாயணா பாகம் 1   எந்த ரகம்?
 
பக்தியாகவோ அல்லது  இலக்கியமாகவோ ராமாயணம் எப்போதுமே ஈர்ப்புக்கு உரிய காவியம். (அதுவும் கம்பனுக்கு எல்லாம்  நாத்திக ரசிகர்களே ஏராளம் ) படத்தின் முதல் பலம் அதுவே. 
 
பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறார்கள். 
 
கைகஷி – இந்திர தேவன் சண்டை அவதார் போன்ற படங்களை நினைவு படுத்தியது.
 
தஷாணனன் தவம், ராவண அறிமுகம் அபாரமாக எடுக்கப்பட்டிருக்கிறது . தாடகை , சுபாகுவை ராமன் கொல்வது, ஜனஸ்தானக் காட்டில் சூர்ப்பனகையின் அரக்கர்களை ராமன் அழிப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் பிரம்மிக்குரியது. அருமை.
 
அவள் உங்களை நேசிக்கிறாள்  என்று சூர்ப்பனகை பற்றி சீதை சொல்லும் இடம் ரகளை. 
 
லட்சுமணனை கொஞ்சம் குறும்பாக லைட் காமெடியாக பயன்படுத்திய விதமும் ரசிக்க வைக்கிறது. 
 
ராவணனின் புஷ்பக விமானத்தை இந்தப் படத்தில் காட்டியது மாதிரி  இதுவரை எதிலுமே காட்டியது இல்லை. கிரேட் கிரேட்.கிரேட். அங்கே ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் நடக்கும் சண்டை வாய் பிளக்க வைக்கிறது. படத்தின்  பிரம்மாண்டமான காட்சி அதுதான். 
 
ராவணனின் பத்துத் தலை என்பதை பத்து வெவ்வேறு கருத்துள்ள தனித்தனி உருவங்களாக காட்டி பின்னர் பத்து தலையையும் இணைப்பது அட்டகாசமான கிரியேட்டிவ் டைரக்ஷன் 
 
எல்லாவற்றையும் விட பிரம்மாதமான விஷயம் படத்தில் எல்லா நடிகர்களும் தமிழ் பேசுகிறார்கள்.அவர்கள் உதட்டசைவுகள் தமிழ் வார்தைகளாகவே  இருக்கிறது.  எல்லோருமே தமிழில் பேசினார்களோ ? அதுதான் இல்லை. 
 
எல்லா வசனங்களையும் எழுதி , அதை செயற்கை நுண்ணறிவு மூலம் நடிக நடிகையரின் உதட்டசைவுகளாக மாற்றி அப்புறம் அதற்கேற்ப நடிக நடிகையரை பின்னணி குரல் பேச வைத்து இருக்கிறார்கள் சாய் பல்லவி அப்படியே பேசி இருக்கிறார்.
 
இந்த தொழில் நுட்பம இனி ஒரு மொழிப் படத்துக்கு இன்னொரு மொழியில் உதட்டசைவுக்கு பொருத்தமாக வசனம் எழுதுவதில் உள்ள சிக்கல்களைக் குறைக்கும் (அல்லது செலவை அதிகரிக்கலாம்)
 
படத்தில் தெய்வீகத்தன்மையை விட சாகசத்தன்மையே அதிகம் என்பதால் ஹேன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ ஆர் ரகுமான் இசைத்து இருக்கும் இசையும் அப்படியே இருக்கிறது.பாடல்களில் ஏ ஆர் ரகுமான் ஸ்டைல். பின்னணி இசையில் ஹேன்ஸ்  ஜிம்மர் பங்களிப்பு இருக்கும் போல. 
 
பங்கஜ் குமார், மகேஷ் லிமாயி இருவரின் ஒளிப்பதிவு,   அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு வீச்சு, வி எஃப் எக்ஸ், ஒளி வடிவு, இந்த காம்போ அசத்துகிறது .
 
சாகச மாய தந்திரக்காட்சிகளை அடுத்து வரும் காட்சிகளில் (குறிப்பாக இரண்டாம் பகுதியில் ) எடிட்டர்  ஹபீஸா லோகன்ட்வாலா, இன்னும் கொஞ்சம் கச்சிதமாக அம்பு விட்டிருக்கலாம்  
 
படத்தில் ராமனை தூக்கி சாப்பிடுகிறார் ராவணனாக நடிக்கும் யாஷ். மனிதர் கெட்டப்களில் அசத்துகிறார். 
 
வடக்கத்திய ராமனை அப்படியே பிரதிபலிக்கிறார் ரன்பீர் கபூர். கேரக்டருக்கு பொருத்தம்  ஒரு காட்சியில் பரசுராமராகவும் அவரே வருகிறார். 
 
வழக்கமான கொழு கொழு மைதா மாவு கன்னம் கொண்ட பெண்களை சீதையாக பார்த்த கண்களுக்கு சாய் பல்லவி கொஞ்ச நேரம் கழித்தே செட்  ஆவார். 
 
ஆனால் ‘எந்த மொழி என்றால் என்ன  எந்த கதை என்றால் என்ன? தனது குட்டி குட்டி கியூட் எக்ஸ்பிரஷன்களால்  அசத்துகிறார் சாய் பல்லவி  மற்றவர்கள் எல்லோரும் உடலால் நடிக்க, உணர்வால் நடிக்கிறார் சாய் பல்லவி. மற்றவர்கள்  கஷ்டப்பட்டும்  கொண்டு வர முடியாத தெய்வீகத்தன்மையை ஜஸ்ட் லைக் தட் கொண்டு வருகிறார் சாய் பல்லவி. 
 
முதல் பாகத்துக்கான  நிறுத்தமும் சிறப்பான இடம் … 
 
இப்படி பாமரப் பார்வைக்கு ஓகே என்றாலும்  பல அழகான விஷயங்களை மிஸ் செய்திருக்கிறது இந்தப்படம் . காரணம் வடக்கத்திய – தமிழ் விரோத வீம்போடு-  வால்மீகி ராமாயணத்தையே அதிகம் பயன்படுத்தி இருப்பதுதான்  
 
உண்மையில் கம்பன் இல்லாவிட்டால்  ராமன் கடவுளே இல்லை. 
 
ராமாயணத்தை தமிழில் எழுத வேண்டிய சூழல் வந்தபோது , ராமனுக்கு   தலைசிறந்த தமிழ் அரசர்களின் பண்புகளை கம்பன் ஏற்றினான். தமிழ் இனத்த்தின் மாண்புகளை உள்ளே கொண்டு வந்தான். (உண்மையான வான்மீகி ராமாயணப்படி ராமன் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதுதான் முடிவு.)  
 
கம்பனின் தரக்கூட்டலுக்குப் பிறகு ராமாயணம்  வடக்கே போனபோது, ” இப்படி இருக்கும் ஒருவன் மனிதன் இல்லை; கடவுள்” என்றார்கள் அவர்கள்  . “இல்லை இல்லை . எங்கள் மன்னர்களே இப்படிதான்” என்றான் கம்பன் . “நஹீ நஹீ .. இப்படியுள்ளவன் கடவுள்” என்றார்கள் அவர்கள் . அப்படித்தான் ராமன் கடவுள் ஆனான் 
 
அப்படி இருக்க  கம்பனை புறக்கணித்து இருப்பதால் நமக்கு   தெரிந்த உயர்தர ராமன்,  ராவணன், சீதை,யாருமே படத்தில் இல்லை 
 
ராவணன் அரசனாக ஆகும் காட்சியிலும் , புஷபக விமான வடிவமைப்பிலும்   கம்பனை பயன்படுத்தி இருக்கிறார்கள் . பரசுராமர் சந்திப்பும் அப்படியே. பெண்மையை உயர்த்திப் பிடிக்கும் காட்சிகளும் அப்படியே.
 
மற்றபடி கம்பனை  புறக்கணித்த காரணத்தால் நிறைய அற்புதங்களை இழந்திருக்கிறது  இந்தப் படம். 
 
ராமன் வில்லொடிக்கும் காட்சியில் “எடுத்தது கண்டார் ; இற்றது கேட்டார் ” என்பான் கம்பன் . அதாவது ராமன் வில்லை எடுத்ததை எல்லோரும் கண்டார்கள். அடுத்த நொடி,  ஃபாஸ்ட் கட்டிங்கில் வில்… ஜஸ்ட்   உடைந்து எல்லாம் இல்லை….  அப்படியே இற்றுப் போய் விழுந்தது என்கிறான் கம்பன். 
 
இதுதான்யா  சூப்பர் ஹீரோயிசம். இதனால் எல்லாம் தான் ராமன் கடவுள் ஆனான். 
 
உலக இலக்கிய வரலாற்றில் மாபெரும் ஸ்கிரிப்ட் ரைட்டர்களில் ஒருவன் கம்பன் (மற்ற இருவர் ஹோமர் மற்றும் வியாசர்) ஆனால் வான்மீகி ராமாயணத்தை பின்பற்றும்  இந்தப் படத்தில் வில்லை வைத்துக் கொண்டு ராமன்  சும்மா பூச்சி பிடித்துக் கொண்டு நிற்கிறான். 
 
ராமன் திருமணத்தின் போது “கூடிநிற்  பெண்டிர் எல்லாம் கோசலை மனதை ஒத்தார் ” என்பான் கம்பன். அதாவது ராமன் தாலி கட்டும்போது அங்கு இருந்த எல்லா பெண்களும் ராமனது அம்மா கோசலையின் மன நிலையில் இருந்து ராமன் சீதையை வாழ்த்தினார்கள் என்று பொருள். (இந்த மன ஒற்றுமையை பல இடங்களில் கம்பன் பயன்படுத்தி இருப்பார்) . அதை அப்படியே ஒரு ஷாட்டில் அங்கு இருக்கும் எல்லா பெண்களையும் கோசலையின் முகத்தோடு காட்டி பின் இயல்புக்கு கொண்டு வந்திருந்தால், இப்போதைய தொழில் நுட்பத்தில் அது எப்படி இருந்திருக்கும்?  ஆனால்  இது ராமன் கல்யாணம் போலவே இல்லை பூணூல் கல்யாணம் போல எடுத்து இருக்கிறார்கள். 
 
ஒரு காட்சியில் சீதை ராமனிடம் வேறு திருமணம் செய்து கொள்ளச் சொல்லும்போது, ” இன்னொரு பெண்ணை நான் ஒரு நாளும் மணக்க மாட்டேன்” என்கிறான் ராமன்.
 
 சுத்தப் பொய். 
 
ராமன் என்பவன் மஹாவிஷ்ணுவின் ஓர் அவதாரம். மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரம் கண்ணன். கண்ணனும் ராமனும் ஒன்றுதான் .  ஆனால் கண்ணன்  பல  பெண்களோடு உறவாடியவன் .   அப்படி இருக்க கண்ணனாகவும் இருந்த ராமன்  சீதையிடம்  ‘ இன்னொரு பெண்ணை நான் ஒரு நாளும் மணக்க மாட்டேன்” என்று சொல்வது பொய். 
 
ஆக, பொய்யே சொல்லாதவன் என்று சொல்லப்படும் ராமன் சீதையிடம் பொய் சொல்கிறான். இது எப்படி சரி? இப்படியாக  ராமன் கேரக்டரை கேரக்டர் அஸாஸினேஷன் செய்து வைத்திருப்பார் வான்மீகி . இதைத்தான் இந்தப் படத்தில் காட்டுகிறார்கள். 
 
ஆனால் இந்த தவறை  அட்டகாசமாக சரி செய்து இருப்பான் கம்பன். 
 
சீதையிடம் சொல்லும் ராமன் , ” இந்த இப்பிறவிக்கு   இன்னொரு மாதரை …” என்று சொல்வததாக  மாற்றினான்  கம்பன். இது பெரிய விஷயம் இல்லை. இதோடு முடிக்க கம்பன் என்ன கணக்கு வாத்தியாரா?
 
அடுத்து ஒரு வார்த்தை சேர்ப்பான்..”இந்த இப்பிறவிக்கு இரு மாதரை (இன்னொரு பெண்ணை)… .. சிந்தையாலும் தொடேன் ” என்பான்  
 
அதாவது பொதுவாக வேறு பெண்ணை தொட மாட்டேன் என்றால் ,  மனசில் ஆயிரம் சபலம் இருந்தும் பொண்டாட்டிக்கு பயந்து ஏங்கிக் கொண்டு இருப்பது அல்ல.  நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன் என்று வாக்கு கொடுப்பான் கம்பனின் ராமன் 
 
அந்த “சிந்தையாலும்…” என்ற வார்த்தை  – விவி போல – தோனி  போல – கம்பன் அடித்த இமாலய இலக்கிய சிக்ஸர்.
 
 விவியும்  தோனி னியும் அடித்த  சிக்ஸர்களின்  பந்துகள் காணாமல் போயிருக்கலாம்.ஆனால் கம்பன் அடித்த சிக்சரின் பந்து எண்ணூறு ஆண்டுகள் கடந்தும்  இன்னும் உலக இலக்கிய  வானில் பறந்து கொண்டே இருக்கிறது. 
 
இப்படியாக உலக இலக்கிய வரலாற்றில் முதல் ஸ்கிரிப்ட் டாக்டரும் கம்பன் தான். 
 
கம்பனின் ராமன்  முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான். ஆனால் இந்தப் படத்தில் ராமன் எல்லா சண்டைகளிலும் பின்வாங்கி   பின்வாங்கி ஓடிக் கொண்டே இருக்கிறான்.
 
இரண்டாம் பகுதியில் வரப்போகிற – உலகின் தலைசிறந்த  சோகக் காதல் வசனம் பேசும் வாலி, தாரை போன்ற சிகர கதாபாத்திரங்களை எல்லாம் என்ன பண்ணி வைக்கப் போறாங்களோ என்று நினைத்தால் இப்பவே வயிறு கலக்குது. 
 
அந்தக் காலம் தொட்டு இந்தக்காலம் வரை எல்லா மொழி புராண இதிகாசப் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் வசிஷ்டர் (ஷிஷிர் ஷர்மா ) மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். 
 
ஒரு காட்சியில் ”சாம்பலில் இருந்து உயர்ந்தவன் நான் ” என்கிறான் ராவணன். உயிர்த்தவன் என்று வந்திருக்க வேண்டும். ஏ ஐ  தவறா எழுதியவர் தவறா என்று தெரியவில்லை  
 
கம்பராமாயணமா  ?கம்பனா ? அது யார்? அவர் பெரிய கே  கம்பு வியாபாரியா?  கம்பு தோசை சுட்டுக் கொடுப்பாரா? ஒரு தோசை எவ்வளவு ? என்பவர்களுக்கு (கம்பா? அது என்ன? என்று கேட்பவர்களிடம் எல்லாம்…..) இந்த வான்மீகி ராமாயணம் சிறப்பாக இருக்கும்.
 
ஆனால் கம்ப ராமாயணம் படித்தவர்களுக்கு கஷ்டம்தான். 
 
மொத்தத்தில் ராமாயணா பாகம் 1……. கம்பன் எனும் உயிர்ப்பு  இல்லாத காகிதப்பூ. வாசம் எல்லாம் வேண்டாம் . வண்ணமே போதும் என்றால் நீங்கள் இந்தப் படத்தை  ரசிக்கலாம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *