சீன் (scene ) @ விமர்சனம்

2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் சார்பில் சூர்யா ஜோதிகா , சுஷ்மா ஆகியோர் தயாரிப்பில் சூர்யா, பிரேமலு  மலையாளப் படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லீன், நஸ்ரியா, லால் , ஆனந்தராஜ்   நடிப்பில் மலையாள இயக்குனர் ஜித்து மாதவன்  எழுதி இயக்கியிருக்கும் படம். 
 
அனுபவம் அறிவு திறமை எல்லாம் இருந்தும் ஆணவமிக்க போலீஸ் அதிகாரியாக அறியப்படுபவர் டி எஸ் பி இன்பராஜ் (சூர்யா). அவரது உயர் அதிகாரியே (லால்) அவருக்கு பயப்படுவார். இன்ப ராஜை தாஜா செய்வார். 
 
டிபார்ட்மெண்ட்டில் சிலருக்கு இன்பராஜை  பிடிக்காது. ஆனால் பலருக்கும் அவர் திறமை காரணமாக அவரைப்  பிடிக்கும் . பல கொலைகள் செய்த சைக்கோ கில்லரை (டோவினோ தோமஸ்) கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார் இன்பராஜ்.
 
ராஜினாமா செய்ய விரும்புவதாக பலமுறை இன்பராஜ்  சொல்லியும் உயரதிகாரி  அனுமதி தராமல் இருக்கிறார்.
 
இந்நிலையில் ஒரு டீன் ஏஜ்  இளைஞன் (நஸ்லின்),  ஒரு ஆட்டோ டிரைவர் , ஒரு பெட்டிக்கடை பெண்மணி அடங்கிய குழு சைக்கோ பாணியில்  கொலைகள் செய்கிறது. அந்தக் கொலைகள் யாவும்  இன்பராஜ் கைது செய்த சைக்கோவின் பாணியியேயே இருக்க, ‘இன்பராஜ் உண்மையான கொலையாளியை விட்டு விட்டு,   வேறு ஒருவரை சிறையில் அடைத்து விட்டார் என்று அவரை பிடிக்காத போலீஸ்காரர்கள் அவர் மேல் புகார் தருகிறார்கள். 
 
அதுபற்றி விசாரிக்க, இன்பராஜ் தான் பிடித்த  சைக்கோ கில்லரை  சந்திக்கும் காட்சியில்தான், இன்பராஜுக்கு கொஞ்ச கொஞ்சமாக கண் பார்வை போய்விட்டது என்பதே மற்றவர்களுக்கு தெரிய வருகிறது. அதை மறைக்கத்தான் அவர்  போலீஸ் துறை ஆட்களிடம் கடுமையாக நடந்து கொண்டு,  எப்போதும் எல்லா திசையிலும்   ஏல்லோரையும் ஒரு கை   நீளம் (one arm distance ) தள்ளி நிற்க  சொல்லிக்கொண்டிருந்தார் என்பதும்,அதனால்தான் அவர் பதவி விலக விரும்புவதும் புரிகிறது. 
 
 விஷயம்  தெரிந்த பிறகு இந்த கேஸை விசாரிக்க வேண்டாம் என்று காவல் துறை சொல்லிவிடுகிறது. ஆனால்  வேலையை விடும் இன்பராஜ்,   தான் தனிப்பட்ட முறையில் இந்த கேஸை விசாரிக்க முடிவு செய்கிறார். 
 
விசாரணைக்கு என்று சொல்லாமல், வீட்டு வேலைக்கு என்று சொல்லி தகுதியான உதவியாளர் எடுக்கிறார். கை   நடுக்கம் உள்ள ஒரு பெண் (நஸ்ரியா),  இன்பராஜ் கண் பார்வையற்றவர் என்று அவர்  கண்டுபிடித்து விட்டதால்,  அவரையே வேலைக்கு வைத்துக் கொள்கிறார் இன்பராஜ் 
 
புதிய சைக்கோ கும்பல் பல்வேறு விதங்களில் விளையாட, இன்பராஜ் களம் இறங்குகிறார். 
 
கொலை வழக்குகளை தீர்ப்பதில் வல்லவரும் முன்னாள்  போலீஸ் அதிகாரியும்,  அடிக்கடி  பள்ளி சிறுவன் வயசுக்கு போய் விடும் நினைவிழப்பு நோய் கொண்டவருமான தனது அப்பா (ஆனந்தராஜ்)….
 
 இது போன்ற வழக்குகளை ஆராய்வதில் அனுபவம் கொண்ட முன்னாள் போலீஸ் அதிகாரியும்  குடிப்பழக்கத்துக்கு அடிமையானவருமான தனது அம்மா …
 
உதவியாளினியின்-  போதை மருந்து புழக்கும் – அப்பா.. மற்றும்  டிபார்ட்மெண்ட்டில் தன்னை மதித்த  ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், தன்னை பிடிக்காத ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்கிய படையுடன்  கண்பார்வை இல்லாத இன்பராஜ்  குற்றவாளியைத் தேட, 
 
இன்பராஜுக்கு கண்பார்வை தெரியாத விஷயத்தை அறிந்த புதிய சைக்கோ,  இன்பராஜை கொலை செய்ய அவர் வீட்டுக்கே வர,  என்ன நடந்தது என்பதே இந்த சீன்.
 
ஹாங்காங்கின் நியூ வேவ் இயக்குனர்களில் முக்கியமானவரும் ,குழுவாக சேர்ந்து குற்றம் செய்பவர்கள் பற்றிய  தனது படங்களுக்காக சர்வதேச அளவில் அறியப்படுபவருமான Johnnie To Kei-fung இயக்கத்தில்,  Andy Lau Tak-wah என்ற ஹாங்காங் நடிகர்  ஹீரோவாக நடிக்க, Sammi Cheng Sau-man என்ற சீன நடிகை கதாநாயகியாக நடிக்க, 2013 ஆம் ஆண்டு Cantonese என்ற மொழி படம் Blind Detective. ஸ்பெயின் நாட்டின் 43ஆவது Sitges Film Festival லில் இந்தப் படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்றார்   Andy Lau Tak-wah . 
 
நம்ம  சீன் படம் ஆரம்பிக்கும்  முதல் காட்சியிலேயே   மிக ஸ்டைலான அசத்தலான விட்டேத்தியான மூணாறில் இளம் சைக்கோ  அறிமுகமாகும் காட்சி அந்தக் காட்சியின் அடர்த்தி எல்லாம் அருமை.
 
ஷார்ட்ஸ் டி ஷர்ட்டோடு  கிரைம் பிராஞ்ச் ஆபீசுக்குள் அதிரடியாக சூர்யா   வந்து கலக்கும் ஆரம்பக் காட்சிகள் எல்லாம் மாஸ். 
 
மேலதிகாரி ரூமுக்குள் இன்பராஜ் சிகரெட் பிடிக்க , ஸ்மோக் டிடெக்டர் காரணமாக மழை போல தண்ணீர் பெய்ய , அதே சூழலில் குற்றம்  நடந்த விஷயத்தை சூர்யா விளக்கும் காட்சி வித்தியாசமான அனுபவம் 
 
கண் தெரியாத நிலையில் தான் சுலபமாக இயங்கும்படி  அந்த வீட்டை  இன்பராஜ் வடிவமைத்து இருப்பது ,  பெண் உதவியாளர்  போன் மூலம் கொடுக்கும் ஆணைகள்படியே இன்பராஜ் பொது இடங்களில் இயல்பாக இயங்குவது ,அதில் வரும் சிக்கல்கள், அதை அவர்கள் சமாளிப்பது என்று .. நிஜத்தில்  அவ்வளவாக சாத்தியம் இல்லாத விஷயத்தை எல்லாம் கூட ,  ‘செய்யலாம் போல இருக்கே…’  என்று நம்ப வைக்கும் மேஜிக்கை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் ஜித்து மாதவன். சபாஷ். 
 
கார் எரிவதற்கான கெமிக்கல்  விளக்கம்  உட்பட  பல விஷயங்கள் அருமை. 
 
 குட்டி குட்டி சீன்கள் மூலம் அடர்த்தியான திரைக்கதை கொண்டு வந்திருக்கிறார்கள். 
 
உதாரணமாக அப்பாவின் ஞாபக மறதி, அம்மாவின் குடிப்பழக்கம் , இவை  எல்லாம் தேவையே இல்லை நேரத்தைக் கடத்தத்தான் பயன்படுகிறது என்றாலும் அது ஒரு சுமையாக ஆகாத அளவுக்கு படத்தை பரபரப்பாக கொண்டு போகிறார்கள் .
 
மிக ஸ்டைலான அசத்தலான விட்டேத்தியான கேரக்டரில் மாஸாக நடித்திருக்கிறார் சூர்யா. கண் பார்வை தெரியாதவனாக நடந்து கொள்ளும் விதம் , கோபம் , சோகம் , படபட பேச்சு என்று மிக சிறப்பாக நடித்துள்ளார் இந்தப் படத்துக்காக சூர்யாவுக்கும் கூட விருது தரலாம், 
 
சுஷில் ஷியாமின் இசை  படத்துக்கு மேற்கொண்டு பாப்பரப்பை கொடுக்கிறது .   காட்சியின் சூழலுக்கு ஏற்ப பொருத்தமாக – உறுத்தாத ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினீத் அகஸ்தியன்.
 
படத்தின் வேகத்துக்கு மேலும் எரிபொருள் ஊட்டுகிறது  அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு. 
 
இன்பராஜ் வீட்டை வடிவமைத்த  விதம் ஆர்ட்  டைரக்டருக்கு சபாஷ் போட . வைக்கிறது 
 
இந்தப் படைப்பாளிகள் எல்லாமே  மலையாளிகள் என்பது இருக்கட்டும். ஆனால் சரியான பங்களிப்பை கொடுத்து நம் வாயடைத்து விடுகிறார்கள். 
 
அதேநேரம்  படத்தில்  சூர்யா, ஆனந்தராஜ் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர, ஹீரோயின், வில்லன், உயர் போலீஸ் அதிகாரி  எல்லாரும் மலையாளிகள் . அட.  கரும்புக் காட்டுக்குள்  ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போகும் ஒரு பையன் கதாபாத்திரத்துக்கு கூட மலையாள நடிகர்.  அனேகமாக படப்பிடிப்பில் கூட்டிப் பெருக்கி பொங்கி கழுவி வைக்கும் வேலை கூட அவர்களுக்குத்தான்  கொடுத்து இருப்பார்கள் போலிருக்கிறது.  என்னதான் கெட்டப் போட்டாலும் அவர்கள் பேசும்போது அடிக்கும் மலையாள வாடையை அவர்களால்   நீக்க முடிவதும்   இல்லை. 
 
மலையாள சினிமாக்களில் கேவலமான அருவருப்பான கேரக்டர்களுக்கு மட்டும் பெரும்பாலும் தமிழ்நாட்டு நடிகர்களை மலையாளப் பட உலகினர் அழைக்கும் சூழலில் ,   ஒரு பெரிய நடிகரின் தமிழ்ப்படத்தில்  இப்படி   பல முக்கியக் கேரக்டர்களை டைரக்டர் மலையாளி என்பதற்காக ஒட்டு மொத்தமாக மலையாள நடிகர்களுக்கு நேர்ந்து விடுவது சரியா? 
 
நன்றாக இருந்தாலும் பரவாயில்லை. 
 
வார்த்தைகள் அடைத்தது அடைத்து பேசுவது போல லால் பேசுகிறார் , அதில் மலையாள தோணி வேறு. அவர் பேசுவதும் நடிப்பதும் செயற்கையாக டிராமாவாக இருக்கிறது 
 
நஸ்ரியா அந்த  கேரக்டருக்கு அவ்வளவாக செட்டாகவே இல்லை .அந்த  கேரக்டரில் மட்டும்  இன்னும் பொருத்தமான நடிகை நடித்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
 
நஸ்லினும் அப்படித்தான்.. இளம்வயது குற்றவாளி எனபது சரிதான், ஆனால் ஒன் டூ   ஒன் பைட்தான் கிளைமாக்ஸ் எண்ணும்போது வில்லன் வெயிட்டாக இருக்க வேண்டாமா? இருந்தும் இருந்தும் ஒரு சின்னப் பையனை போட்டு சூர்யா அடிக்கிறாரே என்றுதான்  தோன்றுகிறது. கிளைமாக்ஸுக்கு தேவையான வெயிட் அமையவில்லை, 
 
எனினும் எங்கும் தொய்வடைய விடாமல் இரண்டரை  மணி நேரத்தை 
பரபர என்று ஓட்டிக் கொண்டு போன திரைக்கதை மற்றும் மேக்கிங்கிங்கும் சூர்யாவின் அட்டகாசமான நடிப்பும்  படத்தை தூக்கி நிறுத்துகின்றன 
 
மொத்தத்தில் சீன் ….   இட்லியை விட,   இட்லி உப்புமா நல்லாதானே இருக்கும்.  அதுதானே உலக வழக்கம்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *