பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரிக்க, ரிதன் , கார்த்திக், அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிப்பில் டாக்டர் பிரகபல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் இயக்கியுள்ள படம் “மட்டி”. இங்கே மட்டி என்பது muddy என்ற ஆங்கில வார்த்தை. சேறு , சக்தி, ஈர மண் ஆகியவற்றை குறிக்கும் சொல் இது.
கேரளாவின் மலையும் அடர்ந்த காடுமான பிரதேசத்தில் முறைப்படியும் சட்ட விரோதமாகவும் மரங்களை வெட்டி விற்பனை செய்யும் ஒரு நபருக்கு இருக்கும் நம்பிக்கையான ஊழியன் முத்து ( ரிதன்) . அவனது சித்தி மகன் கார்த்தி (கார்த்திக்) . தம்பி மீது அண்ணன் பாசமாக இருக்கிறான் .
ஆனால் குடும்பச் சண்டை காரணமாக சித்தி, கார்த்தியை அழைத்துக் கொண்டு நகரத்துக்குப் போய் விடுகிறார் . அங்கே கார்த்தி பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, சக மாணவன் டோனிக்கும் கார்த்திக்கும் மோட்டார் பந்தய விசயத்தில் வரும் ஈகோ பெரும் பகையாகிறது . muddy race எனப்படும் மண் சாலை கார்ப்பந்தயத்தில் இருவரும் கலந்து கொள்ள, கார்த்தியின் வண்டியை விதி முறைக்குப் புறம்பாக டோனி சேதம் செய்ய, அதையும் மீறி ஜெயிக்கும் கார்த்தி டோனியின் காலில் காரை ஏற்றி அவனை ஊனமாக்குகிறான் .

இன்னொரு பக்கம் அண்ணன் முத்து மீதும் கோபமாக இருக்கிறான் கார்த்தி . முத்துவின் முதலாளியை சீண்டுவதன் மூலம் முத்துவையும் சீண்டுகிறான் கார்த்தி. ஆனாலும் அமைதி காக்கிறான் முத்து.
குணமான டோனி, மீண்டும் ஒரு மண் சாலை கார்ப்பந்தயத்தில் கார்த்தியை தோற்கடித்து விட்டு பிறகு அவனைக் கொல்ல திட்டமிடுகிறான் கார்த்தி ஜெயித்து விடக் கூடாது என்பதற்காக டோனியின் நண்பன் கார்த்தியைக் கொல்ல முயல்கிறான்.
கார்த்தி ஊனமாகிறான் . ஆனால் பகை கருதாது பாசத்தோடு அண்ணன் முத்து தானே முன்வந்து கார்த்தியைக் காப்பாற்றி , கார்த்திக்கு காரோட்ட , டோனி- கார்த்தி மண் சாலைக் கார்ப்பந்தயம் துவங்குகிறது . முடிவு என்ன என்பதே இந்த மட்டி (muddy) படம்
இந்தியாவின் முதல் மட்டி ரேஸ் படமாக வந்திருக்கிறது இந்தப் படம்
பொதுவில், பலரும் அறியாத மண் சாலைக் கார்ப்பந்தயத்தின் அடிப்படையில் ஓர் ஆக்ஷன் கதை செய்து ஒரு பரபரப்பான படமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் மட்டுமீ பார்க்க முடிந்த பந்தயம் தொடர்பான விஷுவல்களை இந்தியப் படத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
படத்தின் கதை மற்றும் பெயருக்கும் பொருத்தமாக,
மண் அதிர்ந்து சிதற மேளம் அடிக்கும் ஆரம்ப ஷாட்டிலேயே…
இயக்குனராக தனது முத்திரையைப் பதிக்கிறார் இயக்குனர் பிரகபல். அந்த நேர்த்தி கடைசி வரை தொடர்கிறது .

நடிகர் ரிதன் மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பியாக சிறப்பாக நடித்துள்ளனர் . (நிஜத்தில் கார்த்தி அண்ணன், ரிதன் தம்பி, இருவரின் தம்பிதான் இயக்குனர் பிரகபல்) . வில்லனாக நடித்திருப்பவர் கவனிக்க வைக்கிறார். நாயகிக்கு வேலை கம்மி என்றாலும் ரம்மியம்.
மேடு, பள்ளம், சேறு , பாறை , நதி, குட்டை, கப்பி, என்று பல்வேறு இடங்களில் பந்தய ஜீப்கள் பாய்ந்து செல்லும் ஷாட்களை மலைக்க வைக்கும்படி படமாகி இருக்கிறார்கள். ஆற்றுக்குள் முக்கால்வாசி மூழ்கிய நிலையில் சீறிப் பாயும் ஜீப் வாயைப் பிளக்க வைக்கிறது . இதுவரை பார்க்காத பல கோணங்களில் ஷாட்கள் விரிகின்றன .அந்த அளவுக்கு இயக்குனர் பிரகபலும் ஒளிப்பதிவாளர் கே. ஜி. ரதீஷும் பின்னிப் பிணைந்து வேலை பார்த்திருக்கிறார்கள் . பேரு வியப்பு !
இந்தப் படத்தைப் பார்த்த பின் ஜீப் மீது காதலே வருகிறது.
கே. ஜி. எஃப்’ புகழ் ரவி பஸ்ரூர் இசை பரபரப்புக் கூட்டுகிறது .
இது போன்ற ட்ராவல் ஷாட்கள், சைலன்ட் ஷாட்கள் நிறைந்த படத்தின் உயிரே படத் தொகுப்பாளர் கையில்தான் . தனக்குக் கொடுக்கபட்ட அந்த பணியை மிகச் சிறப்பாக செய்து அட்டகாசமான திரை அனுபவத்தைக் கொண்டு வருகிறார் ஷான் லோகேஷ்

அதே போல இது போன்ற ஆக்ஷன் படங்களில் வசனகர்த்தாவை ” அப்படி கொஞ்சம் ஓரமா நில்லுங்க ” என்று சொல்லாமல் சொல்லி விடுவார்கள் . ஆனால் அப்படி நின்று விடாமல் ரசிக்கும்படியான அர்த்தமுள்ள வசனங்களை எழுதி, ‘அட’ போட வைக்கிறார் ஆர் பி பாலா .
படத்தின் முதல் பாதியில் இன்னும் பரபரப்பு இருந்திருக்கலாம். ஆக்ஷன் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளை இப்படி சினிமாத்தனமாக எடுத்து இருப்பதற்குப் பதில் யதார்த்தமாக வாழ்வியலாக எடுத்து இருந்தால் படம் உணர்வு ரீதியாகவும் சிறப்பாக வந்திருக்கும். . அண்ணன் தம்பி உறவு பகை காட்சிகளிலும் இன்னும் அழுத்தம் இருந்திருக்க வேண்டும்
எனினும் படம் முடிந்து வீட்டுக்கு வந்த உடன் தலையோட குளிக்கணும் என்று தோன்றும் .
மட்டி.. மயக்கி இழுக்கும் ஆக்ஷன் விருந்து .