Bamboo Tree Productions சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரிக்க, நடன இயக்குனர் சாண்டி, சுருதி செல்வம், ரேஷ்மா பசுபலேட்டி , ரமா, கவுதம் வாசுதேவ் மேனன், மைம் கோபி, பருத்தி வீரன் சரவணன் நடிப்பில் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கும் படம் 3:33.
அம்மா ( ரமா), செக்ஸ் சைக்கோ கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற அக்கா (ரேஷ்மா பசுபலேட்டி) , அக்கா மகள் ஆகியோரோடு வாழும் இளைஞன் (சாண்டி) ஒருவனுக்கு அவன் காதலி (சுருதி செல்வம்), பிறந்த நாள் பரிசாக – அவன் பிறந்த 3:33 மணிக்கு -தினமும் (இரண்டு முறை ) ஒலி எழுப்பும் கடிகாரம் ஒன்றை பரிசாக அளிக்கிறாள் .
கிறிஸ்தவ மதப்படி கெட்ட எண்ணாக கருதப்படும் அந்த 3:33 முதல் அடுத்து ஒரு நிமிடம் அதாவது 3:34 வரை அவனை ஒவ்வொரு முறையும் தீய சக்திகள் ஆக்கிரமிக்கின்றன . அந்த ஆக்கிரமிப்புகளின் விளைவாக ஒரு நிலையில் அவன், தனது அம்மா, அக்கா, அக்கா மகள் , காதலி ஆகியோரை கொலை செய்யவும் போகிறான் .
காரணம் தேடி அலையும் அவனது குழப்பத்துக்கு வடிகாலாக, ஒரு யூ டியூப் வீடியோவில் ஆவியுலக ஆராய்ச்சியாளர் ஒருவர் ( கவுதம் வாசுதேவ் மேனன்), ” அந்த ஒரு நிமிடம் வீட்டின் கேட் தீய சக்திகளால் பூட்டப்படும் , மனக் கட்டுப்பாட்டோடு இருந்து அந்த ஒரு நிமிடத்துக்குள் சாவியை எடுத்து பூட்டை திறந்து விட்டால் பிரச்னை இல்லை. இல்லாவிட்டால் அந்த ஒரு நிமிடத்தில் செய்யப்படும் கொலைகள் கொடுமைகள் எல்லாம் அப்படியே உண்மையாக நிலைத்து விடும்” என்கிறார் .
அப்படி ஒரு 3:33 இல் அவன் தன் அம்மா. அக்கா, அக்க மகள் மூவரையும் கொன்று விட , அவனால் கேட்டை திறக்க முடிந்ததா ? என்ன ஆச்சு என்பதே இந்த 3:33.
வித்தியாசமான கதை, காட்சிகள் , குறைந்த செலவில் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார் நம்பிக்கை சந்துரு. சதீஷ் மனோகரனின் ஒளிப்பதிவு, தீபக் எஸ் துவாரகநாத்தின் படத் தொகுப்பு சிறப்பு .
ஹர்ஷவர்தன் ரமேஷின் இசையும் ஒகே.
இதயம் கிழிக்கும் அந்த ஆங்காரமாக கிசுகிசுப்பான ”ஹாஆ ஆ ஆ,,,,,” ஒலி அபாரம. மோட்டர் ஓடும் ஓசை உட்பட மொத்தமாகவே ஒலி வடிவமைப்பும் பதிவும் பிரம்மாதம்.
எளிமையான ஆனால் நேர்த்தியான கலை இயக்கமும் சி ஜி காட்சிகளும் பாராட்டுப் பெறுகின்றன.
சாண்டி, சுருதி, ரேஷ்மா, ரமா, சிறுமி உட்பட எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் . பல காட்சிகளில் சாண்டிக்கு ஒன் மேன் ஷோ. சிறப்பாக நடித்துள்ளார்.
இரண்டாம் பாகம் வரப்போகிறது என்று படம் முடிவது ஓகே. ஆனால் முதல் பாகத்தை முடிக்காமல் விட்டால் அடுத்து வருவது இரண்டாம் பாகம் என்று ஆகி விடுமா? கார்த்திக் உனக்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு படத்தை முடிப்பதால் கதை முடியாத உணர்வு. சொல்லப் போனால் இன்டர்வல்லில் வெளியே அனுப்புவது போல இருக்கிறது.
அல்லது அந்தக் கேள்வியை எழுப்பாமலாவது விட்டிருக்க வேண்டும் .
எனினும் 3:33… இழுத்துப் பிடிக்கிறது .
