ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, அருள்நிதி. ரம்யா நம்பீசன் , சிங்கம் புலி நடிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் .
படம் நல்லா இருக்கா ? பார்க்கலாம் .
மது புகை தடைசெய்யப்பட்ட — வயல் வரப்போரத்தில் உள்ள படு சுத்தமான பஸ் ஸ்டாப்பிலும் மின்விசிறி, குடி தண்ணீர், கடிகாரம் பேருந்துகள் கால அட்டவணை , பக்கத்து ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் வரும் கால அட்டவணை எல்லாம் இருக்கிற — பத்து பவுன் தங்கச் சங்கில் நாடு ரோட்டில் கிடந்தாலும் தவற விட்டவர் வந்து எடுக்கும்வரை அங்கேயே கிடக்கிற…
வீடுகளுக்கு பூட்டுப் போடும் பழக்கமே இல்லாத – மாமியார் மருமகள்கள் நிஜமான பாசத்தோடு இருக்கிற – அரசின் புதிய அர்ச்சகர் சட்டப்படி , மிக நேர்மையான , பிராமணர் அல்லாத இளம் வயது அர்ச்சகர்கள் உண்மையாகவே இறைப்பணி செய்கிற —
திருட வந்து அடிபட்டு காலொடிந்த திருடனுக்கே (யோகி பாபு) மருத்துவம் பார்த்து பணம் கொடுத்து அங்கேயே அங்கேயே வாழ அனுமதிக்கிற நல்லவர்கள் நிறைந்த- சாக்கடை அடைத்துக் கொண்டால் ஊர் பிரசிடென்ட்டே (திருமுருகன்) கையில் குச்சி எடுத்து அடைப்பை சரி செய்து விடுகிற – நான்கு முறை தொடர்ந்து ஜனாதிபதி விருது பெற்று இருக்கிற ஒரு, முன் மாதிரி கிராமம் பொற்பந்தல்.
அங்கு உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சண்முகப் பாண்டியன் (அருள்நிதி), ஏட்டையா (சிங்கம் புலி ) எஸ்.ஐ. இளைய குமார், கான்ஸ்டபிள் செல்லத்துரை (ராஜ்குமார்) . ஊரில் சிறு குற்றமும் இல்லாததால் இவர்களுக்கு வேலையே இல்லை . ஸ்டேஷனுக்குள் ஊர் மக்களோடு சேர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது, செஸ் , கேரம் ஆடுவது இவைதான் இவர்களின் வேலைஎப்படி
வயசான ஒரு அப்பத்தாவின் காராம்பசு கட்டுத் தறியில் இருந்து அறுத்துக் கொண்டு ஓடி விட, போராடி அதை பிடித்துத் தருவதே அந்த காவலர்கள் அட்டன்ட் பண்ணுகிற மிகப் பெரிய கேஸ் . நால்வருக்கும் ஸ்டேஷனில் அவ்வளவு சுகமான வாழ்க்கை . அங்கு உள்ள பள்ளிக் கூடத்தில் பணியாற்றும் டீச்சரை (ரம்யா நம்பீசன் ) காதலிக்கிறான் சண்முகப் பாண்டியன்.
ஒரு நிலையில் ‘எந்தக் கேசும் பதிவாகாத ஊருக்கு ஸ்டேசன எதுக்கு?’ என்று முடிவு செய்யும் அரசு, அந்த காவல் நிலையத்தைக் காலி செய்து விட்டு , இந்த நான்கு காவலர்களையும் ராமநாதபுரத்துக்கு பணி மாற்றல் செய்ய முடிவு செய்கிறது .
ராமநாதபுரம் என்பது, எஃப் ஐ ஆர் போட்ட போலீசின் கையை குற்றவாளியே வெட்டுகிற — அடிக்கடி பல்வேறு கலவரங்கள் நடந்து , சிக்குகிற காவலர்களையே போட்டுப் பொளக்குற ஊராக (படத்தில்) சித்தரிக்கப்படுகிறது .
பொற்பந்தல் கிராமத்தில் சுகமாக இருந்து சம்பளம் வாங்கி வாழ்ந்து பழகிவிட்டு ராமநாதபுரத்துக்கு போய்க் கஷ்டப்பட விரும்பாத ஏட்டையாவும் சப் இன்ஸ்பெக்டரும் ஒரு முடிவு செய்கிறார்கள். ஊருக்கு காவல் நிலையத்தையும் தங்களுக்கு இந்த ஊரிலேயே வேலையையும் தக்கவைத்துக் கொள்வதற்காக குற்றங்களை உருவாக்க முயல்கிறார்கள் .
திருந்தி வாழ்ந்த திருடனையே வற்புறுத்தி , பிரசிடண்டின் பணத்தை திருட வைக்கிறார்கள்.அந்தப் பழி நேர்மையில் சொக்கத் தங்கமான ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி மீது விழுகிறது.
கோவிலில் உள்ள நேர்மையான இளம் அர்ச்சகர்கள் செக்ஸ் புத்தகம் படித்து புளூ பிலிம் பார்ப்பதாக நம்பும்படி அந்தப் படங்களை அவர்கள் இருப்பிடத்தில் திருட்டுத்தனமாக போலீசார் வைக்கிறார்கள் . மாமியார் மருமகளுக்குள் சண்டை மூட்டி விடுகிறார்கள் . காதலியைப் பிரிய முடியாத சண்முகப் பாண்டியனும் அவர்களுக்கு துணை போகிறான்
விளைவு ?
மளிகைக் கடை அண்ணாச்சியின் கடை போலீசார் செய்த ஒரு செயல் காரணமாக தீப்பிடிக்க, தன்னைத் திருடன் என்று குற்றம் சாட்டிய பிரசிடன்ட்தான் நெருப்பு வைத்தான் என்று அண்ணாச்சி நம்புகிறார். ஆத்திரப்பட்டு பிரசிடன்ட்டை கத்தியால் குத்துகிறார் . பிரசிடன்ட் ஆட்கள் அண்ணாச்சி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்துகின்றனர்.
கோவிலில் வைத்து பிரச்னையை தீர்க்கலாம் என்று போனால் அங்கு உள்ள அர்ச்சகர்களே செக்ஸ் புக் படிப்பவர்கள் என்று மக்கள் தவறாக நம்பும் சூழல் வந்து , மக்களே அர்ச்சகர்களை கோவிலை விட்டே விரட்டுகிறார்கள். மாமியார் மருமகள் சண்டையோ பறந்து பறந்து தாக்கும் வரை முன்னேறுகிறது .
ஊரின் பழைய பெருமையை நம்பி கழுத்து நிறைய நகை போட்டு ஊருக்குள் வரும் ஒரு பெண்ணை வெடிகுண்டு வீசி புகை மண்டலமாக்கி நகை திருடுகிறது ஒரு கும்பல். ஒரு நிலையில் ஊருக்கு வரும் கலெக்டரையே கடத்துகிறார்கள் .
இந்த அளவுக்கு கெட்டுப் போன ஊரும், அதற்கு காரணமான நாலு போலீசும் அப்புறம் என்ன ஆனது என்பதே இந்தப் படம்.
படத்தில் முதலில் கவர்வது மகேஷ் முத்து சுவாமியின் ஒளிப்பதிவுதான். அது பரிசுத்தமான ஊர் என்பதைக் காட்ட– சோப்புப் போட்டுக் கழுவிய கண்ணாடி போன்ற- அந்த சுதிசுத்தமான அந்த ஒளிப்பதிவு பெரிதும் துணை நிற்கிறது . டைட்டில் முதல்கொண்டு ஆரம்பக் காட்சிகள் வரை வண்ணப் பயன்பாடுகளும் அருமை .
அழுக்கு வெள்ளையில் வந்த திரைப்படங்கள் , அப்புறம் வந்த கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் , நாடோடி மன்னனின் கேவா கலர், அடுத்து வந்த ஈஸ்ட் மென் கலர்…
என்று தமிழ்ப் படங்களில் வந்த வண்ண மாற்றம் , பாடல் வரிகள், உடை , நடன மாற்றம் இவைகளை ஒரே பாடலில் வெளிப்படுத்தும் காதல் கனி ரசம் பாடல் மிக அருமை . அதே மாற்றத்தை தனது இசையிலும் கொண்டு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் ரெஜின். அவரது இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசையும் காட்சிக்கு பொருத்தமாக அமைந்து படத்துக்கு பலம் சேர்க்கிறது
மளிகைக் கடை அண்ணாச்சி , பிரசிடன்ட் இருவருக்கும் சண்டை வந்து , பின் அது வளர்வது தொடர்பான காட்சிகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன . இயக்குனர் வெளிப்படும் காட்சிகள் இவை.
வசனங்களும் காட்சி அமைப்புகளும் அங்கங்கே வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன.
இயல்பாக நடித்து இருக்கிறார் அருள்நிதி. ஆக்ஷன், காதல் , பதற்றம் எல்லா உணர்ச்சிகளுக்கும் ஏற்ப உணர்ந்து நடித்து இருக்கிறார் .
ரம்யா நம்பீசன் ஓகே .
சீரியஸ் நகைச்சுவை இரண்டு ஏரியாவிலும் இயங்கி இருக்கிறார் சிங்கம் புலி.
அந்த ஊர் மிக நல்ல ஊர் என்பதை இன்னும் யதார்த்தமாக பதிவு செய்து இருக்கலாம் . சில காட்சிகளை காமெடியாக கொண்டு போவதாக சீரியசாக கொண்டு போவதா என்பதில் இன்னும் தெளிவாக இயங்கி இருக்கலாம் .
காதல் கனிரசம் பாடலில் தமிழ் சினிமா காட்சி அமைப்புகளின் மாற்றங்களைக் கொண்டு வருவதை நியாயப்படுத்தும் வகையில், போலீசாரில் ஒருவர் பழைய பாடல் ரசிகர், இன்னொருவர் ஈஸ்ட் மென் படங்களின் ரசிகர் ..
அவர்கள் எப்போதும் டி வி பார்ப்பதில் சண்முகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட பாதிப்பே அந்தப் பாடலின் காட்சி அமைப்பு என்று சொல்லி இருக்கலாம் .
ரம்யா நம்பீசன் கதாபாத்திரத்தை மெயின் கதைக்குள் கொண்டு வந்து இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.
அடிப்படைக் கதைக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம் . படத்தின் சீரியஸ்தன்மையை அதிகப்படுத்தி காமெடிக் காட்சிகளை எண்ணிகையில் கொஞ்சம் குறைவாகவும் அதே நேரத்தில் மிக சிறப்பான நகைச்சுவையாகவும் கொண்டு வந்திருக்கலாம் .
சிங்கம் புலிக்கு முழுக்க முழுக்க காமெடி ரோல் கொடுத்து விட்டு , அந்தக் கேரக்டர் மேல் இருக்கும் பல விசயங்களை ஹீரோ கதாபாத்திரத்துக்கு கொடுத்து இருக்கலாம் .
பிரச்னைகளின் வீரியத்தை இன்னும் அதிர்ச்சியூட்டும்படியாக சொல்லி இருக்கலாம் . ஊர் கடைசியில் பழையபடி மீட்கப்பட்டது என்று முடித்து இருக்கலாம்.
உதரணமாக இப்படி யோசிப்போம்.
மது – புகைக்குத் தடை, சூரிய ஒளி மின்சாரம் , அரசை எதிர்பாராமல் மக்களே களம் இறங்கி குளம் குட்டை ஏரிகளை தூர் வாருதல் , நீர் வழிப் பாதை காத்தல், தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்துதல், பறவைகளின் நலனுக்காக தீபாவளிக்குக் கூட பட்டாசு வெடிக்காமல் இருந்தல், ஊர்ப் பொதுப் பணத்தை அரசுக்குக் கடன் கொடுத்து வட்டி வாங்கி ஊருக்கு தேவையான ஆக்கப் பணிகளை செய்தல் ….
இது போன்ற நல்ல விசயங்களால் ஜனாதிபதி பரிசை தொடர்ந்து பெறும் கிராமம் அது. அந்த ஊருக்கு அரசின் பரிசாக ஒரு காவல் நிலையம் அமைக்கப்படுகிறது . அந்தக் காவல் நிலையத்துக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து நான்கு காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள் .
அங்கு வழக்குகளே இல்லாததால் அந்தக் காவலர்களுக்கு கஷ்டமே இல்லை . ஆனால் ஊர் மக்கள் அவர்களை உறவாக நினைக்கிறார்கள். அன்பளிப்பு, விருந்து உபச்சாரம் , நட்பு எல்லாம் சிறப்பாக இருக்க , நால்வருக்கும் வாழ்க்கை சுகமாக இருக்கிறது .
ஒரு காவலர் பொண்டாட்டி பிள்ளைகளை அங்கேயே கொண்டு வந்து குடி வைத்து செட்டில் ஆகிறார் . இன்னொருவர் அங்கே சொந்த வீடு, விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். ஹீரோ அந்த ஊரின் ஸ்கூல் டீச்சரைக் காதலிக்கிறான் . நான்குபேரும் உயிர் நண்பர்கள் ஆகிறார்கள் .
இனி வாழ்க்கை முழுக்க இந்த ஊரிலேயே சுகமாக இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கும்போதுதான் , வழக்குகள் இல்லாத காரணத்தால் ஸ்டேஷனை மூடிவிட்டு நால்வரையும் வெவ்வேறு ஊர்களுக்கு மாற்ற முடிவு எடுக்கிறது அரசு .
இப்போது இருக்கும் இந்த அற்புத வாழ்க்கையை இழக்க விரும்பாமல், அந்த ஊரிலேயே ஸ்டேஷனை தக்க வைத்துக் கொள்ள சிறு சிறு பெட்டி கேஸ்களை இந்த நாலு போலீசாரே உருவாக்குகிறார்கள் . எதிர்பாராத விதமாக அது வளர்ந்து ஒரு நிலையில் போலீசாலேயே கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு பெரும் பிரச்னைகளை உருவாக்குகிறது.
ஊர் ரொம்ப சின்னாபின்னமாகிறது. ஹீரோவின் காதல் சிக்கலுக்கு ஆளாகிறது. போலீசாரால் எதையும் சரி செய்ய முடியாத நிலை. நான்கு போலீசாரும் மனம் உடைந்து போகிறார்கள் .
ஒரு நிலையில் தனிப்பட்ட வாழ்வில் பல இழப்புகளை சந்தித்து தியாகங்களை செய்து அந்த ஊரை மீண்டும் சரி செய்து விட்டு , “நாங்க நாலு பேர் ஸ்டேசன மாறிப் போவது பெரிய விஷயம் இல்லை. இந்த ஊர் இனியும் தப்பான வழிக்கு மாறாமல் இருப்பது முக்கியம் ” என்று சொல்லி விட்டு ஊரை விட்டே கிளம்பிப் போகிறார்கள்
– என்று கதை சொல்லி, இடை இடையே இன்னும் சிறப்பான காதல் காட்சிகள் , பட்டையைக் கிளப்பும் நிஜ காமெடி காட்சிகள் , அதோடு சமூகத்தை ‘சட்டயரா’க விமர்சிக்கும் காட்சிகள் என்று திரைக்கதை அமைத்து டைரக்ஷன் உட்பட மேக்கிங்கிலும் இன்னும் அசத்தி இருந்தால் படம் இன்னும் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .