இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் EON ஸ்டுடியோஸ் தயாரிக்க,
ஜோதிகா, ஜி வி பிரகாஷ், இவானா, தயாரிப்பாளர் தமிழ்க் குமரன் , மற்றும் ராக் லைன் வெங்கடேஷ் நடிப்பில் பாலா இயக்கி இருக்கும் படம் நாச்சியார் . இந்த நாச்சியார் வீர மங்கையா ? பேசுவோம் .
கூலி வேலை செய்யும் இளம் இளைஞன் ஒருவனுக்கும் ( ஜி வி பிரகாஷ் குமார் ) வீட்டு வேலை செய்யும் மைனர் பெண் ஒருத்திக்கும் ( அறிமுகம் இவானா) ஏற்படும் சிநேகம் படுக்கை வரை போகிறது . அவள் கர்ப்பம் ஆகிறாள் .
மைனர் பெண் என்பதால் இது பாலியல் பலாத்காரமாக கருதப்பட்டு கூலிக் காரனை ஜெயிலில் தள்ளுகிறார், நேர்மையான அதிரடியான பெண் போலீஸ் அதிகாரி நாச்சியார் ( ஜோதிகா)
குழந்தை பிறந்த நிலையில் நடத்தப்படும் மரபணு சோதனையில் அது அந்த இளைஞனின் பிள்ளை இல்லை என்பது தெரிகிறது .
எனில் கர்ப்பம் ஆனதற்கு யார் காரணம் ?
யார் நல்லவர் ? யார் தப்பானவர் ? இந்த பிரச்னையை நாச்சியார் எப்படி தீர்த்தார் என்பதே இந்த படம் .
கொஞ்சம் வில்லங்கமான கதை . ஆனால் படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே முறை தவறி உறவு கொண்ட இருவர் மீதும் நமக்கு கோபம் வராமல் பாசம் வருகிறது பாருங்கள் . அங்கே தெரிகிறது பாலாவின் மேக்கிங் .
தமிழ் நாட்டில் சென்னையில் மொழி மத ரீதியாக தமிழர்களின் நிலை என்ன ? மற்ற மொழியினர் மற்றும் இனத்தினர் நிலை என்ன என்பதை பூடகமாக சொல்லும் அந்த சமூக அரசியல் பார்வை சூப்பர் .
நாத்திகரான பாலா , இந்தப் படத்திலும் எல்லா மதங்களையும் மதத்தினரையும் கடவுள்களையும் ஓட்டுகிறார் .
சிறு பான்மை பெரும்பான்மை மத விசயங்களில் கூட எப்படி நேக்காக உள்ளே புகுந்து கலாய்ப்பது என்பது பாலாவுக்கு கை வந்த கலை ஆகி விட்டது . சபாஷ் .
கடவுள் பற்றி இன்பெக்டர் ராக் லைன் வெங்கடேஷ் பேசும் வசனமும் ஜோர் .
ஜி வி பிரகாஷ்க்கு இது வித்தியாசமான படம் . புது களம் ஒன்று அமைந்துள்ளது . இனியாவது அவர் வித்தியாசமான கேரக்டர்களில் வந்தால் புண்ணியமா போகும் .
ஜோதிகா நடிப்பில் நிறைய செயற்கை இருந்தாலும் கெத்தாக நடித்து விட்டுப் போகிறார்
அறிமுகம் இவானா மனதை அள்ளுகிறார் . குறை சொல்ல முடியாத தேர்வு மற்றும் நடிப்பு .
மேக்கிங்கில் அசத்திய பாலா திரைக் கதையில் தொங்கி விட்டார் .
ஒரு குறும்படத்துக்கான கதையை வழக்கமான சில விசயங்களை சேர்த்து ஒரு மணி நேரம் நாற்பது இழ்ழ்ழ்ழ்ழுத்த்த்து இருக்கிறார் .
ஜோதிகா கேரக்டரை தவிர்த்து விட்டுப் பார்த்தால் பாக்யராஜின் ஆராரோ ஆரிரரோ நிழலாடுகிறது .
சிதம்பரம் பத்மினி வழக்கை எடுத்துக் கொண்டு ,
ஒரு நல்ல பெண் போலீஸ் அதிகாரியின் கீழ் உள்ள ஜெயிலில் , அந்த பெண் அதிகாரி லீவில் போன சமயத்தில் , ஒரு அப்பாவிப் பெண்ணை போலீஸ்காரர்களே சீரழித்தார்கள் . அதன் பின்னால் அரசியல் மற்றும் பல பலங்கள்.
லீவு முடிந்து வந்த நாச்சியார் குற்றவாளிகளை என்ன செய்தார் …
— என்ற அளவுக்காவது ஒரு மேட்டர் புடிச்சு எடுத்து, தெறிக்க விட்டு இருக்கலாமே பாலா .
நாச்சியார் .. ஆளுகை கம்மி .