போரஸ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் பிரேம் கல்லாட் , பிரின்ஸ் கல்லாட் இருவரும் தயாரிக்க, அஸ்வின் ராஜ் அனாமிகா ஜோடியாக நடிக்க , சஞ்சீவ் சீனிவாஸ் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி, நடனம் அமைத்து இயக்கி இருக்கும் படம் நான் பொண்ணொன்று கண்டேன். பொண்ணு எப்படி என்று பார்ப்போம்.
உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் ஏரியாவில் மூட்டை தூக்கிப் பிழைக்கும் நாயகன் (அஸ்வின் ராஜ்), அவனுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் ஒரு மன நோயாளி , ஒரு திருநம்பி , சொந்த அக்கா மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பலன் அடையும் ஒரு இளைஞன்… இவர்கள் நால்வரும் அங்கே சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தியபடி ரவுடித்தனம் செய்கிற ஒரு பொம்பளைக்கு(மீனா) கட்டுப்பட்டு வாழ்கிறவர்கள் . அவளது தம்பியும் அடிதடிக்கு பேர் போனவன்.
அந்த பொம்பள ரவுடியோடு ‘புழக்கத்தில்’ இருக்கிறான் ஒரு பணக்கார மைனர் (யுக்திவேல்). அந்த பணக்கார மைனரின் அண்ணன் ஒரு மில் ஓனர். அந்த ஓனரின் ஒரே மகளான நாயகி ( அனாமிகா).
மூட்டை தூக்கிப் பிழைக்கும் நாயகனுக்கு அவள் மீது தீவிர காதல் . ஆனால் அது அவளுக்கு தெரியாது. நாயகியின் கல்லூரித் தோழன் ஒருவன், அவளுக்கு கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டுக் கற்பழிப்பு நடத்தி அதைப் படம் எடுத்து இணையதளத்தில் ஏற்ற திட்டமிட, அவளைக் காப்பாற்றுகிறான் நாயகன் . ஆனால் காப்பாற்றியது இவன்தான் என்பது அவளுக்கு தெரியாது.
தனது தம்பியான மைனர் கேவலமான அந்த பொம்பளை ரவுடியோடு பழகுவது பிடிக்காத மில் ஓனர், அவளை விரட்ட எண்ணி சைக்கிள் ஸ்டாண்டை, தானேஏலம் எடுக்க, அவள் மைனரை உசுப்பி விட , தன் அண்ணனும் கதாநாயகியின் அப்பாவுமான மில் ஒனரையே போட்டுத் தள்ளுகிறான் மைனர்.
தங்கள் தொழிலுக்கு தடையாக இருக்கும் பெண் போலீஸ் அதிகாரியை கொல்ல பொம்பள ரவுடியும் அவள் தம்பியும் திட்டமிட , நாயகனின் உதவியால் பிழைக்கும் இன்ஸ்பெக்டர், தன்னை கொல்ல முயன்ற அந்த இருவரையும் போட்டுத் தள்ளுகிறாள்.
தனது அண்ணன் மகளை நாயகன் காதலிப்பதை அறிந்த மைனர், அவளை திருமணம் செய்து தருவதாக வாக்களித்து தனது அடாவடி வேலைகளுக்கு நாயகனை பயன்படுத்துகிறான். இந்த நிலையில் தனது தந்தையை கொன்றதே தனது சித்தப்பாதான் என்பதை அறிந்த நாயகி அவனிடம் நியாயம் கேட்க, அவளையே மைனர் கொல்லப் போக, அங்கு வரும் நாயகன் அதை தடுக்க , அப்புறம் என்ன நடந்தது? நாயகனின் தீவிர காதல் நாயகிக்கு புரிந்ததா? என்பதே இந்த படம்.
புரட்சித் தலைவரின் புகழ் பாடும் பாடல் ஒன்றைக் காட்டி கதையை ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு பாடலில் கிராபிக்ஸ் நன்றாக இருக்கிறது . மன நோயாளியின் மரணம் நெகிழ்ச்சி .
விபச்சாரத்தில் ஈடுபடும் தனது அத்தை மகள் படும் கஷ்டத்தை உணர்ந்து நெகிழ்ந்து அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மாமனே திருமணம் செய்து கொள்வது படத்தின் மிக அருமையான பகுதி . ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சோக முடிவு பிற்போக்குத்தனமானது.
முழுசாக உரிக்கப்படாத முந்திரிக் கொட்டை மாதிரி இருக்கிறது நாயகியாக நடித்துள்ள அனாமிகாவின் மூக்கு . நடிக்க எல்லாம் பெரிதாக வாய்ப்பு இல்லை . நாயகன் அஸ்வின்ராஜ் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்.
ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் மிக சிறப்பாக வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் பிரேம் கல்லாட்
காட்சி அமைப்பு நடிப்பு எல்லாமே ஓவர் டோஸ் .
நான் பொண்ணொன்று கண்டேன் .. தெளிவற்ற பார்வை