மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவென்சி தயாரிக்க, அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர் , ஆகியோர் நடிக்க ,
மைக்கேல் அருண் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் நிசப்தம் . படம் தரமாய் ஒலிக்குமா ? பார்க்கலாம் .
பெங்களூரில் ஒரு வாகனப் பழுது நீக்க சேவை மையத்தில் பணியாற்றும் ஆதி (அஜய்) — வீட்டை ஒட்டிய ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தும் ஆதிரா (அபிநயா) என்ற,
ஒரு காதல் திருமணத் தமிழ்த் தம்பதியின் மகள், எட்டு வயதே ஆன பள்ளிச் சிறுமி பூமி ( பேபி சாதன்யா ) .
ஆதியின் நெருங்கிய நண்பர் ஷங்கர் (பழனி) அவரது மனைவி மற்றும் ஆதிராவின் தோழி மெடில்டா (ஹம்ஸா).
பூமியை ஒரு கன்னடக் குடிகாரக் காமுகன் ஒரு சபிக்கப்பட்ட தினத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கி விட்டு(ம்)ப் போகிறான் .
குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் பூமியின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது .
கொடூர பாலியல் பலாத்காரம் காரணமாக அவளது சிறு குடல் பெருங்குடல் பாதிக்கப்பட்ட நிலையில், இனி வாழ்நாள் முழுதும்,
அவளது ஜீரணமும் கழிவும் சிறு நீராகப் பை போல வயிற்றுக்கு வெளியே நடக்கும் கொடிய நிலைக்குப் போகிறாள் பூமி
ஆதி– ஆதிரா தம்பதிக்கு பண உதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்கிறது ஷங்கர் மெடில்டா தம்பதி
விசாரணையில் இறங்கிக் குற்ற்வாளியைக் கைது செய்கிறார் அசிஸ்டன்ட் கமிஷனர் பர்வேஸ் அஹமது (கிஷோர்) .
பூமியின் உடல் நலம் ஓரளவு தேறிய நிலையில் அவருக்கு மன நல சிகிச்சை அளிக்க வருகிறார் ஒரு பெண் டாக்டர் (ருது)
தன் மகளான சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் , தற்கொலைக்கு முயன்று கால்களை இழந்து சக்கர நாற்காலியில் இயங்கியபடி ,
இது போன்று பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு மன நல சிகிச்சை அளிப்பதை ஒரு தவமாக செய்கிறார் அந்த டாக்டர்
வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு போகும் நிலையில் , குற்றவாளி அதிகமாகக் குடிப்பவன் என்பதைக் காரணம் காட்டி,
அவனை மதுவில் இருந்து மீட்கும் சிகிச்சைக்குக் கொண்டு போக வைத்து, அதன் மூலம் குற்றவாளியைக் காப்பாற்ற முயல்கிறது அவனது தரப்பு .
தவிர கோர்ட்டுக்கு சிறுமி பூமியே வந்து குற்றவாளியை நேரில் அடையாளம் காட்ட வேண்டிய நிலை.
அப்படி மீண்டும் குற்றவாளியை சிறுமி பூமி நேரில் பார்த்தால் மீண்டும் அவளது மன நிலை பாதிக்கப்படலாம் என்ற சூழல் .
இதுதான் நடக்கும் என்று முன்பே தெரிந்து குற்றவாளி தரப்பு தப்பிக்கப் போகும் சந்தோஷத்தில் கொக்கரிக்க,
ஆதி, ஆதிரா , பூமி, டாக்டர் , பர்வேஷ் அஹமது ஆகியோர் எடுக்கும் முடிவு என்ன என்பதே இந்த படம்
இப்போதே உங்களுக்கு புரிந்திருக்கும் நிசப்தம் தவற விடக் கூடாத ஒரு படம் என்பது . அதுதான் உண்மை .
பாலை வனத்தில் ஒரு பச்சை இலை மண்ணைப் பிளந்து வெளியே வர, மிராக்கிள் பிக்சர்ஸ் என்று பெயர் வரும் இடத்திலேயே சபாஷ் போட வைக்கிறது படம் .
சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் படத்தை உருவாக்கி உள்ளார்கள்.
குற்றத்துக்கு குடிப்பழக்கமும் ஒரு காரணம் என்ற நிலையில் சில குடிகாரர்கள் உள்ள சூழ்நிலையில் ஆதியிடம் ஆதிரா உதவு கேட்க ,
அப்படி ஒரு நட்பு காதலாகித்தான் ஆதியும் ஆதிராவும் தம்பதி ஆனார்கள் என்று சொல்லும் முறையிலேயே இயக்குனரின் திரைக்கதை மெச்சூரிட்டி தெரிகிறது .
கல்யாணம் நடக்கும் நிகழ்வில் கட் ஷாட்களாக காதல் வளர்ந்த விதத்தை சுமார் இரண்டு நிமிடத்தில் சொல்லி முடிக்கும் போது அவரின் டைரக்ஷன் மெச்சூரிட்டியும் தெரிகிறது . சபாஷ்
இது ஊற ஊற ஊற்றப் போகிற காதல் படமோ என்ற உணர்வையும் . பள்ளிச் சிறுவர்களின் உலகம் பற்றிய படமோ என்று உணர்வையும் அடுத்தடுத்த சில நிமிடங்களில் கொடுத்து விட்டு ,
சட்டென்று எதிர்பாராமல் மனதை அதிரடிக்கும் கதைப் பகுதிக்குள் நுழையும் விதம் அபாரம் .
அதே நேரம் மேலே சொன்ன இரண்டு விசயங்களையும் படத்தில் தொடர்ந்து சரியாகப் பயன்படுத்தியும் கொள்வது பாராட்டுக்குரியது
குடிகார முரட்டுக் காமுகனால் சிறுமி பூமி சிதைக்கப்படும் விதத்தை சஜஸ்டிவ் ஆக சொன்னாலும் ஆட்டிப் படைத்து விடுகிறார் இயக்குனர் .
ஒரு நல்ல நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஷங்கர் கேரக்டர் மூலமும் , ஒரு நல்ல தோழி எப்படி இருக்க வேண்டும் என்பதை மெடில்டா கேரக்டர் மூலமும் அற்புதமாகச் சொல்கிறார்கள்
மகளை பாலியல் பலாத்காரத்துக்குக் கொடுத்த ஒரு தாய் தந்தையின் மன உணர்வுகளை சித்தரித்த விதம் அபாரம் .
அதுவும் அந்த பாலியல் பலாத்காரத்துக்குப் பிறகு சிறுமி தன் அப்பாவையே கொடூரமான ஆணாக பார்க்கும் விபரீதமும் அதை எண்ணி ஆதி கேரக்டர் நொறுங்கும் விதமும் ,
தான் பெற்ற மகளுக்கு மீண்டும் ‘தந்தை’யாக ஆதி கதாபாத்திரம் போராடும் விதமும் மனசை அடித்து உடைத்து நொறுக்கி , உருக்கிக் கரைத்து மீண்டும் …. முடிக்க வார்த்தைகளே இல்லை
நிதானமான அழுத்தமான படமாக்கல் . ஆனால் படத்தில் தேவை இல்லாத பகுதி என்று ஒரு நொடி கூட இல்லை .
கடைசி வரை அந்த செய் நேர்த்தி ஜொலிக்கிறது . கிரேட் ! முதல் ப(ட்)டத்திலேயே கவனிக்கப்படும் திரைக்கதையாளர் மற்றும் இயக்குனராக பரிமளிக்கிறார் மைக்கேல் அருண் . பாராட்டுகள் வாழ்த்துகள் !
நிசப்தம் என்ற பெயருக்கு ஏற்ற படமாக்கலைக் கொண்ட இந்தப் படத்துக்கு பல இடங்களில் குரலாகவும் ஒலிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு கேமராவுக்கு இருக்க,
அந்த வேலையை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ் ஜே ஸ்டார் . இவரது வேலைப்பாடு இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கவே முடியவில்லை . பொயட்டிக்கலி சூப்பர் பிரதர் .
பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் கவனிக்கப்படாத உணர்வுப் பள்ளங்களைக் கூட தனது பொருத்தமான பின்னணி இசையால் நிரப்புகிறார் இசை அமைப்பாளர் ஷான் ஜசீல். அருமை .
இது போன்ற உணர்வுக் கூடமாக அமையும் படங்களுக்கு எடிட்டிங் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம்தான் . மிஷினோடு மிஷினாக உட்கார்ந்து கட் பண்ணித் தூக்கி விடுகிற ஆபத்து உண்டு .
ஆனால் இந்தப் படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் , நிரம்பி வழியும் கண்ணாடிக் குடுவையை தூக்கிக் கொண்டு வழுக்குப் பறையில் இருட்டில் நடக்கிற சிரத்தையோடு ,
அற்புதமாக படத் தொகுப்பு செய்துள்ளார் . (அபிநயா மட்டுமின்றி வேறு சில நடிகர்களும் வசனம் பேசும்போது பல இடங்களில் உதட்டசைவு ஒத்து வரலியே. அது மட்டும் ஏன்?)
ஆதி கேரக்டர் பூமியின் மனதுக்குள் மீண்டும் தந்தையாக உருப்பெறும் அந்தப் போராட்டம் இவ்வளவு சிறப்பாக வந்திருப்பதற்கு ஜான் பிரிட்டோவின் கலை இயக்கமும் ஒரு காரணம் . பாராட்டுகள் !
பல வித கேரக்டர்களில் நடித்த பெரும் அனுபவம் கொண்ட நடிக,நடிகையர் நடிக்க வேண்டிய ஆகச் சிறந்த கதாபாத்திரங்களில் அஜய், அபிநயா, மற்றும் ருது !
இவர்களின் உடல் மொழிகள் , நடிப்பு இவை ஆரம்பத்தில் பல காட்சிகளில் செயற்கையாக இருப்பது ஓர் உறுத்தல் என்றாலும் , போகப்போக காட்சிகளின் உணர்வும் கதைப் போக்கும்
அவர்களையும் நேசிக்கும்படி செய்து விடுகிறது . ஒரு நிலைக்குப் பிறகு அவர்கள் நடிப்பும் நன்றாக வந்து விட்டது என்றும் சொல்லலாம்.
பூமியாக நடித்திருக்கும் பேபி சாதன்யா மிகச் சிறப்பாக நடித்து சிலிர்க்க வைக்கிறார் பிரமிக்க வைக்கிறார் . இப்படி ஒரு கேரக்டரை அந்த குட்டிப் பெண்ணுக்குப் புரிய வைத்த இயக்குனரையும் ,
புரிந்து நடித்து இருக்கும் அந்த செல்லத்துக்கும் ,
இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க அனுமதித்த அந்தப் பாப்பாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் !
சிறுமிகளைக் கூட இப்படி பாலியல் பலாத்காரம் செய்யும் மிருகங்களின் தாய், சகோதரி, மனைவி , மகள்கள் போன்ற அந்தக் குடும்பத்துப் பெண்கள் இந்தப் பிரசனையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?
இது போன்ற கொடிய அநியாய நிகழ்வுக்கு பிறகு அந்தப் பெண்களின் உணர்வுகள் செயல்பாடுகள் என்ன ? என்ற ஏரியா இது போன்ற கதைகளில் மிக மிக மிக … அதி முக்கியம் .
சம்மந்தப்பட்ட அவர்களது குலைவு, குற்றவாளிகள் மீது அவர்கள் காட்டும் கோபம், தண்டனை …
பல சமயங்களில் அதுவே இது போன்ற குற்றம் செய்யும் அல்லது செய்யத் துணியும் நபர்களை பயமுறுத்தும் அம்சமாக அமையும் .
ஆனால் அது பற்றி இந்தப் படம் ஒரு துளி கூட பேசவில்லை என்பது கூட, ஒரு வகையில் பாலியல் பலாத்காரம் போன்ற அநியாயம்தான் . மன்னிக்க முடியல மக்கா
ஆனாலும் என்ன ….
இன்றைக்கு மிக முக்கியமான ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டு, உரத்துக் குரல் கொடுக்கும் வகையிலும் அதை மனம் நெகிழ்த்தும் கவிதையாகவும் சொன்ன வகையில்,
மனதுக்குள் காவிய இசை இசைக்கிறது இந்த நிசப்தம்
வீட்டில் பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் .. ஏன் , ஆண் குழந்தை மட்டுமே உள்ள குழநதைகள் கூட அவசியம் பார்க்க வேண்டிய படம் நிசப்தம் .
சிறையில் உள்ள கைதிகள், குறிப்பாக பாலியல் பலாத்காரக் குற்றம் செய்த கைதிகளுக்கு ,
அதிலும் சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு அவசியம் போட்டுக் காட்ட வேண்டிய படம் நிசப்தம் .
நிசப்தம்…..உள்ளம் உருக்கும் உன்னத ஒலி !