விண்ட சிம்ஸ் மீடியா என்டர்டைன்மென்ட் சார்பில் கார்த்திக் , சிவகுமார் மற்றும் இரண்டு நண்பர்கள் சேர்ந்து தயாரிக்க,
சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் , சாந்தினி , காளி வெங்கட் , மைம் கோபி , மிமிக்ரி சேது, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க ,
இயக்குனர் அறிவழகனிடம் ஈரம் மற்றும் வல்லினம் படங்களில் அசோசியேட் இயக்குனராகப் பணி புரிந்த, மணி செய்யோன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘கட்டப்பாவக் காணோம்’ .
அதிர்ஷ்டம் தரும் என்று நம்பப் படுகிற ஒரு வாஸ்து மீனுக்கு படத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பெயர்தான் கட்டப்பா. அந்த மீன் இருக்கும் இடத்துக்கு அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை . என்ன வந்தது என்பதே படம் .
வரும் பதினேழாம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு . படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .
வாஸ்து மீனை மையமாகக் கொண்டு காதல், மோதல், சண்டை , ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த கலவையாக படம் இருக்கிறது என்பதை முன்னோட்டம் உணர்த்தியது .
பாடல்களில் ஓர் அழகான சிறுமி கதாபாத்திரம் வருகிறது . ஒரு பாடலில் சிபியும் ஐஸ்வர்யா ராஜேஷும் மிக யதார்த்த நெருக்கம் காட்டி நடித்துள்ளனர் .
நிகழ்ச்சியில் பேசிய உடை வடிவமைப்பாளர் கீர்த்தி வாசன் ” படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷை மிகவும் மாடர்னாக காட்டி இருக்கிறோம் ” என்றார் .
“படத்தில் நான் வில்லனாக வருகிறேன் . ஐஸ்வர்யாவும் சிபி ராஜும் சிறப்பாக நடித்துள்ளார்கள் ” என்றால் மைம் கோபி
” மிக வித்தியாசமான கதை படத்தில் நிறைய நடிக நடிகையர் . சிபி ராஜ் , ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பத எல்லோருமே சிறப்பாக நடித்த காரணத்தாலும்,
பெரும்பாலும் படம் இன்டோர் ஷூட்டிங் ஆகவே இருந்த காரணத்தாலும் தரமாக அதே நேரம் வேகமாக எடுத்தோம் ” என்றார் ஒளிப்பதிவாளர் ஆனந்த்
” ஆர்ட் டைரக்ஷனுக்கு நிறைய வாய்ப்புள்ள படம். அதனால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது என்றார் கலை இயக்குனர் லஷ்மி தேவ்.
இயக்குனர் மணி செய்யோன் பேசும்போது
” சிபிராஜ் படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார் . கேரக்டருக்கு அவ்வளவு சிறப்பாக பொருந்து உள்ளார் .
படத்தில் அதிர்ஷ்டம் தரும் வாஸ்து மீன் தொலைவதும் தேடப்படுவதுமே கதை . பாகுபலி படத்துக்குப் பிறகு கட்டப்பா என்பது நாடறிந்த பெயர் என்பதால்,
அந்த மீனுக்கு கட்டப்பா என்று பெயர் வைத்து படத்துக்கு கட்டப்பாவக் காணோம் என்று பெயர் வைத்தோம்
ஐஸ்வர்யா ராஜேஷ் போனிலேயே கதை கேட்டு , நான் சொன்ன கதையை மிக அழகாக திருப்பி சொல்லும் அளவுக்கு இன்வால்வ் ஆகி நடிக்க ஒத்துக் கொண்டார்
ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை நடித்த பல படங்களில் நிஜ வயதை விட அதிக வயதுள்ள பெண்ணாகவே நடித்து உள்ளார் . இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஓர் இளம் கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்கிறார் .
நிறைய கதாபாத்திரங்கள் எல்லோரின் நடிப்புமே சிறப்பான வந்துள்ளது .
படப்பிடிப்பில் மீனை நடிக்க வைப்பதுதான் பெரிய வேலையாக இருந்தது . நாம் மீனை ஓர் இடத்தில் தண்ணீரில் நிற்க வைத்து விட்டு கேமராவை ஃபோகஸ் செய்து நடிப்பவர்களை நிற்க வைத்து நடிக்க வைத்தால்,
எடுத்துக் கொண்டு இருக்கும்போதே மீன் நகர்ந்து விடும். எனவே நடிக நடிகையர் மீண்டும் மீண்டும் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அவை எல்லாம் சுவையான நிகழ்வுகள்
படத்தில் வாஸ்து மீன் ராசியா இல்லையா என்ற விசயத்தில் என் கருத்து என்ன என்பதைத்தான் சிபிராஜ் கேரக்டருக்கு படத்தில் வைத்துள்ளேன் ” என்றார் .
“வாஸ்து மீன் நிஜத்தில் யாருக்கு ராசியோ இல்லையோ வாஸ்து மீனை வைத்து உருவாகும் இந்தப் படம் எனக்கு மிக ராசியானது” என்று ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,
” இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் எனக்கு இந்திப் பட வாய்ப்பு வந்தது . இந்தப் படத்துக்காக செட் போட்டு படபிடிப்பு நடத்திக் கொண்டு இருந்தபோது,
நான் நாலு நாட்கள் இந்திப் படத்துக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டி வந்தது .
நான் இயக்குனர் மணி செய்யோனிடம் ‘இந்த வாய்ப்பு போனால் வராது . எனக்கு எப்படியாவது நான்கு நாள் கொடுங்கள்’ என்று கேட்டேன் .
அவரும் பெருந்தன்மையோடு கொடுத்தார் . அதை மறக்க மாட்டேன் . இந்தப் படம் பிரம்மாதமாக வந்துள்ளது ” என்றார் .
“ஐஸ்வர்யா போல எனக்கு இந்திப் பட வாய்ப்பு எல்லாம் வரவில்லை . ஆனால் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு எனக்கு நிறைய நல்ல படங்கள் வந்தன . ” என்று ஆரம்பித்த சிபிராஜ் ,
தொடர்ந்து “வித்தியாசமான படங்களில் நடிப்பேன் என்ற இமேஜ் வந்ததுதான் காரணம் .
இதுவரை நாய் பேய் வரும் படங்களில் நடித்துக் கொண்டு இருந்தேன் . இந்தப் படத்தில்தான் நிறைய ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருக்கிறேன் .
ஆரம்பத்தில் நான் கூச்சப்பட்டபோது , ஐஸ்வர்யா ஃபிரன்ட்லியாகப் பேசி உற்சாகப்படுத்தினார் .
இயக்குனர் மணி செய்யோன் என்னிடம் இந்த தயாரிப்பாளர்களைப் பற்றி சொன்னபோது,’ புது தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள் .
அதுவும் நான்கு பேர் கூட்டணி வேறு . படத்தை ஒழுங்காக முடிப்பார்களா..’ என்று யோசித்தேன் . இயக்குனர்தான் நம்பிக்கை தந்தார்
ஆனால் தயாரிப்பாளர்களான கார்த்திக் முதலிய நண்பர்கள் மிக சிறப்பாக செயல்பட்டார்கள் . பேசிய தொகையை ஒவ்வொரு முறையும் சொன்ன நாளுக்கு முன்பே கொடுத்தார்கள் .
இவர்கள் போல நிறைய தயாரிப்பாளர்கள் வரவேண்டும் . இவர்கள் அடுத்தடுத்து நிறைய வெற்றிப் படங்கள் தர வேண்டும் ” என்றார்
தயாரிப்பாளர் கார்த்திக் தன் பேச்சில் ” சந்தோஷ் தயாநிதி சிறப்பான இசையைக் கொடுத்து உள்ளார். பாடலாசிரியர்கள் முத்தமிழும் உமா தேவியும் நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளனர்.
உமா தேவி எழுதிய பெண்ணே என்ற பாடல் படம் வருவதற்குள் இப்போதே பலரின் ரிங் டோனாக மாறி விட்டது .
ஆர்ட் டைரக்டர் காலை ஒன்பது மணி கால்சீட் என்றால் முதல் நாள் அதிகாலை இரண்டு மணி வரை ஆர்வமாக அழகு செய்வார் . ஒளிப்பதிவாளர் உட்பட எல்லோருமே சிறப்பாக செயல்பட்டார்கள் .
சிபிராஜ் சிறப்பாக நடித்துள்ளார் .
கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷை போடலாம் என்று டைரக்டர் சொன்னபோது நான் கூட யோசித்தேன் . ஆனால் அலுவலகத்துக்கு அவ்வளவு மாடர்னாக இளமையாக,
கேரக்டருக்கு பொருத்தமாக வந்து இறங்கி அசத்தினார் . அப்போதே அவர்தான் கதாநாயகி என்று முடிவானார் . எல்லா நடிக நடிகையருமே சிறப்பாக நடித்துள்ளனர்
இயக்குனர் மணி செய்யோன் சிறப்பாக படத்தை உருவாக்கி உள்ளார் . வரும் மார்ச் 17 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது ” என்றார்
வாழ்த்துகள் !








