நிறம் மாறும் உலகில் @ விமர்சனம்

சிக்னேச்சர் புரடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் கேத்ரின் ஷோபா மற்றும் லெனின் தயாரிக்க  பாரதிராஜா, வடிவுக்கரசி, நட்டி நடராஜ், யோகி பாபு, லவ்லின், ரியோ ராஜ், விஜி சந்திரசேகர் நடிப்பில் பிரிட்டோ ஜே பி இயக்கி இருக்கும் படம். 

ஊமை விழிகள் படத்தில் ”நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்…”  என்று துவங்கும் பாடல் ஒன்று உண்டு. பழைய பாடல் வரிகளில் இருந்து படத்தின் தலைப்பை வைக்கும் உத்தியில் அந்த பெயரை தலைப்புக்கு  எடுத்தவர்கள், நிலை மாறும் உலகில் என்பதற்குப் பதில் ஏன் ‘நிறம் மாறும் உலகில் ‘  என்று மாற்றினார்கள் என்று தெரியவில்லை. 

ஒருவேளை விஷுவலாக அதற்கு ஏதும் நியாயம் செய்து இருப்பார்கள் என்று பார்த்தால் அப்படி எதையும் செய்யவும் இல்லை.

தவிர இந்த படத்துக்கு நிலை மாறும் உலகில் என்று அந்தப் பாடல் வரிகளிலேயே இருப்பதுதான் இன்னும் பொருத்தம். மாற்றியதற்கு காரணம் படக் குழுவுக்கே வெளிச்சம். 

இருக்கட்டும் .

தனது காதலனைப் பிடிக்காத அம்மா (விஜி சந்திரசேகர்),  அவனை தனது பர்த்டே பார்ட்டியில் புறக்கணித்ததை பெரிய அவமானமாக் கருதி சண்டை போட்டு,  அம்மா அறைந்ததற்காகக் கோவித்துக் கொண்டு ரயில் ஏறி விடுகிறாள்  இளம்பெண் (லவ்லின்) ஒருத்தி 

ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகர் (யோகிபாபு)  இவளை உணர்ந்து அவளிடம் பேச , இவள் நடந்ததைச சொல்ல, அம்மா பாசத்துக்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்காத சில பிள்ளைகள், பிள்ளைகளுக்காக காலம் எல்லாம் கஷ்டப்பட்ட சில அம்மாக்களின் கதைகளைச் சொல்கிறார் அந்த  பயணச்சீட்டு பரிசோதகர்

முதல் கதையில் சாதி ஆணவத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்துக் காதல் ஜோடி ஒன்று  (ரிஷிகாந்த்? – காவ்யா அறிவுமணி) உயிருக்குப் பயந்து மும்பை போகிறது.அங்கே இரண்டு தாதாக்களுக்கு இடையில் பனிப்போர் . ஒரு தாதா (சுரேஷ் மேனன்) இன்னொரு தாதாவைக் (நட்டி நடராஜ்)கொலை செய்ய, அயோக்கிய  போலீசின் உதவியை நாட , 

நேரிடயாக நமது ஆட்கள்  மூலம் கொலை செய்ய முயலும் மபோது மிஸ் ஆனால்,  பாதிக்கப்பட்ட தாதா விட்டு வைக்க மாட்டான் என்பதால் சம்மந்தமில்லாத ஒரு நபரை அதற்காகத் தேடும் போலீஸ், மும்பைக்கு வந்த அந்த  கிராமத்துக் காதலனை அடித்து உதைத்து , உன் காதலியைக் கொன்று விடுவோம் என்று மிரட்டி சம்மதிக்க வைக்கிறது .  அதே நேரம் காதலியை சூறையாடி சிவப்பு விளக்குப் பகுதியில் விற்கிறது . 

குறி வைக்கப்பட்ட தாதாவின் அம்மா சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து அங்கேயே கொல்லப்பட்டு இறந்து போனவர் என்பதால்….  அதே சிவப்பு விளக்குப் பகுதிக்கு வந்து பிடித்த பெண்ணை அறைக்குள் கொண்டு போய் அவளைத் தாயாக நினைத்து அவள் மடியில் படுத்து அழுது அரற்றி வருவது குறி வைக்கப்பட்டு இருக்கும் அந்த தாதாவின் வழக்கம் . 

அப்படிப் போனவன் அந்த பாதிக்கப்பட காதலியை அழைத்துக் கொண்டு போய் தனி அறையில் மடியில் படுத்து மகனாகப் புலம்ப, அந்த காதலியும் நெகிழ்வில் இருக்க, அந்த நேரம் பார்த்து அங்கே வந்து தாதாவைக் கத்தியால் குத்துகிறான் காதலன் . அடுத்து என்ன என்று போகிறது .

அடுத்த ஒரு சில நிமிடங்களில் இந்தக் கதை முடிய,

அனாதைகளான ஓர் இளம்பெண்ணும் (முல்லை அரசி) இளைஞனும் (ஏகனும்) காதலித்து கஷ்டப்பட்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்று வளர்ந்து ஆளாக்கினால் , அந்தத் தம்பதியின் முதிய வயதில் ( பாரதிராஜா- வடிவுக்கரசி) அவர்களை மகன்கள் இருவரும்  வறுமையிலும் கையில் காசு இல்லாமலும் சாப்பாட்டுக்கு அலையவும் விடுவதோடு,   மகன் மருமகளால் அவமானப்படுத்தப்படும்  நிலைக்குப் போக , 

அவர்களுக்கு என்ன ஆச்சு என்று சொல்லி அடுத்த ஒரு சில நிமிடங்களில் முடிகிறது .

மூன்றாவது கதையில் மீனவப் பிரிவைச் சேர்ந்த விதவை அம்மாவால் (ஆதிரா) வளர்க்கப்பட்ட ஒரு மகனும் (ரியோ) வளர்ப்பு மகனும் (விக்னேஷ்காந்த்) அம்மாவுக்கு புற்று நோய் வந்து விட்ட நிலையில் சிகிச்சைக்குப்  பல லட்சம் பணம் தேவைப்படும் சூழலில் ,   வெகு காலமாகவே அம்மாவை  ‘வளைக்க’ முயன்று  தோற்றுப் போன அயோக்கியன் ஒருவனின் (மைம் கோபி) கட்டளையை ஏற்று,  ஒரு வெளிநாட்டுக்காரப் பெண்ணைக் கடத்த,  அது அம்மாவின் மரணத்துக்கே காரணமாக அப்புறம் என்ன நடக்கிறது என்று ஒரு கதை . 

அடுத்த கதை ( சாரி… எங்களுக்கும் இப்படித்தான் இருந்தது… !)  வெளிநாட்டில் கணவன் மனைவி இருவருக்கும்  வேலை கிடைக்க, அந்தக் கணவன்  அம்மாவை (துளசி) இங்கேயே ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுப் போகிறான். ஓர் அநாதை ஆட்டோ டிரைவருக்கும் (சாண்டி) அந்த அம்மாவுக்கும் அம்மா –  மகன் பாசம் ஏற்படுகிறது .

ஆனால் அவனது காதலி , ”’ நீ அனாதை என்பதால் எப்போதும் எனக்கே முக்கியத்துவம் கொடுப்ப என்றுதான் உன்னை காதலிச்சேன் . இப்ப நீ யாரோ ஒருத்தியை அம்மா என்று அழைத்து வந்தால் உன் காதலே எனக்கு வேண்டாம் . என்னை மறந்து  விடு ” என்று சொல்ல,  நடந்தது என்ன என்று ஒரு கதை .

இந்தக் கதைகள் மூலம் ரயிலில் பயணிக்கும் இளம்பெண் கற்றதும் பெற்றதும் என்ன என்பதே படம். (இந்த ஆந்தாலாஜி படங்கள் என்றாலே இப்படிதான் . கதைச் சுருக்கம் எழுதுவதற்குள் விடிஞ்சுரும்)

சும்மா சொல்லக் கூடாது . அதிர வைத்து முதல் கதை . தாதாவைக் கொல்ல கிராமத்துக் காதலன் போக , அங்கே அந்த தாதா அந்த கிராமத்துக் காதலியின் மடியில் மகனாகப் படுத்து அழ , அப்போது போய் காதலன் தாதாவைக் கத்தியால் குத்த ,இப்படி அடுத்து அடுத்து வந்த அசர வைக்கும் திருப்பங்களால்  வாயைப் பிளக்க வைத்து விட்டார்கள் . 

யாருப்பா ஸ்கிரிப்ட் ரைட்டர் என்று மனசு ஆச்சர்யத்தில் பிரம்மிக்கும நேரம் பார்த்து,  ”அஸ்கு புஸ்கு.. அப்படி எல்லாம் சந்தோஷப் பட விட்ருவமா?” என்று   சொல்லும் கதையாக ,  சட்டென்று அந்தக் கதையை அடுத்த சில நிமிடங்களில் மொக்கையாக முடித்து,  கொசு நுழைந்தது போல  கப்பென்று வாயை மூட வைத்து விட்டார்கள் . 
கதையின் முடிவுக்கு சற்றுமுன் ஹேண்டிலை வேறு பக்கமாக திருப்பி  கதையை நீட்டித்து  இருந்தால் இது ஒரு அட்டகாசமான தியேட்டரிக்கல் சக்சஸ் படம் . 

கையில் இருந்த வெண்ணையை மண்ணில் கொட்டி விட்டு வனஸ்பதி  டால்டாவை வாங்கி வழிச்சு வழிச்சு சாப்பிடச் சொன்னால் எப்படிங்க ஞாயமாரே?

குறி வைக்கப்படும் தாதாவாக நடிப்பில் அசத்தி இருக்கிறார் நட்டி நட்ராஜ். செம ஸ்டைலிஷ் கொஞ்சம் ரஜினி ஸ்டைல் வில்லத்தனம். 

வாய் பேச வராத அந்த அப்பாவிக் கிராமத்துக் காதலியாக ஒரு சில காட்சிகளிலேயே நடிப்பில் பிரம்மிக்க வைக்கிறார் காவியா அறிவுமணி .  நடிப்பு மணி. 

இரண்டாவது கதை சினிமாவே அல்ல. இப்போது நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் என்ற வகையில் மனசை உருக்குகிறது. வயதான மனைவியாக பண்பட்ட நடிப்பால் மிளிர்கிறார் வடிவுக்கரசி எனும் நடிப்புக்கரசி . நடிப்பிலும் ஒரு குன்றாக உயர்ந்து நிற்கிறது இயக்குனர் இமயம் . சபாஷ்யா தகப்பா . 

ஏகன்  வசனம் மட்டும் பேசி விட்டுப் போக , அதைப் பயன்படுத்திக் கொண்டு மெல்லிய முகபாவனைகளால் மனம் கவர்கிறார் முல்லை அரசி 

இந்த கதையோடு இன்டர்வெல் விட , யார் கண் பட்டதோ தெரியவில்லை. யார் சூனியம் வைத்தார்களோ தெரியவில்லை. 

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மீனவ அம்மாவின் மரணத்துக்குக் காரணமான திருப்பம் தவிர , மூன்றாவது கதை ரொம்பவே சோதிக்கிறது . செயற்கையான காட்சிகள். எரிச்சலூட்டும் நடிப்பு. பக்கா அமெச்சூர் டிராமா சினிமாவாகப் போய்விட்டது மூன்றாவது கதை 

நாலாவது கதை மூன்றாவது  அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் அதுவும் செயற்கையான கதாபாத்திரங்கள் மற்றும்  காட்சிகளால் தரப்படும் சோதனைதான். . அம்மா என்ற கேரக்டருக்கு இருக்க வேண்டிய மீட்டருக்கு மேல் நடித்து,  விபரீத எண்ணங்களை உருவாக்குகிறார் துளசி.  

சாண்டி ஜஸ்ட் ஒகே .

காதலியாக வருபவர் ஆரம்பத்தில் கவனிக்க வைத்தாலும் அப்புறம் நடிப்பில் சோபிக்கவில்லை 
இதற்குப் பிறகும் “அந்த அஞ்சாவது கதை…? ” என்று யோகிபாபுவிடம் லவ்லின் ஆரம்பிக்கும்போது,  அடிவயிற்றில் பகீர் என்றது . நல்லவேளை…   அது தனது சொந்தக் கதை என்பதைப் புரிய வைக்க , “அத விடு.. .” என்று ஒரே வாக்கியத்தில் யோகி பாபு முடித்த போது அவர்  மீது ஒரு காதலே வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் . 

மேற்சொன்ன நான்கு கதைகளையும் இணைக்கும் கதையில் ஆரம்பத்தில் தனது வழக்கமான பாணியில் செய்தாலும் போகப் போக அடக்கி வாசித்து, அட  போட வைக்கிறார் யோகி பாபு .

தெளிவான சிந்தனையற்ற இளம்பெண்ணின் – நியாயம் போலத் தெரியும் அறியாமைக்-  கோபத்தை வெளிப்படுத்தி செயல்படும் கேரக்டரில. அதே இன்னசன்ட் தன்மையை வெளிப்படுத்தி அழகாக நடித்துள்ளார் லவ்லின். அந்தக் கண்கள் நிறையப் பேசி விடுகிறது. லவ்லி(ன்) . 

நாம் சரியா இருந்தாலும் மகள் இப்படி பண்றாளே என்ற கம்பீர அங்கலாய்ப்பைக் காட்டும் கேரக்டரில் ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போகிறார் விஜி சந்திரசேகர்.

பசி வெறியில் இருக்கும் சிங்கத்துக்கு பொரி உருண்டையைத் தின்னக் கொடுத்த கதையாக, இந்த நடிப்பு ராட்சசிக்கு தம்மாத்துண்டு கேரக்டர் கொடுத்து இருக்கிறார்கள். 

மூன்றாவது கதையில் அந்த மீனவ விதவைத் தாயாக விஜி நடித்து இருந்தால் அந்தக் கதைக்குக் கூட கொஞ்சம் ஆக்சிஜன் கிடைத்து இருக்கும் . 

மல்லிகா அர்ஜுன், மணிகண்டன் ராஜா ஆகியோரின் ஒளிப்பதிவு , தேவ பிரகாஷ் ரீகனின் இசை, தமிழ் அரசனின் படத் தொகுப்பு யாவும்  பாராட்டும்படியே உள்ளன. 

பொதுவாக அந்தாலாஜி கதை பண்ணுவது சுலபம் . அதில் திரைக்கதையில் எஸ்கேப் ஆக வாய்ப்பு அதிகம் என்று பலரும் நினைக்கிறார்கள் இந்தப் படக்குழு மாதிரி . 

தப்பு. ரொம்பத் தப்பு.

ஒரு கதையில் ஆடியன்ஸ் மூழ்கி இருக்கும்போது சட்டென்று அந்த பிளக் பாய்ண்டை கழட்டி விட்டு இன்னொரு பிளக்கை சொருகி அதை ஆடியன்ஸ் ரசிக்கும்படி  எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. . அதுவும் தியேட்டரில் எல்லாவற்றையும் மொத்தமாகப் பார்க்கும் சூழலில் மூன்றாவது நான்காவது என்று  கதைகள் மாறும்போது,  அது நன்றாக இருந்தால் கூட போர் அடிக்கும் . ரொம்ப நன்றாக இருந்தால்தான் நன்றாக இருப்பது போல தோன்றும். ரொம்ப ரொம்ப ரொம்ப  நன்றாக இருந்தால்தான் நன்றாக இருக்கு என்ற  உணர்வு வரும் . 

எனவே அந்தாலஜியில்  ஆரம்பத்தில் வரும் கதையை விட அடுத்து அடுத்து வரும் கதைகள் ரொம்ப நன்றாக இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

ஆனால் இதில் நேர்மாறு . முதல் கதை ஒரு நிலை வரை மிகப் பிரம்மாதமாகவும் முடிவு மொக்கையாகவும் போக, அடுத்த கதை அதை விடக் கம்மி . அடுத்து அதை விடக் கம்மி என்ற ரீதியில்  …

மலை உச்சியில் இருந்து அடிவாரத்தை நோக்கி பிரேக்கும் கண்ட்ரோலும் இல்லாமல் மேடு பள்ளத்தில் உருண்டு வரும் பழைய ஜீப் மாதிரி குதித்துக் குதித்து இறங்கிக் கொண்டே இருக்கிறது திரைக்கதை.

அட..  இருக்கும் விசயத்தைக் கூட சரியாக ஆர்டர் பண்ணி இருக்கலாம் . உதாரணமாக எடுத்த உடன் மீனவப் பெண்ணின் கதை . இரண்டாவது  பணக்கார அனாதை அம்மா – ஆட்டோ ஓட்டுனர் கதை . மூன்றாவது முதிய தம்பதி கதை , நான்காவது தாதா கதை என்று வரிசைப்படுத்தி அதற்கேற்ப யோகி பாபு கேரக்டருக்கு வசனங்களை எழுதி இருந்தால் கூட இந்தப் படம் ஒரு மாதிரி தேறி இருக்கும். 

‘A GOOD FILM IS ALWAYS DESTINED BETWEEN TWO TABLES…. WRIITNG TABLE AND THE EDITING  TABLE’ என்பார்கள் . அது இல்லாவிட்டால் வீரியம் மிக்க  கருக்கள் கூட இப்படித்தான் குறைப்பிரசவத்தில் பிறந்து சவலைப் பிள்ளையாக மாறும் . 

மொத்தத்தில் நிறம் உலகில் …….  தரம் மீறும் நிலையில்! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *