ஜென்டில் உமன் @விமர்சனம்

கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓஷன் பிக்சர்ஸ் சார்பில் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன் , பி என் நரேந்திர குமார், லியோ லோகன் நேதாஜி ஆகியோர் தயாரிக்க, லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா மரியனேசன், ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன், சுதீஷ் நடிப்பில் ஜோஷுவா சேதுராமன் எழுதி இயக்கி இருக்கும் படம். 

சிறுவயதிலேயே அப்பா அம்மாவை இழந்து உறவினரால் வளர்க்கப்பட்டு , நிச்சயிக்கப்பட்ட திருமணம் மூலம் கல்யாணம் ஆகி கணவன் ( ஹரி கிருஷ்ணன்) வேலை பார்க்கும் சென்னைக்கு கணவனோடு தனிக் குடித்தனம் வந்து , 

மாமியார் மற்றும் உறவினரால் பெண்ணடிமைத்தனத்துக்கு அழுத்தப்படுகிற , சக அப்பர்த்மென்ட் பெண்களால் அதி  சுதந்திர வாழ்க்கைக்கு அழைகப்படுகிற  – எனினும் அளவான சுதந்திரமும் கணவனுக்கு சமைத்துப் போட்டு வாழும் சந்தோஷமான வாழ்க்கையும் போதும் என்ற நினைக்கிற – பொதுவில் அமைதியாக இருக்கிற – ஆனால் ஒன்றை செய்ய நினைத்தால் அப்புறம் தயங்காதவள் என்று சொல்லப்படுகிற – ஒரு பெண்ணுக்கு ( லிஜோ ஜோஸ் மோல்) 

ஊரில் இருந்து சென்னைக்கு இண்டர்வியூவுக்கு வரும் ஒன்று விட்ட சகோதரியால் ஒரே நாளில் எல்லாம் மாறுகிறது. 

மாமியாரின் கட்டளைக்குப் பயந்து அவள் கோவிலுக்குப் போக , வீட்டில் கணவன் மைத்துனியிடம் தவறாக நெருங்க,  எதிர்பாராத நிலையில் கணவன் தடுக்கி விழுந்து சலனமற்றுப் போகிறான்.  

கோவிலில் இருந்து வரும் பெண் , தனது கணவனின் நிலையைப் பார்த்து அதிர , அந்தத் தங்கை, ” நான் ஒன்னும் பண்ணலக்கா..”  என்று நடுங்க, அப்போது கணவனுக்கு ஒரு போன் வர, அதை மனைவி அட்டன்ட் செய்ய.. அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது . 

அந்த சூழலில் கணவன் இருமியபடி சுய நினைவுக்கு வர,  பக்கத்தில் இருந்து அரிவாளை எடுத்து கணவன் கழுத்தை அறுத்துக் கொல்கிறாள் மனைவி . தங்கை அதிர , ஒரு நிலையில் இருவரும் சேர்ந்து அவனை ஃபிரிட்ஜில் மறைத்து விட்டு, தங்கையோடு இன்டர்வியூவுக்குப் போய் இன்டர்வியூ முடிந்த உடன் , தங்கையை இந்தப் பிரச்னையில் இருந்து விடுவித்து ஊருக்கு அனுப்புகிறாள் மனைவி . 

கணவன் ஊருக்குப் போய் இருப்பதாக சொல்லி விட்டு , பாடியை என்ன செய்யலாம் என்று திட்டமிட . அவனின் அந்த கள்ள உறவுப் பெண் வீட்டுக்கே வருகிறாள் . அவளை சமாளித்து அனுப்பினாலும் அவளுக்கு சந்தேகம் வருகிறது . 

போலீசிடம் அவள் போக , மனைவியைத் தேடி போலீஸ் வர , அந்த நிலையில் மனைவி கர்ப்பமாகவும் ஆகி இருப்பது தெரிய வர, , அப்புறம் நடந்தது என்ன என்பதே படம் . 

கல்யாணம் ஆன ஓர் ஆணுக்கு இன்னொரு உறவு இருந்தால்    உடனே அந்த இன்னொரு பெண்ணை கேவலமாகப் பார்ப்பது இயல்பு . ஆனால் உள்ளே போய்ப் பார்த்தால் அந்தப் பெண் பின்னாலும் ஒரு நியாயம் இருக்கும் . 

ஆண்கள் ஒரே நேரத்தில் பொண்டாட்டி .காதலி , வப்பாட்டி எல்லாரையும் ஏமாற்றுபவர்கள், செக்ஸ்காக கெஞ்சுவது மிஞ்சுவது , என்ன வேண்டுமானாலும் பொய் சொல்வது, இன்னொரு பெண்ணை சம்மதிக்க வைக்க, தங்கமான  நல்ல மனைவியைத் தூற்றிப் பேச தயங்காதது  …..இப்படி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்… 

இதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் . அதை விட்டு விட்டு அடியே சக்களத்தி என்று அந்தப் பெண் மேல் பாய்வது தவறான செய்கையாகவே இருக்கும்

–  என்பது போல ஒன்றை சொல்ல வரும் இயக்குனர் , படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை போர் அடிக்காமல் என்கேஜ்டு ஆகக் கொண்டு போவதில் வெற்றி பெறுகிறார் .

படம் துவங்கும் விதம்,  ஒளி இருள் பயன்பாடு,  மனைவி கேரக்டரில் லிஜோ மெல்லிய குரலில் பேசுவது ,லிஜோவின் நடிப்பு யாவும் படத்தில் பின்னால்  தேவைப்படும் மூடுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டு இருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று .

கேரக்டருக்கு ஏற்ப அருமையாக நடித்துள்ளார் லிஜோ ஜோஸ் மோல் (பட்சே.. லிஜோ.. நிங்கள் ஈ பிலிமெங்கிலும் தமிழ் என்ற பேரில் நன்னாயிட்டு மலயாளம் பறையின்னது)

இதற்காகவே வேறு வழி இல்லாமல் இவர்களை  நாகர்கோவில்காரர்கள் என்று சொல்ல வேண்டிய கையறு நிலைமை இயக்குனருக்கு . ஸ்தோத்ரம் கர்த்தரே !

சற்று சிக்கலான ஆனால் சிறப்பாக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் லாஸ்லியா.

பூடகமான — என்னமோ நடக்கப் போவுது என்ற உணர்வை ஏற்படுத்தும், காத்தவராயனின் ஒளிப்பதிவு இந்தப் படத்தின் பெரும்பலம்,  கெவின் பிரட்ரிக்கின் ஒழி வடிவமைப்பு, புரோமோ ஒர்க்ஸ் நிறுவனத்தின் டி ஐ , ஆதித்யா கிருஷ்ணனின் வண்ண ஆக்கம் ஆகியவையும் அப்படியே .

கோவிந்த் வசந்தாவின் இசை ஒகே ராகம்.

பிரிட்ஜ் to பிரிட்ஜ் கிளைமாக்ஸ் யூகிக்க முடிந்ததுதான் என்றாலும் பார்க்கும்போது ஒர்க் அவுட் ஆகிறது  . 

பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சக பெண் பத்திரிக்கையாளர், ” என் புருஷன் ரொம்ப குண்டு . பிரிட்ஜ்ல வைக்க முடியுமான்னு தெரியல . தவிர பிரிட்ஜ்ல உள்ள பொருளை எல்லாம் எடுத்து வேற எங்க வைக்கிறதுன்னு தெரியல..”  என்று புலம்பினார். அந்த  அளவுக்கு, கோவக்காரப் பெண்களை ஈர்க்கும் கிளைமாக்ஸ்.

கணவன் துரோகம் செய்தால் பிரிந்து தண்டனை தருவதுதான் சரி.. இப்படி கொலை செய்யத் தூண்டுவதன் மூலம் துரோகத்துக்கு ஆளாகும் பெண்களை  மேலும் ஆபத்தில் தள்ளும் வேலை இது என்று ஒரு வாதம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

ஆனால் துரோகத்துக்குப் பரிசு தண்டனை என்பது சரிதானே . விலக்கி வைத்தால் அவன் இன்னொரு பெண்ணோடு சந்தோஷமாக வாழப் போய்விடுவான். அதில் அவனுக்கு என்ன தண்டனை இருக்கு என்ற வாதம் சரிதானே . 

ஆனால் படத்தில் மனைவி செய்வது சரிதான் என்று சொல்லும் அளவுக்கு எழுத்திலும் நடிப்பிலும் நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.

மைத்துனியின் பின்னால் நின்று கூந்தலை மோந்து பார்த்தது (அதுவும் அதை மனைவி பார்க்கவில்லை) .. அடுத்து வரும் போன் இவைகளை மட்டும் வைத்து உடனடியாக கணவனைக் கொல்கிறாள் மனைவி .

மாறாக கணவன் தவறானவன் என்பதை முன்பே காட்சிகளின் வழி  ரசிகனுக்கு மட்டும்  கடத்தி விட்டு அப்புறம்  திரைக்கதையை இப்படியே நகர்த்தி, மனைவி   கொலை செய்வதை காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக – அந்தக் கொலையை ஏற்றுக் கொள்ளும்படி  இருந்திருக்கும் .

மைத்துனியை மோகிக்கும் காட்சி இல்லாமல்…  மனைவி வந்து பார்க்கும்போது கணவன் அடிபட்டு மயங்கிக் கிடந்தான்… மைத்துனி பக்கத்தில் இருந்தாள்…  என்று ஆடியன்சுக்கும் மனைவிக்கும் சேர்ந்தே காட்டி , தங்கை மேல் அக்காவுக்கு கோபம் வர வைத்து, அப்புறம் போன் வரும் காட்சி இருந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் . 

கிளைமாக்சை நெருங்கும் நேரத்தில் போலீஸ் வைத்து கொஞ்சம் காமெடி பண்ணி இருந்தாலும் அது போதவில்லை,

இவை எல்லாம் சரியாக இருந்திருந்தால் ஜென்டில் மென் போலவே திரையரங்கில் கலக்கும் படமாக  இந்தப் படம் மாறி இருக்கும் .

ஆனால் இன்னும் சிறப்பான திரைக்கதை தேவைப்படுவதால், ஜென்டில்மேன் பட  இன்ஸ்பிரேஷனில் பெயர் வைக்கப்பட்ட இந்த ஜென்டில் உமன்….

 ஒரு சிறப்பான ஓ டி டி படமாகச் சுருங்கி விட்டது 

ஜென்டில் உமன் …. கில்ல்ல்ல் .. லேடி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *