பெஸ்ட் மூவீஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிக்க, ஷாம், நிரா, அறிமுக நடிகர் ரஞ்சித், வெண்பா, நிழல்கள் ரவி, அருள் சங்கர், ஜீவா ரவி நடிப்பில் ஜெகன் என்பவரின் கதைக்கு திரைக்கதை எழுதி அரவிந்த் ராஜகோபால் இயக்கி இருக்கும் படம்.
அஸ்திரம் என்றால் ஆயுதம் என்று சொல்கிறார் படத்தின் இயக்குனர் . கூகுள் கருமமும் அப்படிதான் சொல்லும் .
ஆனால் அம்பு, கட்டாரி, வேல், கவண் கல், துப்பாக்கி, பீரங்கிக் குண்டு , ராக்கெட் , ட்ரோன் அட்டாக் , ரோபோ… ஏன் கொரோனா கிருமி , வாள், கதை, சம்மட்டி, உருட்டுக் கட்டை, மிளகாய்ப் பொடி உட்பட அது ஆயுதமா அஸ்திரமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
யெஸ்.. உங்களிடம் இருந்து விடுபட்டு, பறந்து, பாய்ந்து, நடந்து , ஊர்ந்து , தவழ்ந்து , ஓடிச் சென்று தாக்கினால் அது அஸ்திரம் . உங்கள் கையிலேயே வைத்துக் கொண்டு தாக்கினால் அது அஸ்திரம் அல்ல. ஆயுதம் .
சிம்பிள்.. ஏவப்படுவது எல்லாம் அஸ்திரம் . கையோடு இருந்தால் அது ஆயுதம்.
அப்போது நாய், அஸ்திரமா ஆயுதமா என்று கேட்கக் கூடாது. அது உயிருள்ள ஜீவன். ஆக அஸ்திரம், ஆயுதம் எந்த லிஸ்ட்டிலும் வராது .
ஒகே. கதைக்குப் போவோம்.
ஜப்பானிய அரசர் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடித் தோற்றவர்களை , தங்களைத் தாங்களே வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய வைத்த கதை சொல்லப்படுகிறது .
நிகழ்வில் இப்போது , பல்வேறு ஊர்களில் சில நபர்கள் கத்தியை எடுத்து சற்றும் தயங்காமல் தானே வயிற்றில் குத்திக் கொண்டு, அதுவும் உடனே உயிர் போக வேண்டும் என்பதால் சிறுநீர்ப் பையில் சரியாக குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அவற்றில் ஒன்று கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் அகிலன் ( ஷாம்) சம்மந்தப்பட்ட காவல் நிலையை எல்லையைச் சேர்ந்த பூங்காவில் நடக்கிறது .
வேறு ஒரு விசயத்தில் குற்றாவாளிகளால் தாக்கப்பட்டு கையில் அடிபட்டு ஓய்வில் இருக்கும் இன்ஸ்பெக்டர் அகிலன். ஆர்வத்தோடு அந்த வழக்கு விசாரணையை மேற்கொள்கிறார்.
அவரது மனைவி (நிரா) ஒரு பத்திரிக்கையாளர் . அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்த நிலையில் அப்புறம் குழந்தை உருவாகவில்லை.
மேற்படி வழக்கு விசாரணைக்காக அகிலனுக்கு எஸ் பி (அருள் சங்கர்) யால் நியமிக்கப்படும் இளம் காவல்துறை அதிகாரி (ரஞ்சித்) யின் மனைவி (வெண்பா) கர்ப்பிணியாக இருக்கிறார்.
அகிலனின் கல்லூரி நண்பன் ஒருவன் வெகு நாட்களுக்குப் பின் அகிலனுக்கு போன் செய்து, ” நீ விசாரிக்கும் அந்த அதிசய தொடர் தற்கொலைகள் வழக்கு பற்றி முக்கியமான க்ளூ இருக்கிறது ” என்று சொல்லி சந்திக்க வர, அவன் பேசப் பேச
அந்த ஜப்பானிய மன்னர் படித்த செஸ் (CHESS) என்ற புத்தகம் போன்ற புத்தகம் தனக்கு கிடைத்தது அகிலனுக்கு நினைவுக்கு வருகிறது .
அந்த நேரம் கல்லூரி நண்பனைத் தேடி ஒருவர் வர, இருவரும் அதே பாணியில் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். போலீஸ் பார்வையில் குற்றவாளி ஆகிறார் அகிலன்.
தற்கொலை செய்து கொள்பவர்கள் யார் ? ஏன்? செஸ் புத்தகத்துக்கும் அகிலனுக்கும் அவர்களுக்கும் என்ன சம்மந்தம் என்பதே படம்.
கொடைக்கானல் பின்னணியில் ஒரு சிரத்தையான கிரைம் பட முயற்சி.
ஜப்பானிய மன்னர் பற்றியும் சில பிளாஷ்பேக் சம்பவங்கள் பற்றியும் சொல்லும் அனிமேசன் ஏ ஐ காட்சிகள் அட்டகாசமாக இருக்கின்றன .
கதையை திரைக்கதையாக வசனமாக விரித்து எதைப் பற்றியும் கவலைப் படாமல் நல்ல பிள்ளையாக சொல்லிக் கொண்டே போகிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால்.
லோக்கேஷன்களை அழகாகப் பயன்படுத்தி தனது வேலையை சரியாகச் செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன்.
பாடல் இசையில் செல்ஃப் எடுக்காவிட்டாலும் பின்னணி இசையில் சுந்தரமாக இருக்கிறார் இசை அமைப்பாளர் சுந்தர மூர்த்தி .
ஷாம் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் . இயல்பாக நடிக்கிறார் . நிராவும் அப்படியே.
அறிமுக நடிகர் ரஞ்சித் மென்மையாக இயல்பாக நடிக்கிறார் . குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் மனம் கவர்கிறார் வெண்பா .
பொதுவாகவே நடிக நடிகையர் தேர்வு சிறப்பு.
ஜப்பான் அரசர் , அதை வைத்து எது அஸ்திரம் (அதாவது ஆயுதம்) என்று வித்தியாசமாக சில விஷயங்கள் சொல்கிறார்கள் . ஆனால் முதல் பாதி முடிவிலேயே இரண்டாம் பகுதி ஒப்பன் சீக்ரெட் ஆகப் போய்விட்டது . ஜப்பான் அரசர் கதையை முதலில் சொல்லாமல் விஷயம் வெளிப்படும்போது ஒன்ஸ் ஃபார் ஆல் சொல்லி இருந்தால் படம் இன்னும் என்கேஜிங் ஆக, நன்றாக இருந்திருக்கும் .
ஒரு சம்பவம் நடக்கிறது .. அதை விலாவாரியாகக்க் காட்டுகிறார்கள் . பின்னர் அது பற்றி விசாரிக்க இன்ஸ்பெக்டர் வருகிறார் . அவரிடம் பார்த்தவர்கள் நடந்த சம்பவத்தை விலாவாரியாக சொல்கிறார்கள் . என்ன காட்டப்பட்டதோ அதையே சொல்கிறார்கள் . காட்டப்படாத விஷயத்தை சொன்னால்தானே விசாரணைக் காட்சி தேவை. இல்லை என்றால் அது எதற்கு? அதானே பூபதி சார் எடிட்டிங் ?
அதே போல இறந்து போன ஒவ்வொருவரின் வீட்டில் விசாரிக்கும் காட்சியிலும் இன்னும் ஷார்ப்னஸ் வேண்டும்
இது போன்ற தேவையற்ற ஃ பில்லர்கள் ஆங்காங்கே . கூறியது கூறல் நிறைய .
என்னதான் கதைக்கு நியாயம் என்றாலும், ஏதோ ஒரு நோயின் பெயரைச் சொல்லி விட்டு அதை சாக்காக வைத்து , ஒரு சிறுவன் தன் தம்பியையும் அப்பாவையுமே வன்மத்தோடு கொலை செய்கிறான் என்று சொல்ல வேண்டுமா?
மாறாக சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள பெரிய அறிவார்ந்த பிரபல நபர்களை எல்லாம் அவன் கொலை செய்கிறான் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .
இப்படி பல விசயங்களில் கவனம் செலுத்தி இருந்தால் இது தியேட்டரிக்கல் வெற்றிப் படமாக வந்திருக்கும் .
அஸ்திரம் …. அருமையான குறி . அலட்சியமான ஏவல்.
ரேட்டிங் 3/5