எஸ் பயாஸ்கோப் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி ஜே. பி. ஆர் என்பவர் இயக்க ,
விஸ்வநாத், ரித்விகா, ஆடம்ஸ், இயக்குனர் வெங்கடேஷ், விஜய் கிருஷ்ணராஜ், நித்யா ரவீந்தர், பேபி அம்ருதா, கேசியான் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஓநாய்கள் ஜாக்கிரதை.
ரசிகர்கள் எந்த அளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ? பேசுவோம் .
பெரும் பணக்காரத் தம்பதி ஒன்றுக்கு (விஜய் கிருஷ்ணராஜ்- நித்யா ரவீந்தர்) கல்யாணம் ஆகி பதினாறு ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில் ,
தவமாய் தவம் இருந்து ஒரு பெண் குழந்தை பிறக்கிறது . சிறுமியாக இருக்கும் அதன் மீது உயிரை வைத்து வளர்க்கிறார்கள் .
மனைவியின் தம்பி அழகுவை (விஸ்வநாத்) தங்களில் ஒருவனாக எண்ணி அவனுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து கம்பெனி பொறுப்பையும் ஒப்படைக்க விரும்புகிறார் கணவர் .
ஆனால் மோசமான குணம் கொண்ட அவன் அதை ஒருவரிடம் இருந்து அடிமையாக இருப்பது என்று எண்ணுகிறான் . குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து கோடீஸ்வரனாக விரும்புகிறான் .
கடன்காரனிடம் சிக்கித் தவிக்கும் சரவணன் (ஆடம்ஸ்) , அப்பாவின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப் படும் பாண்டி (கேசியான்) , 
வெளிநாட்டில் இருக்கும் ஒருவரின் பெரிய பங்களாவுக்கு வாட்ச் மேனாக தனி ஆளாக அந்த பங்களாவில் இருக்கும் நபர் ( இயக்குனர் வெங்கடேஷ்) என்று ஒரு நட்பு வட்டம் அழகுவுக்கு
பங்களாவில் கூடி தண்ணி அடிப்பது , வெட்டியாய் ஊர் சுற்றுவது , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயல்வது என்று சுற்றும் கூட்டம் அது .
இந்த நிலையில் ஒரு பிரபல ரவுடியின் தங்கையை(ரித்விகா) யார் என்று தெரியாமலே கடத்தி வரும் நண்பர்கள் அவள் யார் என்று தெரிந்ததும் உயிரோடு விட்டால் ஆபத்து என்று அவளை கொன்று விடுகிறார்கள் .
பிணத்தை அங்கேயே புதைத்து சமாதி மேல் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து விடுகின்றனர் . எனவே அந்த பெண்ணின் ஆவியால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை(யாம்) .
இந்த நிலையில் மாமாவிடம் உள்ள பெரும்பணத்தை சுருட்ட , அவளது மகளான சிறுமியை — அதாவது தன் அக்காள் மகளையே கடத்துகிறான் அழகு .
மாமா உடனே பணத்தை கொடுக்க, குழந்தையை அனுப்பாமல் மேலும் மேலும் பணம் கேட்கிறான் . அவரும் பணம் கோடி கோடியாகக் கொடுத்துக் கொண்டே இருக்க,
இந்த நிலையில் தன்னை மாமாதான் கடத்தி வைத்துள்ளான் என்பது சிறுமிக்கு தெரிகிறது . அவளுக்கு தெரிந்து விட்டது என்பது அழகுக்கும் தெரிய வருகிறது .
எனவே அக்காவிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டு மன்னிப்புக் கேட்கலாம் என்கிறான் .
ஆனால் அழகுவால் பணத்தாசை ஊட்டப்பட்டு பண வெறி பிடித்த மற்ற யாரும் அதை ஏற்கவில்லை . சிறுமியை கொல்ல முடிவு செய்கின்றனர் . கதறியபடி ”என் கண் முன்னால் செய்யாதீங்க ” என்கிறான் அழகு .
இளம்பெண்ணை அழகு கொடூரமாக அடித்துக் கொன்றது போல , சிறுமியை வாட்ச் மேன் அடித்துக் கொல்கிறான்.
சிறுமியை புதைத்து விட்டு அதன் மேல் சாமி சிலை வைக்க மறந்து விட , சிறுமியின் ஆவி வெளியே வருகிறது .
அதன் உதவியால் இளம்பெண்ணின் ஆவியும் வெளியே வருகிறது . அப்புறம் என்ன நடக்கிறது என்பதே இந்த ஓநாய்கள் ஜாக்கிரதை .
இளம்பெண்ணை அழகு கொடூரமாக கொல்வதில் துவங்கும் படம் பிறகு தம்பதியின் மகள் மீதான பாசத்துக்குப் போகிறது .
அழகு அன் கோ வின் திட்டங்கள் பதட்டம் தருகின்றன
குழந்தை கடத்தப்பட்ட நிலையில் தவிக்கும் தவிப்பில் விஜய் கிருஷ்ணராஜும் நித்யாவும் கவனிக்க வைக்கிறார்கள் . கடைசி காட்சியில் விஜய் கிருஷ்ணராஜின் தொடர் புலம்பல் குமுறல் நெகிழ்வு
கடத்தியது மாமன்தான் என்று சிறுமி உணரும் தருணம் லாஜிக் சொதப்பல் என்றாலும் எதிர்பாரா திருப்பம் . 
அதன் பின்பு அழகுவின் மனப்போராட்டம் நண்பர்களின் பண வெறி என்று பதட்டம் கூட்டுகிறது படம்.
இப்படி சில சிறப்பான விஷயங்கள் இருந்தாலும் சொதப்பல்களுக்கும் பஞ்சம் இல்லை .
மாமா கிட்டத்தட்ட வாரிசு போலவே நடத்தும் நிலையில் எதற்கு அழகு அதை விடக் குறைவான பணத்துக்காக தவறான வழியில் போக வேண்டும் ? இந்த அடிப்படையே ஆட்டம் காணுவதுதான் பெரிய குறை .
தவிர நமக்கு பணத் தேவை இருந்தால் யாரையும் ஏமாற்றலாம் , கஷ்டப் படுத்தலாம் , கடத்தலாம் , கொள்ளை அடிக்கலாம் , கொலை செய்யலாம் என்பதை நியாயப் படுத்திக் கொண்டே இருகின்றன வசனங்கள் . அந்தப் பேனா முனை முறிந்து போக !
இதை விட முக்கியம் ‘சாமி அயோக்கியனுக்கு உதவி பண்ணும் . நியாயத்துக்கு துணை போகாது’ என்று கடைசி வரை சொல்லும் படம் இது. நாத்திகத்தை வளர்க்க இதை விட நல்ல படம் இல்லை . ஹா ஹா ஹா ஹா …
எனினும் ‘துரோகம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் . நாம் யாரை சந்தேகப் படவே கூடாது என்று நம்புகிறோமோ அவர்களிடம் இருந்து கூட துரோகம் வரலாம் . கவனம் ‘ என்று சொல்லும் வகையில் கவனத்துக்கு உரியதாகிறது படம் .