ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் , ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர்,
டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்
ஏ ஆர் முருகதாசிடம் உதவியாளராக இருந்த விஜய் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் படம் விதி மதி உல்டா .
ஒற்றைப் பிள்ளையாய் சோம்பேறியாய் வாழும் சுகவாசி இளைஞன் ஒருவனுக்கு ( ரமீஸ் ராஜா ) , 
தன் பெற்றோருக்கு ஒற்றை மகளாய் வாழும் ஓர் அழகான இளம்பெண் ( ஜனனி) மீது காதல் வருகிறது .
அவளும் மறுக்கும் நிலையில் எல்லாம் இல்லை
தரகுத் தொகையை ஒழுங்காகத் தராத ஒருவரிடம் (பேராசிரியர் ஞானசம்மந்தன்) இருந்து பத்து மடங்கு அதிக தொகையை வசூலிக்க எண்ணி அவரது மகனான அந்தக் காதலனை புரோக்கர் (சென்றாயன்) தலைமையிலான ஒரு குழு கடத்துகிறது .
ஒரு பெரிய தாதாவின் (டேனியல் பாலாஜி) தம்பியான ரவுடி ஒருவன் அந்தக் காதலி மீது ஆசைப் பட , தாதாவுக்கு தெரியாமல் அவளை தம்பி கடத்துகிறான்
ஒரு குழுவுக்கு இன்னொரு குழு பற்றிய அறிதல் இல்லாமலேயே ஒரு பாழடைந்த பங்களாவின் அடுத்தடுத்த அறைகளில் இருவரையும் தனித் தனியாக அடைக்கின்றனர் .
இரண்டு குழுவுக்கும் மோதல் வந்து பின் இணைந்து கொள்கிறது .நாயகனும் நாயகியும் தப்பித்து அறைகளை விட்டு வெளியே வருகிறார்கள்
தாதாவின் முக்கிய கையாளான ஒருவன் (கருணாகரன் ) தாதாவுக்கு எதிராகவே சில செயல்களை மறைமுகமாக செய்பவன் . அவனும் அங்கே வர , கடத்தல் குழுக்களுக்கும் அவனுக்கும் சண்டை வர , தாதாவின் தம்பியை அந்த முக்கியக் கையாள் கொல்கிறான். 
இந்த நேரம் பார்த்து நாயகன் நாயகி தப்பிக்கிறார்கள் .
தாதா அங்கு வர, பயந்து போன கொலைகாரன் , தம்பியைக் கொன்றது அந்த காதலன்தான் என்று பழியை நாயகன் மீது போடுகிறான் .
பொங்கி எழும் தாதா , நாயகி , அவளது பெற்றோர் , நாயகனின் பெற்றோர் அனைவரையும் கொன்று விட்டு , ஹீரோவைக் கொல்லாமல் விட்டு ” என் தம்பியை இழந்து நான் படும் வேதனையை நீ பல மடங்கு அனுபவி ” என்று சொல்லி விட்டுப் போக ..
திடுக்கிட்டு விழிக்கிறான் நாயகன் . இதுவரை அவன் பார்த்தது எல்லாம் கனவு … எந்த கொடுமையும் நடக்கவில்லை என்று நிம்மதி அடைகிறான் .
ஆனால் அடுத்த மணி நேரங்களில் ஆரம்பிக்கிறது வில்லங்கம் !
கனவின் துவக்கத்தில் அவன் பார்த்த சில சம்பவங்கள் நிஜத்தில் அதே முகம் கொண்ட நபர்களுடன் நடக்க ஆரம்பிக்கிறது . நடுங்கிப் போகிறான் .
இது இப்படியே தொடர்ந்தால் கடைசியில் அது அவனுடைய அப்பா அம்மா , இன்னும் அறிமுகம் ஆகாத ஓர் அழகான இளம்பெண் அவளது பெற்றோர் ஆகியோரின் மரணத்தில் போய் முடியுமே !
எனவே அப்பாவிடம் சொல்லி புரோக்கருக்கு உடனே பணத்தை கொடுக்கச் சொல்கிறான் . 
கனவில் வந்த பெண்ணும் நேரில் வர, அவளைப் பார்த்து அவள் கடத்தப் பட இருப்பதையும் சொல்கிறான் . கனவில் வந்தது போலவே அவர்களுக்குள் காதலும் வர, இன்னும் பயம் அதிகம் ஆகிறது .
என்ன முயன்றும் கனவில் நடந்த கடைசி நிகழ்வை நோக்கியே சம்பவங்கள் நகர , கடைசியில் நிஜத்தில் நடந்தது என்ன என்பதே இந்த விதி மதி உல்டா .
தமிழ் சினிமாவில் அதிகம் புழங்காத கதை . திரைக்கதையும் சுவாரஸ்யமாகவே போகிறது .
சின்னச் சின்ன நகைச்சுவைகள் , இலகுவான கதை ஓட்டம் எல்லாம் படத்துக்கு பலம் . 
இடைவேளை எல்லாமே கனவு என்று புரிந்து , கனவில் நடந்த ஆரம்ப சம்பவங்கள் போலவே நிஜத்திலும் நடக்கும்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லை . அந்த வகையில் இயக்குனர் விஜய் பாலாஜி பாராட்டுக்குரியவர் ஆகிறார் .
பாடல் காட்சிகளை ரசிப்புக்குரியதாக எடுத்து இருக்கிறார் . ஜனனி அய்யர். யப்பா ஆ ஆ ஆ ஆ …. ! படத்துக்கு ரசிகர்களை கூட்டியே தீருவேன் என்று சபதம் போட்டு ஜனனி அய்யருக்கு காஸ்டியூம் கொடுத்து இருக்கிறார்கள் .
மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு நிலாப் பயணம் போல குளிர்ச்சியாக இருக்கிறது .
பாடல்கள் ஓகேதான் என்றாலும் அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை பெட்டர் .
வன ராஜின் கலை இயக்கம் அருமை . அரங்கப் பொருட்களில் சிரத்தை ! குறிப்பாக ஹீரோ வீட்டு சுவர்க் கடிகாரம், விழுந்து உடையும் கண்ணாடி பாட்டில், ஹீரோவின் அப்பாவுக்கு பரிசாக வரும் போர்வாள்.இப்படி .. இத்யாதி …
ரமீஸ் ராஜா மிக இயல்பாக எளிமையாக கியூட்டாக நடித்து இருக்கிறார் . சிறப்பு . இன்னும் சிறப்பான காதலும் ஆக்ஷனும் கலந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கலாம் .
ஜனனி அய்யர் ரமீஸ் ராஜா என்ற ஜாடிக்கு பக்காவாக செட் ஆகும் மூடி !
டேனியல் பாலாஜி மிரட்டுகிறார் . கருணாகரன் ஜஸ்ட் லைக் தட் . அம்புட்டுதேங் !
சென்றாயன் , அவர் கூட வரும் நண்பர்கள் கலகலப்புக்கு கட்டியம் கூறுகிறார்கள் .
இரண்டாம் பகுதியை இன்னும் சிறப்பாக எழுதி இருக்க வேண்டும் . முற்றிலும் வேறு மாதிரியான சம்பவங்கள் , நல்ல டீட்டெயிலிங் , இன்னும் சுவாரசியம் , பரபரப்பு என்று கொண்டு போய் இருக்கலாம் .
நாயகனின் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு சம்பவங்கள் நடந்து கடைசியிலான விபரீதத்தை நோக்கி பயணிப்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் . 
சில காட்சிகளை காமெடியாக சொல்வதா இல்லை சீரியசாக சொல்வதா என்ற குழப்பமும் தெரிகிறது .
எனினும்
விதிமதி உல்டா .. ஓர் வித்தியாசமான முயற்சி . ரமீஸ் ராஜாவுக்கு நல்ல அடையாளம்
