ஒரு நாள் இரவில் @ விமர்சனம்

 

oru-1

இயக்குனர் விஜய் வழங்க, திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் – இயக்குனர்  விஜய்யின் தந்தையான ஏ.எல்.அழகப்பனும் பால்சன்ஸ் மீடியா சார்பில் சாம் பாலும் தயாரிக்க, சத்யராஜ், யூகி சேது , வருண் , அனு மோள் ஆகியோர் நடிக்க,

பிரபல எடிட்டர் ஆண்டனி திரைக்கதை படத் தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் ஒரு நாள் இரவில் .

மலையாளத்தில் ஷட்டர் என்ற பெயரில் வந்து வெற்றி பெற்று, அதே பெயரில் மாரத்திக்குப் போய் அங்கும் ஹிட்டடித்த படத்தின் தமிழ் மறு உருவாக்கமே இந்த ஒரு நாள் இரவில்.  ரசனை வெளிச்சம் எவ்வளவு இருக்கிறது? பார்க்கலாம் .

சிங்கப்பூர்  சென்று சம்பாதித்துக் கொண்டு வந்து மனைவி (கல்யாணி நடராஜன்) மற்றும் இரண்டு மகள்களுடன் வாழும் மனிதர் அவர் (சத்யராஜ்). அவருக்கு சொந்தமான ஒரு சிறிய ஷாப்பிங் காம்ப்ளெக்சில்  வாடகைக்கு மெக்கானிக் கடை  வைத்திருக்கும் ஒரு நபருக்கும் அவருக்கும் தகராறு.

அதனால் ஏற்படும் பிரச்னை காரணமாக காலியாக இருக்கும் இன்னொரு கடையை அவரால் வாடகைக்கு விடவும் முடியவில்லை. அதை சும்மா பூட்டியே வைத்திருக்கிறார் சிங்கப்பூரார்.

oru-9

சிங்கப்பூர் சென்று சம்பாதிக்க விரும்பும் ஒரு ஆட்டோ டிரைவர் இளைஞன் (வருண்),  சிங்கப்பூர் செல்வதற்காக அவரது உதவியை எதிர்பார்த்து இருக்கிறான். அந்த வகையில் அவர் சொல்லும் வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்வான் அவன்.

தனது ஷாப்பிங் காம்ப்ளெக்சில் , பூட்டி இருக்கும் கடைக்குள் இரவு வேலைகளில் சில நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடிப்பது சிங்கப்பூராரின் வழக்கம். அதற்கு உதவி செய்வதும் ஆட்டோ இளைஞன் .

 சிங்கப்பூராரின், கல்லூரி படிக்கும் மூத்த மகள் (தீக்ஷிதா) ஒரு நாள் சக மாணவன் ஒருவனோடு இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதைப் பார்த்துவிடும் சிங்கப்பூரார், அதை  தீவிரமாகக் கண்டிப்பதோடு பதினெட்டு வயதே ஆகும் அந்தப் பெண்ணின் கல்லூரிப் படிப்பையும் நிறுத்தி உடனடியாக திருமணமும் ஏற்பாடு செய்து விடுகிறார் .

எதிர்க்க முயலும் மனைவிக்கு அடி கிடைக்கிறது . அதன் விளைவாக வீட்டில் வாய்ச் சண்டை வலுக்கிறது . எனினும் அவரே ஜெயிக்கிறார் . அதே நேரம் அந்த வாய்ச் சண்டையில் மனைவியும் பிள்ளைகளும் ரொம்ப பேசிவிட்டதாக வருத்தம் அடைகிறார் .

oru 77

அடுத்து வரும் ஒரு நாள் பகலில் அவனது ஆட்டோவில், பல வெற்றிப் படங்களை இயக்கி , ஒரு தொய்வுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க முயலும் ஓர் இயக்குனர் (யூகி சேது) பயணிக்கிறார் . இறங்கும்போது தனது திரைக்கதைக் கோப்பு அடங்கிய  பையை ஆட்டோவில் விட்டுவிட்டுப் போய் விடுகிறார் அவர்.

அந்த இரவில் நண்பர்களோடு சேர்ந்து கடைக்குள் தண்ணி அடிக்கிறார் சிங்கப்பூரார் . டைரக்டரின் திரைக்கதைப் பையை கடைக்குள் வைக்கிறான் இளைஞன்

ஒரு நிலையில் நண்பர்கள் எல்லோரும் போய் விட , மேற்கொண்டு மது வாங்க ஆட்டோக்கார இளைஞனும் சிங்கப்பூராரும் போகின்றனர் . வாங்கி வரும் வழியில் ஒரு விலைமாதுவை (அனு மோள்) பார்க்கும் சிங்கப்பூரார் , ஆட்டோ இளைஞனிடம் சொல்ல, அவன் அவளை அழைத்து வந்துவிடுகிறான் .

ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கடைக்குள் வந்ததும் , கொலைப் பசியில் இருக்கும் விலைமாதுவுக்கு சாப்பாடு வாங்க போகும் ஆட்டோ இளைஞன் , கடையின் ஷட்டரை வெளியில் பாதுகாப்பு கருதி வெளியே பூட்டி விட்டுப் போகிறான்.

oru-8

வழியில் இயக்குனரை சந்திக்க , அவர் உடனே திரைக்கதைப் பை வேண்டும் என்கிறார்.

அவரை அழைத்துக் கொண்டு சாப்பாட்டுப் பையோடு  வரும் வழியில் மது விலக்குப் போலீசாரிடம் சிக்குகிறான். அங்கு நடக்கும் தள்ளுமுள்ளுவில் பிரச்னை பெரிதாகி அவனை ஸ்டேஷனுக்கு கொண்டு போகின்றனர் .

சரியான சமயத்துக்கு ஷட்டரை திறந்து விடப் போக முடியாத நிலை ஆட்டோக்கார இளைஞனுக்கு. அதை சிங்கப்பூராரிடம் சொல்லி விடலாம் என்று எண்ணி அவரது செல்போனுக்கு போன் செய்து, “அண்ணே.. நான் போலீஸ்ல மாட்டிக்கிட்டேன். நீங்க வேற யாரையாவது வச்சு ஷட்டரை திறந்து அந்த பொண்ணை யாருக்கும் தெரியாம அனுப்பிட்டு வீட்டுக்குப் போயிடுங்க “ என்று சொன்னதும் எதிர்முனை அமைதியாக இருக்க,

அப்போதுதான்  சிங்கப்பூரார் செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டு குடிக்க வந்தது ஆட்டோக்கார இளைஞனுக்கு நினைவுக்கு வருகிறது .

அந்த போனை எடுத்து பேசியது யாரென்றும் தெரியவில்லை . அடுத்த கொஞ்ச நேரத்தில் சிங்கப்பூராரின் உறவுக்காரர்கள் எல்லோரும் பரபரப்போடு வந்து இறங்க , இரவும் விடிய , எல்லா கடைகளும் இயங்க ஆரம்பிக்க, ஷட்டருக்குள் இருக்கும் சிங்கப்பூராரும் விலைமாதுவும் என்ன ஆனார்கள் என்பதே…

oru-99

இந்த, ஒரு நாள் இரவில் படம் .

தமிழில் இந்த வருடத்திய சிறந்த படங்களில் ஒன்றாக வந்திருக்கிறது ஒரு நாள் இரவில் .

மிக இயல்பாக துவங்கும் படம் ஒரு வீடு அதன் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் … இப்படி சுமார் மூன்று கிரவுண்ட் நிலத்துக்குள்ளேயே பெரும்பாலும் நிகழ்கிறது.

மனதில் கல்மிஷம் இல்லாத மகளின் நட்பு , அதை தவறாக நினைத்து தடாலடியாக முடிவெடுக்கும் குடும்பத் தலைவர் , மிக சரியான அம்மாவாய் மகளை நம்பும் மனைவி, குடும்பத்துக்கு வெளியே ஒரு பிரச்னை , சில நட்பு, ஒரு அறிவிக்கப்படாத வேலையாளின் உதவி என்று போகும் கதை,

 விலைமாதுவின் என்ட்ரிக்குப் பிறகு வேறு தளத்தில் களத்தில் கனமாக பயணித்து , அதுவரை வந்த காட்சிகளுக்கு மேலும் அழுத்தமும் அர்த்தமும் தருகிறது . இந்தப் படத்தின் முதல் பிளஸ் பாயின்ட் இதுதான் .

ஒரு பகீர் சஸ்பென்ஸ் படமாக ரசிகனைப் பார்க்க வைக்கும் இயக்குனர் ஆன்டனி அதை கடைசிவரை வெற்றிகரமாக செய்திருக்கிறார். 

oru-999

அதே நேரம் , பெண்களின் படிப்பு பற்றி விலைமாது பேச ஆரம்பித்த காட்சி முதல்,  படம் பல நெகிழ்வான அக்கறையான மரியாதையான மகுடங்களை சூட்டிக் கொள்கிறது . அந்தக் காட்சி முதல் கடைசிவரை இந்தப் படத்தின் மீது வரும் மரியாதையே வேறு .

எல்லாம் முடிந்து வீட்டுக்குள் போன சிங்கப்பூரார்,  தன் மகளுக்கு வரும் ஒரு போன்காலை அடுத்து அவளை எதிர்கொள்ளும் காட்சியில்,  சத்யராஜின் உயர்ந்த உருவம் மெல்ல மெல்ல கரைந்து சுருங்குவது போலவும், அந்த பெண்ணின் உருவம் விஸ்வரூபம் எடுப்பது போலவும் நமக்குள் ஓர் உணர்வு ஏற்படுகிறதே …

அங்கே ஆண்ட்னியின் இயக்கமும் எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவும்( framing , lighting  இவைகள் மூலம் நமக்கு கிடைக்கும் mood) கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கிறது .

அதேபோல  திரைக்கதை பையை தொலைத்த இயக்குனர், தனது நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொல்லி விட்டு நடுரோட்டில் நிற்கும் காட்சியில் , பறந்து விரிந்து அகன்ற பின்னணியில் கேமராவுக்கு நெருக்கமாக யூகி சேது நிற்க வைக்கப்பட்டு இருக்கும் அந்த விதம் , அவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு தனி மனிதன் மட்டும் நிராதவராக நிற்பதை அழகாக உணர்த்துகிறது.

oru 6

அந்த போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து இருப்பதே ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபுதான் . பஞ்ச டயலாக் பேசிக் காட்டும் காட்சியில் நடிப்பிலும் அடடே போட வைக்கிறார் பிரபு .

சிங்கப்பூரார் கழட்டிக் கொடுத்த தங்க நகைகளை வேண்டாம் என்று மறுத்து  விடும் விலைமாது கிளம்பும்போது ‘அவளிடம் ’ உன் பேரு என்ன?’’  என்று சிங்கபூரார் கேட்க , “ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு பேரு . நீங்க வேண்ணா ‘தங்கம்’னு வச்சுக்கங்க. “ என்று சொல்லும் காட்சி…. உட்பட , பல காட்சிகளில் ஜொலிக்கிறார் வசனகர்த்தா  யூகி சேது . (நடிப்பிலும் சிறப்பு )

சிங்கப்பூராக உணர்ந்து நடித்து வாழ்ந்திருக்கிறார் சத்யராஜ். அவருக்கு சொல்லவா வேண்டும்? முகத்தால் மட்டுமே கவர்ச்சி, உணர்வால் நெகிழ்ச்சி, உடல் மொழிகளால் மலர்ச்சி என்று…. விலைமாதுவாக வரும் அனுமோள் தனது நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்..

oru 4

ஆட்டோ டிரைவராக வருண் உற்சாகமாக — கேரக்டருக்கு பொருத்தமாக—நடித்து இருக்கிறார். இயல்பான வார்த்தைகளை இயல்பாக பேசுவது போன்ற விசயங்களில் இன்னும் கவனம் வேண்டும். உதாரணமாக,  ‘’அண்ணே….!’’  சரியா தம்பி?

தீக்ஷிதா இனி தமிழ் சினிமாவால் ஆவலோடு கவனிக்கப்படுவார் .

oru 3

‘’பிள்ளைங்கள நம்பணும். சிங்கப்பூர்ல நீங்க தனியா இருந்த காலத்துல நாங்க உங்கள சந்தேகப்பட்டோமா?’’ என்று வினவும் காட்சியிலும் கடைசிக் காட்சிகளிலும் கல்யாணி நடராஜன் கவனிக்க வைக்கிறார்

இரண்டே காட்சிகளில் வந்தாலும் ஒரே வசனத்தின் மூலம்,  படத்தின் முதல் காமெடி வெடியை வெடித்து விட்டுப் போகிறார் இயக்குனர் சுந்தர்ராஜன் .

oru 5

அநேகமாக சினிமா உலகில் ரஜினிக்குப் பிறகு வெகு வேகமாக பேசுபவர் இயக்குனர் கவுதம் மேனன்தான் போல . யப்பா … !

ஷட்டர் கடைக்குள் ஆர்ட் டைரக்ஷன் மட்டும் செயற்கையாக இருக்கிறது.

பொதுவாக ஒரு மொழியில் வந்த படத்தை மற்ற மொழியில் மறு உருவாக்கம் செய்யும்போது மூல மொழிப் படம் அளவுக்கு மறு உருவாக்கம் சிறப்பாக  அமையாது. அதே போல மூல மொழிப் படத்தை விட மறு உருவாகப் படங்கள் நீளத்தில் அதிகமாகவே இருக்கும் . இந்த இரண்டையும் அடித்து உடைத்து அசத்தி இருக்கிறார் எடிட்டர் – திரைக்கதையாசிரியர் – இயக்குனர் ஆண்டனி .

ஷட்டர் படத்தை விட ஒரு நாள் இரவில் படத்தின் கால நீளம்  நாற்பது நிமிடம் குறைவு ! இதுவே ஒரு பெரிய சாதனை .

ஷட்டருக்குள் சிக்கிய நாயகனுக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றத்தை உருவாக்கிய விதத்தில் ஒரு நாள் இரவை விட ஷட்டர்தான் இப்போதும் பெஸ்ட் . (ஒரு நாள் இரவில் படத்தில் சத்யராஜின் பாத்திரப் படைப்பு கையாளப்பட்ட விதம் காரணமாக அந்த பயம் குறைந்து விட்டது )

ஆனால் இந்தக் கதையின் பலம் அந்த சஸ்பென்சில் இல்லை . ஷட்ட்ருக்கு வெளியே வீட்டுக்குள்தான் இருக்கிறது என்று ஆன்டனி முடிவெடுத்த விதம்தான் கிளாஸ் !

அந்தக் காட்சிகள் மலையாளத்தில் ஓவராக வளவளவென இருக்கும் . ஆனால் அதில் மிக முக்கியமான ஒரு காட்சியை ஒரு வசனம் கூட இல்லாமல் ஆண்டனி கையாண்டிருக்கும் விதம் … அதுதான் இந்த ஒரு நாள் இரவு படத்தை ஷட்டரை விட பெட்டராக உசத்தி அசத்தி விட்டது . இப்படி ஒரு படத்தை வழங்கி இருக்கும் இயக்குனர் விஜய்க்கு பாராட்டுகள். 

oru7

பாபநாசம் திரிஷ்யம் இரண்டிலும் த்ரிஷ்யம்தான் பெஸ்ட் என்று சொல்பவர்கள் கூட மன சாட்சியோடு பேசினால்,  ஷட்டரை விட ஒரு நாள் இரவில்தான் பெஸ்ட் என்று மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வார்கள்.

லாஜிக்படி பார்த்தால் இந்தப் படத்திலும் குறைகள் உண்டு . ஷட்டரை திறக்க வேண்டும் என்று நினைத்தால் ஆட்டோக்காரன் காவல் நிலையத்துக்குப் போன அடுத்த அரை மணி நேரத்தின் எந்த பிரச்னையும் இல்லாமல் ஷட்டரை திறந்து விட்டிருக்க முடியும் .

அதே போல ஆட்டோ இளைஞன் பிரச் னை உள்ள இடத்துக்குப் போகாமல் டைரக்டர் கூடவே ‘’ஐடியா கொடுங்க ஐடியா கொடுங்க..’’ என்று சுற்றுவதும், மாறுவேடத்தில் (?!?) போய், கும்பலைப் பார்த்து விட்டு வந்துவிடுவதும் செம போங்கு.

ஆனால் இது லாஜிக் பாக்கிற படமே அல்ல. உணர்வுகளின் நெகிழ்வான உரசலையும் மனித மதிப்பீடுகளையும் சொல்லும் படம் இது . பொது வெளியில் கீழமையாகத் தெரியும் சில மனிதர்கள் , தங்களுக்கான தனி வெளியில் எப்படிப்பட்ட சிகரங்களில் இருக்கிறார்கள், அல்லது கேவலமான பள்ளங்களில் இருக்கிறார்கள் என்பதை சொல்லும் படம் இது.

எனவே அந்த லாஜிக் குறைபாடுகள் இந்தப் படத்தைப் பொறுத்தவரை குறைபாடுகளே அல்ல.

அதே நேரம் மேற்சொன்ன காரணங்களாலேயே, பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்த்த அயோக்கிய நண்பனுக்கான எதிர்விளைவை காட்சிப்படுத்தாதது சற்றே உறுத்துகிறது.

எனினும்,

ஒரு நாள் இரவில்… சித்திரை வானில் சித்திரம் தீட்டும் பத்தரை மாற்றுப் பவுர்ணமி

 

மகுடம் சூடும் கலைஞர்கள்

—————————————-

ஆன்டனி, எம் எஸ் பிரபு, இயக்குனர் விஜய், யூகி சேது, சத்யராஜ், கதாசிரியர் ஜாய் மேத்யூ, அனு மோள்,  ஏ.எல்.அழகப்பன், தீக்ஷிதா, சாம் பால் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →