எஸ் எஸ் எஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ.ஏ. லாரன்ஸ் வழங்க, மேக்னாஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சஜீவ் தயாரிக்க, விவேக், சோனியா அகர்வால், பழம்பெரும் நடிகை ஷீலா ஆகியோர் நடிப்பில், எம்.சந்திரமோகன் இயக்கி இருக்கும் படம் பாலக்காட்டு மாதவன் .
மாதவன் என்ன சொல்கிறான் ? பார்க்கலாம் .
பாலக்காட்டு மாதவன் (விவேக்) என்கிற பிராமண அம்பி ஒழுங்காக வேலைக்கு போக விரும்பாத சோம்பேறி . அவனது ஆத்துக்காரியான லக்ஷ்மி (சோனியா அகர்வால் ), மிகவும் பொறுப்புணர்வும் உழைக்கும் திறனும் உள்ள பெண். இந்த தம்பதிக்கு, ஆரம்பப் பள்ளி வயதில் இரண்டு பெண் குழந்தைகள் .
மாதவன் – லக்ஷ்மி இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும், வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பஸ்ஸில் ஏறி நசுங்கிக் கசங்கி கஷ்டப்பட்டு , சரியான நேரத்துக்கு லக்ஷ்மி ஆபீசுக்கு போய் விடுவாள். ஆனால் மெதுவாக எழுந்து ஜாலியாக குளித்து விட்டு ஸ்கூட்டரில் லேட்டாக ஆபீசுக்கு வருவான் மாதவன் .
குடும்பத்துக்கு வருமானமும் போதாத நிலை .
மாதவனின் பொறுப்பின்மையை அலுவலக நிர்வாகி (மனோபாலா) கண்டிக்க, அந்த வேலையை விடும் மாதவன், குறைந்த வேலை அதிக சம்பளம் என்ற குயுக்தித் திட்டத்தோடு ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவர் வேலைக்கு போகிறான். அங்கும் வருமானம் சரி இல்லாத நிலையில் ஒரு அமைச்சரிடம் ( ‘யோகி’ தேவராஜ் ) ‘பி.ஏ. வேலை; சம்பளம் முப்பதாயிரம் ரூபாய்’ என்று சொல்லி அழைக்கிறார்கள் .
சந்தோஷமாக வேலைக்கு சேர்ந்தால், அமைச்சருக்கு அரசியல் எதிரிகள் நிறைய உள்ள நிலையில், அவருக்கு சாப்பாட்டில் யாராவது விஷம் கலந்து விடுவார்கள் என்ற அச்சம் இருப்பதால், , அமைச்சர் சாப்பிடும் சாப்பாட்டை முதலில் சாப்பிட்டுப் பார்த்து விஷம் இல்லை என்பதை அறிய உதவும் வேலைதான் அது, என்பது தெரிய வருக்கிறது .
அந்த வேலையில் தொடர்ந்தால், எப்போது வேண்டுமானலும் தன் உயிர் போய் விடலாம் என்று தெரிய வர, அலறி அடித்துக் கொண்டு வெளியேறும் மாதவன், ஒரு தவறான மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனியை நம்பி பணம் கட்டி அதிலும் ஏமாறுகிறான் .
பணச் சிக்கல் பெரிதாக, எப்படியாவது அதிக பணம் சம்பாதிக்க விரும்பும் மாதவனுக்கு ஒரு விஷயம் தெரிய வருகிறது .
பணக்கார பெண்மணியான பட்டு மாமியின் (செம்மீன் ஷீலா ) மூன்று மகன்களும் , வயதான பட்டு மாமியை வைத்துப் பரமாரிக்க விரும்பாமல் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள் .மாமியின் பெயரில் முப்பது லட்ச ரூபாய் பணம் வங்கியில் இருக்க, அதில் வரும் இருபத்தைந்தாயிரம் வட்டி பணம் அந்த முதியோர் இல்லத்துக்குப் போகிறது .
‘பட்டுமாமியை தத்து எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டால் அந்த பணம் நமக்கு வரும் . பின்னாளில் முப்பது லட்சம் ரூபாய் பணமும் கிடைக்கும்’ என்று எண்ணும் மாதவன் அதன்படியே செய்கிறான் .
மாமியை அக்ரஹாரத்துக்கு கொண்டு வந்து தன் வீட்டில் வைத்து நிஜமான தாய்ப்பாசத்தோடு பார்த்துக் கொண்டு பணிவிடை செய்கிறான் . சமையல் முதற்கொண்டு எல்லாம் வேலைகளும் செய்கிறான் .
ஆனால் வகை வகையாய் சாப்பிடும் பெருஞ்சோத்துகாரியான மாமிக்கு ஆகிற செலவோ, அவள் மூலம் வருகிற இருபத்தைந்தாயிரம் பணத்தை விட அதிகம் ஆக, மாமி வந்த பிறகு குடும்ப பட்ஜெட்டில் பற்றாக்குறை இன்னும் ஏழாயிரம் அதிகம் ஆகிறது .
தவிர, சுய மரியாதை உள்ள லக்ஷ்மியிடம், பட்டு மாமி, தனது மாமியார் பவிசைக் காட்ட, இருவருக்கும் முட்டிக் கொள்கிறது.
ஒரு நிலையில் மாமி மாதவனின் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் . வழியில் மாமியை பார்க்கும் அவளது சொந்த மகன்கள், அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள் .
மாதவனின் வீட்டில் அவனது பிள்ளைகள் பாட்டி வேண்டும் என்று அழுகின்றன . மாமி தன் நகைகள் சிலவற்றை ரகசியமாக லக்ஷ்மிக்கு என்று வைத்து விட்டுப் போயிருக்க, அது தெரியாத லக்ஷ்மி “இதை மாமி மறந்து வச்சுட்டுப் போய்ட்டா. போய்க் கொடுத்துட்டு வந்துருவோம் . வாங்கோ ” என்று மாதவனை அழைக்க, இருவரும் மாமியின் வீட்டுக்குப் போகிறார்கள் .
மாமியின் பிள்ளைகள் மாமியின் பெயரில் உள்ள முப்பது லட்ச ரூபாய் பணத்தை வாங்கத்தான் பொய்ப் பாசம் காட்டி அழைத்து வந்துள்ளார்கள் என்பது அப்போதுதான் மாமிக்குத் தெரிய வருகிறது . மறுக்கும் மாமியை பிள்ளைகளும் மருமகள்களும் அடிக்க… அந்த நேரம் பார்த்து மாதவனும் லக்ஷ்மியும் உள்ளே நுழைய
அப்புறம் என்ன என்பதே இந்தப் படம்
வழக்கமான காமெடி ‘பஞ்ச்’களால் கவர்கிறார் விவேக் . எனவே சிரிப்புக்கு பெரிதாகப் பஞ்சம் இல்லை . மலேசிய கற்பனைப் பாட்டில் வித விதமான கெட்டப்களில் அசத்தி விட்டு, கடைசியில் பாட்டையும் தன் பாணியில் காமெடியாக முடிக்கிறார் விவேக்
கிளாமருக்கும் பயன்பட்டிருக்கிறார் சோனியா அகர்வால் . அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் ஏனோ எலிமண்ட்ரி ஸ்கூல் டீச்சர் மாதிரி பேசி இருக்கிறார் . எனி பிராப்ளம்?
தனது நீண்ட நெடிய நடிப்பு அனுபவத்தில் பட்டு மாமி கேரக்டரை,
போகிற போக்கில் ஊதித் தள்ளியபடி அனாயாசமாக நடிக்கிறார் ஷீலா . அருமை
மனோபாலா , கிரேன் மனோகர், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.
கே.எஸ். செல்வராஜின் ஒளிப்பதிவு ஒகே ரகம். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன.
அவ்வப்போது சிரிக்க வைத்தபடி நகரும் படம் கடைசியில் செண்டிமெண்ட் கனம் ஏற்றிக் கொண்டு, பாஸ் ஆகிறது
பாலக்காட்டு ….. தவன் !