பரஞ்சோதி @ விமர்சனம்

paranjothi 3

ஐ பி எல் சினிமாஸ் சார்பில் என்.லட்சுமணன் தயாரிக்க, அறிமுக நாயகன் சாரதி- அன்சிபா இணையராக நடிக்க, கோபு பாலாஜி என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி,  இயக்கி இருக்கும் படம் பரஞ்சோதி .

எவ்வளவு வெளிச்சம் தெரிகிறதென்று பார்க்கலாம் .

அடிப்படையில் நல்லவர்களாக இருந்தாலும் ஜாதி வெறி பிடித்து அலையும் கிராமத்து மக்கள். தன் ஜாதியோடு தனக்கு இணையான வேறு ஜாதி கூட கலக்கக் கூடாது என்று குறுகிய மனப்பான்மையோடு இருக்கும் குணம்.

அடிபட்ட கண்ணுக்கு மருந்தாக ஊற்ற அன்னிய ஜாதிப் பெண்ணின் தாய்ப்பாலைக் கூட அனுமதிக்காத ஜாதி வெறி பிடித்த ஊர்ப் பெரிய மனிதரின்(விஜயகுமார்) மகனுக்கும் (சாரதி ), எல்லா விசயங்களிலும் நியாயம் பேசினாலும் ஜாதி மாறிக் கல்யாணம் செய்வதை மட்டும் அனுமதிக்காத — இன்னொரு  ஊரைச் சேர்ந்த – பெரிய மனிதரின் (‘சங்கர் குரு’ ராஜா) மகளுக்கும் (அன்சிபா) காதல்.

paranjothi 4

தன் ஜாதிப்பெண்ணை வேறு ஜாதிப்பையன் யாராவது  காதலித்து கல்யாணம் செய்து ,  அதனால் பிரச்னை என்று ஏற்பட்டு அந்த வேற்று ஜாதிப் பையன் ஜெயிலுக்கு வந்தால் , அவனை   ஜெயிலில் வைத்துக் கொலை செய்யும் அளவுக்கு  ஜாதி வெறி பிடித்த ஒருவனை (போஸ் வெங்கட்),  கொம்பு சீவி வளர்க்கிறார் ஒரு ஜாதிக்கட்சித் தலைவர் (பாலாசிங்).

கதாநாயகியின் ஊரில் ஏற்பட்ட ஒரு ஜாதி மோதலில் பலபேரைக் கொன்று விட்டு ஜெயிலுக்கு வந்தவன் அந்த ஜாதி வெறிக் கைதி,

ஒரு நிலையில் காதல் ஜோடியின் காதல் ஊருக்குத்  தெரிகிறது . இரண்டு பேரின் தகப்பன்களுமே இருவரையுமே கொன்று போடத் துடிக்கிறார்கள். ஆனால் இது ஜாதி மோதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரச்னை மற்ற ஊர்களுக்கும் பரவக் கூடாது என்ற ‘நல்ல எண்ணம்’ காரணமாக,  காதல் ஜோடியை ஊரை விட்டுத் தள்ளி வைக்கிறார்கள்.

ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள குடிசையில் நாயகன் நாயகி இருவரும் வாழ்கிறார்கள்.ஒரு குட்டி நாயை எடுத்து வளர்க்கிறார்கள். நாயகன் வேலைக்கு போகிறான் . சந்தோஷ வாழ்க்கையில் நாயகி கர்ப்பம் ஆகிறாள். நாயகனின் தாய்மாமன்(கஞ்சா கருப்பு ) ஊரைப் பகைத்துக் கொண்டு வந்து தம்பதிக்கு துணை இருக்கிறான்.

நாயும் வளர்கிறது . நாயகனின் அம்மா (கீதா) ஒரு விபத்தில் மரணம் அடைய,  அந்த நேரம் பார்த்து நாயகன் வெளியூரில் இருக்க, ஊர்க்கட்டுப்பாடு காரணமாக அவனிடம் சொல்லாமல் கூட அம்மாவின் உடலை எரித்து விடுகின்றனர் .

இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளிப்படும் அந்த ஜாதி வெறி பிடித்தவனுக்கும் நாயகிக்கும் என்ன உறவு என்பது சொல்லப் படுகிறது . ஜெயிலில் இருந்து வெளியே வரும் அவன் ஒரு பெரிய கூட்டத்தோடு வந்து கர்ப்பிணியாக இருக்கும் நாயகியையும் , தாய் மாமனையும் கொல்கிறான். வெறி கொண்டு எழும் நாயகன் , சம்மந்தப்பட்ட  அனைவரையும் சீவித் தள்ளுகிறான்.

குற்றவாளியாக ஜெயிலுக்குப் போகும் நாயகன் தண்டனை முடிந்து மீண்டும் அந்த குடிசைக்கு வருகிறான் . அவனுக்கு இப்போது நாய் மட்டுமே துணை . ஒரு நிலையில் அவனும் மரணம் அடைய , அவன் பிணத்தை எரிக்கக் கூட ஏற்பாடு செய்யாமல் அவனது அப்பா, மாமனார்- மாமியார் உட்பட எல்லோரும் கண்டு கொள்ளாமல் இருக்க ,  பிணத்துக்கு என்ன ஆச்சு என்பதே இந்தப் படம்.

paranjothi 1

உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒன்றிணைந்து வாழ்வது அவ்வளவு பெரிய பாவமா ? இன்னும் இந்த ஜாதி வெறியும் கவுரவக் கொலைகளும் தேவையா என்ற கேள்வியை எழுப்புகிறது படம் .

பழைய கதைதான் என்றாலும் ஃபேஸ்புக்கில் ஜாதி வளர்க்கும் பண்ணாடைகள் பெருகும் இந்தக் காலத்துக்கும் தேவையான கதைதான் . சொல்லப்பட வேண்டி விசயம்தான்.

எந்த விதத்திலும் பாதிக்காமல் ரொம்ப அன்னியமாக முதல் பாதி கடக்கிறது. ஆனால் இரண்டாம் பகுதி நேர் மாறாக இருக்கிறது 

ஊருக்கு ஒதுக்குப் புறமாக வசிக்கும் குடிசை மற்றும் களத்து மேட்டில் கள் குடித்த போதையில் கதாநாயகி ஆடும் மழை நேரக் கவர்ச்சிப் பாட்டு, கலங்க வைக்கும்  அம்மாவின்  மரணம் மற்றும் அது தொடர்பான காட்சிகள், சப் கலெக்டர் வரும் காட்சிகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு, ஜாதி வெறிக் கொலைகாரனுக்கும் நாயகிக்கும் என்ன உறவு என்பது பற்றிய டுவிஸ்ட், பதற வைக்கும் மரணக் காட்சிகள், ஜாதி வெறி பிடித்த மனிதர்களின் முகத்தில் மானசீகமாகக் காறி உமிழும் அந்த ‘உயிரி’ய கிளைமாக்ஸ் என்று ….இரண்டாம் பகுதி ஒரு நிஜமான வாழ்வியல் சூழலை உணரவைக்கிறது . பாராட்டுகள்.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் மற்றும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் இரண்டுக்கும் இடையிலான அண்மைக்கால நிஜ ஜாதி மோதல்கள் , கவுரவக் கொலைகளை சொல்ல நினைத்து இருக்கிறார் இயக்குனர் கோபு பாலாஜி. ஆனால் படம் பிரச்னை இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டுமே என்ற பயத்தில் இரண்டு சாதிகளையும் சம அந்தஸ்துள்ள சாதிகள் என்று சொல்லிவிட்டார் . ஆனாலும் அவர் சொல்ல வருவதை நாம உணர முடிவது அவருக்கான வெற்றி .

Sarathy, Ansiba Hassan in Paranjothi Movie Stills

சாரதி முயன்று நன்றாக நடிக்கிறார் . அன்சிபா ஏழைக்கேத்த எள்ளுருண்டை. (ஆனால் சைஸ் கொஞ்சம் பெரிசு. அதாவது எள்ளுருண்டையின் சைஸ்! ). விஜயகுமார், கீதா, ராஜா, மீரா, கஞ்சா கருப்பு, ஷகீலா எல்லோரும் அவர்களுக்கே உரிய ஆண்டாண்டு கால பாணியில் நடிக்கிறார்கள். இவர்களை எல்லாம் எப்படி கொண்டாட ஒன்றும் இல்லையோ அப்படியே குறை சொல்லவும் எதுவும் இல்லை.

சபேஷ் முரளி இசையில் பாடல்கள் கேட்கையில் உறுத்தவில்லை. ‘வெண்ணிலவே ‘ பாடல் இனிமை . ‘இடி மின்னலோடு’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது . பொன்னுமணி படத்தில் இடமே பெற்ற ‘’அன்பை சுமந்து சுமந்து ..’ பாடலை உல்டா செய்து போட்டு இருக்கும் ‘அம்மா…அம்மம்மா’ பாடல் கனம் சேர்க்கிறது.

பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து கடித்து உறிஞ்சி விஷம் எடுக்கும் (?!) பாக்தாத் திருடன் படக் காலத்துக் காட்சிகளை இன்னுமா விட மாட்டீங்க ?

அதே போல , காமெடி என்ற பெயரில் சிங்கமுத்துவை நிஜமான பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து , படு கேவலமாக மேக்கப் மற்றும் கெட்டப் கொடுத்து….

Singamuthu, Mayilsamy in Paranjothi Movie Stills

அதுவும் கணவன் இருக்கும்போதே அவருக்கு மயில்சாமியோடு கள்ளக்காதல், முதலிரவுக் காட்சிகள் என்று காட்சிகள் வைத்திருப்பது அருவறுப்பின் உச்சம் . இதெல்லாம் என்ன ரசனை என்ற தெரியவில்லை.

அதே போல முழுசாக முகம் சுருங்கிய –கிராமத்துக் கருப்புப் பாட்டிக்கு சுண்ணாம்பு அடிப்பது போல வெள்ளை வெளேர் என்று மேக்கப் போட்டு.. சந்தையில் தொங்கும் கலர் பிரா வேண்டும் என்று அந்த பாட்டி அடம் பிடிப்பது போல காட்சிகள் வைப்பது … இதெல்லாம் காமெடியாம் . சகிக்கல .

எனினும் ஜாதி வெறியின் தீவிரத்தை சொல்லி,  படம் பார்ப்பவரை ஒரு நிமிடமாவது யோசிக்க வைக்கும் வகையில் பாராட்டுக்குரிய படமாகிறது இந்தப் படம்

 

பரஞ்சோதி …. அகல் விளக்கு

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →