எவோக் நிறுவனம் சார்பில் ஏ. மதிவாணன் தயாரிக்க, பாரதிராஜா, விஜய் யேசுதாஸ், அம்ரிதா நடிப்பில் , மணி ரத்னத்திடம் உதவியாளராக இருந்த தனா எழுதி இயக்கி இருக்கும் படம் படை வீரன் . போர்ப் படையா ? சொறி சிரங்கு படையா ? பேசுவோம்
தென் தமிழ்நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கில் முக்குலத்தோர் செறிந்து வாழும் பகுதி . அங்கே வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்களுக்குமான சாதிப் பகை , தீண்டாமை உணர்வு .
அந்தப் பகுதியில் அடுத்தடுத்த கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தீண்டாமைக் கொடுமை இருந்தாலும் ஒரு நிலையில் இரு தரப்பும் சற்று நிதானமாகப் போவதும் உண்டு .மேல் சாதியில் நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் சும்மா சுற்றிவரும் இளைஞன் முனீஸ்வரன் ( விஜய் யேசுதாஸ்) .
அவன் மேல் பாசம் உள்ள பெரியப்பா -முன்னாள் ராணுவ வீரர் கிட்ணன் (இயக்குனர் இமயம் பாரதிராஜா ) . அவனது அப்பா ( இயக்குனர் மனோஜ்குமார்) மற்றும் ஒரு அக்கா .
மலர் என்ற பெண்ணுக்கும் (அம்ரிதா) அவனுக்கும் ஒரு நிலைவரை மோதல் பிறகு காதல்
அவர்களது உறவுகளில் ஜாதி வெறி பிடித்தவர் பெரியசாமி (கவிதா பாரதி ). முனீஸ்வரனுக்கும் ஜாதி வெறி உண்டு
முனீஸ்வரனுக்கு போலீஸ் வேலையின் அருமை பெருமைகளை சொல்லி அவனை போலீஸ் டிரைனிங்குக்கு அனுப்பி வைக்கிறார் கிட்ணன் .
இந்த நிலையில் முனீஸ்வரனுக்கு உறவினனும் நண்பனுமான ஒருவனின் சகோதரியான ஓர் இளம் விதவைத் தாயை தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவன் விரும்ப , , பெண்ணுக்கும் விருப்பம் இருந்தும், விளைவை எண்ணி மறுக்கிறாள் .
எனினும் இதை மோப்பம் பிடிக்கிறது ஊர் . தன் சாதிப் பெண்ணையும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனையும் கொல்கிறது. இதனால் இரு சாதிக்கும் மோதல் வந்து கலவரம் வெடிக்கிறது .
இந்த சமயம் கலவரத்தை அடக்க வரும் போலீஸ் படையில் முனீஸ்வரனும் வருகிறான். ஊரும் உறவுகளும் அவனை எப்படி எதிர்கொள்கிறது . அவன் எப்படி ஊரையும் உறவுகளையும் எதிர்கொண்டான் என்பதே படை வீரன் .
நல்ல கதைச் சூழல் , கதை நிகழும் இடச் சூழல் ஆகியவை படத்துக்கு பலம் சேர்க்கின்றன .
ஒரு காட்சி .. அதில் இருந்து கிளைத்து பின்னாடி வரும் இன்னொரு காட்சி… என்று அர்த்தமுள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் தனா . படமாக்கல், நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதம் , இயக்கம் ஆகியவையும் அருமை .
தன் தம்பி முனீஸ்வரனை குறை சொல்லும் நாயகி மலரை , முனீஸ்வரனின் அக்கா புஷ்பா திட்டி ஒரே காட்சியில் காதலை நோக்கி திருப்பும் விதமும் இயக்குனருக்கு சிறப்பு சேர்க்கின்றன .
க்கும் என்ற கனைப்பை ஆம் இல்லை என்று இரண்டுக்கும் பொருத்தும் விதம் அழகு .
படத்தின் கடைசி காட்சிக்கு விதையான காட்சியை படத்தின் நடுவில் ஜஸ்ட் லைக் தட் கோர்த்து விட்டிருக்கும் அழகும் ஜாலம் !
விதவைத் தாய் கொல்லப் படும் விதத்தை காட்சிப் படுத்திய வகையில் நம்மை உறைய வைத்து, ஓர் இயக்குனராக அசத்துகிறார் தனா .
கார்த்திக் ராஜாவின் இசையில் மண் வாசனை இருக்கிறது . எனினும் பாடல் இசை பின்னணி இசை இரண்டுமே இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம் .
ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவு கண்ணனுக்கு குளிர்ச்சியாக இருப்பதோடு காட்சியின் உணர்வை அருமையாகக் கடத்துகிறது .
புவன் ஸ்ரீனிவாசனின் படத் தொகுப்பும் பாராட்டுக்குரியதே . .
கிட்ணன் கதாபாத்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அட்டகசாமான நடிப்பால் விஸ்வரூபம் எடுத்துள்ளார் இயக்குனர் இமயம் பாரதி ராஜா . ஜாதி வெறிப் பெரிய மனிதராக வரும் கவிதாபாரதியும் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் .
முனீஸ்வரனின் அக்கா புஷ்பாவாக நடித்து இருக்கும் நிஷா மிக சிறப்பாக நடித்துள்ளார் .
விஜய் யேசுதாசின் முகம் , நடிப்பு, குரல் , மலையாள நெடி வீசும் பேச்சு எதுவும் முனீஸ்வரன் கதாபாத்திரத்துக்கு கொஞ்சம் கூட கடைசி வரை பொருந்தவில்லை . படத்தின் ஆகப் பெரும் குறை அதுவே .
நாயகி அம்ரிதா சிறப்பு .
மற்றபடி பொதுவில் கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு மிக சிறப்பு .
இரண்டாம் பகுதி இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம் . கலவரமும் முனீஸ்வரன் ஊருக்குள் கால் வைப்பதும் ஒரே ஷாட்டில் நிகழ வேண்டும் .
கலவரப் பகுதிக்கு போவதாக முனீஸ்வரன் இருக்கும் போலீஸ் படைக்கு தகவல் சொல்வது எல்லாம் தேவை இல்லாத காட்சி .
முனீஸ்வரனின் சென்னை நண்பன் தேனிக்கு வர விரும்புவதை அந்தக் காட்சியில்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லையே
விதவைப் பெண் இறந்த நிலையில் கிட்ணன் (பாரதிராஜா) பொங்கி எழும் காட்சியை இப்படியா ஜஸ்ட் லைக் தட் முடிப்பது ? அந்தக் காட்சி ஒரு பிரளயமாக அமைந்து இருக்க வேண்டாமா ?முனீஸ்வரன் கதபாத்திரத்துக்கான முடிவாக படத்தில் காட்டப்படும் முடிவு சரியாகவே இருக்கட்டும் . ஆனால் இந்தப் படத்துக்கு இது பொருத்தமான முடிவா ? ஆம் எனில் எதற்கு இந்த படைப்பு என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை .
அது படத்தின் இன்னொரு குறை .
மற்றபடி படை வீரன் .. களம் காண்பான் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————-
அறிமுக இயக்குனர் தனா , இயக்குனர் இமயம் பாரதி ராஜா, இயக்குனர் கவிதா பாரதி, நிஷா