வி ஸ்டுடியோஸ் சார்பில் விஜி சுப்பிரமணியன் தயாரிக்க, புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடிக்க,
சமுத்திரக்கனி, மீனாட்சி, வேல ராமாமூர்த்தி , மைம் கோபி நடிப்பில் பி ஜி முத்தையா கதை திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் மதுர வீரன் .
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் நடித்த, காலத்தால் அழியாத திரைக்காவியம் மதுரை வீரன் . அந்தப் பெயரையே பேச்சுவழக்கில் மதுர வீரன் என்று ஆக்கி இருக்கிறார்கள் .
தவிர மதுரம் என்ற சொல்லுக்கு தித்திப்பு என்றும் ஒரு பொருள் உண்டு . (( உதாரணம் தே(ன்) மதுரத் தமிழ் ஓசை !))
சரி, இந்த மதுர வீரன் , தீரனா இல்லை கோரனா ? பேசுவோம் .
மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் வாழும் நல்ல மனிதரான ரத்ன வேலு (சமுத்திரக்கனி ) மேல் சாதியில் பிறந்தவர் என்றாலும் ,
வருடா வருடம் தன் ஊரில் நடக்கும் ஜல்லிக் கட்டில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களையும் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் .
அதற்கு நேர் மாறானவர் குரு மூர்த்தி ( வேல. ராமமூர்த்தி) . தாழ்த்தபட்ட இளைஞர்கள் தனது மாட்டை பிடிப்பதை கவுரவக் குறைச்சலாக நினைக்கிறார் .
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் பலர் ரத்னவேலுவின் நல்ல மனதை மதித்தாலும் அவர்களில் ஒரு கூட்டத்தை வைத்திருக்கும் மயில்சாமி (மைம் கோபி) ,
ரத்னவேலுவையும் அவமானப் படுத்தும் அளவுக்கு வில்லங்கமான ஆளாகவே இருக்கிறான் .
ரத்னவேலுவின் நண்பர்கள் பட்டையார் ( மாரிமுத்து) மற்றும் பெருமாள் ( பி எல் தேனப்பன் ) .
இந்நிலையில் வந்த ஜல்லிக்கட்டில் குரு மூர்த்தியின் காளையை தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் அடக்க, இரு தரப்பிலும் பல கொலைகள் . உச்சமாக ரத்னவேலுவே கொல்லப் படுகிறார் .
ரத்னவேலுவின் குடும்பம் மலேசியாவுக்குப் போய் விடுகிறது .
ரத்னவேலுவை கொன்றதாக கைதான நபரின் தண்டனை முடிந்து அவன் வெளிவரும் சமயம் , ரத்னவேலுவின் மனைவியும் , இளைஞனாக வளர்ந்து விட்ட மகன் துரையும் (சண்முகப் பாண்டியன்) ஊருக்கு வருகின்றனர் .
பட்டையாவின் மகள் தனத்துக்கும் (மீனாட்சி) துரைக்கும் காதல் வருகிறது .
அப்பாவின் விருப்பப்படி தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் துரைக்கு, அப்பாவைக் கொன்றவனை பழிவாங்கும் எண்ணமும் உண்டு .
இந்நிலையில் ஜெயிலில் இருந்து தண்டனை முடிந்து வந்த அந்தக் கைதி கொலை செய்யப்பட , உண்மையில் ரத்னவேலுவைக் கொன்றது அந்தக் கைதி இல்லை என்பது தெரிகிறது . ரத்னவேலுவைக் கொன்றது யார் ? ரத்னவேலு மற்றும் துரை ஆசைப்பட்டபடி ஜல்லிக் கட்டு நடந்ததா ? என்பதே இந்த மதுரை வீஈன் .
கிராமத்துப் படம் . எளிமையாக எடுத்துள்ளார்கள் . நேட்டிவிட்டி சிறப்பாக வெளிப்பட்டுள்ளது .
ஜல்லிக்கட்டுக்கு எதிரான நியாயமான ஒரே குற்றச் சாட்டான ஜாதிப் பிரச்னையை எடுத்து இருப்பது ( இப்போது அந்த பிரச்னை குறைந்து விட்டாலும் கூட !) படத்தின் சிறப்பு .
பாரம்பரிய விவசாயம் , அந்நிய நாடுதரும் விஷம் தோய்ந்த விதைகளை தவிர்க்க வேண்டும் என்பதையும் , பஞ்சமி நிலங்கள் பற்றிய பிரச்னையையும் பேசும் வகையில் இன்னும் கவனம் பெறுகிறது . சற்றே தென்படும் மார்க்சியப் பார்வையும் அருமை .
இதெல்லாம் பி ஜி முத்தையாவுக்கான பாராட்டுகள்
சும்மா வெட்டி பஞ்ச் டயலாக் பேசாமல் மிழ் நாட்டில் இருந்த காளைகளின் பெயர்களை சொல்வது உள்ளிட்ட சில பகுதிகளில் கவனம் ஈர்க்கிறது முத்தையாவுடன் சிவா எழுதி இருக்கும் வசனங்கள் . (குறிப்பாக உ…கு…. மன்றம்!)
சண்முகப் பாண்டியன், கதாபாத்திரத்துக்கான மண் சார் தோற்றப் பொருத்ததில் சிறக்கிறார் .ஆனால் இனிமேலாச்சும் நடிக்கணும் தம்பி .
அதே போல கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் நாயகி மீனாட்சியின் தோற்றப் பொருத்தமும் ஒகே . ஆனால் இவர் ஓவர் ஆக்டிங் உலக நாயகியாக இருக்கிறார் .
சமுத்திரக் கனி, , கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும் வேல ராம மூர்த்தி , மற்றும் மைம் கோபி ஆகியோர் நடிப்பில் கவனம் கவர்கிறார்கள் .
மெரினாவில் நடந்த ஜல்லிக் கட்டு போராட்டம் , அப்போது விஜய் மற்றும் விஜயகாந்த் பேசிய காட்சிகளை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள் .
ஜல்லிக் கட்டுக்கு எதிரான தடை எவ்வளவு அயோக்கியத்தனமானது , அது நமது மக்களின் ஜனனம், மரணம் , காதல் , கல்யாணம் , சந்தோசம் , பெருமை , ஏக்கம் இவற்றை சொல்லும் காட்சிகள் அருமை . சபாஷ் சபாஷ் சபாஷ் இயக்குனரே !சபாஷ் !
ஆனால் சமுத்திரக் கனி, சண்முகப் பாண்டியன், யாருடைய கதாபாத்திரமும் போதுமான அழுத்தத்துடன் இல்லை. எல்லாமே முக்கால் கிணறு தாண்டிய கதையாக இருக்கிறது . என்னதான் சில கிராமங்கள் மட்டுமே நடத்தும் காட்சிகள் என்றாலும் ஜல்லிக்கட்டை மையப் படுத்திய படத்தில் அது தொடர்பான ஷாட்கள் சும்மா பின்னிப் பெடல் எடுக்க வேண்டாமா ? காமா சோமாத்தனமாகவே இருக்கின்றன .
தவிர ஒளிப்பதிவும் பெரிதாகக் கொண்டாடும்படி இல்லை .
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்களில் மண் வாசனை இருக்கிறது . ஆனாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் .
மெரீனா புரட்சி பற்றி வந்த பல தனிப் பாடல்களே பட்டையைக் கிளப்பின . ஆனால் இந்தப் படத்தில் ஒரு சுமாரான பாடலையே கொடுத்து இருக்கிறார்கள். முதல் பாதியில் இருந்த நேர்த்தி இரண்டாம் பாதியில் இல்லை . இரண்டாம் பகுதியில் தறிகெட்டு அலைகிறது திரைக்கதை . முக்கியப் பிரச்னைகள் முடிந்த பின்னும் ரொம்ப நீள்கிறது படம் .
சில முக்கிய விசயங்களை கோட்டை விட்டு இருக்கிறார்கள் . ஜல்லிக் கட்டு பற்றிய படத்தில் மாடுகளை சும்மா செட் புராபர்ட்டி என்ற எல்லைக்கு மேல் பயன்படுத்தாதது ஏன் ? (கோயில்காளை இறந்து போன காட்சி கூட அவ்வளவு உயிர்ப்பாக இல்லை . )
எனினும் ஜல்லிக்கட்டில் ஒழிய வேண்டிய சாதி பாகுபாடு, பாரம்பரிய விவசாயம் , கோயில் நிலங்கள் பயன்பாடு ,போன்றவற்றால் பாராட்டுக்குரிய படம் ஆகிறது .
மதுரை வீரன்….. வாள் பலம் சிறப்பு . கை பலம்தான் கம்மி !