Dawn பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, சிவகார்த்திகேயன், ரவி மோகன்,அதர்வா, ஸ்ரீ லீலா , பிரித்விராஜ், நடிப்பில் தெலுங்கு நடிகர் ராணா டக்குப்பட்டி, மலையாள நடிகர் பஸில் ஜோசப், கன்னட நடிகர் தனஞ்செயா மற்றும் வங்காளி, தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துள்ள பாப்ரிகோஷ் நடிப்பில் அர்ஜுன் நடேசனுடன் சேர்ந்து திரைக்கதை எழுதி சுதா கொங்காரா இயக்கி இருக்கும் படம்
உலகின் மூத்த மொழி, இலக்கியச் சிறப்பில் ஈடு இணையற்ற மொழி, மக்களின் பெயரில் ஒரு சொல்லாக இருக்கும் மொழி என்ற சிறப்புகள் மட்டுமல்லாது… மொழியைக் காக்க பல நூறு பேர் உயிரைத் தியாகம் செய்த மொழி என்ற பெருமையும் தமிழுக்கு உண்டு.
இனம், சாதி, மதம் இவற்றின் வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு, ஒரு மொழியைப் பேசுபவன் என்ற ஒரே காரணத்துக்காக உயிரிழந்த ஏராளமான மக்களின் மொழியும் தமிழ்தான் .
இந்தியாவின் பல நூறு மொழிகள் இந்தியின் வஞ்சகத்தால், அவற்றைப் பேசும் மக்களாலேயே சாகடிக்கப்பட்ட நிலையில் , அந்த சதியின் ஆணிவேரான, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, அதனால் நிறைய இழந்து,
இன்னும் இந்தியாவில் வாழும் பல தேசிய இன மக்களின், தங்கள் மொழி குறித்த விழிப்புணர்ச்சிக்கு ஆதார நெருப்பாக இருப்பதே தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போர் தான்.
ஆரம்பத்தில் இந்தியை ஆதரித்து, அப்புறம் எதிர்த்து , அப்புறம் அண்ணா மேல் இருந்த கோபம் காரணமாக இந்தி எதிர்ப்புப் போராளிகளை காலிப் பயல்கள் என்ற ஈ வே ராமசாமி, பின்னர் ஒரு காலத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பல்டி அடிக்கக் காரணம் கூட அந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்தான்.
அந்த எதிர்ப்புப் போரின் , தியாகத்தின் பலனை , தமிழகத்தில் உள்ள மாற்று மொழியாளர்களிடம் மொத்தமாகத் தாரை வார்த்து விட்டு , இன்று ”என்க்கு டாமில் டெர்ராது …”என்று தமிழர்களே பெருமையாக சொல்லும் நிலைக்கு வந்து விட்ட இந்த சூழலிலும் ,
இன்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்கள் மராத்திகள் , இந்தி வாலாக்கள் என்று இரண்டு பிரிவினராக பிரிந்து. இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்வு மும்பையிலேயே மேலோங்கி நிற்பதற்கு காரணம்கூட தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் ஊட்டிய தன்மான உணர்வுதான்.
திராவிடம் தேசியம் இரண்டு மூலமும் லாபம் சம்பாதித்துக் கொண்டு, ஒரு பக்கம் இந்தியையும் கற்றுக் கொண்டு , மறுபக்கம் தாயமொழியையும் தற்காத்துக் கொள்ளும் புத்திசாலித்தனம் நமது அண்டை மாநிலங்களுக்கு வரக் காரணமும் தமிழகத்தில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புக்கான தியாகப் போர்தான்.
1930 களில் துவங்கி அறுபதுகள் வரை இந்தி எதிர்ப்புப் போரில் அரச பயங்கரவாதத்தால் அடித்தும் சுட்டும் கொல்லப்பட்ட , எரிக்கப்பட்டும் எரித்துக் கொண்டும் சாம்பலான தமிழகத்தின் மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தமிழர் சக்தியின் வீரம் மற்றும் தியாகத்தால், இந்தியாவின் மற்ற தேசிய இனங்களுக்கும் ஒளிவிளக்காக மாறிய அந்தப் போராட்டத்தை,
அருமையான தயாரிப்புத் தரத்தில் சிறப்பான படமாக்கலில் சொல்லும்படம்தான் பராசக்தி (2025)
சென்னை பச்சையப்பன் கல்லூரி துப்பாக்கி சூடு முதல் மதுரை மற்றும் மதுரை , கோவைப் பகுதிகளில் நியாயம் கேட்ட தமிழர்கள் மேல் இன்று திமுக கூட்டணியில் இருக்கும் … . ”மெய்ன் பீ டமிலியன் ஹூன்” என்று சொல்லிக் கொள்ளும் ராகுல் காந்தி தலைமையில் இயங்கும் இதே காங்கிரஸ் கட்சி நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும்,
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அதே கொடுமையை அறுபதுகளில் பொள்ளாச்சியில் காங்கிரஸ் அரசு நடத்திய சிங்களத்தனமான அக்கிரமங்கள் (பெண்களை மானபங்கப் படுத்திக் கொன்றார்களா என்பது மட்டும் தெரியவில்லை) காட்டுமிராண்டித் தனங்களையும் சேர்த்து சொல்கிறது இந்தப் படம்.
இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களை தற்காலிகமாக மிட்டாய் கொடுத்து ஏமாற்ற மொழிவாரி மாநிலங்களை பிரித்த மத்திய அரசின் இந்தி மந்திகள், இந்தியா முழுக்க எல்லா இடங்களிலும் இந்தியை திணித்தார்கள்.
ராக்கெட் விடும் வேலைக்கு என்றாலும் அறிவியல் அறிவை விட இந்தியில் பேசுவதுதான் முக்கியத் தகுதி என்று ஆனது.. இந்தி பேசாவிட்டால் வேலை இல்லை. புரமோஷன் இல்லை என்றது (ஆபீஸ் கழிவறையில் உச்சா போக அனுமதி இல்லை?)
போஸ்ட் ஆபீஸ் மணி ஆர்டர் விண்ணப்பத்தை இந்தியில் மட்டும் வெளியிட, சாதாரண மக்கள் மணி ஆர்டர் அனுப்ப முடியாமல் பலர் கஷ்டப்பட்டார்கள்.
ரயில்வே வேலைக்கான விண்ணப்ப அறிவிப்பை ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிட்ட நிலை போய் இந்தியில் மட்டும் வெளியிட்டார்கள். போராடி இந்திக் கற்றுக் கொண்டு போனாலும்” நீ இந்திக்காரன் போல இந்தி பேசல .அதனால் வேலை இல்லை” என்றார்கள். (அடிமை இந்தியாவில் தன்னிடம் வேலைக்கு வந்த இந்தியனிடம் வெள்ளைக்காரன் கூட ”உடனே என்னை மாதிரி இங்கிலீஷ் பேசல அதனால் வேலை இல்லை” என்று சொல்லவில்லை. அவர்கள்தான் தமிழ் கற்றுக் கொண்டார்கள் )
இப்படி ஒரு சூழலில் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு ,போராடுகிறான் செழியன்( சிவ கார்த்திகேயன்) .
தமிழ் அப்பாவுக்கும் இந்தி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்து, அம்மாவை ஏமாற்றி விட்டு அப்பா கைவிட்டு விட்டுப் போய் விட்ட நிலையில் , இந்தி வாலாக்களால் தமிழன் என்று எள்ளி நகையாடப்படும் ஒருவன்(ஜெயம் ரவி) அந்த ‘களங்கத்தை'(?!?!?!)க் கழுவ இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடும் போராளிகளை அழிக்க, தமிழர் மீதான வன்ம வெறி கொண்ட அதிகாரியாக தமிழகம் வருகிறான். அவனுக்கும் செழியனுக்கும் பகை ஏற்படுகிறது
போராட்டத்தில் தன் நண்பன் இறந்த நிலையில், அந்த போராட்டத்தைக் கைவிட்டு ரயில்வேயில் வேலைக்குப் போகிறான் செழியன்.
டி டி ஆர் வேலைக்கான தகுதியும் அறிவும் கொண்ட அவனால், பிறந்தது முதல் இந்தி பேசும் நபர் போல இந்தி பேச முடியவில்லை என்பதால் ரயில்வே எஞ்சினுக்கு நிலக்கரி அள்ளிப் போடும் வேலைதான் கிடைக்கிறது.
அவன் காதலிக்கும் தமிழ் நாட்டு தெலுங்குப் பெண் ரத்னமாலா (ஆந்திர தெலுங்குப் பெண் ஸ்ரீ லீலா) அவனைக் காதலிக்கிறாள்.
மீண்டும் இந்தித் திணிப்பு நெருக்க, அறிஞர் அண்ணா , இந்தியை எதிர்த்துப் போராடும் மாணவர்களை ஆதரிக்கிறார். கைது செய்யப்படுகிறார்.. அன்றைய மு. கருணாநிதியும் இந்தி எதிர்ப்பை ஆதரித்து பத்திரிகையில் எழுதி கைதாகிறார்
ரத்னாமாலாவும் செழியனின் தம்பியும் செழியனுக்கு தெரியாமல் அறுபதுகளின் இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாக இறங்குகிறார்கள்.
அதனால் செழியனுக்கு ஒரு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
செழியனை கண்டு பிடித்துக் கொல்ல, இந்தியை எதிர்த்து போராடும் எல்லோரையும் கொன்று குவிக்கிறான் அந்த தமிழை வெறுக்கும் ‘ கிராஸ் பிரீட் ‘ அதிகாரி.
இன்னொரு பக்கம் வட இந்திய அரசியல்வாதிகளும் அன்றைய முதல்வர் பக்தவச்சலம் போன்ற தமிழின துரோகிகளும் கிராஸ் பிரீட் அதிகாரியை விட மோசமாக இருக்கிறார்கள் .
எல்லோரும் சேர்ந்து பொள்ளாச்சி கொடூரத்தை நடத்தி வெறியாட்டம் போடுகிறார்கள்.
வட இந்திய அரசியல் வன்மர்களின் கல் மனத்தைக் கரைப்பது, கிராஸ் பிரீட் அதிகாரியிடம் இருந்து உயிர் பிழைப்பது .. என்று இரண்டு நிலையில் போராடும் இந்தி எதிர்ப்புப் போராளிகளுக்கு நடந்தது என்ன என்பதே இந்த பராசக்தி 2026
படத்தின் அடிப்படைக் கதை அபாரமானது . பலரும் அறியாத பொள்ளாச்சி சம்பவத்தை காட்சிப்படுத்தி கொந்தளிக்க வைக்கும் விதத்தில் சாதித்து இருக்கிறது படம். இன்று தமிழே தெரியாத, தமிழையே மதிக்காத புதிய தமிழ் தலைமுறை பார்க்க வேண்டிய படம் இது .
சென்சார் இப்படி சிதைத்த பிறகும் ,பெரிதாக பலவீனம் அடையாத திரைக்கதையை அமைத்த வகையில் அசத்தி இருக்கிறது சுதா கொங்காரா , அர்ஜுன் நடேசன் கூட்டணி.
படமாக்கலில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் சுதா கொங்கரா.
அட்டகாசமான தயாரிப்புத் தரம். டான் பிக்சர்ஸ்க்கு பாராட்டுகள்.
உணர்வெழுச்சி ஏற்படும் இசை கொடுத்து இருக்கிறார் ஜி வி பிரகாஷ் குமார். (அவர் கொடுத்த ஒரு அற்புதமான டூயட் பாடல் ஒழுங்காக படமாக்கப்படவில்லை )
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு களத்துக்குள் பார்வையாளனையும் கவர்ந்து காந்தம் போல இழுக்கிறது.
சதீஷ் சூர்யாவின் படத் தொகுப்பு திரைக்கதை தொய்ந்து தொங்கும் இடங்களைக் கூட ஜாக்கி போட்டு தூங்குவதில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறது.
அந்தக் கால கட்ட உருவாக்கம், அண்ணாதுரையின் கலை இயக்கம்,சுப்ரீம் சுந்தரின் ஆக்ஷன் யாவும் தரம் மேக்கப் கெட்டப், சிகை அலங்காரம் இரண்டும் பொருத்தம் . பூர்ணிமாவின் உடை அலங்காரமும் நேர்த்தி.
செழியன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் சிவ கார்த்திகேயன் . நடிப்பைப் பொறுத்தவரை அவருக்கு இது அமரனை விட மேல்.
கிராஸ் பிரீட் தமிழர் வெறுப்பு அதிகாரியாக நிறுத்தி நிதானமாக வில்லனாக ரசித்து ருசித்து நாக்கைச் சுழற்றி நடித்திருக்கிறார் ஜெயம் ரவி
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ்ப் பையனைக் காதலித்து இந்தி எதிர்ப்புப் போரில் உடன் களமாடும் தமிழ்நாட்டுத் தெலுங்குப் பெண் கேரக்டரில் உற்சாகமாக நடித்துள்ளார் ஸ்ரீ லீலா. ”தமிழ்நாட்டில் தெலுங்கை திணிச்சா அதுக்கு எதிராவும் நான் போராடுவேன்” என்று சொல்லும் அந்த கேரக்டர் டிசைன் சிறப்பு ( தெலுங்கு டப்பிங் ல என்ன சொல்லி இருக்கீங்க கொங்காரா?)
கானி… இதேநா ஆ அந்தமைன ஸ்ரீலீலா ? உடைகளில் ஏன் அவ்வளவு ஜிகினா? தமிழ்நாட்டுத் தெலுங்குப் பெண்கள் எல்லாம் டீசண்டா ட்ரெஸ் பண்ணுவாங்கப்பா.(அந்தக் காலத்தில் கூட)
அதர்வாவின் கண்களில் வேகம் தெரிகிறது.
குறைவான காட்சிகள் என்றாலும் அறிஞர் அண்ணாவாக பிரம்மதப்படுத்தி இருக்கிறார் சேத்தன். காரணம் அந்த கேரக்டர் அப்படி.
படத்தில் மற்ற மொழி நடிகர்களின் ஆதிக்க தேவைக்கு மேல் அதிகமாக இருக்கிறது. அதனால் தமிழர்களுக்கே படம் கொஞ்சம் அந்நியமாக தெரிய வாய்ப்பு உண்டு
சின்னச் சின்ன கேரக்டர்களை எல்லாம் அடையாளப்படுத்தியவர்கள், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் நிஜ கதாநாயகன் , நிஜ முதல்வன் பட்டுக்கோட்டை அழகிரியை படத்துக்குள் கொண்டு வந்திருக்கலாம்.
எடுத்த உடன் தெய்வத்திரு சிவாஜி கணேசன் என்று டைட்டிலில் துளியூண்டு போடுகிறார்கள். ஏங்க, அதோடு நிறுத்திக் கொள்ள அவர் என்ன தஞ்சாவூர் மிராஸ்தாரா ?
பராசக்தி வெற்றியில் கலைஞருக்கு இணையான பங்கு சிவாஜிக்கும் உண்டு. அதற்கு முன்பும் கருணாநிதி வசனம் எழுதிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் சிவாஜியின் உதடுகள் உறிஞ்சிக் கொப்பளித்த பிறகுதானே கலைஞரின் பேனா மை எரிமலைக் குழம்பானது?
படத்தில் ஒரு இடத்தில் அந்த பராசக்தி படம் ஓடுகிறது. அதில் கூட சிவாஜியை ஒரு ஃ பிரேம் கூட காட்ட மனம் இல்லை என்றால் நீங்க எல்லாம் யாருங்க?.அப்போது கூட கலைஞரின் வசனத்தை மட்டும் பாராட்டி வசனம் வருகிறது. சிவாஜியைப் பாராட்டி ரெண்டு வார்த்தை சேர்க்க முடியாத அளவுக்கு (படத்தில் ஜெயம் ரவி கேரக்டர் போல)உங்கள் கைவிரலும் கட் ஆகி விட்டதா? (ஒரிஜினல் பராசக்தி மறு வெளியீட்டுக்கு தயாராகிறது என்கிறார்கள். சீக்கிரம் கொண்டு வாங்கப்பா!)
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்ட வேற்று மொழியாளர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்தவர்களே. இந்த மண்ணில் இருந்ததால் அவர்கள் அறிவு விசாலம் அடைந்ததே அதற்குக் காரணம்.
ஆனால் படத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் இந்தி எதிர்ப்புப் போரில் கர்நாடகா , கேரளா, ஆந்திரா, வங்காளத்தில் உள்ள வேற்று மொழியாளர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று ஓவர் பூச்சுப் பூசுகிறார்கள் அதுவும் வங்காளிகள் எல்லாம் புறநானூற்றுப் படையில் இணைந்து தமிழ்நாட்டுக்கு வந்து இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொள்கிறார்களாம் . இதெல்லாம் நியாயமா?
உண்மையில் இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாட்டில் தமிழ் நாட்டுத் தெலுங்கர்கள் கலந்து கொண்டார்கள் காரணம் அப்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் தமிழின் பெருமையை உணர்ச்சி பொங்க சொல்லும் பல தமிழ் ஆசிரியர்களே தெலுங்கர்கள்தான் (அது எல்லாம் ஒரு காலம்)
ஆனால் இப்படி ஆந்திராவில் இருந்து எல்லாம் தெலுங்கர்கள் வந்தார்கள் என்று பவுடர் போட்டுக் கொள்வதற்குப் பதில் தமிழ்நாடு வாழ் தெலுங்கர்களை இந்த விஷயத்தில் தனித்துப் பெருமை படுத்தி இருந்தால் அதுதான் நியாயம்.
அதே போல கர்நாடகாவில் இருந்து கன்னடர்கள், கேரளத்தில் இருந்து மலையாளிகள் மற்றும் நம் உறவினர் எல்லாம் ‘வாம்மா மின்னல்’ கணக்காக தமிழ்நாட்டுக்கு வந்து இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு ராணா குண்டடி பட்டு செத்தார்கள் என்பதை எல்லாம் இந்தி திணிப்பை ஆதரிப்பவர்கள் கூட மன்னிக்க மாட்டார்கள். சரிதானே எக்ஸ்பர்ட் கன்சல்டன்ட் புரஃபஸர் ராமசாமி?
உண்மையில் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் இருந்து இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொள்ள தமிழகம் வந்தவர்கள் எல்லாம் அங்கு வாழ்ந்த தமிழர்கள்தான் .அந்த மொழி இன மக்கள் அல்ல.
மீறி கருத்தியல் ரீதியாக சிலர் வந்திருக்கலாம் . மறுக்கவில்லை. ஆனால் படத்தில் காட்டுவது போல, ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து தலைக்கு ஒரு ஹீரோ அளவுக்கு படை படையாக எல்லாம் வரவில்லை . கமர்ஷியல் என்றாலும் ஒரு வரலாறு பற்றிய படத்தில் உண்மைக்குப் புறம்பாக பேசுலாமா?
அதாவது அவர்களின் பங்களிப்புக்கு மேலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உண்மை வரலாற்றை திரித்து தமிழில் தமிழர்களிடமே தமிழர்களின் பங்களிப்பை குறைத்துக் காட்டுவது நியாயமா?
இந்தப் படம் சொல்கிறபடி பார்த்தால் இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாட்டில் போராடியவர்களில் ஐம்பது அறுபது சதவீதம்தான் தமிழர்கள் . மற்றவர்கள் எல்லாம் தெலுங்கு கன்னட மலையாள வங்காள மக்கள் என்கிறது இந்தப் படம். இதுதான் இட்லி என்றால் சட்னி மட்டுமல்ல, சாம்பார், ,துவையல், தொக்கு, குருமா , ஊறுகா, கோங்குரா கூட நம்பாதே கொங்காரா?
அதே போல தமிழர்களை வன்மத்தோடு சுட்டுக் கொள்பவன் வட இந்தியன் என்று தெளிவாக சொல்ல மனம் இல்லை. ஒரு தமிழன் ஒரு இந்திப் பெண்ணுடன் படுத்து விட்டு புள்ளையைக் குடுத்துட்டு (படத்தில் இதான் சொல்றாங்க) ஏமாத்திட்டு போயிட்டானாம் . அதனால் அவன் தமிழர்களை கொல்ல வருகிறானாம்.
எங்க ரூம் போட்டு இதை எல்லாம் யோசிக்கிறார்கள்? வட இந்தியர்களை கல்யாணம் செய்த தமிழ் ஆண்கள் எல்லாம் தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து இந்திக்குள்ளயே கரைந்ததுதானே வரலாறு(நான் குறிப்பிட்ட எந்த ஒரு சமூகத்தையும் மட்டும் சொல்லலை). எத்தனை பேர் இந்திக்காரி கூட படுத்து புள்ள கொடுத்து ஏமாத்திட்டு வந்தான்?
அதாவது அங்கேயும் தமிழனைத்தான் கேவலப்படுத்தணும். ஏன் இந்த INTELLECTUAL ARROGANCE ? அந்த வகையில் ரமணா படத்தில் முருகதாஸ் காட்டிய படைப்பு தைரியம் கொண்டாடத்தக்கது.
உண்மையில் இந்தப் படத்தில் எந்த சென்சார் கட்டும் கொடுக்காமல் அப்படியே ரிலீஸ் செய்து இருந்தால் அது காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு பெரும் தர்ம சங்கடத்தைக் கொடுத்து இருக்கும். தேர்தல் சமயத்தில் பி ஜே பி அதைத்தான் செய்து இருக்க வேண்டும்.
இப்படி தமிழர்களை அழித்து ஒழித்த காங்கிரசுடன்தான் திமுக கூட்டணி வைத்திருக்கிறது என்று அவர்கள் கையை எடுத்து அவர்கள் கண்ணையே குத்தி இருக்கலாம்.
ஆனால் அந்த அளவுக்கு எல்லாம் சங்கிகளுக்கு மூளை வேலை செய்யாது.
இல்லை தெரிந்தேதான் கட் செய்தோம் என்று சொல்வார்களேயானால் , அப்புறம் எங்களுக்கு காங்கிரசை விட தமிழர்கள்தான் முக்கிய எதிரிகள் என்று பாஜக வே ஒத்துக் கொள்வதாகத்தான் அர்த்தம்
தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் மிகக் குறைவான பங்களிப்பையே திமுக அளித்தது ( அறிஞர் அண்ணா மேல் உள்ள வக்கிர வன்மத்தில் இந்தியை எதிர்த்து போராடியவர்களை காலிகள் பொறுக்கிகள் என்றார் ஈ வே ராமசாமி) ஆனால் இந்தி எதிர்ப்புப் போரின் மொத்த பலனையும் தந்திரமாக திமுக அறுவடை செய்தது. (உண்மையான தியாகிகளின் வாரிசுகளுக்கு எந்த பதவியும் மரியாதையும் திமுக தரவில்லை)
அதே தந்திரத்தைதான் இந்தப் படமும் செய்கிறது . தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் மிகக் குறைவான பங்களிப்பு கொடுத்த வேற்று மொழி மக்களுக்கு, உண்மைக்கு மாறாக , சமமான பங்களிப்பு செய்தது போல தவறான அங்கீகாரம் கொடுத்து, தமிழர்களின் தியாகத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்த படம் இருட்டடிப்பும் செய்து இருக்கிறது என்பதே உண்மை.
தமிழ் படைப்பாளிகள் எல்லாம் கோடி கோடியாகக் கொட்டி படம் என்ற பெயரில் குரங்கு வித்தை காட்டிக் கொண்டிருந்தால் வேறு என்ன செய்வது?
பராசக்தி 2026 … நிறைய அழுக்குகளும் கசடுகளும் உள்ள தண்ணீர். என்ன செய்ய வடிகட்டித்தான் குடிக்க வேண்டும். இதை விட நல்ல தண்ணீர் இருந்தால் தானே ?
மொத்தத்தில் பராசக்தி …. பாதி சக்தி, பாதி குயுக்தி