இயக்குநர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவரும் அறிமுக இயக்குநருமான பீட்டர் ஆல்வின்
கதை, திரைக்கதை எழுதி இயக்கியதோடு அல்லாமல் தயாரித்தும் இருக்கும் திரைப்படம் ‘பட்டறை’.
தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் குறிப்பிடத்தக்க புகழ் பெற்று இருக்கும் ஜே டி சக்கரவர்த்தி,
மிக முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து இருக்கும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக பீட்டர் ஆல்வின் வருகிறார்
ரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
முக்கியமான சில கதாபாத்திரங்களில் திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோர் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார்.
ராஜு.கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.
முகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய,
வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட முன்னோட்டம் பெண்களை மிரட்டியோ, போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கியோ
கடத்தி , உலகம் எங்கும் பாலியல் உள்ளிட்ட தொழில்களுக்காக அனுப்பும் கொடூரத்தைப் பற்றியது என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது .
பாலியல் பலாத்காரம் பற்றி விழிப்புணர்வு இருக்கும் அளவுக்கு இது பற்றி பலருக்கும் விழிப்புணர்வு இல்லை என்கிறார் இயக்குனர் .
நிகழ்ச்சியில் பேசிய ஜே டி சக்கரவார்த்தி , ” முதலில் ஆல்வின் என்னிடம் கதை சொல்ல வந்தபோது கதை சுருக்கம் கேட்ட நான்
இந்தப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி விட்டேன் . மீண்டும் அவர் முயல , முழுக்கதையும் கேட்டேன் .
நிரம்ப பிடித்து இருந்தது . அப்புறம் நடித்தேன் .
படத்தில் பெண்களைக் கடத்தி விற்கும் கேரக்டர் எனக்கு என்றாலும் , அதை மிக வித்தியாசமாக செய்தோம் .
உதாரணமாக கடத்தி வருகையில் ஒரு பெண்ணை அடியாள் அடித்து விடுவான் . விஷயம் அறிந்து நான் அவனை அடிப்பேன் .
ஆனால் அந்தப் பெண்ணுக்கு மருந்து போடுவேன் . அந்த அளவுக்கு புரஃபஷனலான – ஆனால் சக்தி வாய்ந்த கேரக்டர் அது .
அந்த சக்தி வாய்ந்த கேரக்டரை ஓர் எளிய மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார் பீட்டர் ஆல்வின் .
படம் மிக நன்றாக வந்துள்ளது பெண்களுக்கான விழிப்புணர்ச்சியை தரும் படம் இது . ” என்றார்
இயக்குநர் பீட்டர் ஆல்வின் பேசும்போது, “பாலியல் பலாத்காரத்தை விட கொடுமையானது பெண்களை உலகம் முழுக்க கடத்துவது .
உலக அளவில் மூன்று கடத்தல்கள் முக்கியமானவை . ஆயுதக் கடத்தல் . போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் !
ஆனால் உலகில் எந்த நாடுகளுமே முதல் இரண்டு விசயங்களை தடுக்க எடுக்கும் அளவுக்கு,
பெண்கள் கடத்தலை தடுக்க முயற்சிகள் எடுப்பது இல்லை . பெண்கள் கடத்தலின் கொடூரத்தை இந்தப் படம் பேசும்
கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான
நடிகர்களை கண்டுபிடிப்பதுதான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி.சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.
நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்…” என்றார்.
