சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசி குமார், திரிஷா, சிம்ரன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் படம் .
ஊட்டி . ஒரு கல்லூரி மற்றும் மாணவர் விடுதி. ஜுனியர்களை ரேக்கிங் செய்யும் சீனியர் மாணவர் கூட்டம் .
அதன் தலைவன் ( பாபி சிம்ஹா) . கல்லூரியின் ஒட்டு மொத்த உணவு காண்ட்ராக்டில் கொள்ளை அடிக்கும், அவனது அப்பா ( ஆடுகளம் நரேன்)
மாணவர்களின் தொல்லை தாளாமல் ஹாஸ்டல் வார்டன்கள் பலரும் தெறித்து ஓட , அந்த வேலைக்கு மந்திரியின் சிபாரிசோடு வருகிறார் ஒருவர் (ரஜினிகாந்த் )
சீனியர் மாணவர்களை அடக்கி ஜூனியர் மாணவர்களுக்கு பாதுகாப்பு வாங்கித் தருகிறார்.

ஜூனியர் மாணவர்களில் ஒருவனான அன்வரின் , இந்துப் பெண்ணுடனான காதலை , அவளது அம்மாவை (சிம்ரன்) ஈர்த்து
சமாதானப்படுத்தி, காதல் ஜோடி வருங்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் சூழலை உருவாக்கித் தருகிறார்.
சீனியர் ஜூனியர் மோதலில் ஜூனியர்களை நையப் புடைக்க சீனியர் மாணவர் தலைவன் தலைமையில் சிலர் வருகிறார்கள் .
ஆனால் வந்த கூட்டம் அன்வரை கொலைவெறியோடு தாக்கும்போதுதான் , வேறு யாரோ அன்வரை கொல்ல முயல்வது தெரிகிறது .
பிளாஷ்பேக் .

மதுரையில் ஒரு முஸ்லிம் பெரியவரால் எடுத்து வளர்க்கப்பட்ட இந்து இளைஞன் பேட்டை வேலன் ( ரஜினிகாந்த் தான் ). மனைவி (திரிஷா) ஒரு மகன் .
அந்த முஸ்லிம் பெரியவரின் மகன் (சசிகுமார் ) ஓர் இந்துப் பெண்ணை காதலிக்கிறான் .
பெண்ணின் தந்தை (இயக்குனர் மகேந்திரன்) மற்றும் அண்ணன்கள் அனைவரும் ஆற்றில் முறையற்று மணல் அள்ளி விற்கும் தாதா கூட்டம் .
அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணின் காதலை ஏற்க மறுக்க, திருமணம் செய்து வைக்கிறான் பேட்டை வேலன்
பகை வெடிக்க , பெண்ணின் சிறிய அண்ணன் சிங்காரம் ( நவசுதீன் சித்திக் ) , நல்லவன் போல் நடித்து

பெரும் இழப்பை உருவாக்குகிறான் . தப்பி ஓடி முமபையில் பெரிய இந்துத்வ கட்சியின் முக்கிய புள்ளி ஆகிறான் .
அவனது இரண்டாவது மகன் ரவுடி ( விஜய் சேதுபதி)
அன்வர்சிங்காரத்தின் சகோதரியின் மகன் . .அன்வரை கொல்ல முயல்வதும் தாய்மாமன் சிங்காரம்தான்
அன்வரை போட்டுத் தள்ளும் கும்பலுக்கு பின்னால் இருப்பது சிங்கரமா ? ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லை எனில் நிகழ்ந்தது என்ன ?
அன்வரை , இப்போது வார்டனாக இருக்கும் பேட்டை வேலனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே இந்த பேட்டை .

நீண்ட இடைவேளைக்கு பிறகு பழைய ரஜினி . வயது தெரிந்தாலும் பழைய ஸ்டைல் கெத்து , மாஸ், காமெடி எல்லாம் பார்க்க முடிகிறது .
காண்ட்ராக்டர் வீட்டுக்குள் நுழைந்து அப்பாவையும் மகனையும் மிரட்டும் காட்சியில்
பழைய ரஜினியை மறு உருவாக்கம் செய்து இருக்கிறார் கார்த்திக் சுப்ப்புராஜ் . அஸ்ஸ்ஸ்ஸ்சத்தல் !
அதே நேரம் கடைசியில் வரும் விஜய் சேதுபதி ரஜினி உறவு சம்மந்தப்பட்ட திரைக்கதைப் பகுதியும் அந்த இறுதித் திருப்பமும் அபாரம் .
ரஜினி படம் என்றால் அதை தன்னுடைய பாணிப் படமாக கார்த்திக் சுப்புராஜ் முடித்து இருப்பது அபாரம் !

ரஜினியை மீறி ஸ்கோர் செய்கிறார்கள் விஜய் சேதுபதியும் , நவாசுதீன் சித்திக்கியும் ! சபாஷ்
சசிகுமாரும் திரிஷாவும் இயக்குனர் மகேந்திரனும் ஒகே .
நிறைய இளம் கலைஞர்கள் .. வாழ்க !
சிம்ரன் ..ம்ம்ஹும் முடியல !
பாடல்கள் பின்னணி இசை ஒகே ரகம் !
பாவமன்னிப்பு படத்தில் வரும் வந்த நாள் முதல் பாடலின் முதல் பின்னணி இசைக்கு முன்பு வரும்,
சீழ்க்கை அடி மெட்டை படத்தின் தீம் மியூசிக் போலவே பயன்படுத்தி இருக்கிறார் அனிருத் .
சிவாஜியின் பல பாடல்களை படத்தில் வானொலியில் ஒலிப்பது போல அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள் .

அது முழுக்க சிவாஜிக்கான நினவு கூரலாக இருந்து விடக் கூடாது என்றோ என்னவோ , ஒரு ஜெமினி பாட்டையும் கலப்படம் செய்து விட்டார்கள் .
.சண்டைக் காட்சிகள் தெறிப்பு .
கல்லூரியில் ரேக்கிங் செய்வது தப்பு . ஆனால் ஆரம்பத்தில் ரேக்கிங்கின் நோக்கம் என்பது கலந்து பழகத்தான் என்று உருவாக்கப்பட்டது
ஆனால் இந்தப் படத்தில் புதுசா வருபவன இருக்கறவன் எதிர்க்கிற குணம் இந்த ரேக்கிங் இல் இருந்துதான் வருது என்று சொல்லும் ரஜினி ,
அந்த பழக்கத்தை ஒதுக்கணும் என்பது போல ஏதோ சொல்கிறார் . அந்த வசனம் கூட ஒகே .

ஆனால் ரேக்கிங் செய்யும் முகங்கள் எல்லாம், மண் சார்ந்த நேட்டிவிட்டி முகங்களாகவும் ,
ரேக்கிங் செய்யப்படும் மாணவர்கள் எல்லாம் வடக்கத்தி மேல் தட்டு முகங்களாகவும் இருக்கிறார்கள்
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியவில்லை .
இன்னும் எத்தனை அனிதாக்கள் சாக வேண்டும் என்பதும் புரியவில்லை
புதிதாக வருபவர்கள் என்ன செய்தாலும் பழையவர்கள் மண்ணுக்கு உரியவர்கள் எதிர்க்கக் கூடாது .

ஆனால் பழையவர்களின் பாடல்களை இசைக் கோர்வைகளை மட்டும் புதியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் . அவர்களுக்கு எந்த மரியாதையையும் செய்யாமல் ! ஹா ஹா ஹா !
தவிர படத்தில் வேலன் என்ற கதாபாத்திரத்துக்கும் அப்பாற்பட்டு ரஜினியின் ரசிகர்களாகவும்
வருகிற மாணவ கேரக்டர்கள் பலரும் கூட வடக்கத்தி முகங்களாகவே இருக்கிறார்கள் .
என்ன நியாயமோ தெரியவில்லை .
அதே போல ஏதோ ஒரு வரதராஜ முதலியார் பாதிப்பில் நாயகன் வந்துவிட , தொடர்ந்து

இந்த படம் வரை தமிழ் நாட்டில் இருந்து மும்பை போனாலே பெரிய தாதா ஆகிடலாம் என்றே கதை சொல்வது நியாயமாவா இருக்கு ?
நிஜத்துல சாதா தோசை கூட வாங்க முடியாது
பக்கா கமர்ஷியல் ரஜினி பாடலாகவே வந்திருக்கிறது பேட்டை .