லக்ஷ்மி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இசக்கி கார்வண்ணன் இயக்க, சமுத்திரக் கனி, மொசக்குட்டி வீரா,சாந்தினி , அஸ்மிதா, வர்ஷா, நான் கடவுள் ராஜேந்திரன் நடித்து இருக்கும் படம் பெட்டிக்கடை . நம்பி புழங்கலாமா ? பேசலாம் .
ஒரு பெட்டிக் கடைக்காரரின் மகளை காதலிக்கும் இளைஞனுக்கு (மொசக்குட்டி வீரா) ஒரு நிலையில் காதல் (வர்ஷா ) தோற்கிறது . இன்னொரு பக்கம் ஆன் லைன் வர்த்தகத்தின் இரும்புப் பிடி அதற்கு துணை போகும் அரசியல் அதிகார எடுபிடிகள் காரணமாக பெட்டிக் கடையே அந்த ஊரில் இல்லாமல் போகிறது .

எதுவாக இருந்தாலும் ஆன் லைன் மூலம்தான் வாங்க வேண்டிய நிலைமை . இதில் தரக் குறைவான பொருட்கள் மட்டுமல்லாது, பல சமயம் செல் போனுக்கு பதில் செங்கல் வருவது போன்ற அநியாயங்களும் உண்டு .
அந்த ஊருக்கு வரும் டாக்டர் ஒருவர் (சாந்தினி) இதற்கு எதிராக போராட முடிவு செய்து அணி திரட்டுகிறார் . ”பெட்டிக்கடை இருந்தால் நமக்கு என்ன தேவையோ அதை வாங்கி வைப்பார்கள் .
தவிர நேருக்கு நேர் பழக்கம் காரணமாக நல்ல பொருட்களும் கிடைக்கும் . ஆன்லைன் வர்த்தகத்தில் அவர்களிடம் உள்ளதை மட்டும் விற்பார்கள் . தரமும் இருக்காது “என்று விளக்குகிறார் .

அப்போது அவரிடம், இதற்கு முன்பு இப்படி போராடிய ஒருவர்( சமுத்திரக்கனி ) ஆன் லைன் வர்த்தக முதலாளிகளால் கொல்லப்பட்ட கதை சொல்லப் படுகிறது .
அதையும் மீறி டாக்டர் போராட , அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் படம் .
நல்ல விஷயம்தான் . ஆனால் அதை சரியாக இயல்பாக யதார்த்தமாக சொல்லத் தெரியாமல் சொல்லி இருக்கிறார்கள் . நிஜ பிரச்னையை சொல்லும்போது லாஜிக் முக்கியம் . ஆனால் இங்கே லாஜிக் என்ற விசயமே படத்தில் இல்லை .

இன்றைய மாநில ஆள்வோர்கள் எப்படி நமது மண்ணை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விற்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்கள் . ஓ. பன்னீர் செல்வத்தை நினைவுபடுத்தும் ஓஹோ கேரக்டரில் பசங்க சிவகுமார் . அவர் எடப்பாடியை கிண்டல் செய்வது போல எல்லாம் வசனங்கள் . சபாஷ் .
இந்த நாட்டில் பொம்பளைங்க அம்மணமா நின்னாதான் அடிப்படை நியாயமாவது கிடைக்குமா ? என்ற கிளைமாக்ஸ் வசனமும் கனம் சேர்க்கிறது .
வடகிழக்கு மாகாண போராட்டங்களில் இருந்து அந்த காட்சியை எடுத்து இருக்கிறார் இயக்குனர் .

இவற்றை விட்டால் அரதப் பழசான காதல் காட்சிகள் , பக்குவமற்ற இயக்கம் , செயற்கையான நடிப்பு இவை படம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன .
காதுகளில் ரத்த ஆறு ஓட வைக்கிறார் இசை அமைப்பாளர் .
பெட்டிக்கடை….. சொல்ல முயன்று இருக்கும் விசயத்துக்காக பாராட்டலாம்
